in

வல்லபி ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வல்லபி ❤ (பகுதி 3)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1

பகுதி 2

“இவள் என் மாமாவின் பெண். இருபது வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இப்போது எஙகிருக்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ?” என்று பெருமூச்சு விட்டான் விஷ்ணு.

“அப்படியா? ஏன் அவள் உங்களுடன் இல்லையா? அவளுக்கு என்ன பெயர்?” என்றாள் வல்லபி உணர்ச்சியற்ற குரலில், அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு.

“யாமினி என்று பெயர். அப்போது எனக்கு ஆறு வயது இருக்கும். மாமா கோவையில் ஒரு காட்டன் மில் ஒன்று வைத்துக் கொண்டிருந்தார். அளவிற்கு மீறிய பணம். ஒரு நாள் அத்தையையும், யாமினிப் பாப்பாவையும் பிரிந்து பெரியகுளத்திற்கு எங்கள் வீட்டிற்கு வந்தார். ஒரு வாரம் கழித்து நாங்கள் அவரை அழைத்துக் கொண்டு கோயம்புத்தூரில் அவர் வீட்டிற்கு சென்றோம்.

அங்கே யாமினிப் பாப்பாவோ அவள் அம்மாவோ இல்லை. என் அம்மாவும், மூர்த்தி மாமாவும் அவர்களைக் கண்டபடி திட்டினார்கள். ஆனால் என் அப்பா மட்டும் இவர்கள் இருவரையும் கண்டித்து, யாமினியின் அம்மாவிற்குத் தான் ஆதரவு தெரிவித்தார்கள். என் அம்மாவோ யாமினியின் போட்டோவையும், அத்தையின் போட்டோவையும் வீசி எறிந்தார்கள். எனக்கு யாமினிப் பாப்பாவை மிகவும் பிடிக்கும். அதனால் யாருக்கும் தெரியாமல் அவள் போட்டோவை நான் பத்திரப்படுத்திக் கொண்டேன்

மாமா திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் அத்தையுடன் ஒன்றாகத்தான் வாழ்ந்தார்கள். திருமணமாகி வெகுநாட்கள் கழித்து தான் ஒரேயொரு பெண் குழந்தை, இந்த யாமினிப் பாப்பா பிறந்தாள். பிறகு தான் மாமாவின் குடும்பத்தில் ஏதோ குழப்பம். மாமா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். புதிதாக வந்த மாமாவின் இரண்டாவது மனைவியின் தங்கை, மற்றும் தம்பியின் குடும்பமும் இவர்களுடனே வந்து சேர்ந்தது. பணத்திற்காக ஏற்பட்ட அந்த வாழ்க்கையும் அரைகுறையாக முடிவடைந்தது.

அந்த காட்டன் மில்லை இப்போது என் அப்பா தான் நிர்வாகம் செய்கிறார். கோயம்புத்தூரில் உள்ள அத்தையும், யாமினிப் பாப்பாவும் வாழ்ந்த பழைய வீடு மட்டும் மாமாவின் நேரடிப் பார்வையில் இருக்கிறது. அந்த வீட்டை வாடகைக்கும் விடவில்லை. மாமா அந்த வீட்டை ஏதோ கோயில் மாதிரி பராமரிக்கிறார்” என்று கூறிக் கொண்டு வந்தவன், 

“வல்லபி, என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் முகமெல்லாம் வேர்த்து, வெளுத்து இருக்கிறது? உடம்பு சரியில்லையா?”” என்றவன், ‘டக்’ கென்று அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.

“ஜுரம் இல்லை, தலை வலிக்கிறதா வல்லபி?” என்றான் பரிவுடன்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ சாப்பிட்டது ஒத்துக் கொள்ளவில்லை போல் இருக்கிறது. லேசாக ‘கிட்டினெஸ்’ஸாக இருக்கிறது” என்றாள் கம்மிய குரலில்.

அப்போது அங்கு வந்த மரகதமும், மூர்த்தியும், “வல்லபி, வாருங்கள் சாப்பிடலாம்” என்றனர்.

“இல்லை, இப்போது நான் வீட்டிற்குப் போக வேண்டும்” என்றாள் வல்லபி.

“கீழே வந்து என்னைப் பார்க்கும் போது நன்றாகத் தானே அம்மா இருந்தாய். இப்போது திடீரென்று ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கிறது?” என்ற மூர்த்தி அவரும் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார்.

“ஜுரம் ஏதும் இல்லை. நேரமாகி விட்டதால் பசியில் மிகவும் களைத்திருப்பாய் போல் இருக்கிறது. வாம்மா, சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள். சரியாகி விடும்” என்றார்.

விருந்து அமர்க்களமாகத் தான் இருந்தது. ஆனால் வல்லபிக்குத் தான் சாப்பிட முடியவில்லை. ஏதோ பேருக்கு கொஞ்சம் கொறித்து விட்டு, ரசம் மட்டும் ஒரு கப் வாங்கிக் குடித்து விட்டுக் கிளம்பினாள். விஷ்ணு எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். 

ஆனால் மரகதம் விடவில்லை. “உன் முகமும் கண்களுமே சரியில்லை வல்லபி. ஊருக்கெல்லாம் நீ டாக்டராக இருந்தாலும், எனக்கும்  என் அண்ணாவிற்கும்  நீ சின்னக் குழந்தை தான். என் அறையில் கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுத்து விட்டுப் பிறகு வீட்டிற்குப் போகலாம்” என்று பலவந்தமாகக் கையைப் பிடித்துத் தன் கட்டிலில் படுக்க வைத்தாள்.

சுகந்தியிடமிருந்தும், கனகத்திடமிருந்தும் மாறி மாறிப் போன். ஆனால் வல்லபி யாருடனும் பேசவில்லை. விஷ்ணு தான் அவள் மூர்த்தியின் வீட்டில் இருப்தையும், கொஞ்சம் களைப்பாக இருப்பதால் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தான்.

ஆனால் வல்லபி தூங்கவுமில்லை, விழிப்பாகவும் இல்லை. அப்படி ஒரு குழப்ப நிலையில் இருந்தாள். ஒரு மணி நேரத்திற்கு மேல் அங்கே இருக்க முடியாதென்று நினைத்தாள். தன் வீட்டிற்குப் போக வேண்டும் என்று லேசாக முகம் கழுவிக் கொண்டு தன்னைத் தயார்படுத்திக் கொண்டு கீழே இறங்கினாள்.

“டாக்டர் இப்போது உடம்பு எப்படி இருக்கிறது”? விஷ்ணு கலவரத்தில் கேட்டான். மூர்த்தி  எழுந்து வந்து அருகில் நின்று கவலையுடன் பார்த்தார்.

“எனக்கொன்றும் இல்லை. கொஞ்சம் களைப்பாக இருந்தது. இப்போது வீட்டிற்குப் போக வேண்டும்” என்றாள் வல்லபி பிடிவாதமாக.

விஷ்ணு கார் சாவியை எடுத்துக் கொண்டு வல்லபியிடம், “போகலாமா டாக்டர்” என்றான். மரகதம் கொடுத்த டீயைக் குடித்து விட்டு, எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினாள். 

காரில் போகும் போது விஷ்ணு வல்லபியைத் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டு வந்தான். ஆனால் வல்லபி இறுகிய முகத்துடன் காரின் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

ஏதோ கேட்க வேண்டுமென்று  வாயைத் திறந்த விஷ்ணு, அவளின் நிலையைப் பார்த்து வாயை இறுக மூடிக் கொண்டான்.

வீட்டில் கார் வந்து நின்றவுடன் காரில் இருந்து இறங்கிய வல்லபி, “வெரி ஸாரி விஷ்ணு, ஏதோ மூடில் இருந்து விட்டேன். உள்ளே வாங்களேன்” என்றாள்.

ஆனால் அவள் குரலில், ‘நீ அப்படியே போ’ என்று சொல்வது போல் உணர்ந்தான்.

“இன்னொரு நாள் வருகிறேன் வல்லபி, நீங்கள் ரெஸ்ட் எடுங்கள்” என்றவன், கனகாவிடம் அவளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுத் திரும்பினான்.

வல்லபி ஏன் அந்தக் குழந்தையின் படத்தைப் பார்த்தவுடன் திகைத்து திக்பிரமை அடைந்து விட்டாள் என்று யோசித்து மண்டையை உடைத்துக் கொண்டான். ஒரு வேளை வல்லபி தான் காணாமல் போன யாமினிப் பாப்பாவோ? அவளுடைய அம்மாவைப் பார்த்தால் தெரியும் என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்குத் திரும்பினான் விஷ்ணு.

வல்லபிக்கு வீட்டை அடைந்தவுடன் சுகந்தியின் ஞாபகம் வந்தது. அதே போட்டோ வல்லபியின் அம்மாவிடமும் ஒன்று இருக்கிறது. அதைப் பார்த்து எப்போது பார்த்தாலும் சுகந்தி கிண்டல் செய்வாள்.

“ஏன் ஆன்ட்டி, இவ்வளவு நகைகள் போட்டு வைத்திருக்கிறீர்கள்? இது  தங்கமா இல்லை தங்கம் மாதிரியா?” என்பாள்.

“மாதிரியே தான், இவ்வளவு நகைகளுக்கு நான் எங்கே போவேன் சுகந்தி?” என்பாள் மல்லிகா. ஆனால் விஷ்ணு பேசும் போது ‘மாமா எப்போதும் ஏதாவது ஒரு தங்க நகை வாங்கி வந்து யாமினிப் பாப்பாவிற்குப் போட்டுக் கொண்டிருப்பார்’ என்று சொன்னான்.

சுகந்தியையும் ஒரு முறை போட்டோவைப் பார்த்து கன்பர்ம் செய்யச் சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். வல்லபி, சிறிது நேரம் கனகாவிடம் பேசிவிட்டு,  தனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது என்று கூறிவிட்டுத் தன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு சுகந்திக்குப் போன் செய்தாள்.

“வல்லபி, என்ன இன்று உன் உடம்பிற்கு? ஏன் மூர்த்தி சார் வீட்டில் போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தாய்?” என சுகந்தி கேட்க

“நான் அங்கே போகும் போது நன்றாகத் தான் இருந்தேன். போன பிறகு தான் பேய் அறைந்தார் போல் ஆனேன்” என்றவள், தான் அங்கு பார்த்த போட்டோவைப் பற்றிக் கூறினாள்.

சிறிது நேரம் அமைதியாக யோசித்த சுகந்தி, “நாளை நான் உன் வீட்டிற்கு வருகிறேன். அங்கு வைத்து எல்லாமே பேசிக் கொள்ளலாம். விஷ்ணுவை அந்த போட்டோவை எடுத்து வரச் சொல்லலாம்” என்றாள் சுகந்தி.

“விஷ்ணு நீ சொன்னவுடன் போட்டோவை எடுத்துக் கொண்டு வருவானோ?” வல்லபி கிண்டலாக.

“உனக்காக என்றால் மலையைக் கூடப் புரட்டிக் கொண்டு வருவான்” என்றவள் இடிஇடியென்று சிரித்தாள் சுகந்தி. வல்லபி அமைதியாக இருந்தாள்.

“என் ஜோக்கிற்கு ஏன் சிரிக்கவில்லை வல்லபி?” சுகந்தி.

“நாளை சிரிக்கிறேன், நீயும் உன் ஜோக்கும். நான் விஷ்ணுவிடம் எனக்கு அந்தப் படத்தில் உள்ள குழந்தை யார் என்றே தெரியாது என்று கூறியிருக்கிறேன். அதை விடக் கோயம்புத்தூரில் உள்ள அவர்கள் வீட்டைப் பார்த்தால்? அந்தக் குழந்தையின் அம்மாவின் போட்டோ கூடக் கிடைக்கும் இல்லையா?” என்றாள் ஆவலாக வல்லபி.

“அதுவும் சரிதான். ஆனால் விஷ்ணுவிடம் நாளை பேச வேண்டும்” என்று முடித்தாள் சுகந்தி.

றுநாள் தன் மருத்துவமனைக் கடமைகள் எல்லாம் முடித்துக் கொண்டு பிற்பகல் மூன்று மணிக்கு சுகந்தி தாமரைக் குளம் வந்தாள். சுகந்தியும், வல்லபியும் விஷ்ணுவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, அவனிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கூறினர்.

அவனோ வீட்டில் உள்ளோர் யாவரும் கோயம்புத்தூர் சென்றிருக்கின்றனர் என்றும், மூர்த்தியின் பங்களாவில் தனியாகப் பேசலாம் என்றான். சுகந்தியும் அதற்கு ஒத்துக் கொண்டாள். அந்த போட்டோவையும் பார்க்கலாம் என்பதே அவள் எண்ணம்.

அந்தக் குழந்தையின் போட்டோவைப் பார்த்து சுகந்தியும் பிரமித்தாள்.

“விஷ்ணு ஒரு கேள்வி, இந்தக் குழந்தை ஒற்றையாகப் பிறந்தா? இல்லை இதன் கூடப் பிறந்த வேறு ஒரு குழந்தை இருக்கிறதா? அதாவது இரட்டையர்களா? இந்தக் குழந்தையின் பெயர் என்ன?” சுகந்தி. 

“தனியாகப் பிறந்த குழந்தைதான், இரட்டைப் பிறவி இல்லை. இந்தக் குழந்தையின் அம்மாவை ‘தேவி’ என்று தான் எல்லோரும் கூப்பிடுவார்கள்” என்றான்.

மேலும் விஷ்ணு, “நேற்று டாக்டர் வல்லபி இந்தக் குழந்தையின் போட்டோவைப் பார்த்தவுடன் ரொம்ப டென்ஷன் ஆகி விட்டார்கள். ஏன்? எனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை டாக்டர் வல்லபி தான் யாமினிப் பாப்பாவோ என்று” என்றவன், தான் அதிகம் பேசி விட்டோமோ என்று தன் நாக்கைக் கடித்துக் கொண்டான். ஆனால் வல்லபியும், சுகந்தியும் அதைக் கண்டு கொள்ளவில்லை.

“நாளை நாமும் தற்செயலாகப் போவது போல் கோவை போகலாமா?” என்று கேட்டாள் சுகந்தி.

“ஓ.எஸ். போகலாம். ஆனால் நாளை பிற்பகல் தான் கிளம்ப முடியும். காலையில் ஒரு கல்வெர்ட் கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை இருக்கிறது” என்றான்.

டுத்த நாள் பிற்பகல் ஒரு மணியிலிருந்து விஷ்ணுவின் வருகைக்காக இருவரும் காத்திருந்தனர். ஆனால் அவன் வரவில்லை. மூன்று மணிக்கு சுகந்தியின் செல்போன் அலறியது. சுகந்தியின் மருத்துவமனையில் இருந்து ஓர் அவசர அழைப்பு.

“டாக்டர், யாரோ விஷ்ணுவாம், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர். அவருடைய மொபைலில் உங்கள் போன் நெம்பரும், டாக்டர் வல்லபியின் போன் எண்ணும் தான் இருந்தது” என்றார் நர்ஸ்.

“சரி அவருக்கென்ன?” என்றாள் சுகந்தி.

வல்லபியோ விஷயம் தெளிவாகப் புரியாமல், கலவரத்துடன் பதட்டமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஒரு மேஜர் ஆக்ஸிடன்ட் டாக்டர். அவருடைய மோட்டார் பைக்கை ஒரு லாரி இடித்துத் தள்ளி விட்டுப் போயிருக்கிறது. டாக்டர்கள் அட்டெண்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு நினைவு இல்லை. ஆனால் வல்லபி என்றும் யாமினி என்றும் ஏதேதோ புலம்பிக் கொண்டு இருக்கிறார்”

“என்ன விஷயம் சுகந்தி?” என்றாள் பயத்துடன்.

“ஒன்றுமில்லை, உன் மருத்துவமனைக்கு விடுப்பு சொல்லிவிட்டு, இரண்டு நாட்களுக்கு வேண்டிய டிரஸ்  மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பு. காரில் போகும் போது பேசிக் கொள்ளலாம்” என்ற சுகந்தி, பாத்ரூமில் போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள்.

அப்போது தான் வல்லபி அவள் முகத்தைப் பார்த்தாள். கண்கள் சிவந்திருந்தன, அழுதாளோ? யாருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. ஆனால் இந்த சுகந்தி சும்மாவே உணர்ச்சி வயப்படுவாள். தியேட்டரில் ஏதாவது படம் பார்த்தால் கூட அழுவாள் என்று நினைத்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் கிளம்பினாள் வல்லபி.

காரில் போகும் போதும், சுகந்தி போனில் யார் யாருடனோ பேசிக் கொண்டு வந்தாளே தவிர, இவள் ஒருத்தி பக்கத்தில் இருப்பதை கண்டு கொள்ளவில்லை. வல்லபியின் மனம் அவ்வப்போது கொஞ்சம் கவலைப்பட்டதே தவிர, மற்றபடி ஒன்றும் மாய்ந்து போகவில்லை. சுகந்தியின் ‘வீக்னெஸ்’ பற்றி கொஞ்சம் கேலி கூட செய்தது உள்ளம்.

“சுகந்தி, என்னைக் கொண்டு போய் உன் வீட்டில் விட்டு விடு. எனக்கு சரியான தூக்கம் வருகிறது”.

“வளவளவென்று பேசாமல் வாய் மூடிட்டு வரயா?” என்று எரிந்து விழுந்தாள் சுகந்தி. கார், சுகந்தியின் மருத்துவமனையில் நின்றது. வல்லபியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள் சுகந்தி.

(தொடரும் – திங்கள் தோறும்)

இந்த “வல்லபி” நாவல், நம் ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் மூலம் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், 77082 93241 என்ற WHATSAPP எண்ணில் மெசேஜ் அனுப்பி ORDER செய்யலாம். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

முதல் மரியாதை (சிறுகதை) – ✍ கீதா ராணி பிரகாஷ், திருப்பூர்

சிப்பிக்குள் முத்து (சிறுகதை) – ✍ ரமணி.ச.