2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13
இதுவரை:
வேலை காரணமாக கர்ப்ப காலத்தில் கவியினியாள் தன் கணவர் ஆதியுடன் தனியாக வசிக்கிறாள். சமைக்க முடியாமல் மசக்கை அவளை வாட்டுகிறது. ஆதியும் அவளுக்கு உதவுகிறான். அலுவலகத்தில் தனியாக இருக்கும்பொழுது கவியினியாளுக்கு மயக்க உணர்வு ஏற்படுகிறது. பின் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதை காண்போம்.
இனி:
உடல் சோர்வுற்று தலை சுற்றல் அதிகரித்ததில் பயத்தில் கீழே அமர்ந்தேன். கண்கள் சொக்கியது.
ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு பின் திறந்தேன்.
‘என்ன நம்ம இன்னும் மயங்கல’ மயங்கி விடுவேனோ என பயந்து பின் மயக்கம் இல்லை சோர்வு தான் என்று தெரிந்தப்பின் எனக்குள் நானே கேட்டுக் கொண்டு நகைத்தேன்.
திரைப்படங்களில் வருவது போல் கர்ப்பமாக இருக்கும் பெண் மயங்கி விடுவார்கள் என்று கற்பனை செய்து கொண்டேன். அந்த கற்பனை தான் மயக்க உணர்வை மேலோக்கியது. திரைப்படங்களில் வருவது போல் எல்லாம் நடப்பதில்லை.
சோர்வாக இருப்பது உண்மை ஆனால் சுயநிலை மறக்கும் அளவிற்கு இல்லை. எனினும் தனியாக இருப்பதனால் பயம் இருக்கத்தான் செய்கிறது.
கீழே செல்ல முயன்றேன். இன்னும் நெஞ்செரிச்சல் இருந்தது. எழுந்து நின்றேன். மீண்டும் வாந்தி எடுத்தேன். முழுவதும் எடுத்தப் பின் சற்று தலை சுற்றல் குறைவது போல் இருந்தது.
“கவியினியாள் என்னாச்சு” என் பின்னால் யாரோ பேசும் குரல் கேட்டுத் திரும்பினேன்.
என் அலுவலக தோழி மதி நின்று கொண்டிருந்தாள்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அந்த சோர்விலும் வெட்கப்பட்டு சிரித்தேன்.
“என்னடி சிரிக்கிற.. சந்தோஷமான விஷயமா”
இப்பொழுதும் என்னால் பேச முடியவில்லை. வெட்கம் தலைக்கேறி சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தேன்.
“எத்தனை மாசம் கவியினியாள்”
“மூணு மாசம்”
“ஹே சூப்பர் டி.. சொல்லவே இல்லை பாத்தியா”
“சொல்லாமயா இருக்கப்போறேன். கொஞ்ச நாள் போட்டும்னு சொல்லல”
“எனிவே கங்க்ராட்ஸ்.. ஹாப்பி ஃபார் யூ”
“தேங்க் யூ மதி”
“எப்போ ட்ரீட்”
“தரலாம்”
“மேனேஜர் கிட்ட சொல்லிட்டியா”
“இல்லை மதி யார்க்குமே தெரியாது”
“சொல்லிடு.. அதான் நல்லது”
“சொல்லணும் கொஞ்ச நாள் கூட போட்டும்”
“நானே சொல்லிடுவேன் என்னால ரகசியமா வெச்சிக்க முடியாது”
“அடியே வேண்டாம்”
“அதெல்லாம் முடியாது சொல்லுவேன்”
என்னவோ செய் என்பது போல் தலையசைத்தேன்.
“இங்க என்ன பண்ற கவி தனியா.. குடிக்க தண்ணி வேணுமா.. வேற ஏதாவது”
“இல்லை எதுவும் வேணாம் மதி.. கீழ போலாம்”
கீழே சென்றவள் இருக்கைக்குக் கூட போகாமல் ஒரே நாளில் மொத்த அலுவலகத்திற்கும் சொல்லி விட்டாள்.
அதுவும் நல்லது தான் நானே போய் ஒவ்வொருவரிடமும் சொல்வது கஷ்டம். எனக்கும் அது சங்கோஜமாக இருக்கும். கல்யாணம் ஆனதில் இருந்து அடிக்கடி சந்தேகித்து வயிறை பார்த்திருக்கிறார்கள்.
இனி அவர்கள் அப்படிப் பார்த்து சந்தேகித்து தெரிந்து கொள்ளத் தேவையில்லை. மூன்று மாதம் என்று மதியே சொல்லிவிட்டாள்.
பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது ஆசிரியை யாராவது கர்ப்பமாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் வயிறை வைத்தே ஒரு சிலர் கண்டுபிடித்து வகுப்பு முழுவதும் சொல்லி விடுவார்கள். பின் வயிறு நன்கு தெரியும்பொழுது அவரை ஆசையாகப் பார்த்துள்ளேன். அது என்ன ஆசை என்று விளக்கமுடியவில்லை. அப்படி இருப்பவர்களை பார்த்தால் பிடிக்கும். அவர்களை பற்றிப் பேசிக் கொள்வோம். அவரை ரசித்து பார்ப்போம்.
உறவினர்கள் யாராவது கர்ப்பமாக இருந்தாலும் அதே மரியாதை மற்றும் ரசனையோடு பார்த்துள்ளேன். வீட்டிற்கு அழைத்து அம்மா சாப்பாடு செய்துப் போடுவார். அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு இருக்கும்.
இப்பொழுது நான் அந்த நிலையில் இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அலுவலகத்தில் ஒவ்வொருவராக வந்து எனக்கு வாழ்த்து கூறினார்கள். சிலர் தூரத்தில் இருந்தே சிரிப்பில் வாழ்த்தினார்கள். சிலர் பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு சென்றனர். சிலர் தெரிந்தும் தெரியாததும் போல் இருந்தனர்.
இந்நேரம் மேனேஜருக்கும் தெரிந்திருக்கும் அவர் தெரிந்தும் இயல்பாகத் தான் என்னிடம் பேசினார்.
இனி பரிசோதனைக்குச் செல்ல நேரிடும் பொழுது உண்மையைக் கூறி விடுப்பு கேட்கலாம்.
அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் வீட்டிற்கு வந்து ஆதியிடம் கூறினேன்.
“எப்படியோ நான் கொடுத்த பீட்ரூட் ஜூஸ்னால உன் ஆபீஸ்ல எல்லார்க்கும் தெரிஞ்சிடிச்சு.. உனக்கு எவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணிருக்கேன்”
“என்னை வாந்தி எடுக்க வெச்சது நல்லதா.. காலைல சாப்டா மட்டும் தான கொமட்டும். இப்போ மதியமும் அப்படி இருக்கு.. நான் என்ன செய்றது ஆதி”
“பாத்துக்கலாம்.. பிடிச்சதா சாப்பிடு.. நானும் உன்னை போர்ஸ் பண்ல”
“ஓகே ஆதி.. இப்போ என்ன.. மாவு கொஞ்சம் இருக்கு தோசை ஊத்திக்கலாமா”
“ம்ம்.. சட்னி நீ போட்ரியா.. நான் போடவா இனியாள்”
“நானே போடணும்னு தான இனியாள்ன்னு அழுத்தி சொன்ன.. போடறேன் போ”
“ஹாஹா.. சொல்லுடி முடிலனா நானே பண்றேன் கவி”
“நல்லாத்தான் இருக்கேன்.. நானே பண்றேன் ஆதி”
இருவரும் ஆளுக்கு மூன்று தோசை சாப்பிட்டுவிட்டு மேல் மாடிக்குச் சென்றோம்.
வழக்கமாக எட்டு மணிக்கு சாப்பிட்டு முடித்து விடுவோம். மேலே சென்று பாட்டியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்போம். பாட்டியின் மூன்று வயது கொள்ளு பேத்தி நன்மதியுடன் ஆதி பந்து விளையாடுவார். எனக்கும் சந்தோசம் தான் நாள் முழுவதும் இருவரும் கணினி முன் அமர்ந்தே வேலையும் செய்யும் சூழலில் இப்படி சின்னப் பெண் தூக்கிப் போடும் பந்தைப் பிடிக்க ஓடி விளையாடுவது நல்லது தானே.
சிறிது நேரம் விளையாடிவிட்டு மாடியில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். இரவு பத்து மணி வரை மார்கழி குளிரில் இருந்து விட்டு கீழே சென்றோம்.
தூங்குவதற்கு தலையணையை சரிசெய்து கொண்டிருந்தார் ஆதி.
“என்னங்க”
“சொல்லு கவி”
“எனக்கு ரொம்ப பசிக்குது.. இப்பவே கொத்து பரோட்டா சாப்பிடணும் போல இருக்கு.. வாங்கித் தரீங்களா?”
கோபமும் குழப்பமும் கலந்த பார்வையில் என்னைப் பார்த்தார் ஆதி.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings