in

வல்லபி ❤ (பகுதி 16) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வல்லபி ❤ (பகுதி 16)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7  பகுதி 8_பகுதி 9_பகுதி 10 பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14  பகுதி 15

மூன்று மாதம் முடிந்து சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் வந்து இறங்கினாள் வல்லபி. அவள் ஏற்கனேவே சந்தனமும், வெண்சங்கும் கலந்த நிறம். ஜெர்மனியிலிருந்து திரும்பிய அவள் ரோஜாப்பூவின் நிறமும் கலந்த ஓர் அழகிய பதுமை போல் இருந்தாள்.

விஷ்ணு அவளைப் பார்த்து பிரமித்து நின்றான். ‘இவ்வளவு அழகா என் வல்லபி’ என்று ஆச்சரியப்பட்டான். விஷ்ணுவைப் பார்த்து சிரித்து கையசைத்துத் தன் வருகையைத் தெரிவித்தாள்.

அருகில் இருந்த மூர்த்தியைப் பார்த்தும் அவ்வாறே செய்தாள். அவள் அம்மா மல்லிகாவைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள். இதுவரை அவள் தாயை அவ்வளவு மலர்ச்சியுடனும், சந்தோஷத்துடனும்  அவள் பார்த்ததில்லை.

இந்த மூன்று மாதத்தில் என்ன மெடிக்கல் மிராக்கிள் நடந்தது? நன்றாக பலமாகக் காலை ஊன்றி நின்று மகிழ்ச்சியுடன் வல்லபியைப் பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தாள் மல்லிகா.

புருவத்தை உயர்த்தித் தன் வியப்பைத் காட்டி சூட்கேஸ்கள் அடங்கிய ‘கார்ட்’டைத் தள்ளிக் கொண்டு, அருகில் வந்து நின்ற வல்லபியை இறுக அணைத்துக் கொண்டாள் மல்லிகா. பாலாஜி அச்சத்துடனும், சிறிது வெட்கத்துடனும் லேசாக சிரித்தக் கொண்டு நின்றிருந்தான்.

அடுத்த நாள் ஓய்வு எடுத்துக் கொண்டாள். ஓய்வு என்று தான் பெயரே தவிர, ஜெர்மனியில் அவள் தங்கியிருந்த மூன்று மாதத்திற்கான செலவுப் பட்டியலைத் தயார் செய்தாள். தான் ஆற்றிய மருத்துவப் பணிகளை விவரித்து ஒரு நீண்ட ‘டிராப்ட்’ தயார் செய்தாள். அதை மீண்டும் சரி பார்த்து அதற்கு ஆதாரமாக போட்டோக்களை இணைத்து தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினாள்.

பாலாஜி அன்று மாலை வல்லியைப் பார்க்க வந்து தயங்கி நின்றான்.

“வா பாலாஜி, ஏன் இவ்வளவு தயக்கம்? ஏர்போர்ட்டில் கூட சரியாகப் பேசவில்லை. புதுப்பெண் மாதிரி வெட்கப்பட்டு நிற்கிறாயே ஏன்?” வல்லபி.

“புதுப்பெண் இல்லை வல்லபி… புது மாப்பிள்ளை” என்று கூறியவாறு இருவருக்கும் ஆரஞ்சு பழரசம் கொண்டு வந்தாள் மல்லிகா.

“என்னம்மா சொல்லுகிறாய்?” வல்லபி.

“நீ அவனையே கேள்” என்றவள் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றாள். அப்போது விஷ்ணு உள்ளே நுழைந்தான்.

“அம்மா கூட இப்போது வேறு மாதிரி தெரிகிறார்கள் இல்லையா பாலாஜி” என்றாள் வல்லபி வியப்புடன்.

“அதெல்லாம் ஒரு மேஜிக் வல்லபி. நீ சரியான மரமண்டை. உனக்கெங்கே புரியப் போகிறது” என்றான் விஷ்ணு.

“நானா, மரமண்டையா? இதெல்லாம் மேஜிக்கா?” என்றாள் வல்லபி வியப்புடன்.

“கணவன், மனைவி என்னும் உறவு ஒரு மேஜிக் தான் வல்லபி. வயதானாலும் மாமா, மல்லிகா அத்தையிடம் காட்டும் அன்பு தான் அவர்களை இப்படி மாற்றியிருக்கிறது. அவர்களைப் பற்றித் தவறாக நினைக்காதே. ஒரே ஒரு அன்பான சொல் போதும். ஒரு அன்பான பார்வை போதும். அது தான் மேஜிக் வல்லபி. அதுதான் அவர்களின் மலர்ச்சியின் காரணம்” என்றான் விஷ்ணு.

“அது சரி, அம்மா ஏன் பாலாஜியை புது மாப்பிள்ளை என்றார்கள்?” என்றாள் வல்லபி விஷ்ணுவையும், பாலாஜியும் பார்த்து.

“அது ஒரு பெரிய கதை வல்லபி. பாலாஜி உன் கதையை நீயே சொல்” என்று குறும்புடன் கூறிவிட்டு அங்கிருந்த உயரமான ஒரு ஸ்டூலில் ஏறி உட்கார்ந்து கொண்டான் விஷ்ணு.

பாலாஜி தயங்கி நின்றான்.

“சொல் பாலாஜி, என்ன ஆயிற்று?” என்றாள் வல்லபி.

“அக்கா, என் மேல் எந்தத் தவறும் இல்லை. எல்லாம் இந்த தன்யாவால் தான். எப்போது பார்த்தாலும் என்னை ரொம்ப கலாட்டா செய்து கொண்டே இருந்தாள். ஒருநாள் ரொம்ப கோபம் வந்து ஒரு சின்னப் பாறையிலிருந்து அவளைத் தள்ளி விட்டேன். அப்போது அவள் கை உடைந்து விட்டது. அதனால் பரிதாபப்பட்டு நீ வேலை செய்யும் மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்த்தேன். அதிலிருந்து எங்கள் இருவருக்கும் இடையே இருந்த சண்டை காதலில் முடிந்தது. நான் அவளை ஏமாற்ற மாட்டேன் அக்கா. உங்கள் திருமணம் முடிந்ததும் நான் அவளை உங்கள் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்கிறேன் அக்கா” என்றான் பணிவோடு.

“இந்தக் கதையெல்லாம் சிஸ்டர் மேரிக்குத் தெரியுமா? நீ நன்றாகப் பழகி விட்டு, பிறகு அந்தப் பெண் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து வந்தவளாயிற்றே என்று நீ ஒதுக்கி விட்டால்?” வல்லபி.

“அக்கா, எங்கள் நட்பு சிஸ்டருக்குத் தெரியும். அவள் சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து வந்தது ‌தன்யாவின் தவறு இல்லை. நான் செய்த தவறுகளுக்கு அளவு ஏது? ஏதோ உங்களால் தான் நான் மனிதனாக மாறி இருக்கிறேன். தன்யா எனக்கு மனைவியாக் கிடைத்தால் அது நான் செய்த அதிர்ஷ்டம் தான் அக்கா. என்னை மன்னிப்பீர்களா அக்கா?”

“நீ செய்த தவறுதளை உணர்ந்து தன்யாவை மனைவியாக ஏற்றுக் கொள்ள நினைக்கிறாய் பார், அதுவே நீ நல்லவன் என்பதற்கு சரியான அடையாளம்” என்றாள் வல்லபி.

வல்லபி மதுரையில் உள்ள மருத்துவமனையில் பணியில் சேர்ந்து ஒரு மாதம் ஆகிவிட்டது.

வாரத்தில் ஒரு நாள் தன் பெற்றோருடன் தாமரைக் குளத்தில் வந்து தங்குவாள். அப்போது சுகந்தியும் அங்கு வந்து விடுவாள்.

திடீரென்று ஒருநாள் நான்ஸியிடமிருந்து போன். அவள் இட்டாலியிலிருந்து அவள் ‘பாய் ப்ரெண்ட்’ நெல்ஸனோடு கிளம்பி இந்தியா வருவதாகவும், பிறகு அங்கிருந்து கிளம்பி கங்கை முதல் காவிரி வரை பார்க்கப் போவதாகவும் தெரிவித்தாள். நான்ஸியையும், நெல்ஸனையும் வரவேற்க வல்லபியும், விஷ்ணுவும் சென்னை விமான நிலையம் சென்று மதுரைக்கு அழைத்து வந்தனர்.

மதுரையில் ஒரு வாரம் தங்கி இருவரும் ஓய்வெடுத்தனர். ஜெட்லாக் சரியானவுடன் நல்ல டிராவல்ஸ் மூலமாக ஏற்பாடு செய்து கொண்டு கங்கோத்ரி, தேவ் பிராக், ஹரித்வார், கான்பூர், அலகாபாத், வாரணாசி, பாட்னா, கல்கத்தா போன்று, கங்கை உற்பத்தியாகும் இடம் முதல் கல்கத்தாவில் கடலுடன் சங்கமம் ஆகும் இடம் வரை கங்கையுடனே நடைபோட வேண்டும் என்று தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.

வல்லபிக்கும் விஷ்ணுவுடன் சேர்ந்து புனிதமும், வேகமும் நிறைந்த கங்கையை தரிசிக்க மிக்க ஆவலாக இருந்தது. தன் விருப்பத்தை விஷ்ணுவிடம் தெரிவித்தாள். மேற்கொண்டு அவளே பேசட்டும் என்று விஷ்ணு அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆனால் எல்லோருடைய ஆசைகளும் நிறைவேறுவதில்லை விஷ்ணு. எல்லா லீவும் இந்த பார்வதி அம்மாவுடன் ஆஸ்பத்திரியில் இருக்கும் போதே காலியாகி விட்டது, என்ன செய்வது?” என்றாள் வல்லபி லேசான ஆற்றாமையுடன்.

“நீ கவலைப்படாதே வல்லபி. பார்வதி அம்மாவை கவனித்துக் கொண்டதே பெரிய புண்ணியம். கங்கையை தரிசித்தால் கிடைக்கும் புண்ணியத்தை விடப் பெரியது ஒரு நிராதரவான பெண்மணிக்கு செய்யும் உதவி”.

லேசான கோபத்துடன் அவன் தோளிலேயே தன் தோளால் இடித்தாள்.

“ஹே முரடு, இப்படியா இடிப்பாய். இங்கே பார், என் பால் அண்ட் சாக்கெட் ஜாயின்ட் வீங்கி விட்டது” என்றவன், அவள் முகத்தைத் தன்  இரு கைகளாலும் தாங்கி, “அசடு, நம் திருமணம் முடிந்தவுடன் இத்தாலியின் வெனிஸ் நகரத்திற்குப் போய் கொண்டாலாம், போட்டில் சுற்றலாம். பிறகு அப்படியே வந்து கங்காதேவியை தரிசிக்கலாம் சரியா?” என்றவன், தாங்கிய அவள் முகத்தைத் தன் மார்புடன் அணைத்துக் கொண்டான்.

அதே நேரத்தில் அங்கு வந்த மூர்த்தி “ஸாரி, வெரி ஸாரி, ஆனால் ரொம்ப தேங்க்ஸ்” என்றார்.

“ஸாரி ஓ.கே. அங்கிள், ஆனால் தேங்க்ஸ் எதற்கு?” என்றான் குறும்புச் சிரிப்புடன்

“நான் செய்ய வேண்டிய முக்கியமான வேலையை நீங்கள் இப்போது இருக்கும் நிலைமை எனக்கு நினைவுபடுத்தியது” என்றவர் ‘ஹாஹா’ என்று உரக்க சிரித்தார். வல்லிபியின் கன்னம் சிவந்தது.

“முக்கியமான வேலையா? அது என்ன அப்பா?” என்றாள்.

“உங்கள் இருவருக்கும் நிச்சயம் ஆகி விட்டது. திருமணம் முடிக்க வேண்டியது பெரியவர்களான எங்கள் கடமை இல்லையா?” என்றார் மூர்த்தி.

“அம்மா இனிமேல் இங்கேயே உங்களுடன் இருப்பார்களா டாடி? என்னுடன் மதுரை இருந்தாலும் சந்தோஷமே” என்றாள் வல்லபி.

“என் மனைவி மட்டும் அல்ல. என் மகளும், மருமகனும் என்னோடு தான் ‌இருப்பார்கள். அப்படி அவர்களுக்குத் தாமரைக் குளத்தில் இருக்க விருப்பமில்லை என்றால், நான் அவர்களோடு போய் இருந்து விடுவேன். என்ன விஷ்ணு, நீ என்ன சொல்கிறாய்?” என்றார் சிரித்துக் கொண்டே.

“உங்கள் விளையாட்டிற்கு நான் வரவில்லை மாமா. நீங்களாயிற்று, உங்கள் பெண்ணாயிற்று” என்றான் விஷ்ணு தோளைத் குலுக்கிக் கொண்டு.

“உன் இட்டாலி தோழி நான்ஸியும், அவள் பாய் பிரண்ட் நெல்சனும் டிராவல்ஸில் கிளம்பி விட்டார்களா வல்லபி? எங்கோ இட்டாலியில் பிறந்த ஒரு பெண்ணிற்கு, இந்தியாவில் உள்ள கங்கை நதியை தரிசிக்க வேண்டுமென்று ஆவல் வந்திருக்கிறது பார். அதிசயம் தான். நமக்கே அவ்வளவு ஆர்வம் உண்டாகவில்லையே” என்றார் மூர்த்தி.

“மாமா, நான்ஸியும், நெல்ஸனும் இந்தியாவில் இருக்கும் போதே எங்கள் திருமணம் முடித்தால் அவர்களும் நன்றாக சந்தோஷப்படுவார்கள். தமிழர்களின் திருமண முறையை நன்றாக என்ஜாய் செய்வார்கள் இல்லையா?” என்றான் விஷ்ணு.

“அதானே” என்று சந்தோஷமாக தலையசைத்தாள் வல்லபி.

“உங்கள் சந்தோஷம் தான் என் சந்தோஷம். நீ நான்ஸிக்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்லம்மா. நாம் இந்த மாதமே நல்ல நாள் பார்த்து, நம் குலதெய்வம் கோயிலில் பொங்கல் வைத்து, நம் குலவழக்கப்படி சாமி கும்பிட்டு விட்டுத் திருமண வேலைகளைத் தொடங்கலாம்” என்றார் மூர்த்தி.

வல்லபி போன் செய்து நான்ஸியிடம் விஷயம் தெரிவித்தாள்.

நானஸியோ, “பொங்கல் வைப்பதிலிருந்து வல்லபியின் கழுத்தில் விஷ்ணு  தாலி கட்டும் வரை பார்க்க வேண்டும்” என்று உத்தரவிட்டாள்.

“அப்படியானால் நீ உன் கங்கையாற்றின் பயணத்தை முடித்துக் கொண்டு சீக்கிரம் வா. ஏற்கெனவே ஏதேதோ காரணம் சொல்லி, இந்த வல்லபி எங்கள் திருமணத்தைத் தள்ளித் தள்ளி வைக்கிறாள்” என்று குறைபட்டுக் கொண்டான் விஷ்ணு.

பதினைந்து நாளில் முடிக்க வேண்டிய பயணத்தை பத்தே நாட்களில் முடித்துக் கொண்டு திரும்பி விட்டனர்  நான்ஸியும், நெல்ஸனும்.

பொங்கல் வைப்பதற்கு தாமரைக்குளம் பக்கத்தில் ஐம்பது  மைல் தூரத்தில் உள்ள ஒரு அம்மன் கோயிலுக்குச் செல்ல உறவினர்கள் எல்லோரையும் வேனில் ஏற்றி விட்டார் மூர்த்தி.

சுகந்தி, நான்ஸி, நெல்சன் இவர்களைத் தன் ஆடிக் காரை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். ஆனால் அவர்களும் உறவினர்களோடு வரவே விரும்பினர். பாலாஜி, தன்யாவையும் அவளுடைய தோழிகள் மூவரையும் வேனில் ஏற்றிவிட்டான்.

உறவினர்கள் எல்லோரும் மல்லிகாவையும், மூர்த்தியையும் புதுமணத் தம்பதிகள் என்று கூறி கலாட்டா செய்து வந்தனர்.

மரகதம் கூட தன் சோக முகத்தை கழற்றி எறிந்து விட்டு, “அண்ணி, அண்ணி” என்று மல்லிகாவிடம் குழைந்து பேசிக் கொண்டு வந்தாள்.

பொங்கல் வைத்துப் படைத்த பின்னர், அங்கேயே அம்மன் சன்னதியில் கோயில் குருக்களை வைத்து வல்லபிக்கும், விஷ்ணுவிற்கும் திருமணத் தேதியை முடிவு செய்தனர்.

பொங்கல் வைக்கும் போது நான்ஸி காய்ந்த விறகுச் சுள்ளிகளைத் தள்ளி எரிய வைத்தாள். அந்தப் புகையிலும், அனலிலும், வெயிலிலும் அவள் முகம் செக்கச் செவேலென்று சிவந்து விட்டது. நெல்சன் பக்கத்தில் நின்று கொண்டு புகையினால் கலங்கிய அவள் கண்களைக் கைகுட்டையால் துடைத்து விட்டுக் கொண்டிருந்தான்.

சுகந்தி அவர்களைப் பார்த்து ரசித்துக்  கொண்டிருந்தாள்.

“சுகந்தி, முரளி ஞாபகம் வந்து விட்டதா?” என்று வல்லபி அவளை கலாட்டா செய்து கொண்டிருந்தாள். சுகந்தி சிரித்துக் கொண்டாள். ஒரு வழியாகக் குலதெய்வத்திற்கு பொங்கல் வைக்கும் விழாவை முடித்துக் கொண்டு எல்லோரும் தாமரைக் குளம் திரும்பினர்.

திருமணத்திற்கு வேண்டிய புடவைகள், நகைகள் எல்லாவற்றையும் மூர்த்தி தம்பதிகளும், ராமசந்திரன் தம்பதிகளும் பார்த்துப் பார்த்து வாங்க திட்டம் போட்டனர்.

எல்லாவற்றையும் வேடிக்கையுடனும், சந்தோஷத்துடனும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர் வல்லபி, சுகந்தி, நான்ஸி மூவரும்.

வல்லபிக்கு காஞ்சிபுரம் சேலைகள் முப்பதும், மற்ற ரகப் புடவைகள் ஐம்பதும் வாங்க வேண்டும் என்று மூர்த்தி ஒற்றைக் காலில் நின்றார்.

“அப்பா‌, நான் என்ன புடவைக் கடையா வைக்கப் போகிறேன்?” என்று விழுந்து விழுந்து சிரித்தாள் வல்லபி.

 நான்ஸியோ அவளுக்கும் பத்துப் பட்டுப் புடவைகள் வேண்டும் என்று மூர்த்தியிடம் “டாடி” என்று கொஞ்சிப் பேசிப் பிடிவாதம் செய்து சம்மதம் வாங்கி விட்டாள்.

“ஏய் நான்ஸி, முதலில் நீ புடவை கட்டத் தெரிந்து கொள். பிறகு வாங்கலாம்” என்று பயங்கரமாக கலாட்டா செய்து சிரித்தாள் வல்லபி.

முரளியும் பதினைந்து நாட்கள் விடுமுறையில் சுகந்தியிடம் வந்திருந்தான். ஏற்கனவே வல்லபியும், சுகந்தியும் அடிக்கும் லூட்டி இவனுக்கு மிகவும் பிடிக்கும். சில நேரங்களில் அவனும் அவர்கள் கலாட்டாவில் கலந்து கொள்வான்.

பல நேரங்களில் கவனிக்காதது போல் தூர நின்று ரசிப்பான். இப்போது அவர்கள் கலாட்டாவில் நான்ஸியும் சேர்ந்து கொள்வதைப் பார்த்து ரசித்தான். விஷ்ணுவிற்கும், முரளிக்கும் நல்ல நண்பனாகி விட்டான் நெல்சன்.

மூர்த்தியோ, காஞ்சிபுரம் போய் தான் பட்டுப் புடவைகள் வாங்க வேண்டும் என்று பிடிவாதம் செய்தார்.

“மாமா, மைசூர் பாக் வாங்க வேண்டுமென்றால் மைசூருக்குப் போவீர்கள், சரியான ஜோக்” என்று விஷ்ணு கிண்டல் செய்தான்.

“இதில் என்னடா ஜோக் இருக்கிறது? சொந்தபந்தம், ஊர் உலகம் எல்லாம் வியக்க என் ஒரே மகளுக்குத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்” என்றார் மூர்த்தி காலரைத் தூக்கி விட்டபடி.

“ஊர், உலகம் எல்லாம் வியக்கத் திருமணம் செய்வது பெரிய விஷயம் இல்லையப்பா. பணம் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் உலகமே வியக்க கணவன், மனைவி இருவரும் இல்வாழ்க்கையிலும் பொது வாழ்விலும் ஈருடலும், ஓருயிருமாக வாழ வேண்டும் டாடி. சந்தோஷமும், பெருமையும்  காஞ்சிப் பட்டுப்புடவையில் இல்லை அப்பா. நம் சந்தோஷத்தை மற்றவர்கள் தங்கள் சந்தோஷமாகக் கொண்டாடுவதில் தான் இருக்கிறது டாடி” என்றாள் வல்லபி நீண்ட பெருமூச்சு விட்டபடி.

“சொல்வதை விளக்கமாக சொல்லம்மா” மூர்த்தி.

இந்த “வல்லபி” நாவல் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். அல்லது 77082 93241 என்ற எண்ணில் அழைத்தும் ORDER செய்யலாம். நன்றி

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கானல் நீர் (சிறுகதை) – ✍ வீ.சிவானந்தம், தஞ்சாவூர்

    தாய்மையின் தவிப்பில் ஓர் இரவு (சிறுகதை) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை