நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8_பகுதி 9_பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16
“நான் சொல்வது உங்களுக்கும், அத்தைக்கும் பிடிக்குமா என்று தெரியவில்லை” என்று வல்லபி தயங்கினாள்.
“நீ என்ன நினைக்கிறாய் என்று தெளிவாகச் சொல் வல்லபி. நீ விரும்புவதை நிறைவேற்றுவது என் கடமை” என்றான் விஷ்ணு, அவள் அருகில் வந்து நின்று ஆதரவுடன் அவளைப் பார்த்துக் கொண்டு.
“விஷ்ணு, எனக்குப் பட்டிலும், நகைகளிலும் அதிக ஆர்வமில்லை என்று உங்களுக்குத் தெரியும். அவை யாருக்கும் உபயோகமில்லாமல் நமக்கு கர்வம் மட்டும் தான் தரும். பீரோவிலும், லாக்கர்களிலும் தான் தூங்கும். அதே நேரத்தில் மற்றவர்களிடமிருந்து நம்மைத் தள்ளி வைக்கும். என் திருமணம் எளிமையாக ரெஜிஸ்டர் ஆபீஸிலும், திருமண விருந்து ஆஸ்ரமத்திலும் நடந்தால் ஆத்ம திருப்தியாக இருக்கும் இல்லையா?”
“உன் விருப்பம் கட்டாயம் நிறைவேறும் கண்ணம்மா“ என்றான் விஷ்ணு அவளை அன்புடன் பார்த்தவாறு.
“இரு விஷ்ணு அவசரப்படாதே. உங்கள் இருவருக்கும் மட்டுமல்ல, ஏன் எங்களுக்கும் கூட இது பூரண சந்தோஷம் தான். ஆனால் உங்கள் நண்பர்கள் பெரும்பாலும் டாக்டர்களாகவும், பெரிய அதிகாரிகளாகவும் இருப்பார்கள். அவர்கள் மனம் குளிர நாம் திருமண விருந்து அளிக்க வேண்டாமா? நம் விருப்பத்தை மற்றவர்கள் மேல் திணிப்பது எப்படி நியாயம்?“ என்றார் ராமச்சந்திரன்.
“அது ஒன்றும் கஷ்டமில்லை. அதற்குத் தனியாக ஒரு பெரிய ஹோட்டலில் ஒரு பார்ட்டி வைத்து விடலாம். ஆனால் வல்லபியின் ஆசையும் நிறைவேற வேண்டும்“ என்றான் விஷ்ணு பிடிவாதமாக.
சிஸ்டர் மேரி வல்லபியையும், விஷ்ணுவையும் அந்த ஞாயிற்றுக்கிழமை போன் செய்து வரவழைத்தார்கள். அங்கே உள்ள மாதா கோவிலில் இருவரின் பெயரிலும் ஜெபம் செய்தார்கள். அவர்கள் இருவருக்கும் அன்று டின்னர் அந்த மாதாகோவிலில் முடிந்தது.
ஆசிரமத்தில் இருந்த மஞ்சுளாவும், காஞ்சனாவும் பொறுப்புடன் எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டனர். தன்யாவும் நர்மதாவும் ஆசிரமத்தை மிக அழகாக அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.
“அப்பா, திருமணத்தில் நீங்கள் செய்யும் ஆடம்பரச் செலவிற்குப் பதில் இந்த ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நல்ல உடை வாங்கித் தரலாமென்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் அப்பா?”” என்றாள் வல்லபி.
“உனக்கு ஏனம்மா அந்தக் கவலை? ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கு புத்தாடை வாங்குவது என் பொறுப்பு. அதனால் உனக்கு செய்யும் சீர்களைக் குறைக்க முடியாது. என் ஒரே மகளின் திருமணத்தை நான் ஜாம்ஜாமென்று கொண்டாடுவேன். இல்லையா மல்லிகா?”” என்று மனைவியின் துணையைத் தேடினார். மல்லிகா சிரித்துக் கொண்டாள்.
இப்போதெல்லாம் அப்பா எது சொன்னாலும் சிரிப்பது அம்மாவின் வழக்கமாகி விட்டது. பக்கத்தில் உள்ள ஒரு அம்மன் கோயிலில் திருமணத்திற்குப் பணம் கட்டி விட்டார் மூர்த்தி. திருமணத்திற்கு மூன்று சமையல் ஆட்களை ஏற்பாடு செய்தார்.
அதையெல்லாம் பார்த்த தன்யா ஒரு பெருமூச்செறிந்து பாலாஜியை ஏக்கத்துடன் பார்த்தாள். பாலாஜியும் சிரித்துக் கொண்டே கண்களால் அவளை அமைதிப்படுத்தினான்.
“உங்கள் தந்தை பணத்தாலும், செல்வாக்காலும் இவ்வளவு பெரிய மனிதராக இருக்கிறாரே, என்னை மருமகளாக ஏற்றுக் கொள்வாரா?” என்றாள் சந்தேகத்துடன்.
“எல்லாம் ஏற்றுக் கொள்வார். உடனே ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் மனம் மாறும்” என்றான் பாலாஜி.
“எனக்கென்னவோ, அவர் என்னை ஏற்றுக் கொள்வார் என்று தோன்றவில்லை” என்றாள் நீண்ட பெருமூச்சுடன்.
“அவர் என்னையே இன்னும் மகனாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆமாம், உனக்கு ஏன் இந்த சந்தேகம்?” என்றான் பாலாஜி ஆச்சரியமாக.
“நான் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டவள் தானே” என்று குறைபட்டுக் கொண்டாள் தன்யா. பாலாஜி சிரித்தான்.
“உனக்கென்ன வேறு வேலை இல்லையா? தேவையில்லாமல் கவலைப்பட்டுக்கொண்டு” என்று அவளை சமாதானப்படுத்தினான்.
வல்லபியும், விஷ்ணுவும் சிஸ்டர் மேரியின் அழைப்பை ஏற்று ஹோமிற்கு சென்றனர். அங்கு அலங்காரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். வழியெங்கும் தோட்டத்தில் அழகுக்காக குட்டிக் குட்டி ‘பாம்’ மரங்கள் நடப்பட்டு அதைச் சுற்றி சரவிளக்குகள் தொங்க விடப்பட்டிருந்தன.
ஒவ்வொரு மரத்திலும், “வாழ்க மணமக்கள்” என்று வல்லபி பெயரும், விஷ்ணுவின் பெயரும் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தன. இந்த அலங்காரங்களையெல்லாம் பார்த்துக் கொண்டு ஆச்சரியத்துடன் ஆசிரமத்திற்குள் நுழைந்தனர்.
உள்ளே போனதும் இன்னும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். ஆசிரமத்தில் உள்ள எல்லோருக்கும் ஒரே மாதிரி ‘ஆர்ட்’சில்க் சேலை அடுக்கி வைத்திருந்தனர்.
“வல்லபி, இந்தப் புடவைகள் எல்லாம் உன் தந்தை தான் அனுப்பியுள்ளார். ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்குப் பிடித்த, பொருத்தமான நிறத்தில். எல்லோருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது” என்றார் சிஸ்டர் மேரி.
குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் விஷ்ணு, வல்லபி திருமணம் முடிந்தது.
திருமணம், முதலிரவு போன்ற முக்கியமான நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு தான் மூர்த்தியும், மல்லிகாவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
நான்ஸியும், நெல்சனும் பிரியாவிடை பெற்று இட்டாலிக்கு பல பரிசுப் பொருட்களோடு திரும்பினர். மூர்த்தி மல்லிகாவுடன் சந்தோஷமாக அந்தப் பெரிய ஹாலில் உட்கார்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது வல்லபி, விஷ்ணுவுடன் உள்ளே நுழைந்தாள்.
“அம்மா, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறீர்கள் போல் இருக்கிறதே” என்றாள் வல்லபி.
“ரொம்ப நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக இருக்கிறதம்மா. உன்னையும், விஷ்ணுவையும் இப்படிப் பார்க்கும் போது மனதிற்கு அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறதம்மா” என்று சந்தோஷத்தில் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே கூறினார் மூர்த்தி.
“அப்பா, ரொம்ப நிம்மதிப் பெருமூச்சு விடாதீர்கள். எனக்கு விஷ்ணு செய்து கொடுத்த சத்தியம் ஒன்று பெண்டிங்கில் இருக்கிறது. அது உங்களுக்காக அவர் வாக்களித்த சத்தியம். பாலாஜிக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமை” என்றாள் வல்லபி மூச்சு விடாமல்.
“ஒரு நிமிடம்” என்ற மூர்த்தி, மல்லிகாவிடம் ஏதோ ரகசியம் பேசினார். மல்லிகா சிரித்துக் கொண்டே எழுந்து உள்ளே போனாள்.
கொஞ்ச நேரத்தில் ஏதோ பத்திரம் கொண்டு வந்து மூர்த்தியிடம் கொடுத்தாள். மூர்த்தி அதை வல்லபியிடம் கொடுக்க, வல்லபியும் விஷ்ணுவும் சேர்ந்து படித்தனர்.
மூர்த்தியின் பெயரில் இருந்த ஐந்து ஏக்கர் நிலமும் பாலாஜிக்கு அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டிருந்தது.
“தேங்க் யூ டாடி! பாலாஜிக்கென்று ஒரு சொத்து கொடுத்து விட்டீர்கள். இதனால் அவனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். உடனே அவனுக்கும் தன்யாவிற்கும் திருமணம் செய்து விடலாம் இல்லையா?” வல்வபி ஆவலுடன் கேட்டாள்.
“முதலில் பத்திரத்தை ஒழுங்காகப் படி வல்லபி. அவன் மேல் எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை. உனக்காகத் தான் நான் இத்தனை கோடி பெறுமான நிலத்தை அவன் பெயருக்கு ‘செட்டில்மென்ட் ட்வீட்’ செய்திருக்கிறேன். அவன் ஒரு வருடத்தில் அந்த நிலத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விற்கவோ அல்லது அதன் மேல் கடன் வாங்கவோ அவனுக்கு அதிகாரம் கிடையாது. அதனால் அவன் ஒரு வருடத்தில் திருமணம் செய்ய முடியாது. அந்த ஒரு வருட சம்பாத்தியத்தில் தான் திருமணம் செய்த பிறகு ஏற்படும் அவன் செலவுகளைப் பார்த்துக் கொள்ள முடியும்” என்று முடித்தார்.
விஷயம் புரிந்த பாலாஜிக்கு இது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் தன்யா “இது தான் சரியான முடிவு” என்று நினைத்தாள்.
“பாலாஜிக்கு இந்த பத்திரம் திருப்தி அளிக்கவில்லை. ஆனால் நீ மட்டும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறாயே, அது எப்படி?” என்றாள் வல்லபி சிரித்துக் கொண்டே.
“அக்கா, பாலாஜியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். எதுவும் சேமிப்பில் வைத்துக் கொள்ள மாட்டார். நாளை இருக்கிறோமோ இல்லையோ இன்றே அனுபவித்து விடு என்று தான் செலவு செய்வார். ஆதலால் அவருடைய சொத்துக்கள் உங்களிடம் அல்லது மாமாவிடம் இருந்தால் அது தேசிய வங்கியில் இருப்பது போலத் தான்” என்று சொல்லி விட்டு கலகலவென்று சிரித்தாள்.
“பாலாஜி அதிர்ஷ்டக்காரன் தான். தன்யா போன்ற நல்ல புரிதலுள்ள, பரந்த நோக்கமுள்ள பெண் மனைவியாகக் கிடைத்ததற்கு” என்றான் விஷ்ணு.
ஒரு மாதம் விஷ்ணுவிற்கும், வல்லபிக்கும் மூச்சு விடவே நேரமில்லாமல் வேலை இருந்தது. அதனால் பாலாஜியைப் பற்றியோ, தன்யாவைப் பற்றியோ நினைப்பதற்கே அவர்களுக்கு நேரம் இல்லை.
விஷ்ணு, வல்லபிக்கு போன் செய்து “பாலாஜியைப் போய்ப் பார்த்து விட்டு வரலாமா?” என்று கேட்டான்.
“அக்கா, மாமா நீங்கள் இருவரும் என் பொறுப்பில் அப்பா கொடுத்த தென்னந்தோப்பிற்கு வாருங்கள். நாங்கள் இருவரும் தினமும் பிற்பகல் இந்த தோப்பிற்கு வருகிறோம். இங்கே காற்றில் விழும் மட்டை, தூசி எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு நான் என் அறைக்கும், தன்யா ஹோமிற்கும் போய் விடுவோம். ஆனால் எங்கள் இருவருக்கும் நிலத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை” என்றான் பாலாஜி.
“பாலாஜி, நீங்கள் இருவரும் அங்கேயே இருங்கள். நான் ஒரு தோட்டக்கலை நிபுணரை அழைத்து வருகிறேன். அவர் உங்களுக்குத் தோப்பை பராமரிக்கும் முறையைச் சொல்லித் தருவார்” என்று கூறி வல்லபியையும் அழைத்துக் கொண்டு தோப்பிற்கு சென்றான் விஷ்ணு. போகும் வழியில் யாருக்கோ போன் செய்து கொண்டே வந்தான்.
பாலாஜியும், தன்யாவும் இவர்களை வரவேற்றனர். காய்ந்த தென்னை ஓலைகளை வைத்து ஒரு சிறிய அறை அமைத்திருந்தனர். ஒரு இரும்புக் கட்டிலும் படுக்கையுடன் இருந்தது. உள்ளே நிறைய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
எல்லாம் தென்னை மரத்திற்குத் தேவையான உரமூட்டைகள்.
“இந்த உரமெல்லாம் போடலாமென்று யார் சொன்னது?”
“உரம் விற்கின்ற கடையில் தான் கேட்டோம் மாமா. அவர்கள் தான் கொடுத்தார்கள். இது மொத்தம் ஐயாயிரம் ரூபாய் ஆனது மாமா” என்று ஒரு கடை பில்லை எடுத்துக் காட்டினான்.
“அடப்பாவி! எதையும் அவசரப்பட்டு செலவு செய்யாதே. இனிமேல் என் நண்பனான விவசாய அதிகாரி உனக்குத் தேவையான உதவிகள் செய்வார்” என்றான் விஷ்ணு. அப்போது அங்கே இரண்டு விவசாய அதிகாரிகள் ஜீப்பில் வந்து இறங்கினர்.
அவர்களோ இயற்கை உரங்கள் ஆட்டுச் சாணம், மாட்டுச் சாணம் மேலும் மரங்களில் இருந்து விழும் அழுகிய இலைகள் ஆகியவற்றை ஒரு பெரிய குழி வெட்டி அதில் போட்டு மக்க வைத்து அதை அடி உரமாக உபயோகிக்க வேண்டும் என்று பல அறிவுரைகள் சொன்னார்கள்.
ஏற்கனவே வாங்கி அடுக்கி வைத்திருந்த உரமூட்டைகளை திருப்பிக் கொடுத்து விட்டு வேறு உரமூட்டைகளை வாங்கச் சொன்னார்கள்.
பாலாஜியும் அவர்கள் கூறியபடியே நிலத்தில் விவசாயம் செய்தான். நல்ல விளைச்சலைக் கண்டார்கள்.
ஒரே வருடத்தில் லாபம் மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தது. அந்தத் தொகையைக் கொண்டு வந்து அப்படியே வல்லபியிடமும் விஷ்ணுவிடமும் கொடுத்தான்.
வல்லபி, அவர்களைத் தன் தந்தையிடம் அழைத்துச் சென்றாள். மூர்த்திக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சியே. இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
“அப்பா, இவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யலாம். பாலாஜியும், தன்யாவும் மிகவும் பொறுப்புடன் தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள்” என்றாள் வல்லபி.
“அப்பா, அம்மா, நீங்கள் இருவரும் ஒருமுறை உங்கள் தென்னந்தோப்பைப் பாருங்கள். உங்களுக்குத் திருப்தி ஆனால் தான் மேற்கொண்டு எல்லாம்” என்றாள் தன்யா. மல்லிகாவும் மூர்த்தியும் சிரித்துக் கொண்டார்கள்.
மல்லிகாவும், மூர்த்தியும் தோப்பைப் பார்த்து விட்டு மிகவும் ஆச்சரியப்பட்டனர். ஒரே மரத்தில் நூற்றுக்கணக்கான காய்கள்.
“பரவாயில்லை, நீ படிப்பில் கோட்டை விட்டாலும், வாழ்க்கையில் தேறி விட்டாய்” என்றார் மூர்த்தி, பாலாஜியைத் தட்டிக் கொடுத்து,
“இந்த லாபம், வருமானம், விளைச்சல் எல்லாம் விஷ்ணு மாமாவாலும், வல்லபி அக்காவாலும் தான். அவர்கள் தான் தோட்டக்கலை நிபுணர்களை அழைத்து வந்து விளைச்சலைப் பெருக்குவது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்கள்” என்றான் பாலாஜி முகம் மலர.
“பாலாஜி தான் நம் உள்ளம் குளிர நல்ல வருமானம், விளைச்சல் எல்லாம் காட்டி விட்டானே. ஆதலால் நாம் உடனே நம் மகன் பாலாஜி, தன்யா இருவரின் திருமணத்திற்கு ஏற்பாடு ரொம்ப கிராண்ட்டாக செய்ய வேண்டும்” என்றாள் மல்லிகா முகம் மலர சிரித்துக் கொண்டே.
“இந்த சந்தோஷம், இந்தக் குடும்பத்தின் சங்கமம், எல்லாம் நம் மகள் வல்லபியால் தான்” என்றார் மூர்த்தி கண்கள் பனிக்க.
“மாமா, உங்கள் மகள் வல்லபி இனி தனி ஆள் இல்லை. இந்த விஷ்ணுவில் பாதி. ஆதலால் நீங்கள் என்னையும் பாராட்ட வேண்டும்” என்றான் விஷ்ணு குறும்பாக சிரித்தபடி, ஒரு கையால் வல்லபியை அணைத்துக் கொண்டு அவள் நெற்றியில் முட்டியபடி.
இந்த “வல்லபி” நாவல் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். அல்லது 77082 93241 என்ற எண்ணில் அழைத்தும் ORDER செய்யலாம். நன்றி
(சுபம்)
GIPHY App Key not set. Please check settings