பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
மிதிலா அழகின் மொத்த உருவம். பிரம்மனின் படைப்பின் அழகோவியம் மிதிலா.அவளின் தாய் கல்யாணி, அவளின் வளர்ச்சியையும், அழகையும் பற்றி ஊரார் பேசுகயில் மிகவும் பெருமையாக இருந்தாலும் அவளுக்கு இருந்த ஒரு குறையை பற்றி மிகவும் கவலைப்பட்டாள் கல்யாணி.
பெண்களுக்கே ஏக்கமும் பொறாமையும் வந்தது மிதிலாவின் அழகின் மேல். மிதிலாவிற்கு தந்தை இல்லை தாயின் உழைப்பில் வளர்ந்தவள். அம்மாவை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்று ஆசை மனதில் இருந்து. ஆனால் எப்படி என்று தெரியவில்லை
எப்படியோ கஷ்டப்பட்டு கல்லூரி படிப்பை முடித்து இருந்தாள். அவளின் அழகுக்காக வேலை கொடுக்கிறேன் என்று சொன்ன சில கம்பெனி முதலாளிகளிடம் இருந்து தப்பி வருவேதே பெரிய வேலையாக இருந்தது அவளுக்கு
எப்படியும் வாழலாம் என்று வாழ்பவர்கள் மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து கொண்டு இருந்தார்கள் கல்யாணியும் மிதிலாவும்.
அடிக்கடி கண்ணாடி முன் நிற்க ஆரம்பித்தாள் மிதிலா. அவளின் கல்லூரி பருவத்தில் சகதோழிகள் அவளிடம், “நீ ஏன் அழகிப்போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது” என்று கேள்வி கேட்கயில் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் மிதிலாவிற்கு.
ஆனால் தன்னிடம் உள்ளே ஒரு குறையை பற்றி நினைக்கையில் முடியுமா? என்ற கேள்வியும் எழும். கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கும்.
அப்போது திடீர் என்று அவள் கண்களில் பட்டது அழகிப்போட்டியில் கலந்து கொள்வதற்கு உண்டான விளம்பர பத்திரிகை. கல்லூரி தோழிகள் அவளிடம் சொன்னது நினைவிற்கு வந்தது.
இதற்கு ஏன் நாம் முயற்சி செய்ய கூடாது எண்ணமும் கூடவே எழுந்தது.
“மிதிலா உனக்கு நம்பிக்கை இருக்குமானால் கலந்து கொள்” என்று அம்மா கல்யாணியும் பச்சை கொடி காட்டினாள்.
உடனே அவள் அதன் விவரங்களை சேகரிக்க ஆரம்பித்தாள். அதற்கு என்று இருக்கும் பயிற்சி பள்ளியில் சேர்ந்தாள். தன் அழகுக்கு மீண்டும் உயிர் கொடுத்தாள் மிதிலா.
எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் செயலில் இறங்கினாள். உதவி என்று போகும் இடமெல்லாம் இவளிடம் அவர்கள் எதிர்பார்ப்பு தவறாகவே இருந்தது. சோர்ந்து போகவில்லை மிதிலா. போட்டிக்கான தேதியை அறிவித்து அவளுக்கு கடிதம் வந்தது
“இன்னும் கொஞ்ச நாள் தாம்மா இருக்கு” என்று கவலையோடு சொல்லும் மகளை பார்த்து
“உனக்கு இருக்கும் ஆர்வமும், முயற்சியும் உன்னை கண்டிப்பாக ஜெயிக்க வைக்கும், கவலைப்படாதே மிதிலா” என்று அவளுக்கு ஆறுதல் கூறினாள் கல்யாணி.
“அம்மா நா கிளாஸ்க்குக்கு கிளம்பறேன், இன்னைக்கு நடைபயிற்சி ஆரம்பிக்கிறாங்க” என்று கிளம்பினாள் மிதிலா.
அழகிப்போட்டியில் முதலிடம் வகிப்பது இந்த நடைப்பயிற்சி.
இரண்டு நாட்கள் இருக்கும் பட்சத்தில் வீட்டில் நடந்து ஒத்திகை பார்த்து கொண்டு இருந்த மகள் தடுமாறி விழ, ரத்தக்கண்ணீர் வடித்தாள் கல்யாணி. அவளின் முயற்சிக்கும், கடின உழைப்பிற்கும் வெற்றியை கொடு என்று கடவுளிடம் வேண்டினாள்
போட்டி நாள் வந்தது. மிதிலாவிற்கு பண உதவி செய்தது அவளின் பயிற்சி பள்ளி. புறப்பட தயாரானாள், அம்மாவையும் அழைத்து போனாள்.
இதோ போட்டி நடக்கும் இடம். பெரிய அரங்கம், கலர் கலராக விளக்குகள் மின்னிக் கொண்டு இருந்தன. இதுவரை இந்த மாதிரி இடங்களை பார்த்து அறியாதவள் மிதிலா.
பார்த்தவுடன் பயமும் கவலையும் தொற்றிக் கொண்டது. அம்மாவை அந்த அரங்கத்திற்குள் அழைத்து வந்து அவளின் பார்வையாளர்கள் வரிசையில் அமர வைத்து விட்டு அவள் தான் அறையை நோக்கி நடக்கலானாள்.
பிரார்த்தனையோடு அமர்ந்து இருந்தாள் கல்யாணி.
போட்டி ஆரம்பித்து. முதல் சுற்று, இரண்டாவது சுற்று என்று போட்டி நடந்து கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் அந்த அரங்கம் முழுவதும் அழகான பெண்களே கண்களுக்கு தெரிந்தனர்.
நடைசுற்று ஒவ்வொரு நடைக்கும் ஒரு பெயர் சொல்லி ஒவ்வொரு பெண்ணின் பெயராக அறிவித்து கொண்டு இருந்தனர்
ஒவ்வொரு பெண்ணும் அந்த நடைக்கே உண்டான மிடுக்ககுடனும் அழகுடனும் நடந்து முடித்தனர்.
இதோ மேடையில் மிதிலா பெயர் அறிவித்தவுடன், பௌர்ணமி நிலவாய் மிதிலா தன் அழகு, மிடுக்கு, நளினம் எல்லாவற்றையும் அந்த நடையில் காட்ட, அரங்கமே கைத்தட்டல் ஓசையில் அதிர்ந்தது
மகளின் அழகை பார்த்து பெருமையோடு அமர்ந்திருந்தாலும், எங்கே தடுமாறி விழுந்து விடுவளோ என்று மனம் படபடக்க அமர்ந்து இருந்தாள் கல்யாணி.
எல்லாவிதமான போட்டிகளும் முடிந்து இதோ வெற்றி யாருக்கு என்று முடிவு சொல்லும் நேரம் நெருங்கியது.
எல்லா அழகிகளையும் ஒருசேர நின்று கொண்டு இருந்தனர். மூன்றாவது பரிசு, இரண்டாவது பரிசு முடிந்து முதல் பரிசு ‘மிஸ் மிதிலா’ என்றவுடன், கைத்தட்டல்களும் விசில் சத்தங்களும் பறந்தது.
இதைக்கேட்ட அடுத்த நொடி மிதிலாவின் கண்களிலும், கல்யாணியின் கண்களிலும் கண்ணீர் அருவியாக கொட்டியது. தலையில் அந்த கிரீடம் சூட்டும் முன் தன் தாயையும் மேடையில் ஏற்றினாள் மிதிலா.
தலையில் கிரீடத்துடன் அனைவரது வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு தன் அறையை நோக்கி நடந்தாள்.
அறைக்குள் போனதும் கண்ணாடி முன் நின்று தன்னையே ஒரு நிமிடம் பார்த்தாள். எவ்வளவு சோதனைகள், வலிகள் அனைத்தும் கடந்து இதோ கண்ணாடி முன் தலையில் கிரீடத்தோடு தன்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள் மிதிலா.
கால்கள் மிகவும் வலித்தது. தன் ஒப்பனையை கலைப்பதற்கு முன் தன் கால்களை மெதுவாக தூக்கினாள் முட்டிக்கு கீழ் இருந்த அந்த கால்களை கழற்றி எடுத்து வைத்தாள். இப்போது வலி தெரியவில்லை மிதிலாவிற்கு.
அங்கே மைக்கில் வந்திருந்த ஒரு பெரிய தொழில் அதிபர் கடைசி அறிவிப்பை அறிவித்தார்.
“நடந்து முடிந்த மாற்று திறனாளிகளுக்கான அழகிப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். முதல் பரிசை வென்ற மிஸ். மிதிலாவிற்கு எங்களுடைய வாழ்த்துக்கள். அவருக்கு நல்லா எதிர்காலம் இருக்கிறது” என்று அவர் பேசுவதை கண்களில் நீர்வழிய கேட்டு கொண்டு இருந்தாள் மிதிலா.
ஆம்… ஒரு விபத்தில் இரண்டு கால்களும் இழந்தவள். இதற்காக அவள் எடுத்து வைத்த அடிகள் ஏராளம். அவள் கழற்றி எடுத்து வைத்த அந்த கால்களை இமைக்காமல் பார்த்தாள். ‘நான் இருக்கிறேன் உனக்கு ஊன்று கோலாக ’ என்று சொல்வது போல் இருந்தது மிதிலாவிற்கு.
குறை உடலில் இருக்கலாம், மனதில் தான் இருக்கக் கூடாது
(முற்றும்)
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇