in

வல்லபி ❤ (பகுதி 14) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வல்லபி ❤ (பகுதி 14)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7  பகுதி 8_பகுதி 9_பகுதி 10 பகுதி 11  பகுதி 12  பகுதி 13

ரு வழியாகக் கார் மதுரையில் வல்லபி வீட்டு வாசலில் வந்து நின்றது. மணி இரவு ஒன்று. அதனால் மல்லிகா விஷ்ணுவை அங்கேயே படுக்கச் சொன்னாள். அடுத்த நாள் காலை விஷ்ணு தூக்கம் கலைந்து எழுவதற்குள் வல்லபி மருத்துவமனைக்குச் சென்று விட்டிருந்தாள்.

அன்று வல்லபிக்கு மருத்துவமனையில் சரியான வேலை. ஆனால் வல்லபி பிடிவாதமாக எல்லா வேலைகளயும் முடித்து விட்டுத் தான் வீடு திரும்புவாள். அந்த நேரத்தில் விஷ்ணு யாரோ சற்று வயதான ஒரு பெண்ணுடன் தன் காரில் அவளைத் தேடி வந்தான்.

“இது யார் விஷ்ணு?”

“பாலாஜியின் அம்மா, மிஸஸ் பார்வதி.”

“அவர்களை ஏன் இங்கு அழைத்து வந்தாய்?” என முகம் சுளித்தாள் வல்லபி.

“இவர்கள் என் அலுவலகத்தில் வந்து, பாலாஜியை நான் தான் ஜெயிலுக்கு அனுப்பினேன் என்று ஆக்ரோஷமாகக் கத்தினார்கள். கத்தி முடித்தவுடன் ஒரேயடியாக இருமல். புரை ஏறிவிட்டதோ என்று நினைத்து தண்ணீர் சோடா எல்லாம் கொடுத்தேன். எதுவுமே உள்ளே போகவில்லை. இவர்கள் உடம்பு இப்படி ஆகி விட்டதே என்று வெளியே காரில் உள்ள அவர் கணவரிடம் சொன்னால் ‘இது ஒரு நாடோடி, எனக்கு வேறு வேலை இருக்கிறது’ என்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார். இந்த அம்மா மூச்சுத் திணறி பரிதாபமாக இருந்தார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் தான் உன்னிடம் அழைத்து வந்தேன்” என்றான் மூச்சு விடாமல்.

பார்வதி, மருத்துவமனைக்கு வந்தும் தொடர்ந்து இருமிக் கொண்டு தான் இருந்தாள். தொண்டையில் வலி தாளாமல் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. வல்லபி, அவளை மருத்துவமனையில் சேர்த்து விட்டாள்.

இரண்டு நாட்களாக சாப்பாடு, தண்ணீர் எதுவும் உள்ளே போகவில்லை. குளூக்கோஸ் தான் ஆகாரம் என்றானது. அந்த மருத்துவமனையின் எல்லைக்குட்பட்ட வரை எல்லா வைத்தியமும் செய்தார்கள்.

இரத்தப் பரிசோதனையில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைந்து இருந்தது. எடையும் மளமளவென்று குறைந்தது. மேலும் சில பரிசோதனைகள் செய்து தொண்டையில் புற்றுநோய் என்ற முடிவிற்கு வந்தார்கள். அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிடியூடிற்குப் போக ஏற்பாடு செய்தார்கள். பார்வதியுடன் இரண்டு ஜூனியர் டாக்டர்கள் தான் ஆம்புலன்ஸில் சென்றனர் .

“பாவம், பணம் பணம் என்றலைந்து கடைசியில் கவனிப்பதற்குக் கூட யாரும் இல்லாத அநாதையாக நிற்கிறார்கள்” என்றாள் வல்லபி. விஷ்ணு ஒன்றும் சொல்வதற்குத் தெரியாமல் தலையை மட்டும் ஆட்டினான்.

“பாலாஜியை ஜாமினில் எடுக்கலாமா? அவன் அம்மாவோடு மருத்துவமனையில் துணையாக இருப்பான்” என்றாள் வல்லபி.

வல்லபியும் விஷ்ணுவும் ஜெயில் அதிகாரிகளுடன் பேசினார்கள். அப்போது அந்த ஜெயிலர், டாக்டர் அம்பேத்கர் பிறந்ததினத்தை முன்னிட்டு பாலாஜியின் நன்னடத்தை காரணமாக அவனை தண்டனை காலத்திற்கு முன்பே விடுதலை செய்ய மேலிடத்துக்கு சிபாரிசு செய்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.

அடுத்த மாதம் வரப்போகும் அம்பேத்கர் பிறந்த நாள் வரை அவன் அம்மா காத்திருப்பார்களா? இப்போதே வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் மாஸ்க் வைத்துத் தான் உயிரோட்டம் இருக்கிறது. ரேடியோதெரபி, கீமோதெரபி என்றும் வைத்தியம் செய்து கொண்டிருந்தார்கள்.

நாளாக ஆக, பார்வதியின் நிலமை மிகவும் மோசமாகியது. எடை மிகவும் குறைந்தது. தலைமுடியெல்லாம் கொட்டி விட்டது. நல்ல பலமாக, கம்பீரமாக இருந்த அவள் அந்த மருத்துவமனை உடையில் ஏதோ ஒரு அட்டை பொம்மை போல் இருந்தாள். மூச்சு மட்டும் தான் ஓடலாமா, நின்று விடலாமா என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. பார்வதியின் மொத்த மருத்துவச் செலவுகளும் விஷ்ணுவும், வல்லபியும் ஏற்றுக் கொண்டனர்.

மல்லிகா ஒன்றும் சொல்லவில்லை. மூர்த்தி மட்டும், “உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் நீங்கள் தலையிடுகிறீர்கள்” என்று திட்டிக் கொண்டிருந்தார்.

“மாமா நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை நாங்கள் செய்கிறோம்” என்றான் விஷ்ணு.

“அவள் வேறு ஒரு பணக்காரனின் மனைவி. அதனால் நான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல் தாவிக் கொண்டே இருந்தால் இறுதிக் காலத்தில் நம் கைப்பிடியில் எதுவும் இருக்காது. இது எனக்கும் ஒரு பாடம் தான்” என்ற மூர்த்தி, வருத்தம் தாங்காமல் பெருமூச்செறிந்தார்.

மல்லிகா எல்லோருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள். வல்லபியின் நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு மல்லிகா, மூர்த்தியின் வீட்டிற்குப் போவதும் வல்லபியுடன் திரும்புவதும் வழக்கமாகி விட்டது.

பாலாஜி விடுதலை ஆகி வரும் தினம். பார்வதியின் நிலையில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது. தெளிவாகப் பார்த்தாள், ஆனால் மூச்சு மட்டும் இரைத்தது. பாலாஜியைப் போய் அழைத்து வருவதாக பார்வதியிடம் சொல்லி விட்டு விஷ்ணுவும், வல்லபியும் கிளம்பினார்கள்.

“விஷ்ணு, பார்வதி அம்மாவிற்காக எல்லா விடுமுறைகளையும் எடுத்தாகி விட்டது. இனிமேல் லீவ் வேண்டுமென்றால் சம்பளமில்லாத விடுமுறை தான் எடுக்க வேண்டும்” என்றாள் வல்லபி காரில் போகும் போது.

“என் நிலைமையும் அதே தான் வல்லபி. இந்த மாதம் அப்பாவிடம் கொடுக்கும் சம்பளப் பணமும் கொடுக்க முடியவில்லை. ஹாஸ்பிடலுக்குக் கட்டுவதற்கு நிறையப்  பணம் தேவைப்படுகிறது” என்றான் விஷ்ணு.

பாலாஜியை அழைத்துக் கொண்டு பார்வதி தங்கியிருந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள்.

“பாலாஜி மனதைத் தேற்றிக் கொள். இப்போது அம்மா தெளிவாக இருக்கிறார்கள், பேசுவதற்குத் தான் முடியவில்லை” என்றாள் வல்லபி.

“அக்கா, எனக்கொன்றும் அதிக வருத்தமில்லை. பணத்திற்காகவும் சௌகர்யமான வாழ்க்கைக்காகவும் என்னை நிராதரவாக விட்டுப் போனவர் தானே. இப்போது அந்தப் பணமா காப்பாற்றுகிறது? நீங்கள் இருவரும் இல்லையென்றால் என் அம்மாவின் நிலை என்ன?” என்றான் ‌கோபமாக.

“நடந்து முடிந்த விஷயத்திற்கு வருத்தப்பட்டு என்ன பயன்? இனி நடப்பது நல்லதாக இருக்க வேண்டும்” என்றாள் வல்லபி.

பார்வதியின் அறைக்கு அருகில் வரும் போது டாக்டர்களும், நர்சுகளும் ஒரே கூட்டமாக வருவதும் போவதுமாக இருந்தனர். வல்லபிக்கு அதைப் பார்த்தவுடன் மனம் கலங்கியது. பதறிக் கொண்டு உள்ளே ஓடினாள். பின்னாலேயே ஓடினர் விஷ்ணுவும், பாலாஜியும். பார்வதி எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு நிம்மதியாகப் போய் சேர்ந்து விட்டிருந்தாள். நர்ஸ், வல்லபியிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து பார்வதி கொடுக்கச் சொன்னதாகக் கூறினாள்.

“வல்லபி, நான் உனக்கும், உன் அம்மாவிற்கும், ஏன் உன் அப்பாவிற்கும் கூட மகத்தான துரோகம் செய்திருக்கிறேன். என் பிள்ளை பாலாஜி, உனக்கு செய்த கொடுமைக்கு வேறு யாராவதாக இருந்தால் அவனை நடத்தும் விதமே வேறு. என் பெயரில் இருக்கும் கொஞ்சம் நிலமும், வீடும் பாலாஜியின் பெயரில் கிரயம் செய்திருக்கிறேன். அவன் நல்ல வழியில் வாழ நீ தான் வழி காட்ட வேண்டும். அவன் எப்படி வாழ வேண்டும் என்று சொல்ல எனக்கு எந்த அருகதையும் இல்லை. என்னால் அதிகம் எழுத முடியவில்லை. உனக்கும், விஷ்ணுவிற்கும் என் வாழ்த்துக்கள். உன் அம்மாவிடம் என் மன்னிப்பைக் கூறு.”                     

இப்படிக்கு,

பார்வதி”  

என்று கடிதத்தில் எழுதியிருந்தது.

விஷ்ணுவும், பாலாஜியும் அந்தக் கடிதத்தைப் படித்து விட்டு ஒன்றும் சொல்லவில்லை. மருத்துவமனை சட்ட திட்டங்களை முடித்துக் கொண்டு பார்வதிக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளையும் முடித்தனர்.

“அக்கா, எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கிக் கொடுங்கள். நான் மதுரையில் உங்கள் மருத்துவமனைக்கு அருகில் ஏதாவது ஒரு அறை பார்த்துக் கொள்கிறேன்” என்றான் பாலாஜி.

“உன் அம்மாதான் உன் பெயரில் நிறைய நிலமும், வீடும் எழுதி வைத்திருக்கிறார்களே, நீ ஏன் அந்த நிலத்தில் பயிர் செய்யக் கூடாது?” வல்லபி.

“எனக்கு விவசாயம் பற்றி ஒன்றும் தெரியாது. நான் என்ன பயிர் செய்ய முடியும்? மேலும் அம்மாவின் தவறான நடவடிக்கையில் வந்த வீட்டையோ, நிலத்தையோ நான் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. ஏதாவது ஒரு ஆசிரமத்திற்கு தானமாகக் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்” என்றான்.

வல்லபிக்கு ஆச்சரியமாக இருந்தது .

“நிலத்திற்காகவும், வீட்டிற்காகவும் தானே என்னைக் கடத்தினாய். இந்த சொத்துக்கள் இப்போது நீ கேட்காமலே உனக்குக் கிடைத்திருக்கிறது, அதைப் போய் தானம் கொடுக்கப் போகிறேன் என்கிறாய்” என்றாள் வியப்புடன்.

“என் அம்மாவின் மூலம் வரும் எந்த ‌சொத்தும் எனக்கு வேண்டாம்” தலை குனிந்தது பாலாஜிக்கு.

“உண்மையாகவா?”  வல்லபி ஆச்சரியமாகக் கேட்டாள்.

“ஆம், நான் விஷ்ணு மாமாவிடம் கூட அதைப் பற்றிக் கூறி விட்டேன். உங்களுக்குத் தான் ஏதோ கிறிஸ்தவ ஸிஸ்டர் தெரியும் என்று கூறினார். அதனால் தான் என் அம்மா, எனக்குக் கொடுத்த எல்லா அசையும், அசையாத சொத்துக்களையும் உங்களுக்குத் தெரிந்த அந்த ஆஸ்ரமத்திற்குக் கொடுத்து விட விரும்புகிறேன்”

“உன் அம்மா, உன் எதிர்காலத்திற்கு அக்கறையுடனும், ஆசையுடனும் கொடுத்ததாயிற்றே” என்றாள் வல்லபி ஆச்சரியத்துடன்.

“என் அம்மாவே என்னை வேண்டாம் என்றும், பணம் தான் முக்கியம் என்றும் தேடிப் போனார்கள். அவர்கள் மூலம் கிடைக்கும் சொத்து நரகலுக்கு சமம்” என்றான் பாலாஜி பல்லைக் கடித்துக் கொண்டு.

“சரி, சரி நீ வேற கோபப்படாதே. நான் ஸிஸ்டரிடம் பேசி விட்டுப் பிறகு சொல்கிறேன். சாப்பிட்டாயா? இந்தா, இதை வைத்துக் கொள்” என்று இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தாள்.

“வேண்டாம் அக்கா. விஷ்ணு மாமா எனக்கு ஏற்கனவே பணம் கொடுத்திருக்கிறார். நான் சொத்துக்களின் பத்திரங்களை எடுத்துக் கொண்டு, நீங்கள் போன் செய்தவுடன் வருகிறேன்” என்று கூறி விட்டுப் போய் விட்டான்.

ஸிஸ்டரிடமிருந்து அனுமதி பெறவும், வல்லபிக்குத் தன் மருத்துவ வேலைகளிலிருந்து சிறிது ஓய்வு கிடைக்கவும் ஒரு வாரம் ஆகிவிட்டது.

ரு வாரம் கழித்து வல்லபி, பாலாஜியுடன் விஷ்ணுவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஸிஸ்டரின் ஆசிரமத்திற்கு சென்றாள். ஸிஸ்டர் தன் வேலையை முடித்துக் கொண்டு வருவதற்குள், நர்மதாவும், தன்யாவும் இவர்களுக்கு பிஸ்கட்டும், டீயும்  கொண்டு வந்து வைத்தனர். பாலாஜியைப் பார்த்து விட்டு இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர்  கேலியாக சிரித்துக் கொண்டனர்.

“ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறீர்கள்?” பாலாஜி.

“சாத்தான் வேதம் ஓதுகிறது என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால்  இவ்வளவு அழகாக ஓதும் என்று எங்களுக்கு தெரியாது” என்றாள் தன்யா.

“என்ன உளறுகிறாய்?” பாலாஜி.

“நாங்கள் ஒன்றும் உளறவில்லை. நீ தானே வல்லபி மேடத்தைக் கொண்டு போய் அடைத்து வைத்திருந்தது?” என்றாள் நர்மதா.

“அது என் முட்டாள்தனம். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று நீங்கள் கேட்டதில்லையா?” பாலாஜி.

“நீ நல்லவன் மாதிரி வேஷம் போட்டு, எங்கள் டாக்டர் மேடத்தை ஏமாற்றாதே” என்றாள் தன்யா.

“நர்மதா, தன்யா அவன் என் தம்பி தான். ஏதோ கோபத்தில் அப்படி செய்து விட்டான். ஒருவர் தவறு செய்தால், அவர் திருந்தி வந்த பிறகு நாம் குத்திக் காட்டிப் பேசக் கூடாது” என்று கண்டித்தாள் வல்லபி.

விஷ்ணு எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஸிஸ்டரும் வந்து அந்த பத்திரங்களைப் பெற்றுக் கொண்டார்.

“மாதா கோவிலைச் சேர்ந்த வக்கீலுடன் சொத்து விவரங்களை ஆராய்ந்த பிறகு மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்” என்றார்.

 “எல்லாவற்றையும் கொடுத்து விட்டு நீ என்னப்பா செய்யப் போகிறாய்? பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருப்பாய் போலிருக்கிறதே?”

“ஏதாவது வேலை செய்து பிழைக்க விரும்புகிறேன் ஸிஸ்டர். ஓசியில் வரும் சொத்து எதுவும் எனக்கு  வேண்டாம்” பாலாஜி.

“உனக்கு டிரைவிங் தெரியுமா?” ஸிஸ்டர்.

“நன்றாகத் தெரியும். அப்பாவின் காரை ஓட்டி லைசென்ஸ் கூட வைத்திருக்கிறேன்” என்றான் பாலாஜி.

“எங்கள் ஆஸ்ரமத்திற்கு ஒருவர் ஒரு வேன் ஒன்று தானமாகக் கொடுத்திருக்கிறார். அதற்குத் தான் டிரைவர் வேண்டும். சம்பளம் எல்லாம் மேலிடத்தில் கேட்டு சொல்கிறேன். உனக்கு சம்மதமா?” என்றார் ஸிஸ்டர்.

“எனக்கு முழு சம்மதம்” என்றான் பாலாஜி.

சாப்பிட்ட டீ கப்புகளை எடுத்துச் செல்ல வந்த தன்யா, “அப்படியே எங்களில் யாரையாவது வேனில் கடத்திக் கொண்டு போய் விடாதே” என்றாள் கேலியாக.

“தன்யா, மரியாதயில்லாமல் மற்றவர் மனம் நோக இப்படியெல்லாம் பேசக் கூடாது. போ உள்ளே” என்றார் சிஸ்டர் கடுமையாக.

சிஸ்டர் ஒரு நாள் எல்லோருடனும் பாலாஜியை மதர் சுப்பீரியரிடம் அழைத்துச் சென்றார். வழி தவறிய ஆடு என்று பாலாஜியை அறிமுகப்படுத்தினார் சிஸ்டர்.

“ஆட்டுக்குட்டி சரியான வழியில் தான் வந்திருக்கிறது. தாய் ஆடு தான் வழி தவறி இருக்கிறது. என்ன செய்வது? ஆட்டுக்குட்டி இறுதியாக மேரி மாதாவிடம் சரணடைந்திருக்கிறது” என்றார் மதர் சுப்பீரியர் சிரித்துக் கொண்டே.

சிஸ்டரிடம் எல்லா விதிமுறைகளையும் முடித்துக் கொண்டு பாலாஜியின் டிரைவர் வேலைக்கு உத்தரவும்  வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள்.

மருத்துவமனையில் ஏதோ வேலை இருப்பதாக வல்லபி கிளம்ப, விஷ்ணுவும், பாலாஜியும் வல்லபி வீட்டிற்குச் சென்றார்கள். பாலாஜி தயங்கிக் கொண்டு வெளியிலேயே நின்றான்.

“உள்ளே வா பாலாஜி, ஏன் வெளியே நிற்கிறாய்?” என்றாள் மல்லிகா.

“நான் உள்ளே வரத் தகுதியானவன் இல்லையம்மா”

“அப்படியெல்லாம் பேசாதே. சில நேரங்களில் நாம் நம்மை அறியாமைலேயே தவறு செய்கிறோம். அந்தத் தவற்றை நாம் உணர்ந்து திருத்திக் கொண்டால் நாமும் நல்லவர்களே. தவறு சிறியதோ பெரியதோ தவறு செய்யாதவர்கள் இந்த உலகில் யார்? புத்தர் கடுகு வாங்கி வரச் சொன்ன கதை தான், வா உள்ளே” என்றாள் மல்லிகா.

கலங்கிய கண்களோடு பாலாஜி அவள் கால்களில் விழுந்தான்.

“என்னிடம் நீங்கள் இவ்வளவு கருணை காட்டுவதற்கு நான் தான் புண்ணியம் செய்தவன்” என்றான் விம்மி விம்மி அழுது கொண்டே.

மல்லிகாவின் கண்கள் கலங்கின. அப்போது விஷ்ணுவின் போன் அழைத்தது. கூப்பிட்டது மூர்த்தி.

“லேபர் யூனியன் லீடர்களும், மில் ஓனர்களும் கலந்து கொள்ளும் ஒரு கான்பரன்ஸ் மதுரையில். நாளை காலை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. டிரைவரின் மனைவிக்கு உடம்பு சரியில்லாததால் அவன் என்னைக் கொண்டு வந்து மதுரையில் விட்டு விட்டுப் போய் விடுவான். அதனால் நீ தான் என்னை கான்பரன்ஸில் டிராப் செய்ய வேண்டும். முடியுமா?” என்றார்.

“கட்டாயம் முடியும் மாமா. நானே டிராப் செய்து விட்டு நானே பிக்கப் செய்து கொள்கிறேன்” என்றான்  விஷ்ணு.

“இப்போது எங்கே இருக்கிறாய்?”

“மல்லிகா ஆன்ட்டியின் வீட்டில்”

“நான் இப்போது அங்கு வந்தால் சாப்பாடு கிடைக்குமா?” என்று கேட்டார் மூர்த்தி.

விஷ்ணு, மல்லிகாவிடம் சைகையால் கேட்டான். ‘நிறைய இருக்கிறது’ என்றாள் சைகையால் மல்லிகாவும். மூர்த்தியும் வந்தார். பாலாஜியைப் பார்த்தவுடன் முகம் சுளித்தார்.

இந்த “வல்லபி” நாவல் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். அல்லது 77082 93241 என்ற எண்ணில் அழைத்தும் ORDER செய்யலாம். நன்றி

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நேர்மறை சக்தி (சிறுகதை) – ✍ சித்து அம்மாசி, சேலம்

    பாட்டி (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து