in

காலம் கடந்த காதல் (சிறுகதை) – ✍ எ. யாஸ்மின் பேகம்

காலம் கடந்த காதல் (சிறுகதை)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சூசன் கட்டிலில் புரண்டுக் கொண்டிருந்தாள். என்ன முடிவு எடுப்பது? இது சரியா? தவறா? ஊர் என்ன சொல்லும். இது சாத்தியமா பிள்ளைகள் இதுக்கு ஒத்துக் கொள்வார்களா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

மனோஜைப் பார்க்காத வரைக்கும் நன்றாகதான் போய்க் கொண்டிருந்தது சூசனின் வாழ்க்கை.  அவனை பார்த்ததிலிருந்து மீண்டும் ஏற்ப்பட்ட நட்பில் ஆழ்மனதில் புதைந்திருந்த வித்து மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது.  இது நல்லதா கெட்டதா? அன்பா காதலா என்று கூட பிரிக்க முடியவில்லை பிரியவும் முடியவில்லை.

சூசனின் காதல் கல்லூரி காலத்து காதல் அல்ல. நல்ல பக்குவப்பட்ட வயதில் ஏற்பட்ட காதலே அதனால் தானோஅது ஆழமாகி போனது.

சூசன் கல்லூரி முடித்த பின் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலைச் செய்துக் கொண்டிருந்தாள். அந்த காலத்தில் ரூபாய் ஆயிரம் என்பது பெரிய தொகையாக கருதப்பட்டது. மனோஜ் அதே கம்பனியில் மேலாளரின் ஒரே தம்பி. கல்லூரி முடிந்து ஒரு வருட காலமாக இங்கு பணியாற்றிக் கொண்டிருந்தான். 

மனோஜ் மேலாளர் மோகனின் தம்பி என்பதால் எல்லோரும் எட்ட நின்று தான் பேசுவார்கள். மோகன் ரொம்ப கண்டிப்பானவர். வேலையை நேரத்திறக்கு முடிக்க வேண்டும். இதை கண்காணிக்க தான் மனோஜை நியமித்திருந்தார்.

சூசன் மற்ற ஸ்டாஃப் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பார்கள். இதில் மனோஜ் வழிய வந்து சேரந்ததில் எல்லோருக்கும் வியப்பு.  மனோஜின் ஜாலியான பேச்சும், குறும்புதனம், ஒழுக்கம் பெண்களிடம் பழகும் விதம் எல்லோருக்கும் மனோஜின் மேல் நல்ல அபிப்பிராயம் ஏற்படவே நண்பர் குழு உருவானது.

அடிக்கடி டிரீட், சினிமா, பீச் என்று நண்பர்கள் கூட்டம் ஒன்றாகவே இருந்தன.  மனோஜின் குணம் சூசனுக்கு பிடித்துப் போகவே சூசனும் மனோஜும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

“டேய் மனோஜ் இன்னிக்காவது உன் காதலை சொன்னியா?”” என்றான் மனோஜின் கல்லூரி நண்பர் கார்த்திக்.

“இல்லைடா”” என்றான் மனோஜ்.

“சே…… நீ எல்லாம் ஏன்டா காதலிக்கறே….. எதாவது சொல்லிடப் போறேன் நீயும் தினமும் காதல சொல்லப் போறேனு சொல்லிட்டு தான் போறே சாயந்திரம் கேட்டா இல்லைனு சொல்றே. என்னடா அச்சு உனக்கு”?” என்று கடிந்து கொண்டான் கார்த்திக்.

“இல்லை கார்த்திக் சொல்லத்தான் நினைக்கிறேன் ஆனா அவளை பார்த்த பிறகு பேச்சே வரலே…. எங்க நட்பு இதனால பாதிச்சிடுமோனு பயமா இருக்கு”” என்றான் மனோஜ்.

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. இதயம் படத்தில் வரும் முரளி மாதிரி ஏண்டா படுத்துறே. நாளைக்கு நீ சொல்லைலனா நானே வந்து உன் காதலை சொல்லிடுவேன் பார்த்துக்கக்கோ” என்று அன்பாய் எச்சரித்தான் கார்த்திக்.

“அய்யய்யோ வேண்டாம்பா நானே சொல்லிடறேன்.” என்றான் மனோஜ் ஆவேசமாக.

“சூசன் உன் மனசுல ஆசையை வச்சுக்கிட்டு ஏன்டி புலம்பறே… நீ தான் மனோஜை விரும்பறேனு சொல்லிட வேண்டியது தானே”?” என்றாள் சூசனின் தோழி லதா. 

“இல்லைடி ஒருவேளை அவன் மனசுல நான் இல்லைனா நான் சொல்ல வந்த காதல் தப்பாயிடும் லதா”” என்றாள் தயங்கியபடி இலைமறைவாய் காயமறைவாய் பூத்த காதலை மனதிற்குள் மறைத்து வைத்தாள் சூசன்.

அலுவலகத்தில் நுழைந்த மனோஜ் சூசனை தேடினான்.  அன்று சூசன் விடுப்பு எடுத்திருந்தாள். அன்று நேரமே ஓடவில்லை மனோஜ்க்கு. எதையோ பறிகொடுத்தவன் போல் இருந்தான்.  மனோஜ்க்கு அலுவலகத்தில் போன் கால் வரவே மோகனும் மனோஜும் அவசரமாக கிளம்பி போனார்கள்.

சூசனுக்கு அன்று தான் கடைசி நாளாக இருந்தது அலுவலகத்தில். அதன் பிறகு முப்பது வருடங்கள் பிறகு இப்போது தான் பார்த்தாள். 

மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தாள். என்ன முடிவெடுப்பது இது அன்பா… இல்லை என் மீது உள்ள பரிதாபமா என்று கூட சொல்ல முடியவில்லை. இது எப்படி சாத்தியம் யோசித்து யோசித்து பைத்தியம் பிடித்தது போல இருந்தது.

நாற்பது வயதில் கணவனை இழந்த போதிலும் மறுகல்யாணம் என்று கூட தோன்றவில்லை. பிள்ளை வளர்ப்பில் கவனம் செலுத்தினாள். பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களாகி வெளிநாட்டில் நல்லவேலையில் இருக்கிறான். மகளுக்கோ  அமெரிக்கா மாப்பிள்ளை பேரன் பேத்தி என்று குடும்பமும் பெரிதாகி  போனது. 

வருடத்தில் ஒரு முறை அம்மாவை பார்க்க இருவரும் ஒரு மாத காலம் இருந்து தங்கி விட்டு போவார்கள். இந்த மகிழ்ச்சியே சூசனுக்கு போதுமானதாக இருந்தது, மனோஜை பார்க்காதவரை.

அன்று கொரோனா தொற்று ஏறப்படாமல் இருந்திருந்தால்… இவன் அன்புக்கு ஏங்கி போகாமல் அவள் வாழ்க்கை பயணம் தடம் புரலாமல் ஓடிக் கொண்டிருக்கும். 

கொரனாவால் ஏற்ப்பட்ட ஊரடங்கு  சூசனின் பிள்ளைகள் இந்தியாவுக்கு வரமுடியாமல் போனது. அறுபத்தி மூன்று வயதான சூசன் தனிமையாக்கப்பட்டாள். நோயினால் ஏற்பட்ட தனிமை வெறுமையை தந்தது. 

மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  வீடியோ காலில் சூசனின் மகனும் மகளும் டாக்டரிடம் பேசியதால் துரித சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கபட்டது. அவரின் மனது தனிமையில் பெரிதும் பாதிக்கப்பட்டது. 

அப்போதுதான் பக்கத்து படுக்கையிலிருந்த மனோஜின் குரல் அந்த பேச்சு அவளை ஆழ்ந்த மயக்கத்தில் இருந்து சுயநினைவுக்கு திருப்பியது. அந்த வார்ட் அவனால் கலகலப்பானது மனோஜின் பேச்சும் கூத்தும் மற்ற நோயாளிகளுக்கு குதூகலப்படுத்தியது.

தனிமையில் இருந்த மனோஜ்க்கு இங்கு கிடைத்த உறவுகள் எல்லாம் பெரிதாக மதிக்கப்பட்டது. அவனின் குரல் அவளின் ஆழ்மனதில் பொதிந்திருந்த ஊற்று பொத்துக் கொண்டு வந்ததை போல் உணர்ந்தாள். அவனும் சூசனை பார்த்து வெகுவாக மகிழ்ந்தே போனான்.  இத்தனை வருடங்கள் பின் கிடைத்த சந்திப்பாயிற்றே. 

சூசனிடம் பாசிட்டிவான பேச்சும், ஊக்கமும் அன்பும் என்று மனோஜ் சூசனுக்கு ஒரு பொழுது போக்காவே ஆகிவிட்டிருந்தான். பழைய குறும்புத்தனம் நகைச்சுவை பேச்சு என்று அவள் மனதில் புதைந்திருந்த அன்பு உயிர்ப்பித்தது.

விட்டிற்க்கு சென்ற பிறகும் அடிக்கடி சூசனுக்கு துணையாக இருந்து பார்த்துக் கொள்வது, சூசனின் பிள்ளைகளுக்கு நல்ல அறிமுகத்தையும் அம்மாவின் நண்பர் என்ற ஆதரவும் பிள்ளைகளுக்கு ஆறுதல் அளித்தது.

அன்று சூசன் எதிர்ப்பார்க்கவில்லை. இப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று. இருவரும் தள்ளாடும் வயதில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தனர். மனோஜ் தன் வாக்கிங் ஸ்டிக்கை அருகில் வைத்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தபடி தொடர்ந்தான்.

“சூசன்…. அன்று நான் உன்னை தேடி அலுவலகத்துக்கு வந்தேன். நீ வரலே….. அன்று தான் என் காதலை சொல்ல வந்தேன் ஆனா சொல்லாமலே முடிந்து போனது.”

“ஆமா மனோஜ் அன்னிக்கு தான் என்னை பெண் பார்க்க வந்திருந்தார்கள் எப்படியாவது உன்னிடம் சொல்ல வந்தேன்.  நீயோ வேலையை விட்டு போயிட்டேனு சொன்னாங்க”

“ஆமா அன்று என் தந்தை உடல்நல குறைவால் இறந்து போகவே போன் கால் வரவே நான் ஊருக்கு கிளம்பிட்டேன். அதன் பிறகு என் வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போச்சு. என் தந்தை இறந்த பிறகு அம்மாவையும் வீட்டையும் பார்த்துக்கிற பொறுப்பு வந்திருச்சு. என் அண்ணன் மோகனும் சென்னையில் திருமணம் செய்து மனைவியுடன் செட்டிலாயிட்டான்.

அம்மாவுக்கோ ஊரை விட்டு வர மனசில்லை. நானும் ஊரோட இருந்துட்டேன்.  அப்படியே காலம் போச்சு. அம்மாவின் மறைவுக்கு பிறகு தான் சென்னைக்கு வந்தேன். இங்கே தனியா ஒரு பிளாட்ல இருக்கேன். ரெண்டல் இன்கம் வருது அதுல என் வாழ்க்கை எப்படியோ போயிட்டு இருக்கு”” என்று அவன் வாழ்க்கையின் தெளிவான நீரோட்டத்தை போல சொல்லி முடித்தான்.

இதையெல்லம் கேட்டுக் கொண்டிருந்த சூசனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது மனோஜ் தொடர்ந்தான்.

“சூசன்….நமக்கு தனிமை வரமா என்ன… எனக்கும் வாழ்க்கை வெறுத்து போச்சு.. பேச்சு துணைக்குக் கூட அளில்லாமல்…. வெறுமையா போச்சு. நாம ஏன் ஒண்ணா  வாழக்கூடாது. ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா ஆதரவா இருக்கும் காலம் வரைக்கும் நிம்மதியா வாழ ஆசை.  நாம என்ன நூறு வருஷமா வாழப் போறோம். இனிமேலும் நீ தனியா இருக்கக் கூடாது” என்றான் மனோஜ்.

இருவரின் கண்களிலும் முகச்சுறுக்கங்களில் நடுவே வழிந்து ஓடியது கண்ணீர். காலம் கடந்தும் சொல்லப்பட்ட காதல் விலைமதிப்பற்றது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. “”காலம் கடந்த காதல்”” – நல்லதொரு காதல் கதை. ஒரு படம் பார்ப்பது போல் இருந்தது.

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 15) – ✍ விபா விஷா, அமெரிக்கா

வல்லபி ❤ (பகுதி 13) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை