in

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 7) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 7)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“மஞ்சு… எனக்கு நேற்று திடீரென்று நல்ல ஜுரம் வந்து  விட்டது. நண்பர்கள் தான் உடன் இருந்தனர். மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டதில் நேற்று இரவு முதல் ஜுரம் இல்லை. ரொட்டியும், கஞ்சியும் சாப்பிட்டு நாக்கே மரத்து விட்டது. எனக்குக் கொஞ்சம் சாதமும், ரசமும் செய்து தர முடியுமா?” என்று கேட்டான்.

“சரி” என்று கூறி விட்டு, அவன் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட் முகவரியை தன் செல்போனில் குறித்துக் கொண்டாள்.

அது ஒரு கேட்டட் கம்யூனிட்டி, மிக அழகாக இருந்தது. காரைப் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு, கோபியையும் அழைத்துக் கொண்டு, ஒரு கையில் உணவுக் கூடையையும் எடுத்துக் கொண்டு லிஃப்ட்டில் அவன் தங்கியிருந்த அறைக்குச் சென்றாள் .

அறைக்கதவுத் தாளிடாமல் சாத்தப்பட்டிருந்தது. கதவை மெதுவாகத் தட்டி விட்டு உள்ளே சென்றாள் மஞ்சுளா. நந்தகோபால் கட்டிலில் சாய்ந்து படுத்தபடி ஏதோ மெடிக்கல் ஜர்னல் படித்துக் கொண்டு இருந்தான். இவர்களைப் பார்த்தவுடன் அவன் முகம் மலர்ந்தது.

“வா மஞ்சு, வா கோபி” என்று வரவேற்றான் .

“இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள் மஞ்சுளா மெதுவாக

தன் பிஞ்சு கரங்களால் அவன் நெஞ்சில் கை வைத்து ஜுரம்  இருக்கிறதா என்று தொட்டும் பார்த்தான் கோபி. நந்தகோபால் நெகிழ்ந்து விட்டான். அவனைத் தூக்கி அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு மடியில் அமர்த்திக் கொண்டான்.

“நேற்று மாலை முதலே ஜுரம் இல்லை. ஆனால் இந்த ‘பிரட்’டும், கஞ்சியும் சாப்பிட்டு வாழ்க்கையே வெறுத்து விட்டது. என் அறையில் இருக்கும் இரண்டு நண்பர்களும் சைனீஸ். அவர்களால் என் ருசிக்கு தீனிபோட முடியவில்லை, அதனால் தான் உனக்குப் போன் செய்து தொந்தரவு செய்தேன். சாரி மஞ்சு” என்றான்

“இதில் ஒன்றும் தொந்தரவு இல்லை. நீங்கள் பிரஷ் செய்து கொண்டு வாருங்கள். சூடான இட்லியும் தக்காளி சட்னியும் இருக்கிறது, சாப்பிடுங்கள்” என்றாள்

உடனே வேகமாக எழுந்து பாத்ரூமுக்கு ஓடி, முகமெல்லாம் முகமெல்லாம் கழுவிக்கொண்டு வந்தான். கோபி கட்டிலில் மடித்துப் போடப்பட்டிருந்த டவலை எடுத்து அவனிடம் கொடுத்தான். முகத்தைத் துடைத்துக் கொண்டு ஒரு கையில் கோபியைத் தூக்கிக் கொண்டான்.

“நான் ரெடி மஞ்சு, எனக்கு டிபன் வேண்டும்” என்றான் சிறு குழந்தை போல்

மஞ்சுளா லேசாக சிரித்துக் கொண்டு, தான் எடுத்து வந்த பீங்கான் தட்டை மீண்டும் சுத்தமாகக் கழுவி, அதில் நான்கு இட்லிகளையும் தக்காளிச் சட்னியும் வைத்தாள்

பல நாட்கள் பட்டினி கிடந்தவன் போல் ஆர்வத்துடன் அவன் சாப்பிடுவதை இருவரும் வியப்புடன் பார்த்தனர்

அவன் சாப்பிட்டு முடித்தவுடன் தட்டு, ஹாட்பேக் எல்லாவற்றையும் கழுவி டேபிள் மேல் வைத்தாள். டைனிங் டேபிள் மேல் இருந்த மற்றொரு ஹாட்பேக்கில், மதியம் சாப்பிட லஞ்ச் இருந்தது. அதை அவனிடம் கூறி, சாப்பிடச் சொல்லி விட்டு கிளம்பினாள் .

“இப்போதே போகவேண்டுமா மஞ்சு?” என்றான் நந்தகோபால் ஏக்கத்துடன்

“கோபியை பள்ளியில் டிராப் செய்ய வேண்டும், பிறகு நான் காலேஜ் போக வேண்டும். வரட்டுமா ?” என்று கிளம்பினாள்

அப்போது அவன் ரூம் மேட் இரண்டு சைனீஸ் டாக்டர்களும் வந்தனர். பியானோ கான்ஸர்ட்டுக்கு வந்தவர்களே, ஏற்கனவே அறிமுகமானவர்கள் ஆதலால் நலம் விசாரித்து விட்டு, இரண்டொரு வார்த்தைகள் பேசி விட்டு அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினார்கள் .

“பை டாடி” என்று கோபியும் விடைபெற்றான்.  இரண்டு நாட்கள் எந்த இடையூறும் இல்லாமல் ஓடியது. வெள்ளிக்கிழமை காலை மீண்டும் போன் செய்தான் நந்தகோபால்

“இப்போது உடம்பு பரவாயில்லையா?” என்று நலம் விசாரித்தாள் மஞ்சுளா .

“உடம்பு நன்றாகி விட்டது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் லஞ்ச்சிற்கு ஏதாவது ரெஸ்டாரன்ட்  போகலாமா?” என்றான் நந்தகோபால் ஆர்வத்துடன்.

கோபி, மஞ்சுவின் அருகில் நின்று அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.        மஞ்சுளாவின் முகம் லேசாக சுருங்கியது. இருந்தாலும் நந்தகோபாலின் மனமும் கோபியின் மனமும் வருத்தப்படக் கூடாதென்று நினைத்தாள்.

“ஹோட்டல் எல்லாம் வேண்டாமே, இப்போது தான் ஜுரம் இல்லாமல் உடம்பு நன்றாக இருக்கிறது” என்றாள் சமாதானமாக

“மம்மி… நாம் ரெஸ்டாரன்ட் போவதற்கு பதிலாக டாடி நம் வீட்டில் லஞ்ச் எடுத்துக் கொண்டால்?” என்றான் கோபி குதூகலமாக

“கோபி… பெரியவர்கள் பேசும் போது அருகில் நின்று கேட்பது தவறில்லையா? நீ போய் படி” என்றாள் மகனிடம்.

“ஸாரிம்மா” என்று ஓடி விட்டான்

“மஞ்சு… நீ என்னை உன் வீட்டில் சாப்பாட்டிற்கு அழைக்க மாட்டாயா? எனக்கு உன்னுடனும் கோபியுடனும் கொஞ்ச நேரம் செலவிட வேண்டும் என்று ஆசை” என்றான் உருக்கமாக.

அப்படி அவன் கேட்ட பிறகு என்ன செய்வதென்று தெரியாமல்,  “சரி வாருங்கள்” என்றாள்.

“எனக்கு வெறும் ரசம் சாதமும் தயிர் சாதமும் மட்டும் கொடுத்தால் கூட போதும், நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்”

மஞ்சுளா லேசாகச் சிரித்து விட்டு,  “நீங்கள் வாருங்கள்” என்றாள்.

சனிக்கிழமையே வீட்டை ‘வேக்குவம்’ போட்டு சுத்தம் செய்ய தொடங்கி விட்டான் கோபி. அவனுடைய அறையை சுத்தம் செய்தான். வாஷிங் மெஷினில் துணிகளைத் தோய்த்து, டிரையரில் காயவைத்து, அயர்ன் செய்து அடுக்கி வைத்து விட்டான்.

எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மஞ்சுளா, தந்தையின் பாசம் அவனை எப்படி ஆட்கொண்டிருந்தது என்பதை உணர்ந்து கொண்டாள்.

“அப்பா என்றால் உனக்கு ரொம்ப் பிடிக்குமா கோபி?” என்றாள் மஞ்சுளா மெதுவாக.

“பிடிக்கும் அம்மா… என் நண்பர்கள், பொதுவிடங்களில் அப்பா, அம்மாவுடன் வரும் போது, எனக்கு ஏன் அப்பா என்னுடன் இல்லை என்று தோன்றும். இப்போது என் டாடியை நான் என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் இல்லையா அம்மா?” என்று கேட்டான் குழந்தை, அவள் வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொண்டு.

அவனுடைய சுருண்ட முடியைக் கைகளால் அளைந்து, அவனை இழுத்துத் தன் மடியில் அமர்த்திக் கொண்டாள் மஞ்சுளா.

மனதில்  நந்நகோபால் மேல் ஏற்பட்ட தவறான எண்ணம் இன்னும்  போகவில்லை. அவன் நிஜமாகவே பாசம் காட்டுகின்றானா இல்லை வந்த இடத்தில் பொழுது போக்காக தங்களை உபயோகப்படுத்திக் கொள்கிறானா என்று சந்தேகித்தாள்.

ஏற்கனவே சூடு கண்ட பூனை அல்லவா?

‘தன்னால் அவன் தரும் ஏமாற்றங்களைப் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் கோபி? அவன் சின்னக் குழந்தை ஆயிற்றே! ஏமாற்றங்களை அவன் உள்ளம் தாங்கிக் கொள்ளுமா?’ என்று பலவாறாக யோசித்தாள். ஆனால் மனதின் ஓட்டங்கள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

 ஞாயிற்றுக்கிழமை காலை கோபிக்கு பாலில் சீரியல் போட்டுக் கொடுத்து விட்டு, ஒரு முட்டையை வேக வைத்துக் கொடுத்தாள். குட்டி ஆரஞ்சுகள் இரண்டை கழுவி எடுத்து உரித்து ஒரு சின்னக் கிண்ணத்தில்  போட்டுக் கொடுத்தாள்.

“கண்ணா… நீ  சாப்பிட்டு விட்டு வந்து படி. டாடி வந்த பிறகு படிக்க முடியாது. நாளை இரண்டு டெஸ்ட் இருக்கிறதல்லவா?” என்றாள்.

‘ஒரு சாம்பார், பொரியல், ரசம் என்று சமையலை முடித்து விடலாமா?’ என்று மஞ்சுளா ஒரு நொடி யோசித்தாள். நந்நகோபாலுக்காக இல்லாவிட்டாலும், கோபி தன் தந்தையின் மேல் வைத்திருக்கும் பாசத்திற்காகவது முழு சமையலை செய்ய முடிவு செய்தாள்.

நந்தகோபாலுக்கு பால் பாயசம் மிகவும் பிடிக்கும் என்பது நினைவிற்கு வந்தது. அதனால் பாயசமும் மெதுவடையும் செய்தாள்.

பிரியாணி விரும்பி சாப்பிடுவான். ப்ரீஸரைத் திறந்து சிக்கனை எடுத்து வெளியே வைத்தாள். பிரியாணியும் செய்து விட்டாள். இன்னொரு ஜிப்லாகில் இருந்த சாலமன் மீனும் எடுத்து மீன் வறுவலும் செய்தாள்.

‘ஒருவேளை நாம் செய்யும் நான்-வெஜ் ஐட்டம்ஸ் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?’ என்று யோசித்து, சாம்பார், ரசம், சாதம் என்று அதையும் செய்தாள்

எல்லாவற்றையும் முடிக்க மணி பதினொன்றைக் காட்டியது. சமயலறையை நன்கு சுத்தம் செய்து எல்லா சாப்பாட்டையும் டைனிங் ஹாலில் அடுக்கி வைத்தாள் .

வீடு முழுவதும் சென்ட்ரலைஸ்ட் ஏ.சி. செய்திருப்பதால் அவ்வளவு களைப்பு தெரியவில்லை. குளித்து விட்டு சாதாரணமாக ஒரு நைலக்ஸ் புடவை அணிந்து கொண்டாள்.

அது அவள் அண்ணி சாரதா  சமீபத்தில் அமெரிக்கா வந்த போது எடுத்து வந்த சில புடவைகளில் ஒன்று. மெல்லிய சந்தன நிறத்தில் ,அதே நிறத்தில் எம்பிராய்டரி பூ வேலை செய்யப்பட்டிருந்தது. அதே நிறத்தில் ஜாக்கெட், கழுத்தில் எப்போதும் இருக்கும் கொஞ்சம் கனமான தங்கத் தாலிச் சரடு. அத்துடன் ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி.

ஷேம்பு போட்டு குளித்து ட்ரையர் போட்ட சுருட்டை முடி  இழுத்து ஒற்றைப் பின்னலாய் போட்டிருந்தும் நெற்றியிலும் பின் கழுத்திலும் சுருள் சுருளாகத் தொங்கியது. லேசாகப் போட்டிருந்த கம்ப்ரெஸ்ட் பௌடர். இவ்வளவு தான் அவள் அலங்காரம்.

மாடியில் தன் அறையில் இருந்து வெளியே வந்த மஞ்சுளாவை வியப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான் கோபி.

“என்ன கோபி?” என்றாள் மஞ்சுளா

 “அம்மா… இந்த டிரெஸ்ஸில் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்” என்றான் ‌வியப்புடன்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. இத்தனை நாள் ஜீன்ஸ்  டீ ஷர்ட் என்று பார்த்து விட்டு இன்று புடவையில் பார்க்கவும் வித்தியாசமாகத் தெரிகிறது”

அப்போது  ‘டிரைவ்வே’யில் ஒரு வாடகைக் கார் வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு கைகளிலும்  நிறைய பைகளும், பார்ஸல்களுமாக நந்தகோபால் இறங்கி வந்தான்

கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு ஓடினான் கோபி. மஞ்சுளாவும் தலையசைத்து  லேசான சிரிப்புடன் “வாருங்கள்” என வரவேற்றாள்.

வெளியே எலும்புக்குள் ஊடுருவும் நல்ல குளிர். பசிபிக் கடலில் இருந்து ‘சில்’லென்று வீசிய காற்றும், லேசான தூறலும், கதவைத் திறந்தவுடன் உடலை லேசாக நடுங்க வைத்தது.

வீட்டின் உள்ளே வந்த  நந்தகோபால் ஷூ வையும், குளிருக்காகப் போட்டிருந்த ஜாக்கெட்டையும் கழற்ற மறந்து அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான் .

“டாடி” என்று கோபி உலுக்கிய பிறகே சுயநினைவிற்குத் திரும்பிய நந்தகோபால், லேசாக வெட்கப்பட்டு கொண்டு  உள்ளே வந்தான்.

தன் கையில் இருந்த பைகளை மஞ்சுளாவிடம் கொடுத்தான். இரண்டு பைகளை மட்டும் தன்னிடமே நிறுத்திக் கொண்டான்.

“என்ன இது இத்தனை பைகள்?”  என்றாள் வியப்புடன் .

“பிரித்துப் பார் மஞ்சு, ஆனால் எதையும் வேண்டாம் என்று மட்டும் மறுத்து விடாதே” என்றவன், மீண்டும் வெளியே போய் மேலும் சில பெட்டிகளும், பார்சல்களும் எடுத்து வந்து டைனிங் டேபிள் மேல் வைத்தான்.

“இது என்ன டாடி?” என்றான் கோபி .

“இதெல்லாம் ரங்கோலியில் வாங்கிய ஸ்வீட்ஸ் கண்ணா… அம்மாவை எடுத்துக் கொடுக்கச் சொல்லி சாப்பிடு கோபி” என்றான்.

மஞ்சுளா தன்னிடம் இருந்த பைகளையும் கொண்டு வந்து டைனிங் டேபிள் மேல் வைத்து விட்டு, ஆரஞ்சு ஜூசும் எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்தாள்.

பிறகு கோபியின் அருகில் அமர்ந்து  நந்தகோபால் அவளிடம் கொடுத்த பைகளைப் பிரித்தாள். எல்லாம் கோபிக்கான விதவிதமான உடைகள். இருபது அல்லது இருபத்தி ஐந்து ஸெட் இருக்கும்.

“எதற்கு இவ்வளவு ஆடைகள்? ஒரு வருடத்திற்கு உடைகளே வாங்க வேண்டாம் போல் இருக்கிறதே! இதில் கோடைக்கால குளிர்கால ஆடைகள் வேறு. வளரும் குழந்தைக்கு எதற்கு இத்தனை உடைகள்?” என்றாள் மஞ்சுளா .

“டாடி, உங்களிடம் இரண்டு பைகள் இருக்கிறதே, அது உங்கள் டிரஸ்ஸா?” என்று ஆர்வமாகக் கேட்டான் கோபி.

கோபியைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, “மஞ்சு… நான் உனக்கு இரண்டு புடவைகள் வாங்கி வந்திருக்கிறேன். தயவுசெய்து மறுக்காமல் வாங்கிக் கொள்வாயா?” என்றான் நந்தகோபால் கெஞ்சும் குரலில்

(தொடரும் – புதன் தோறும்)

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. ‘வீணையடி நீ எனக்கு’ தொடர் கதை படிக்க படிக்க பேரார்வத்தை தூண்டுகிறது.

அவிழாத முடிச்சுகள் (சிறுகதை) – ✍ ச.ரமணி

அபூர்வ ராகங்கள் (சிறுகதை) – ✍ இந்து ஷியாம்