எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மணி பதினொன்று இருக்கும், கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள் ராஜாத்தி. அங்கே யசோதா புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தாள். ‘ வா யசோ… ‘ என்று கதவைத் திறக்க, உள்ளே நுழைந்தபடியே, ‘ அக்கா… என்ன பண்ணிட்டிருக்கீங்க… ‘ என்றாள் அவள்.
‘ டீ போட்டு குடிச்சுக்கிட்டிருக்கேன்… வா நீயும் டீ குடிப்பே… ‘ என்றுவிட்டு கையிலிருந்த டீ கப்பை மேஜை மேல் வைத்துவிட்டுத் திரும்பினாள்.
‘ பரவால்லாக்க… நீங்க குடிங்க… நான் கொஞ்சம் முன்னாலத்தான் குடிச்சேன்… ‘ என்றாள் யசோதா.
‘ பரவால்ல… உனக்காக தனியாகவா போடப்போறேன்… கொஞ்சம் மிச்சம் வச்சிருக்கேன்… சூடேத்தினா ஆச்சு… ‘ என்றபடியே மடமடவென் சமயற்கட்டுக்குள் போய் டீயை சூடேற்றி ஒரு கப்பில் ஊற்றி எடுத்துக்கொண்டு ஹாலுக்குள் வந்தாள்.
கப்பை வாங்கி மேஜை மேல் வைத்துவிட்டு நிமிர்ந்த யசோதாவின் முகத்தில் தயக்கம் தெரிந்தது. யோசித்தால் ராஜாத்தி.
அதற்குள் ‘ அக்கா… ஒரு உதவி… ‘ இழுத்தாள் யசோதா.
‘ என்ன சொல்லு யசோதா… முடிஞ்சா செய்றேன்… முடியலைனா இல்லேங்கறேன்…இதுல என்ன தயக்கம்… ‘ என்றவள், ‘ காசு பணம் ஏதும்… ‘ என்று இழுத்தாள்.
யசோதா தனது மகளுக்கு கல்யாணம் வைத்திருப்பது ராசாத்திக்கு தெரியுமாதலால், அது சம்பந்தமாக ஏதும் அவசர செலவுக்காக பணம் ஏதும் கேட்டுத்தான் வந்திருப்பாளோ என்று நினைத்தபடிதான் அப்படி கேட்டு வைத்தாள்.
‘ இல்லக்கா… வந்து… உங்களால முடியாதது ஒண்ணுமில்ல… ‘ சொல்லத் தயங்கினாள் அவள்.
‘ முதல்ல டீயைக் குடி… ஆறிடப் போகுது… ‘ என்று கப்பைக் காட்டினாள் ராஜாத்தி. தயக்கத்துடன் டீயை எடுத்து ஒரு முடக்கு குடித்துவிட்டு, ‘ உங்ககிட்ட கேட்காம நான் வேற யாருக்கிட்டேக்கா போய் கேட்பேன்.. அதான் இங்கே வந்தேன்… ‘ மறுபடியும் பொடி வைத்து இழுத்தாள்.
ராஜாத்தி டீயை குடித்து முடித்து டம்ளரை வைத்தபடி யோசித்தாள்,. பணம் இல்லை என்றுவிட்டாள். வேறு என்ன உதவியாக இருக்கமுடியும் என்றேன்னியவாறே, ‘ என்னனுதான் சொல்லேன்… ‘ என்றாள்.
‘ ஒரு அவசர செலவு… உங்ககிட்ட ஒரு நெக்லஸ் இருக்குமில்லையா… அதைக் கொஞ்சம் கொடுத்து உதவுனீங்கன்னா… பேங்க்ல அடமானம் வச்சு செலவை சரிக்கட்டிட்டு மாசக்கடைசியில சீட்டு பணம் வருதில்லே, அதையெடுத்து நகையை மீட்டுக் கொண்டு வந்து கொடுத்துடுவேன்… அதான்… உங்ககிட்ட… எப்படி… கேட்கறதுன்னு… ‘ மறுபடியும் இழுத்தாள்.
சிரித்தாள் ராஜாத்தி. ‘ துணிமணி ஏதும் எடுக்கப் போறியா… இல்லே நகை நட்டு ஏதும் எடுக்கப் போறியா… ‘ என்றவள், ‘ சரி… அதான் சீட்டுப் பணம் வந்ததும் மீட்டுக் குடுத்துடுறேன்றே… அப்புறம் எனக்கு என்ன கவலை… சரி சரி… டீயைக் குடி… கொடுக்கறேன்… ‘ என்று எழுந்தாள் ராஜாத்தி.
கொஞ்சம் நின்று, ‘ யசோ, நான் தர்றேன்… ஆனால் நீ சொன்னது சொன்னபடி சீட்டு காசு வந்ததும் மீட்டுக் குடுத்துடணும்… சரியா… ‘ என்றுவிட்டு நகர்ந்தாள்.
‘ அய்யய்யோ… நான் கண்டிப்பா மீட்டுக் குடுத்துடறேன்கா… ‘ கொஞ்சம் பதட்டத்துடன் பதில் சொன்னாள் யசோதா. அதற்குள் உள்ளே போய்விட்ட ராஜாத்தி, கையில் நெக்லஸுடன் திரும்பி வந்தாள்.
‘ யசோதா… இது நமக்குள்ளேயே இருக்கட்டும்… எங்க வீட்டுக்காரருக்கு தெரிய வேண்டாம். நீ மீட்டுக்கொண்டு வந்து கொடுத்ததும், கமுக்கமா நான் திருப்பி உள்ளே வச்சிடறேன்… நீ அவசரம்னு சொன்னதால கொடுக்கறேன்… ‘ என்று முடித்தாள் ராஜாத்தி.
‘ அக்கா… நான் சொன்னபடி கொடுத்துடறேன்க்கா… நான் வாறேங்க்கா… ‘ என்றுவிட்டு ஒரு கும்பிடு போட்டபடி கிளம்பிவிட்டாள் அவள்.
xxxxxxx
ராஜாத்தியின் கணவன் சுந்தரம் ஒரு ஹோட்டல் நடத்திக்கொண்டிருக்கிறார். அவளது மகன் சுப்ரமணியம் அவருடன் கூடமாட வேலை செய்கிறான். சுப்ரமணியை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஒருமணி போல, தான் மட்டும் சாப்பிட வந்திருந்தார் சுந்தரம். கணவனுக்கு சாப்பாடு போட்டுவிட்டு தானும் சாப்பிட உட்கார்ந்தாள் ராஜாத்தி. அப்போது பார்த்து, வாசல் கதவு தட்டும் சத்தம்.
‘ யாரம்மா வீட்டுல… ‘ அதட்டலான சத்தமும் கேட்டது. அதற்குள், யசோதா கதவைத் திறந்து எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்தாள்,. அவளது முகத்தில் கலவரம். பின்னாடியே ஒரு போலீஸ்காரரும் உள்ளே வந்தார்.
திடுக்கிட்டு எழுந்துகொண்டாள் ராஜாத்தி.
‘ கடவுளே… இவள் வழியில நெக்லஸை ஏதும் தொலைச்சுட்டு போலீஸ்ல போயி புகார் கொடுத்து, போலீஸ்காரர் விசாரிக்க வந்திருக்காரா… கடவுளே.. வீட்டுக்காரருக்குத் தெரியாம கொடுத்தோமே, இப்போ என்ன பண்ண… ‘ பதறியபடி ஓடிப்போய் கையை கழுவிக்கொண்டு வந்தாள்.
அதற்குள் சுந்தரமும் எழுந்து நின்று, ‘ என்னம்மா… என்ன ஆச்சு… ஏன் போலீஸ்காரரை கூட்டிட்டு வர்றே… ‘ என்றார். முந்திக்கொண்ட யசோதா தயங்கித்தயங்கி நடந்ததை சொல்லிமுடித்தாள். அதற்குள் போலீஸ்காரர் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கவரை வெளியே எடுத்தார். திகைத்தாள் ராஜாத்தி.
‘ இந்த நகை உங்களோடதா… ‘ என்று காட்டினார்.
ராஜாத்தி… ‘ அது… வந்து… ‘ என்று சொல்லத் தயங்க… சுந்தரம் சட்டென அதை வாங்கி அப்படி இப்படி பார்த்துவிட்டு… திகைப்புடன் மனைவியையும் பார்த்துவிட்டு, ‘ ஆமாங்க இது எங்களோடதுதான்… ஆனா இது எப்படி… ‘ என்று இழுத்தார்.
ராஜாத்தியும், ‘ ஆமாங்க ஸார்… இது எங்களோடதுதான்… ‘ தயக்கத்துடன் சொன்னாள்.
கொஞ்சம் அதட்டலாய், ‘ எல்லாம் சரிம்மா… கவரிங் நகையை கொடுத்து அடமானம் வைக்கச் சொல்லியிருக்கீங்களே, இது தப்பில்லையா…. பித்தலாட்டமில்லையா… பிராடு இல்லையா.. ‘ சத்தம் போட்டார் போலீஸ்காரர்.
பதறிப் போனாள் ராஜாத்தி, ‘ என்ன்ன்ன… கவரிங்கா… ‘
‘ ஆமாம்மா… இதை இவங்க பேங்க்ல அடமானம் வைக்கும்போது மேனேஜருக்கு விஷயம் தெரிஞ்சு ஸ்டேஷனுக்கு போன் பண்ணிட்டார்… ‘ என்றார் போலீஸ்காரர்.
சுதாரித்துக்கொண்ட சுந்தரம் சொன்னார்… ‘ ஸாரி சார்… தப்பு என் மிஸ்ஸஸ்கிட்ட இல்லை… என்கிட்டதான்… ‘ என்றுவிட்டு சொல்ல ஆரம்பித்தார்.
இதைப் போல நிஜமான நெக்லஸ் அவளிடம் இருந்தது. கொரோனா சமயம் வியாபாரம் தடுமாற, அந்த நெக்லஸை ராஜாத்திக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு போய் அடமானம் வைத்து வியாபாரத்தில் போட, வியாபாரம் மேலும் தடுமாற, நகைக் கடனை அடைக்கமுடியாமல், நகை ஏலத்தில் போய்விட, தேள் கொட்டிய திருடன் கணக்காய் அதேபோல ஒரு நெக்லஸை அதே ஆசாரியிடம் ஆர்டர் கொடுத்து மிகக் குறைவான தங்கத்தில் செய்து அப்படியே கொண்டு வந்து வைத்துவிட்டார்.
உடனே ஓடிப்போய் உள்ளே கடாமுடாவென்று எதை எதையோ உருட்டிவிட்டு கையில் ஒரு மஞ்சள் கலர் அட்டையுடன் திரும்பி ஓடிவந்தார் அவர்.
‘ இதான் சார் நான் அடமானம் வச்ச ரசீது… ‘
புரிந்து கொண்ட போலீஸ்காரர், ‘ சரி… ஸ்டேஷனுக்கு வந்து எழுதிக் கொடுத்துட்டு நகையை வாங்கிக்கங்க… ‘ என்றபடி சுந்தரத்திடமிருந்த நெக்லஸை பிடுங்கிக்கொண்டார்.
பரிதாபமாக மனைவியை பார்த்தார் சுந்தரம்.
அவளோ கோபம் கொண்டு விருட்டென நகர்ந்து போனாள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முற்றும்
This post was created with our nice and easy submission form. Create your post!
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
உங்கள் கருத்துக்கு நன்றி Madam….
எதிர்பாரா முடிவு
நன்றி நண்பரே… தொடர்ந்து வாசியுங்கள், உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்… மறுபடியும் நன்றி…. velum09@gmail.com