in

கண்டிஷன் (சிறுகதை) – ✍ சியாமளா வெங்கட்ராமன், சென்னை

கண்டிஷன் (சிறுகதை)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“மது …மது ….கொஞ்சம் வாயேன். சாஸ்திரிகள் வந்து விடுவார். ராகு காலத்திற்குள் பூஜை ஆரம்பிக்கணும். அந்த சமையல்காரமாமி சரியான நேரத்தில் காலை வாரி விட்டு விட்டாள். வரமுடியாது என போன் பண்ணிவிட்டார். அவளுக்கு ஏதோ அவசர வேலையாம், நேரில் வந்து சொல்றேன் என்றாள்” என்று படபடவென்று மங்களம் பொரிந்து தள்ளினாள்.

அப்போது தான் குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டு வந்த மது ரூமுக்குள் போயி கதவை சாத்திக் கொண்டாள்

அங்கு கட்டிலில் உட்கார்ந்திருந்த அரவிந்த், “என்ன பிரச்சனை?” என்று கேட்க

“உங்க அம்மாவிற்கு சமையலுக்கு உதவ வர வேண்டுமாம்.. எத்தனை தடவை சொன்னாலும் உங்க அம்மா என் கண்டிஷனை மறந்து என்னை கூப்பிடறா. நீங்க வேணா போய் உங்க அம்மாவிறகு ஒத்தாசை பண்ணுங்கோ” என பொரிந்து தள்ளினாள் மது

வரலட்சுமி நோன்பு அதுவுமாக அரவிந்த் அவளோடு வாதம் செய்ய தயாராக இல்லை. உடனே குளித்து விட்டு அம்மாவிற்கு ஒத்தாசை செய்ய சமையலறைக்கு வந்தான்.

வடைக்கு ஊற வைத்திருந்த பருப்பை மிக்ஸியில் அரைத்து கொடுத்தான். கொழுக்கட்டைக்கு தேங்காய் திருவி கொடுத்தான். பூஜைக்கு தேவையான அனைத்து பொருளையும் எடுத்து வைத்தான்.

இத்தனையும் மது பார்த்துண்டு இருந்தாளே தவிர உதவ வரவில்லை. இது தான் அவளுடைய தலைநோன்பு, அவளுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. சாஸ்திரிகள் வந்து நோன்பு பண்ணி விட்டு சென்றார்.

மது ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அன்று மாலை மதுவின் அம்மா லதா வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்ள இவர்கள் வீட்டிற்கு வந்தாள். தன் பெண்ணின் விட்டேத்தியான தன்மையைக் கண்டு மனம் வருந்தினார்.

மங்களம் தானே  அத்தனை வேலையும் செய்வதைக் கண்டு வருத்தப்பட்டாள். லதாவும் மங்களமும் சந்தோஷமாக பேசிக் கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டு மதுவின் அம்மா கிளம்பிச் சென்றாள்.

மறுநாள் காலை புனர் பூஜை செய்து விட்டு சாப்பிட்டதும், “நான் என் அம்மா வீட்டிற்கு போகிறேன், இரண்டு நாள் அங்கு இருந்துவிட்டு வரப் போகிறேன்” எனக் கூறி விட்டு யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் கிளம்பிச் சென்றாள் மது

அவள் அம்மா வீட்டில் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்தாள். அவளைப் பார்த்த லதா வாசல் பக்கம் பார்த்து விட்டு, “மாப்பிள்ளை வரவில்லை?” என கேட்க

“ஏன் நான் மட்டும் வரக் கூடாதா?” என கேட்டுக் கொண்டே தன் அறைக்குச் சென்றாள்.

“எனக்கு அங்கு ஒரே போர் அடிச்சது. யாராவது வந்துண்டே இருக்கா, நோன்பு அது இது என்று சொல்லிக் கொண்டு. அதான் நிம்மதியா 2 நாள் இங்க இருக்கலாம் என்று வந்து விட்டேன். உனக்கு நான் வந்ததில் ஏதாவது பிரச்சனையா? சொல்லு” என்று கோபமாக கேட்டாள்.

“எனக்கு என்னடி பிரச்சனை? நம் ஆத்திற்கு நீ வருவதற்கு யாரை கேக்கணும்? எத்தனை நாள் ஆனாலும் நீ இருக்கலாம் இது உன் வீடு” என்று கூறினாள் லதா. 

மது தன் ரூமிற்கு போய் கட்டிலில் “அப்பாடா” என்று படுத்தாள்.

லதா ஊஞ்சலில் உட்கார்ந்து இருந்த தன் கணவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கண்ணால் சைகை செய்தாள்.

மூன்று மணிக்கு கணவருக்கும் மதுவிற்கும் புது டிகாஷனில் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள், தானும் ஒரு டம்ப்ளரில் காபி கொண்டு வந்து குடித்துக் கொண்டே கணவர் பக்கத்தில் உட்கார்ந்தாள். 

மதுவின் அப்பா ரகு, “லதா சூடா பஜ்ஜி போடறியா? குழந்தை வந்திருக்கா” என்று சொல்ல

“அதுக்கு என்ன? போடுகிறேன்” என கூறி சமையலறையை நோக்கி சென்றாள்.

அவள் பின்னால் வந்த மது, “ஏன் அம்மா உனக்கு விடாது சமையல் பண்றது போர் அடிக்கலையா? அப்பா பஜ்ஜி கேட்டதும் உடனே பண்றேன்னு சொல்லிட்டு வந்துட்டியே” என மது கூற

“அவருக்கு பண்ணி தருவதை விட எனக்கு என்ன வேலை? பெண்டாட்டிக்கு கணவருக்கு செய்வது தான் சந்தோஷம்” என கூறி மாவை கரைக்க ஆரம்பித்தாள்

சுடசுட பஜ்ஜியும் சட்னியும் செய்து மதுவிற்கும் ரகுவிற்கு கொடுத்தாள். சாப்பிட்டு முடிந்ததும், “அம்மா நாம் ரெண்டு பேரும் மாலுக்கு போலாமா? எனக்கு கொஞ்சம் சாமான் வாங்க வேண்டும்” என்று கூறினாள்.

“சரி புடவை மாற்றி விட்டு வந்து விடுகிறேன்” என்று கூறி உள்ளே சென்றாள். மதுவும் லதாவும் மாலுக்கு சென்றார்கள். அப்போது தனக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.

இரவு டைனிங்க் ஹாலில் மூவரும் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிட்டார்கள்

சாப்பிட்டதும், “நான் தூங்க போறேன்” என்று கூறி விட்டு, தன் கணவர் இருந்த அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டாள் லதா

உள்ளே அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே பேசும் சத்தம் வெளியே கேட்டது. ‘இந்த வயதில் என்ன இருக்கும் இவர்கள் பேசி சிரிக்க’ என மது எண்ணினாள்.

கட்டிலில் படுத்த மதுவுக்கு தூக்கம் வரவில்லை மூன்று மாதங்களாக அரவிந்த கூட படுத்து பேசிக் கொண்டே தூங்கி பழகியது தான் காரணம். எப்படியோ இரவு வெகுநேரம் கழித்து தன்னை அறியாமல் தூங்கி விட்டாள்

காலையில் எட்டு மணிக்கு தான் எழுந்தாள். உடன் குளித்து விட்டு, “அம்மா நான் எங்க ஆத்துக்கு போகிறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்

உடனே லதா, “இரண்டு நாள் இருக்க போகிறேன் என்று கூறிவிட்டு உடனே ஏன் கிளம்பறே?” என்று கேட்டாள்

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதான்” என்று கூறிக் கொண்டே தன் வண்டியை ஸ்டார்ட் செய்தாள். 

லதா தன் கணவர் ரகுவை அர்த்த புஷ்டியுடன் பார்த்தாள். கல்யாணத்திற்கு முன்பு தெரியாத அப்பா அம்மாவின் நெருக்கம் இப்போது அவளுக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியது.

அரவிந்தன் அரவணைப்பு தேவைப்பட்டது. கணவன் வீடு நோக்கி வேகமாக வண்டியை செலுத்தினாள்.

உள்ளே வந்த மதுவை பார்த்து, “இரண்டு நாள் இருக்கப் போவதாக சொல்லிக் கொண்டு போனே, ஏன் அதற்குள் வந்துட்டே?” என கேட்க, பதிலேதும் சொல்லாமல் தன் ரூமிற்கு சென்று டிரஸ் மாற்றிக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

அங்கிருந்த மங்களம், “வா மது, சூடா காபி கலந்து தரட்டுமா?” என்று கேட்க

“வேண்டாம் அம்மா இப்ப தான் குடித்து விட்டு வந்தேன். நீங்கள் போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ, நான் பூரி மசாலா பண்ணுகிறேன்” என்று கூற

“சரி சரி நீ பண்ணு” என்று சொல்லிக் கொண்டே ஊஞ்சலில் போய் உட்கார்ந்தாள்.

அம்மாவைப் பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தான். இவள் கண்டிஷன் என்ன ஆயிற்று? என யோசித்தான்

மதுவை பெண் பார்க்க போன போது அவள் அம்மா லதா இவர்களிடம் தனியாக பார்த்து கூறியது நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி நினைவுக்கு வர அதைப் பற்றி அவன் அசை போட ஆரம்பித்தான். 

Shaadi.comல் அரவிந்த் வீட்டில் போட்ட விளம்பரத்தைப் பார்த்து மது வீட்டில் ஜாதகத்தை அனுப்ப, அரவிந்த் வீட்டில் ஜாதகம் அனுப்ப இரண்டு ஜாதகங்களும் பொருத்தமாக இருப்பதாக அவர்கள் கூற பெண் பார்க்க வரும்படி கூறினார்கள்.

அரவிந்த் தன் பெற்றோருடன் மதுவை பெண் பார்க்க வந்தான், அவர்களுக்கு பெண் பிடித்திருந்தது. அப்போது தன் பெற்றோர்களிடம் தன் கண்டிஷனை பற்றி அவர்களிடம் கூறுமாறு வற்புறுத்தினாள். அவர்களும் தங்கள் மகளின் கண்டிஷன் பற்றி கூறினார்கள்

மது எம்.பி.ஏ படித்து இருக்கிறாள், தற்போது 75000 ரூபாய் மாதம் சம்பளம் வாங்குகிறாள். அவளை விட அவளுக்கு வரும் கணவன் ஒரு ரூபாயாவது அதிகம் வாங்க வேண்டும். தன்னை வேலையை விடு என்று எந்தக் காரணம் முன்னிட்டும் சொல்லக் கூடாது.

வீட்டு வேலை சமையல் வேலை எந்த நேரத்திலும் செய்யச் சொல்லி கேட்கக் கூடாது. நான் ஆபீஸிலிருந்து எந்த நேரத்திற்கு வந்தாலும் ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்கக் கூடாது என அடுக்கடுக்காக கண்டிஷன் கூறினார்கள்.

இதனால் பல பிள்ளை வீட்டார்கள் மதுவை தங்கள் பிள்ளைகளுக்கு பார்க்க மறுத்தார்கள். என்பதையும், அதனால் தான் தன் பெண்ணிற்கு திருமணம் தாமதமாகிவிட்டத  வெளிப்படையாக கூறினார்கள்

அரவிந்திற்கும் மங்களம் தம்பதியருக்கும் மதுவின் பெற்றோர்கள் வெளிப்படையாக தன் பெண்ணின் கண்டிஷன் பற்றி கூறியது பிடித்திருந்தது, மேலும் அவர்களுக்கு மதுவை பிடித்தும் இருந்தது.

இரண்டு பேர் ஜாதகமும் நன்றாக பொருந்தி இருந்தது. எனவே மதுவின் கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டு திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தார்கள்.

மதுவிற்கும் அரவிந்தை பிடித்திருந்தது. ஒரே பெண் என்பதால் திருமணம் மிக விமரிசையாக செய்தார்கள். இரு வீட்டார்களும் சந்தோஷமாக ஒற்றுமையாக இருந்தார்கள்.

ஆனால் மது தன் கண்டிஷனில் இருந்து துளி கூட விட்டுக் கொடுக்கவில்லை. அப்படி இருக்கையில் இன்று திடீர் மாற்றம் அரவிந்துக்கு ஆச்சரியமளித்தது.

மதுவிற்கு தெரியாமல் லதாவிற்கு போன் செய்து, “அவரது வீட்டில் என்ன நடந்தது ஏன் இந்த மாற்றம்?” என்று அரவிந்த் கேட்க, அவர்கள் தாங்களும் மங்களம் தம்பதியரும் நடத்திய நாடகம் என்று கூறினார்கள்.

அதாவது தங்கள் கணவர்களிடம் மிகவும் அந்நியோன்யமாக இருந்து அவள் மனதை மாற்றுவது என்பது தான்.

அவர்களின் நெருக்கம் அவள் மனதில் இந்த வயதில் இவ்வளவு ஒற்றுமையா? என்று நினைக்கத் தோன்றும். தன் கண்டிஷன் மீது அவளுக்கு தன் மீது வெறுப்பு தோன்றும் இதனால் தன்னைத் தானே மாற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று நினைத்தார்கள்.

அதே போல் இரு தம்பதியர்கள் நடந்து கொண்டு அவள் மனதை மாற்றினார்கள் அரவிந்த் இரு அப்பா அம்மாவுக்கும் நன்றி கூறினான்.

சமையலறையில் மதுவின் கைமணத்தால் பூரி மசாலாவின் மணம் மூக்கை துளைக்க, அரவிந்த் சமையலறைக்குச் சென்று மதுவை கட்டியணைக்க, மதுவின் கண்டிஷன் காற்றில் கரைந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா?

(முற்றும்)

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. அருமையான கதை . தனக்கு என்று வரும் எல்லா பெண்களும் சிரத்தையுடன் தத்தம் வேலைகளைச் செய்வர் . வாழ்த்துகள் மேடம் .

அந்த நாளும் வந்திடாதோ? (மலரும் தீபாவளி நினைவுகள்) – ✍ கே.என்.சுவாமிநாதன், சென்னை

காற்றில் ஏறி விண்ணையும் சாடுவோம் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி