in

காற்றில் ஏறி விண்ணையும் சாடுவோம் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி

காற்றில் ஏறி விண்ணையும் சாடுவோம் (சிறுகதை)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

மெல்லிய ரோஜா நிற அமெரிக்கன் ஜார்ஜெட் புடவையும் அதே நிறத்தில்  ஜாக்கெட்டும் அணிந்து தேவதை போல் நின்ற ஷில்பாவைப் பார்த்து உண்மையில் மயங்கி நின்றாள் அவள் அம்மா லட்சுமி.

அவள்  மயங்கி நிற்பதைப் பார்த்த  அவள் மருமகள் சியாமளா வந்து ரகசியமாக, “அத்தை , விஷயத்தை ஷில்பாவிடம் சொல்லாமல்  அமைதியாக அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டு  இருக்கிறீர்களே” என்றாள்  லேசாக சிரித்துக் கொண்டே. 

“எப்படிச் சொல்வதென்று தயக்கமாக இருக்கிறது. ஆபீசுக்குப் போகும் போது சொன்னால் கத்துவாள்” என்றாள் தயக்கமாக.                                                              

“என்ன விஷயம் ?  இரண்டு பேரும் இப்படி ரகசியம் பேசுகிறீர்கள்” ஷில்பா.  

“சாயந்திரம்  கொஞ்சம் சீக்கிரமாக ஆபீஸிலிருந்து வரவேண்டும்”

“அதெல்லாம் வருவது கஷ்டம் !  ஆமாம் ஏன் சீக்கிரம் வரவேண்டும் ? ஏதும் பூஜை வைத்திருக்கிறீர்களா?  அட்வான்ஸாக சொல்லாமல் பெர்மிஷன் கிடைக்காது . என்ன விஷயம்?”

“நீ இப்படி மிரட்டினால்  அம்மா எப்படி பேசுவார்கள் ஷில்பா?”  

“அண்ணி… நான் அரசு அலுவலகத்தில் அதுவும் தலைமைச் செயலகத்தில்  அட்மினிஸ்ட்ரேஷன்  பிரிவில் வேலை செய்கிறேன் என்பது அடிக்கடி உங்கள் இருவருக்கும் மறந்து விடுகிறதென்று நினைக்கிறேன். நினைத்தால்  லீவ் போடச் சொல்வதும், பெர்மிஷன் போடச் சொல்வதும்  சகிக்கவில்லை. என் பிரண்ட்ஸெல்லாம் கேலி செய்கிறார்கள். இன்றும் அதே பெண் பார்க்கும் கூத்து தானா?”  என்றாள் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு .  

“உனக்கு ஜோஸ்யம் தெரியுமா ஷில்பா? இன்று ஒரு ராஜகுமாரன்  உன்னைப் பெண் பார்க்க வரப் போகிறான்” என்றாள் சியாமளா சிரித்துக் கொண்டே . 

வாட்ச்சில்  டைம் பார்த்துக் கொண்டு  “ஐயோ ! எனக்கு நேரம் ஆகி விட்டது “ என்று அவர்கள் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஓடி விட்டாள் ஷில்பா

“என்ன சியாமளா, இந்தப் பெண் எந்த பதிலும் சொல்லாமல் ஓடிவிட்டாளே?” என்று கவலைப் பட்டாள் லட்சுமி. 

“வந்து விடுவாள் அத்தை. நாம் மாற்றி மாற்றி அவளை போனில் டிஸ்டர்ப்  செய்தால், இதென்ன  தொல்லை என்று சீக்கிரமே கிளம்பி விடுவாள், கவலையை விடுங்கள். அவளை வரவழைப்பது என் வேலை”

சியாமளாவும் ஷில்பாவும்  நல்ல  தோழிகள்.  ஷில்பாவின் மஞ்சள் நிறமும் ,அவள் நிறத்தை இன்னமும் அதிகப்படுத்திக் காட்டும் நெற்றியில் அடங்காமல் சுருண்டு தொங்கும் கருங்கூந்தலும், பார்ப்பவரைத் திரும்பிப் பார்க்க வைக்கும்  கொடி போன்ற மெல்லிய  உடலும், அவள் உயரமும் சியாமளாவிற்கு பிரமிப்பைத் தரும்.  

அழகுடன், அறிவும் , நேர்மைக்கு மட்டுமே துணை  போகும் தைரியமும் கொண்டவள்  ஷில்பா. மனதில் இருப்பதை நேரிடையாகக் கேட்டு விடுவாள் . இதனால்  அவள் தோழிகள் கூட கொஞ்சம் எச்சரிக்கையாகவே பழகுவார்கள் .  

இதைப் பற்றியெல்லாம் ஷில்பா கவலைப்படுவதில்லை.  பெண் பார்க்க வருபவர்களிடம் பதிலுக்கு பதிலாக இவள் கேட்கும் கேள்விகள் வருபவர்களை விரட்டியடித்தன. 

இவ்வளவு அழகும், அறிவும் விழலுக்கு இறைத்த நீராவதை சியாமளா விரும்பவில்லை. எப்படியாவது இந்த முறையாவது ஷில்பாவின் திருமணம் முடிந்து அத்தையின் கவலை தீரவேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள் . 

அன்று பார்த்து ஷில்பாவிற்கு  அலுவலகத்தில் வேலை குவிந்து கிடந்தது .  அமைச்சர் நேரடியாக கொடுத்த உத்தரவுகளுக்கு தகுந்த ஆதாரங்களை இணைத்து சமர்க்கப்பட வேண்டிய கோப்புகள் , தினம் தினம் வந்த கடிதங்களுக்கு நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டியவை, மேலதிகாரிகளிடமிருந்து வந்த ஆணைகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டியவை  என்று  வேலைகள் மலைபோல் குவிந்து அவளை பயமுறுத்தின.  

கோப்பையில் இருந்த ஆவி பறக்கும் காபி கூட ஆவி அடங்கி ஏடு படிந்திருந்தது. இதனிடையில் அம்மாவிடமிருந்தும் சியாமளாவிடமிருந்தும் இடையறாது வந்த போன்கால்கள் அவளுக்கு எரிச்சல் தான் கொடுத்தன. 

ஒரு வழியாக எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு ஒரு ஓலா வாடகைக்காரைப் பிடித்தாள்.  

அப்போது அவளுடன் பணியாற்றும் இரண்டு சக ஊழியர்கள்  “மேடம், நாங்களும் உங்களோடு வரவா? நாங்கள் மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கிக் கொள்கிறோம். ப்ளீஸ் மேடம்” என்றனர்.  

ஷில்பா சம்மதிக்கவும் அவர்களும் வாடகைக்காரில் ஏறி அமர்ந்தனர். ஆனால் அவர்கள் ஸ்டாப்பிங் வரும் முன்பே ஒரு ஸிக்னலில் கார் நிற்கும்போது இருவரும்  “ரொம்ப தேங்க்ஸ் மேடம் , நாங்கள் இங்கேயே இறங்கிக் கொள்கிறோம் “ என்று கூறிவிட்டு கார் கதவையும் அடித்து சாத்திவிட்டு வேகமாக எதிர்திசையில் ஓடினர். 

இவ்வளவு வேகமாக எங்கே ஓடுகிறார்கள் என்று ஷில்பா ஆவலுடன் பார்க்க  அங்கே ஒரு சாராயக்கடை திறந்திருந்தது. சிலர் நின்றுக் கொண்டும் ,சிலர் அங்கேயே புழுதயில் சுய நினைவில்லாமல் புரண்டுக் கொண்டும் இருந்தனர். அந்தக் கடைக்குள் தான் அவர்கள் நுழைந்தனர். 

“அடப்பாவிகளா! இதற்கா இப்படி ஸிக்னலில் இறங்கி ஓடினீர்கள்?” என்று வாய்விட்டு தன்னையறியாமல் ஆச்சர்யத்துடன் கூவினாள்.  

“இப்போதெல்லாம் எங்களைப் போல் படிக்காதவர்களைவிட படித்தவர்கள் தான் அம்மா அதிகமாகக் குடித்கிறார்கள் .தெருவிற்கு ஒரு சாராயக் கடை இருந்தால்  என்ன செய்வது ?  மீனைப் பார்த்தால் பூனை பாய்ந்தோடுவது போல் ஓடுகிறார்கள் !” என்று  சொல்லி கேலியாகச் சிரித்தான் அந்த டிரைவர்.  

அவர்கள் அப்படி ஓடுவது  ஷில்பாவிற்கு மிக அசிங்கமாகவும் ,அவமானமாகவும் இருந்தது. கோபமும், எரிச்சலும் பொங்கின.  ஒரு தொழிற்சாலை வைத்து கஜானாவை நிரப்பாமல், இப்படி குடியைக் கெடுக்கும் சாராயத் தொழிலால் வருமானம் செய்யும் அரசை நினைத்து வேதனைப்பட்டாள். 

டாக்ஸி வீட்டு வாசலில் நின்றது. வீட்டிற்கு வெளியில் நிறைய செருப்புகளும்  , ஷூக்களும்  காணப்பட்டன. 

வீட்டிற்கு வெளியே இவளை எதிர்பார்த்து காத்திருந்த சியாமளா இவளை உள்ளே அழைத்துச் சென்றாள் 

“ஷில்பா… மாப்பிள்ளை வெகு அழகாக மிக அமைதியானவராகவும், உனக்குப்  பொருத்தமானவராகவும் இருக்கிறார்” என்றாள் சியாமளா.  அவளை முறைத்தவாறே ஷில்பாவும் உள்ளே சென்றாள் .  

சிறிது நேரத்தில் ஸ்வீட், காரம், காபியுடன் பெண் பார்க்கும் படலம் முடிந்தது .எல்லோருக்கும் பெணணையும் பிள்ளையும் பரஸ்பரம் பிடித்து விட்டது. அப்போது தான் வழக்கமாக  வெடிக்கும் பாம்  வெடித்தது.  

ஆம், வழக்கம் போல் மாப்பிள்ளையுடன் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டுமென்றாள் ஷில்பா. அப்போதே லட்சுமிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. 

“சியாமளா,  இவள் இந்த மாப்பிள்ளையையும்  ஓட்டி விடுவாள் போலிருக்கிறதே !” என்றாள் பீதியுடன். 

“கொஞ்சம் அமைதியாக இருங்கள் அத்தை. ஷில்பாவிற்கும்  மனம் திருப்தியாக வேண்டும் அல்லவா” 

ஷில்பாவும் மாப்பிள்ளை பையன் ஷங்கரும் சுதந்திரமாகப் பேசிக் கொள்ள தனித்து விடப்பட்டனர்

பொதுவாகக் கொஞ்ச நேரம்  பேசிவிட்டு , ஷில்பா நேரடியாக விஷயத்திற்கு வந்தாள். 

“நான் தலைமைச் செயலகத்தில் டைரக்ட் அப்பாயின்ட்மென்ட். அமைச்சரின் பர்சனல் செக்ரட்டரி” என்று தொடங்கினாள் . 

“எனக்கு உங்களைப் பற்றி எல்லா விவரங்களும் தெரியும் .  நான் உங்களை இரண்டு வருடங்களாக  விரும்புகிறேன் . உயிரைவிட மேலாக மதிக்கிறேன்” ஷங்கர். 

“என்ன?” என்றாள் திகைப்புடன் 

“ஆமாம் ஷில்பா ,எனக்கு உங்களை இரண்டு வருடங்களாகத் தெரியும் . நான் ஒரு உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் .உங்களை முதன் முதலில் பிரிட்டிஷ் லைப்ரரியில் பார்த்தேன்.  பாரதியின் புதுமைப் பெண் போல் நிமிர்ந்த நன்னடையும் , நேர்கொண்ட பார்வையுமாக உங்களைப் பார்த்தவுடன் மயங்கினேன் . 

மனைவி என்று ஒருத்தி வந்தால் அது நீங்கள் மட்டுமே என்று தீர்மானித்தேன் . யாரோ ஒரு ஏழை பக்தர் சிவபெருமானுக்காக மனதில் கோயில் கட்டி எல்லா திருப்பணிகளுமே செய்து முடித்தாரல்லவா, அது போலத்தான் நானும் உங்களுக்கு மனதில் மாளிகை கட்டி வாழ்கிறேன். என் மனதில் கட்டும் மாளிகைக்கு யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை” என்றான் ஷங்கர். 

“அதெல்லாம் சரி. ஆனால் நீங்கள் செய்ய நினைத்திருக்கும் வேலை குமட்டுகிறதே ! பணம் இப்படித்தான் சம்பாதிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது . அடுத்தவர் குடியைக் கெடுத்து சம்பாதிக்கும் பணம் , நமக்கு நாமே வாங்கிக் கொள்ளும் சவப்பெட்டி .” என்றாள் வெறுப்புடன். 

“எப்படி சம்பாதித்தாலும் பணம் தானே! நாய் விற்றக் காசு குறைக்குமா” ? என் ஷில்பா மாளிகையில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்  இந்த வருடம் சாராயக்கடை ஏலம் எடுக்கத் தீர்மானித்திருக்கிறேன். அதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். பதினைந்து லட்சம் ரூபாய் அட்வான்சும் கொடுத்து விட்டேன்” 

“முட்டாளா நீ? எனக்கு உன்னைப் பிடிக்குமா பிடிக்காதா என்று யோசிக்க வேண்டாமா? சாராயக்கடை மட்டும் ஏலம் எடுக்காதே, கூடவே ஒரு ப்ராத்தல் ஹௌசும்  கட்டி விடு. வருமானம் நிறைய வரும்” என்றாள் கண்ணகி போல கோபத்துடன்.   

“சாராயக் கடை ஏலம் எடுத்து நடத்துவது என்ன தவறான செயலா? தவறு என்றால் அரசு எப்படி அனுமதிக்கிறது?”

“குடி குடியைக் கெடுக்கும் என்ற சிறு குறிப்புடன் அரசு தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறது. தனி மனிதன் தவற்றிற்கெல்லாம் அரசின் கொள்கைகளைக்காட்டி தப்பித்துக் கொள்ள முடியாது. குதிரைப் பந்தயம் , லாட்டரி சீட்டு எல்லாம் கூட அரசு திட்டங்கள் தான் . அத்திட்டங்கள் எல்லாம் பிறகு ரத்து செய்யப்பட்டன. ஆண்டிக்கு எதற்கு அம்பாரக் கணக்கு?

நான் வள வள வென்று பேசமாட்டேன்.  நீங்கள் அந்த சாராயக்கடை ஏலத்தை ரத்து செய்தால் நம் திருமணம் பற்றி மேற் கொண்டு பேசலாம். இல்லையெனில் இத்துடன் எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளலாம்” என்றாள் கராராக. 

“நீ என்ன ஈட்டிக்காரன் போல் பேசுகிறாய் ! உனக்காகத்தான் எல்லா திட்டங்களும் . வெகு எளிதில் நான் ஏங்கும் தேவதை என் கையில் என்றால் வேறென்ன வேண்டும் எனக்கு ! காற்றில் ஏறி விண்ணையும் சாடுவோம், சாராயக்கடையும் கை விட்டோம் .காதல் பெண்கள் கடைக்கண் பார்வையில்” என்றவன் அவளைப் பார்த்துக் காதலுடன் சிரித்தான்

“உனக்காகத் தானே ஷில்பா எல்லாம் . உனக்கு பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன். இது சத்தியம்” என்றான் கண்கள் கலங்க. 

“பாரதியும் வள்ளுவரும் உங்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள் “ என்ற ஷில்பா சிரித்தாள்.  

சிரித்துக் கொண்டு வரும் அவர்களைப் பார்த்து லட்சுமியும் ,சியாமளாவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் 

(முற்றும்)

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்டிஷன் (சிறுகதை) – ✍ சியாமளா வெங்கட்ராமன், சென்னை

    நினைக்கத் தெரிந்த மனமே ❤ (குறுநாவல் – பகுதி 3) – ✍ சுஸ்ரீ, சென்னை