பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
இந்த குறுநாவலின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என்ன சார்… இப்பல்லாம் சினி பிரியா தியேட்டர்ல ஹிந்தி படம் மட்டும் தான் பாப்பீங்க போல இருக்கு”னு கேட்டுட்டே, நரசூஸ் காபி பாக்கெட் வாங்கிட்டு போய்ட்டான் சுரேஷ்.
போன வெள்ளிக்கிழமை மத்யானம் தான் மாலுவோட சினிபிரியால “ஹம் ஆப்கே கோன் ஹை” படம் போயிருந்தேன். இன்னும் எத்தனை பேர் எங்க ரகசிய காதலை பாத்து தொலைச்சீங்கப்பா? எவ்வளவு ஜாக்ரதையா இருக்கிறதா நினைச்சோம், மாலுவுக்கு தெரிஞ்சா பயந்துருவா. எப்படி தெரியாம போகும்
நானும் மாலுவும் கூட்டமில்லாத கோவில்னு, தனித்தனியா புறப்பட்டு சிம்மக்கல் பக்கத்தில இருக்கிற பேச்சியம்மன் கோவிலுக்கு போவோம், ஒரு அரைமணி நேரம் கோவிலை சுத்தி வருவோம், கதையடிப்போம். திரும்ப தனி தனியா வீட்டுக்கு வந்து விடுவோம்
வெள்ளிக்கிழமை தவிர எப்ப போனாலும் ரெண்டு மூணு பேர் தான் பாக்க முடியும். இவ்வளவு ஜாக்ரதையா இருந்தும் யாரோ ஒரு நலம் விரும்பி மாமி, வேலை மெனக்கெட்டு வந்து, மாலுவோட அம்மாகிட்ட பக்குவமா போட்டுக் கொடுத்துட்டு, “எதுத்தாத்துக்கு வந்தேன், அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன்”னு
எங்கம்மாகிட்ட, “ஏண்டி பார்வதி… எதுத்தாத்து மாலுகுட்டி எவ்வளவு லக்ஷணமா இருக்கா. ஆனா கேரக்டர் வேண்டாமோ? இன்னிக்கெல்லாம் பாத்தா 17 வயசு இருக்குமா? அதுக்குள்ளே இப்படியா, உன் பையன்கிட்ட சொல்லி வை. பாவம் சமத்துப் பையன், அவன் கைய கோத்துண்டுன்னா சுத்தறா. ஏதோ நம்ம பார்வதியாச்சே, இருக்கற ஒரு பையனையும் தொலைச்சிண்டு நிக்க கூடாதேனு சொன்னேன். நான் வரேண்டியம்மா எனக்கெதுக்கு வீண் வம்பு”னு சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டு புறப்பட்டு போனா வம்பு மாமி
எல்லாராத்துக்கும் போய் சுடச்சுட சொல்லியாகணுமே.
கிட்டத்தட்ட 10 நாள். தேள் கொட்டின திருடனைப் போல கமுக்கமாய் இருந்தேன். எனக்கும் மாலுவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
அவ அம்மா, மாமாகிட்டயோ, நாராயணன்கிட்டயோ ஏதும் சொன்னதா தெரியல்ல. மாலுவை மட்டும் கண்டிச்சிருப்பானு நினைக்கிறேன்
என்ன காரணமோ எங்க விஷயத்தை அவ அம்மா பெரிசாக்கலே. என்னோட அம்மா என்கிட்ட நேரடியா கேட்டா
“ஏண்டா நிஜமாவா, மாலுவோட ஊர் சுத்தறயா? அவ நல்ல பொண்ணு தான், ஆனா நமக்கு தகுந்த இடம் இல்லை. அவா பணக்காரா, இது முதல் பாயிண்ட். இரண்டாவது, நீ உன் கால்ல நிக்கணும், வரவளை கண்கலங்காம காப்பாத்தற வருமானம் இருக்கணும். அவ்வளவு தான் எனக்கு சொல்லத் தெரிஞ்சது, அப்புறம் உன் இஷ்டம்”னு அம்மா சுருக்கமா முடிச்சிட்டா.
எனக்கு கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி ஒண்ணும் புரியலை. ஆறப்போட்டா தன்னால சரியாகும்னு தீர்மானிச்சேன். ஆனா எந்த காரணத்துக்காகவும் மாலுவை மட்டும் இழக்க தயாராயில்லை
அந்த சனிக்கிழமை கார்த்தால கண் விழிக்கறப்பவே, தெருவில ஒரு பரபரப்பு தெரிஞ்சது. தலகாணில இருந்து லேசா தலைய மட்டும் தூக்கி பாத்தேன்
மாலு வீட்ல இருந்து தான் பரபரப்பு சத்தம். வாசத்திண்ணை ரெண்டுலயும் மவுனமா ஐந்தாறு பேர். பட்டென்று எழுந்து உள்ளே போனேன், அம்மா கிணத்தடியில் ஏதோ துணி அலசிண்டிருந்தா
என்னை பார்த்ததும், “மாலுவோட அப்பாக்கு ஹார்ட் அட்டாக்காம், தெரியுமா”ன்னா
“இல்லை தெரியாதே”ன்னேன்
“நேத்து ராத்திரியே முடியல்ல போலிருக்கு, டாக்டரை கூப்பிட்ருக்கா போல, பாவம் புண்யவான் போய் சேந்தாச்சுன்னு தான் நினைக்கிறேன்”
“சரி நான் போய் பாத்துட்டு வரேன்”னு புறப்பட்டேன்
அம்மா, “யோசிடா… யாராவது ஏதாவது சொல்லி வீண் வம்புன்னா”
நான், “இல்லம்மா, இந்த மாதிரி சமயத்தில போகாட்டா நல்லா இருக்காது”னு ஒரு சட்டையை மாட்டிண்டு கிளம்பினேன்
அம்மாகிட்ட வீராவேசமா சொல்லியாச்சு, ஆனா எனக்கு மனசுக்குள்ளே திக், திக்.
நேரா திண்ணைல உக்காந்திருக்கறவா யாரையும் பாக்காமே உள்ளே போனேன். மாலுவோட அப்பாவை ஊஞ்சல் பலகையை கீழே வச்சு நடு ஹாலில் கிடத்தி இருந்தார்கள். ஊஞ்சல் செயின் மடிந்து மேலே இருந்தது
அவரோட (இல்லை அதோடனு சொல்லணுமா) தலை மாட்ல மாலு, அவ அம்மா, இன்னும் ரெண்டு மூணு வயதான மாமிகள். அழுத முகத்திலும் என் மாலு அழகு தான்
தெரியும் தெரியும் தப்பான சமயத்தில் தப்பான எண்ணங்கள், ஆனா தோணுனத சொல்லாட்டா தப்பாச்சே. மாலு என்னைப் பார்த்த உடன் கூட கொஞ்சம் அழுத மாதிரி தெரிஞ்சது.
நாராயணனை தேடினேன், யாருக்கோ போன் பண்ணிண்டிருந்தான். பக்கத்தில போனேன். அவன் பேசி முடித்தவுடன் அவன் தோளைத் தொட்டேன்
என்னைப் பார்த்ததும் கண்ணை லேசா துடைச்சிண்ட அவன், “திடீர்னு போயிட்டார், ஒரு சிம்டமும் இல்லை, அடுத்த சனிக்கிழமை எனக்கு ஆஸ்திரேலியா போகணும். இப்ப என்ன பண்றதுனு புரியலை”
நான் மெதுவா கேட்டேன், “எதுக்கு? கம்பெனில டிரெய்னிங் அனுப்பறாளா?”
“இல்லைடா மூர்த்தி, அங்க நல்ல வேலை கிடைச்சிருக்கு. அடுத்த திங்கள்கிழமை ஜாயின் பண்ற பிளான், இப்ப என்ன செய்றதுனு புரியல்லை. மூர்த்தி பிளீஸ் எனக்கு இந்த நாள்லாம் முடியிற வரைக்கும் கொஞ்சம் ஒத்தாசையா இருப்பயா?” னான்
அப்பா போன துக்கத்தை சமாளிச்சிண்டு தைரியமா முடிவெடுக்கற அவன் சாமார்த்தியத்தை நான் வியந்தேன்.
மற்ற காரியங்கள் மளமளவென நடந்தேறியது, வாத்யாரை கூப்பிட, சந்தைல இருந்து சாமான் வாங்கிண்டு வர , சில்லறை வேலைகளுக்கு நான் உதவினேன்.
அம்மா, “கூட இருந்து ஹெல்ப் பண்ணு, ஆனா ஜாக்ரதையா கட்டுப்பாடா நடந்துக்கோ”னு சொன்னா. எனக்கு புரிந்தது.
மாலுவோட அம்மா கூட என்கிட்ட வித்யாசம் காட்டாதது ஆச்சரியம் தான். நாட்கள் ஓடி விட்டது, கடைசியா சுபம். எல்லோரையும் கூப்பிட்டு விருந்து மாதிரி பண்ணுவா
அன்னைக்கு தான் நாராயணன் குண்டை தூக்கிப் போட்டான் மூர்த்தி
“அம்மாவையும் மாலுவையும் என்கூட ஆஸ்திரேலியா கூட்டிண்டு போறேன், பேப்பர்ஸ் மூவ் பண்ணிட்டேன், 15 நாள்ல புறப்பட முடியும்னு நினைக்கிறேன்”னான்
மாலுவை தனியா பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கல்லை. அடுத்த சில நாள்ல நாராயணன் விசா சம்பந்தமா ஏஜண்ட்டை பாக்க போன போது நான் அவாத்துக்கு போனேன்
மாலுவோட அம்மா குளியலறையோ, சமையலறையோ, வீடு கொஞ்சம் இழப்பை சமாளித்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. மாலு ஊஞ்சலில் இருந்தாள்
நான் மாலுவை பாத்து, “என்ன மாலு என்ன செய்யலாம்?”னு கேட்டேன்
அவளுக்கு என்னை விட தைரியம் தான்.
“சாயங்காலம் பேச்சியம்மன் கோவிலுக்கு போலாம், இப்ப அம்மா வரதுக்குள்ளே நீ போ”ன்னா
நான் வீட்டுக்கு திரும்பி என் திண்ணையை புகலடைந்தேன். துக்கம் பந்தாய் உருண்டு தொண்டை கனத்தது. என் திண்ணை எனக்கு ஆறுதலாய் மவுனம் காத்தது.
சாயந்தரம் அம்மா ஆபீஸ் விட்டு வந்து கொஞ்சம் ஃபிரஷ் ஆனவுடன், அம்மாகிட்ட சொல்லிண்டு கோவிலுக்கு கிளம்பினேன். பின்னால அம்மாவோட குரலில் சிங்கள பூமியின் சிறப்புப் பாடல், “மாலு மாலு மாலு, சுராங்கனிகா மாலு, சுராங்கனிகா மாலு கண்ணா வா”
சைக்கிளை கோவில் வாசலில் விட்டுட்டு, உள்ளே போய் அம்மனை கும்பிட்டேன். முதல் முறையாக அம்மன் கையில் வைத்திருக்கும் வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு ரூபாய் காசு கொடுத்து போடச் சொன்னேன்
பூசாரி, “பாப்பா வரலையா?”னு கேட்டார்
“வருவா”னு முணுமுணுத்துட்டு நகர்ந்தேன்
எல்லார் கண்ணும் எங்க மேல இருந்திருக்கு, நாங்க தான் எங்களை மறந்து இருந்திருக்கோம் போல . நான் வெளிபிரகாரத்தை சுத்தி வந்தேன், ஒரு 10 நிமிஷத்தில மாலு வந்தா
“சாரி லேட் ஆயிருச்சு, அம்மாகிட்ட ஏதேதோ பொய் சொல்லிட்டு வரேன். ஒருவேளை இது நம்ம கடைசி சந்திப்பா கூட இருக்கலாம்”னு சொல்லும் போதே அவ தொண்டை கமறி, ஒரு விக்கலுடன் பொங்கி அழுதாள்
எனக்கோ அதை விட துக்கம், ஒன்றும் பேசாமல் சுற்று பிரகாரத்தின் 16 கால் மண்டபத்தில் கைகளை கோர்த்தபடி அமர்ந்தோம்.
“என்ன செய்ய முடியும் மூர்த்தி, இன்னும் ஒரு வாரம் , அண்ணா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டான். இந்த சனிக்கிழமை இல்ல ஞாயித்துகிழமை, சென்னை போயி, அங்கேருந்து ஆஸ்திரேலியா. கண் காணாம போயிடுவேனே மூர்த்தி”னு சொல்லும் போதே அடக்க முடியாமல் தோளில் முகம் புதைத்து அழுதாள்
பிரகாரம் சுத்தி வந்த ஒன்றிரண்டு பேர் என்னை கோபமாய் பார்த்துண்டு நகர்ந்தார்கள். எனக்கு பொங்கி வந்த அழுகையை சிரமப்பட்டு முழுங்கினேன். ஆடகள் நடமாட்டம் இன்று கோவிலில் கொஞ்சம் ஜாஸ்தி, வேற வழி இல்லாமல் வெளியே நடந்தோம்.
“வரட்டா மாலு?”னு அவ கையை தொட்டேன்
அவசரமாய் கண் துடச்சிண்டு சின்ன புன்னகை பூத்தாள். கையை பிடித்து வலிக்கற மாதிரி அழுத்தினாள். கண்ணோட கண் கலந்தது, இது தான் இறுதியா?
வீட்டுக்கு வந்து திண்ணையில் விழுந்தேன். ஆறுதலாய் முதுகை அழுத்திக் கொடுத்தான் திண்ணை நண்பன்.
“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை” உள்ளறையிலிருந்து அம்மாவின் பாடல் ஒலித்தது. எனக்கு அம்மா மேல கோபம் கூட வந்தது. எதுக்கு இப்ப இந்த பாட்டு. இரவு சாப்பிட்டது, தூங்கினது எல்லாம் இயந்திரத்தனமா போச்சு
காலைல எழுந்தவுடனே மறுநாள் எப்பவும் போல காலேஜ் புறப்பட்டேன். மனசே இல்லை, ஆனா முக்கியமான லெக்சர்ஸ் பிராக்டிகல்ஸ், தவிர்க்க முடியாதவை, போகலைன்னா இன்டர்னல் மார்க்ஸ் சுழிச்சுறுவாங்க
மனசில்லாமலே காலேஜ் போனேன். கடனே என்று நாளை கழித்து மாலை 4.30க்கு வீடு திரும்பினேன். நாராயணன் என்னை எதிர்பார்த்தோ என்னவோ, அவன் வீட்டு திண்ணையில் உக்காந்திருந்தான்.
என்னை பாத்தவுடன், “மூர்த்தி உன் கூட கொஞ்சம் பேசணும், கை கால் அலம்பிண்டு ஃபிரெஷ் ஆயிட்டு வா”ன்னான். எனக்கு உள்ளூர பயம் பிடித்துக் கொண்டது
மாலுவும் நானும் ஒண்ணா சுத்தினதை எங்கயாவது பாத்துட்டானா, இல்ல அவனோட அம்மாவே ஏதாவது சொல்லிட்டாளா. அவசர அவசரமா கை கால் அலம்பிட்டு வாசலுக்கு திரும்பினேன்.
நாராயணன் அதே இடத்தில் உக்காந்திருந்தான். என்னை பார்த்ததும் தோளை தொட்டு உக்கார வச்சான்
உள் பக்கம் திரும்பி “மாலு”ன்னு ஒரு சத்தம்
“என்னண்ணா?”னு வீணையின் நாதம்
“ரெண்டு டம்ளர் காபி கலந்துண்டு வாம்மா”
“சரிண்ணா” இது குழலோசை
நாராயணன் என்னை பார்த்து, “இத்தனை வருஷம் எதுத்தெதுத்தாப்பலே இருந்தும் நமக்குள்ளே இப்படி ஒரு ஒட்டுதல் வரல்லே, இந்த 20 நாள்ல நீ ரொம்ப நெருக்கம் ஆயிட்டே. எத்தனை வருஷம் வீணாக்கிட்டேன் நல்ல நண்பனை புரிஞ்சுக்காமே
“விடு கேப்டன், என்ன பெரிசா பண்ணிட்டேன். பரஸ்பர உதவி, இதை பெரிசு பண்றயே”
“இல்லைடா”
அதுக்குள்ளே ரெண்டு காபி கப்புடன் மாலு வந்தா, காபியை கோப்பையை எங்களிடம் கொடுத்து விட்டு திரும்பும் போது, “மாலு… உனக்கு மூர்த்தியை தெரியும் இல்லையா. சொல்லிக்கோ, நாளைக்கு விடியரதுக்குள்ளே புறப்பட்டுறுவோம்”
சற்றே தலை உயர்த்தி என் கண்ணுக்குள் பார்த்தாள் மாலு. ஏதாவது பேசினால் கதறி விடுவாள்னு தோன்றியது, சட்னு உள்ளே போயிட்டா.
மேற்கொண்டு அவன் சொன்னது எத்தனை எத்தனையோ. சாராம்சம் இதுதான்
கரீம்பாய் (மட்டன் ஸ்டால் ஓனர் மற்றும் எஸ்டேட் ஏஜன்ட்) கிட்ட வீட்டுக்கு பவர் எழுதி கொடுத்தாச்சு, அவர் வீட்டிலுள்ள சாமான்களை காசாக்கி அனுப்பிடுவார். வீட்டையும் வாடகைக்கு விட்டு 6 மாதத்துக்கு ஒரு தடவையாக பணம் அனுப்பிருவார். (வருடம் 2 மாச வாடகை பணம் அவர் கமிஷன்)
வேற என்ன… இந்த மதுரையை, இந்த தெருவை, உன் போன்ற நண்பர்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்னு சொல்லும் போது அவன் கண்களில் ததும்பிய கண்ணீர், இது வெறும் வாய் வார்த்தை இல்லை என்பதை காட்டியது.
“கார்த்தாலை புறப்படறப்ப பேச நேரம் வாய்க்காது, அம்மாவை பாத்துக்கோ” குரல் கரகரக்க என்னை தழுவிக் கொண்டான்
“கேப்டன் ஐ வில் மிஸ் யூ” னேன்
வேறு ஒண்ணும் சொல்லத் தோணலே, எனக்குள் சொல்லத் தெரியாத துக்கம். மேலே பேச முடியாமல் திரும்பினேன்.
“ஆஸ்திரேலியா போய் சேந்தவுடனே கான்டேக்ட் டீடெயில்ஸ் அனுப்பறேன்”னு சொல்லிண்டே உள்ளே போனான்.
அம்மா வந்தவுடன் என் முகத்தை பாத்தே ஏதோ ஆயிருக்குனு புரிஞ்சிண்டா. கை கால் அலம்பிண்டு காபி கலந்து கொண்டு வந்தா
நான், “எதுத்தாத்தில காபி சாப்டாச்சு”ன்னேன். அம்மா ஒண்ணும் சொல்லல்லே
காபி சாப்பிட்டவுடனே என் பக்கத்தில திண்ணைல வந்து உக்காந்துண்டா. என் கையை மெதுவா தன் கையிலே பிடிச்சிண்டு, “இப்ப சொல்லு என்னாச்சு?”
என்னால அதுக்கு மேலேயும் தேக்கி வைக்க முடியல்ல, விக்கலோட பொங்கி வந்த அழுகையை அடக்க முடியல்ல. அம்மா என்னை தன்னோட சேத்து அணைச்சுண்டா.
தலையை தடவிக் கொடுத்து, “சாந்தம் பண்ணிக்கோ. நீ ரொம்ப சின்னவன், இன்னும் உலகத்தில எவ்வளவோ பாக்கணும். என்னாச்சு சொல்லு”
“இல்லைம்மா… நாராயணன் தன் அம்மா, மாலுவோட நாளைக்கு கார்த்தால ஆஸ்திரேலியா போறான்மா. வீட்டுக்கெல்லாம் வேற ஏற்பாடு பண்ணிட்டதை பாத்தா, இனிமே இங்கே திரும்பி வர உத்தேசமே இல்லை போல”
“நம்ம கைல என்ன இருக்கு… ஆண்டவனோட விளையாட்டு. என்ன செய்ய? பேசாம சாப்ட்டு தூங்கு, காலம் எல்லாத்தையும் சரி பண்ணும்” என்றாள் அம்மா
காலம் என்ன செய்யுமோ தெரியாது, என்னை அறியாமல் கன்னம் நனைக்கும் கண்ணீரோடு தூங்கிப் போனேன்.
திடீர்னு முழிப்பு வந்தது. உள்ளே போய் முகம் அலம்பிண்டு வந்தேன். அதுக்குள்ளே எதிர் வீட்டின் பரபரப்பு இங்கே உணர்ந்தேன். ஒரு பெரிய வெள்ளை டாக்ஸி வாசலில், டிரைவர் தன் சீட்ல உக்காந்து ஸ்டியரிங்ல தலை வச்சு தூங்கிண்டிருந்தான். நான் கதவை திறக்காமல் திண்ணைலேயே கன்னத்தில கை வச்சிண்டு வேடிக்கை பார்த்தேன்.
மாலு வீட்டு கதவு திறந்து, முதல் தரிசனம் மாலு தான். புது மாதிரி பாம்பே டைப் சல்வார், கமீஸில் அசல் தேவதையாய் தெரிந்தாள். ஒரு மாதிரி தேன் கலர் மற்றும் கருப்பும் இல்லாம, கிரேயும் இல்லாத ஒரு கலவை உடை.
இது வரை மாலுவோட அழகைப் பத்தி சொல்லவே இல்லை, எனக்கு மட்டும்னு வச்சிருந்தேன். இப்ப கொஞ்சம் சொன்னா தான் எனக்கும் பதியும்.
தேவதைனு சும்மா சொல்லலை, நிஜம். பெரிய பெரிய சிரிக்கிற கண்ணு, கூர்மையும் இல்லாம சப்பையும் இல்லாம சிற்பி கூட பார்த்து வியக்கற மாதிரி நாசி, கன்னக் கதுப்புகளோ என் வர்ணனைக்கு அடங்காதது. சிரிக்கும் போது அதில் விழும் குழி, அளவெடுத்து பொறுத்திய மாதிரி தந்தக் காதுகள், கிறங்க வைக்கும் இதழ்கள், பாத்து பாத்து செதுக்கிய உடலமைப்பு, வண்ணமோ சந்தனம். நீண்டு நெடிந்த கூந்தல், இரட்டை பின்னல் போட்டு அவள் நடப்பதை பின்னால் இருந்து பாத்தா பித்தாகும் மனசு
அந்த பின்னல் இரண்டும் மாறி மாறி அசைவது சிவமணி ஸ்லோ மோஷனில் டிரம்ஸ் வாசிப்பதை போல ஒரு தோற்றம். இத்தனை அழகும் எனக்கே என இறுமாந்திருந்த என்னை விட்டு கண்காணாத தூரம் போவதை மனசு இன்னும் ஏற்றுக் கொள்ள மறுத்தது
மாலு என்னைப் பார்த்தாள். விடிந்தும் விடியாத காலை என்பதால் ஆள் அரவமில்லை, தைரியமாய் என்னை நோக்கி வந்த மாலு, கைகளால் என் கழுத்தை சுத்திக் கொண்டாள். என் கைகளும் வளைத்து இழுத்துக் கொண்டன
(தொடரும் – நான்கு வார குறுந்தொடர் – திங்கள் தோறும் வெளியிடப்படும்)
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings