பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
ரோஸியின் இன்டர்காம் அழைத்தது.
“எஸ்… மேம்…”
“கம் வித் தி செர்வீஸ் ரோல் ஆஃப் சிவராசு” அழைத்தது எம். டி. சுமதி.
சுமதியின் முன் போய் நின்றாள் ரோஸி
“ஃபைலை வச்சிட்டுப் போ”
அவள் போன பின் ஃபைலைப் புரட்டினாள் சுமதி.
சிவராசுவுக்கு வயது 70. இன்னும் இந்தக் கம்பெனியில் அவர் உழைக்கிறார் என்றால் காரணம் அவரது அனுபவம், ஆரோக்கியம், உழைப்பு. அவரது 60வது வயதில் இந்தக் கம்பெனியின் முதலாளிஆனந்த கிருஷ்ணன், சிவராசுவை அழைத்தார்.
“உனக்கு வயது 60. கம்பெனி ரூல்ஸ் படி நீ ஓய்வு பெற வேண்டும். ஆனா முதலாளி என்கிற முறையில் எனக்கு சில சலுகைகள் இருக்கு. அதன்படி உனது ரிட்டயர்மென்ட் பெனஃபிட்ஸ் எல்லாம் நீ வித்ட்ரா பண்ணிக்கலாம். ஆனா நீ கம்பெனியை விட்டுப் போக வேண்டாம். அதே சம்பளம், அதே பதவி…. நீயா விரும்பும் வரை அல்லது நானா உன்னை அனுப்பும் வரை தொடரலாம்” என்றார்.
என்னடா முதலாளி அவரை ஒருமையில் அழைக்கிறாரேன்னு பாக்குறீங்க இல்லே… அந்தக் கதை பின்னால் வரும். இப்ப முதலாளிக்கு உடம்பு முடியலே. அதனாலே எம்.டி என்கிற முறையில் சுமதி கம்பெனியை கவனித்துக் கொள்கிறாள்.
சிவராசுவின் ஃபைலைப் பார்த்து….’பாவம்…. இத்தனை காலம் கம்பெனிக்காக மாடு மாதிரி உழைத்திருக்கிறாரே. அவருக்கு ஓய்வு தேவை. கொஞ்ச நாளாவது தனது குடும்பத்துடன் நிம்மதியாக சந்தோஷமாக இருக்க அனுமதிக்கலாமே…. பெரியவரைக் கேட்கலாம்’ என்று தானே ஒரு நோட்ஸ் தயார் பண்ணி…. சிவராசுவின் ஃபைலுடன் பெரியவருக்கு அனுப்பினாள் சுமதி.
சில தவிர்க்க முடியாத ஃபைல்களை பெரியவரின் பார்வைக்கு வீட்டுக்கு அனுப்புவது வழக்கம். பெரியவர் ஃபைலைப் பார்த்தார். ‘அவர் ஒத்துக்கொண்டால்…?’ என்று குறிப்பிட்டு ஃபைலை திருப்பி அனுப்பினார்.
சுமதி ஃபாக்டரியை ரவுண்ட்ஸ் வரும் போது, சிவராசுவைப் பார்த்தாள்.
“வணக்கம் அம்மா” என்றவாறே எழுந்தவரை அமரச் செய்து விட்டு, அவரெதிரே அமர்ந்தாள் சுமதி
”எனக்கொரு சந்தேகம். இப்படியே எவ்வளவு நாட்கள் உழைக்கிறதா உத்தேசம்?”
பதில் பேசாமல் சிரித்தார் சிவராசு.
“அப்படின்னா?”
“அப்படித்தான்…. உழைச்சே பழகிட்டேன். இந்தக் கட்டைக்கு ஓய்வு கொடுத்தா படுத்துடும்… ஒரு நாள் கூட படுக்கக் கூடாது. ராத்திரி தூங்கப் போனான். காலைல எந்திரிக்கலே…. அம்புட்டுத்தான். நம்மால் யாருக்கும் தொந்தரவு கூடாது.”
“உங்கள் கொள்கை நல்லதுதான். ஆனா உடம்புக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தே ஆகணும்…. அதனால…”
“அதனால….?”
“நாளையிலிருந்து…. வீட்டுலயே இருங்க… கவலைப்படாதீங்க…. ஒண்ணாந் தேதி சம்பளம் உங்க கணக்குல வந்திடும்”
“என்னம்மா நீங்க…. என்னை இப்படி சீப்பா எடை போட்டுட்டீங்க…. சம்பளத்துக்காகவா வேலை செய்யறேன். இல்லேம்மா… ஆனந்தனுக்கும் எனக்கும் உள்ள உறவுக்கு விலையே கிடையாதும்மா. ஸாரிம்மா…. என் கடைசி மூச்சு வரை ஆனந்தனுக்காக உழைப்பேனம்மா… உங்களுக்குப் புரியாது” என்றவர், பழைய நினைவுகளில் மூழ்கினார்
ஆனந்தகிருஷ்ணன் கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அதே கிராமத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சிவராசு. இருவரும் ஒரே வகுப்பில் படித்த இணைபிரியா நண்பர்கள்.
இன்னும் சொல்லப் போனால் சிவராசு, ஆனந்தனை விட படிப்பில் படு சுட்டி. பலநாள் சிவராசு ஆனந்தன் வீட்டிலேயே உண்டு, உறங்கி கழித்திருக்கிறார். இருவரும் ஒரே கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றனர்.
சிவராசு வேலை தேடி நகரத்திற்கு சென்றார். ஒரு ரப்பர் ஃபாக்டரியில் ஸ்டோர் கீப்பர் வேலை கிடைத்தது. ஆனந்தனோ கிராமத்தில் சிலருக்கு டியூஷன் எடுத்துக் கொண்டிருந்தார்.
ஆனந்தனுக்கு ஒரு நல்ல இடத்தில் பெண் கிடைத்தது. அவரது மாமனார் வேறு யாருமல்ல, சிவராசு வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி தான். ஆனந்தன் இப்போது அந்தக் கம்பெனி டைரக்டர்களின் ஒருவர். கம்பெனியில் சிவராசைப் பார்த்ததும் ஓடிச்சென்று தழுவிக் கொண்டார் ஆனந்தன்.
ஆனால் அவரது மாமனாருக்கு அது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனந்தனைத் தனியாகக் கூப்பிட்டு கண்டித்தார்.
சிவராசுவிற்குத் திருமணமாகியது. ஆனந்தன் ஃபேக்டரி பக்கத்திலேயே ஒரு மனையை வாங்கி வீடு கட்டினார். ஆறு மாதத்தில் வீடு நிறைவாகி அதில் சிவராசுவைக் குடி வைத்தார். ஆனந்தன் சிவராசு வீட்டிற்கு அடிக்கடி போய் வந்தார். நட்பு பலப்பட்டது.
இந்நிலையில் ஆனந்தின் மாமனார் இறந்தார். ஆனந்தனின் மனைவி ஒரே பெண் என்பதால், ஆனந்தன் கம்பெனி எம்.டி ஆனார். சிவராசுவின் பதவியை உயர்த்தி பல சலுகைகளைக் கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் ஆனந்தன், சிவராசுவை கம்பெனி பங்குதாரராக அழைத்தார். “வேண்டாம்…. நமது நட்பு விரிசல் பட வாய்ப்பாக அமையும்” என அதனை மறுத்தார் சிவராசு.
ஆனந்தனுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. சிவராசுவுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. காலங்கள் ஓடின. இரு குழந்தைகளும் ஒரே பள்ளியில் படித்தனர். ஆனந்தனின் மகன் சுந்தர் மேற்படிப்புக்கு வெளிநாடு சென்றான்.
சிவராசுவின் மகன் சுரேஷையும் வெளிநாடு அனுப்ப ஆனந்தன் முயற்சித்தார். சிவராசு ஒத்துக் கொள்ளவில்லை. அவன் பட்டப்படிப்பு முடிந்ததும் வேலைக்கு அனுப்ப முயன்றார்.
சரி… நமது கம்பெனியிலேயே வேலை போட்டுக் கொடுக்க ஆனந்தன் விரும்பினார். சிவராசு அதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனந்தோ சுரேஷைக் கூப்பிட்டு ஒரு கார் வாங்கிக் கொடுத்து ஆல் இந்தியா டூரிஸ்ட் டாக்சி லைசென்ஸும் வாங்க உதவி செய்தார்.
வெளிநாட்டிலிருந்து வந்த சுந்தர் வெறுங்கையுடன் வரவில்லை. கைபிடித்த நாயகியுடன் வந்தான். அவளும் எம்.பி.ஏ. ஆனந்தனுக்கு பிடிக்கவில்லை.
ஆனால் சுந்தரின் பிடிவாதத்தின் முன் தாக்குப் பிடிக்க முடியவில்லை. திருமணம் நடந்தது. சுரேஷுக்கும் திருமணம் நடந்தது. அவனது தொழிலும் சிறப்பாக நடந்தது.
சுந்தர் வந்ததால் ஃபேக்டரியை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வெடுத்தார் ஆனந்தன். ஆண்டுகள் ஓடின…. சுரேஷுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சுந்தருக்கு பத்தாண்டாகியும் குழந்தை பாக்கியமில்லை.
சுரேஷின் குழந்தையை தங்கள் குழந்தை போல் கொஞ்சி மகிழ்ந்தனர். தவிர அனாதை விடுதியிலிருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர்.
என்றைக்கும் காரில் ஃபேக்டரிக்கு சென்று வந்த சுந்தர், அன்று ஒரு சேஞ்சிற்காக சுரேஷின் டூவீலரில் பயணம் செய்தான். என்ன நடந்ததோ தெரியாது. எதிரே வந்த ஒரு லாரியின் அடியில் சிக்கினான். கண நேரத்தில் உயிரும் பிரிந்தது.
ஆனந்தன் கதறினார். எல்லா காரியங்களும் முடிந்தன…. பதினாறாம் நாள் சுந்தரின் மனைவி சுமதி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. ஆண் குழந்தை பிறந்தது. தத்தெடுத்த பெண்ணிற்கு மூன்று வயது. இரண்டு குழந்தைகளும் வளர்ந்தன.
ஏற்கெனவே உடல் நலம் குன்றிய ஆனந்தனை மகனின் மரணம் மேலும் கவலைக்குள்ளாக்கியது. இப்போது ஃபேக்டரியை யார் பார்ப்பது…? அதுவரை மாமனாருக்கு பிடிக்காதிருந்த மருமகள் சுமதியிடம் ஃபேக்டரி பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம். ஃபேக்டரி பொறுப்புடன் மகள், மகன் இருவரையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு.
“சரி மாமா… உங்க விருப்பப்படியே, உங்களால் முடியும் வரை நம்ப கம்பெனியிலேயே தொடருங்கள்” என்று சிவராசுவிடம் கூறி விட்டு தன் அறைக்கு திரும்பினாள் சுமதி.
அப்போது அவள் கைபேசி அலறியது.
எடுத்து காதில் வைத்தவள், “மாமா” என்றலறிக் கொண்டு படிகளில் வேகமாக இறங்கினாள்.
இதைத் தற்செயலாகக் கவனித்த சிவராசு, “என்னம்மா…. என்னாச்சு….?”
“மாமா….. போயிட்டாராம் ….. மாமா”
பதறி விட்டார் சிவராசு. சுமதியுடன் காரில் ஆனந்தனின் வீட்டிற்கு வந்தார் சிவராசு. ஆனந்தனைப் பார்த்தார்….. கதறினார்.
காலம் கடந்தது. குழந்தைகள் வளர்ந்தனர். சிவராசுவிற்கு நண்பனின் இழப்பு உடல் நிலையைப் பாதித்தது.
“மாமாவும் போயிட்டாரு, இனிமேலாவது நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க” சுமதி கூற, “ஆமாம்மா….. எடுக்க வேண்டியது தான்” என்றார் சிவராசு
அன்றிரவு படுக்கச் சென்ற சிவராசு, சொன்னது போலவே, ஒருவருக்கும் தொந்தரவு தராமல் காலையில் எழுந்திருக்கவில்லை…..!
(முற்றும்)
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings