எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மாலினி ஆபீஸிற்கு கிளம்பும்போதுதான் அவளது கழுத்தை கவனித்தாள் மங்களம். பார்த்தவுடனே பக்கென்றது இவளுக்கு. அவளது கழுத்தில் எப்போதும் போட்டிருக்கும் இரட்டைவடச் சங்கிலியை காணவில்லை. அதற்குப் பதிலாக ஒரு மெலிதான செயின்தான் கிடந்தது.
அந்த இரட்டைவடச் செயினில், ஆறு காசுகளும் தாலியும் சேர்த்து பத்துப் பவுனில் கோர்த்துப் போட்டிருந்தார்கள். மங்களத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. கூப்பிட்டுக் கேட்கலாமா என்று கூட நினைத்தாள். பிறகு மனதை மாற்றிக்கொண்டாள்.
ஏற்கனவே ஆபீஸிற்கு லேட்டாகிவிட்டதென்று அரக்கப்பறக்க கிளம்பிக் கொண்டிருப்பவளை நிறுத்தி, ‘சங்கிலி எங்கே… ‘ என்று கேட்டால் அவ்வளவு நன்றாக இருக்காது, சாயங்காலம் வீட்டுக்கு வரத்தானே போகிறாள், அப்போது கேட்டுக்கொள்ளலாம் என்றெண்ணி விட்டுவிட்டாள் மங்களம்..
போனவருடம்தான் ராஜனுக்கு கல்யாணமாகி மாலினியை மருமகளாகக் கொண்டு வந்திருந்தார்கள். ராஜன்தான் படித்த பெண்ணாக இருந்தால் மட்டும் போதாது, ஏதாவது ஒரு வேலைக்கும் போய்க்கொண்டிருப்பவளாக இருக்க வேண்டுமென்று சொல்லி ஏழெட்டு பெண்களைப் பார்த்து, கடைசியில் இவளை தேர்வு செய்தான்.
இவள் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறாள், மாதம் நாற்பதினாயிரம் சம்பளமும் வாங்குகிறாள். இரண்டு சம்பளம் வந்தால்தானே இப்போதெல்லாம் குடும்பம் நடத்தவே முடிகிறது.
அவளது வீட்டில் நாற்பது பவுன் போட்டு அனுப்பினார்கள். மங்களம்தான் நமது பங்களிப்பும் இருந்தால்தான் நம்மை சம்பந்தி வீட்டில் மதிப்பார்கள் என்று எண்ணி, ஒரு இரட்டைவடச் சங்கிலியில் தாலியுடன் சேர்த்து காசுகளும் சேர்த்து செய்து போட்டிருந்தாள்.
இப்போது அந்தச் சங்கிலியைக் காணவில்லை. இன்றுதான் கழற்றினாளா அல்லது எப்போது கழற்றினாள், எத்தனை நாட்களாக அது அவளது கழுத்தில் இல்லை… மங்களத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. சிந்தனைக் குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.
xxxxxxx
சாயங்காலம் ஆபீஸ் முடிந்து வீடு வந்து சேர்ந்தான் ராஜன். அவனிடம் கேட்க வேண்டுமென்று காத்திருந்த மங்களம் மெல்ல அவனிடம் போனாள்.
அதற்குள் அவனாகவே, ‘ அம்மா… முதல்ல ஒரு டீ போட்டுக்கொண்டு வாமா… ஒரே தலைவலி… இந்த மேனேஜர் மாத்திக்கிட்டு போயிட்டார்னா பரவாயில்லை. ஒரே தலைவலி இந்தாளோட… ‘ என்றான் முகத்தைக் கடுப்பாய் வைத்துக்கொண்டு.
இந்த நிலையில் அவனிடம் சங்கிலி பற்றி எப்படி கேட்பது என்று யோசித்துக்கொண்டு விட்டு விட்டாள். அத்துடன், இவனிடம் கேட்டு… பிறகு இவன் அவளிடம் கேட்டு… அவள் இவனுக்கு பதில் சொல்லி… அதை இவன் நமக்கு சொல்லி… எதற்கு அந்த சுழல்வட்டம்… நேரடியாக மாலினியிடமே கேட்டுக்கொள்ளலாமே என்று மனதை மாற்றிக் கொண்டு விட்டாள்.
ஏழு மணி போல வீடு வந்து சேர்ந்தாள் மாலினி. வந்தவள், நேரே போய் முகம் கைகால் அலம்பிக்கொண்டு வந்து மங்களம் மீதம் வைத்திருந்த டீயை சூடேற்றிவிட்டு திரும்பி வந்து, ‘ அத்தை… டீ நிறைய இருக்கும் போல இருக்கு, உங்களுக்கும் தரட்டுமா… ‘ என்று கேட்டு, அவளுக்கும் கொண்டுவந்து கொடுத்துவிட்டு தானும் ஒரு கப்புடன் தங்களது அறைக்குள் மடமடவென போய்விட்டாள்.
இப்போதைக்கு இவளிடம் கேட்கவேண்டாம் என்று விட்டுவிட்டாள். ராஜனைப்போலவே இவளும் ஆபீஸ் விட்டு இப்போதுதான் திரும்பியிருக்கிறாள், அவளுக்கும் ஏதாவது மண்டைக் காய்ச்சல் இருந்து, நாம் சங்கிலி பற்றி கேட்கப்போக அது அவளுக்கு எரிச்சலைக் கூட்டலாம். நாம் இப்போது கிண்டவேண்டாம் என்று விட்டுவிட்டாள்.
கொஞ்ச நேரம் கழித்து அவளே மாமியாரிடம் வந்தாள், ‘ அத்தை… அம்மா ஏதும் ஃபோன் பண்ணினாங்களா… ‘ என்றபடி.
‘ இல்லையேம்மா… ஏன் கேட்கறே… ‘ என்றாள் மங்களம்.
‘அப்போ… போன் வரும்… ‘ என்றுமட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள். அடுத்த சிலநிமிடங்களில் ஃபோன் வந்தது.
‘சம்பந்தி… ஒரு சந்தோசமான விஷயம்… ராஜேஷ் வீடு கட்டப் போறான்னு சொல்லிட்டிருந்தேனில்லையா… இன்னிக்குத்தான் ரிஜிஸ்ட்ரேஷன் ஆச்சு. நாளைக்கு பூமி பூஜை போடப் போறோம்… நீங்க எல்லாரும் வந்து பூஜைல கலந்த்துக்கணும்… ஏழு மணிக்கு முன்னாலேயே வந்திடுங்க… ‘ என்றாள் சம்பந்தி சந்தோஷத்துடன்.
ராஜேஷ், மாலினியின் தம்பி. அவனும் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்கிறான். ஒரு புது ரியல் எஸ்டேட்டில் இடம் வாங்கி வீடு கட்டப் போகிறானென்று ஏற்கனவே கேள்விபட்டிருந்தாள் மங்களம்.
சில நிமிடங்களில் அங்கே வந்த மகன் ராஜன், ‘ அம்மா… மாமா போன் பண்ணினார்தானே…‘ என்றான். ‘ ஆமாம்டா… ஆனா மாமா இல்லை, மாமியார் சம்பந்தி… ‘ என்றாள் இவள்.
‘நாம விடிகாலையிலேயே கிளம்பிடலாம்மா. நேரா அத்தை வீட்டுக்கு போயிட்டு அங்கேயிருந்து எல்லாரும் ஃபிளாட்டுக்கு போகலாம். ஏழுலேர்ந்து எட்டரைக்குள்ளே பூஜையாம். முடிச்சிட்டு திரும்பி வந்து அத்தை வீட்டிலேயே டிஃபன் முடிச்சிட்டு நாங்க ரெண்டு பேரும் அப்படியே ஆபீஸுக்கு கிளம்பிடறோம். நீ ஒரு ஆட்டோ பிடிச்சு இங்கே வந்து சேர்ந்திடுங்க… சரியா…‘ என்றுவிட்டு அவளது பதிலுக்குக் காத்திராமல் போய்விட்டான்.
அவனுக்கும் நேரடியாக போன் வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். மருமகள் அல்லவா… முதல் மரியாதை இருக்கத்தானே செய்யும்.
இரண்டு மூன்று முறை மாலினியின் கைகளைக் கூட பார்த்தாள். வளையல்கள் போட்டிருந்தாள். காலைப் பார்த்தாள். தங்கக்கொலுசும் போட்டிருந்தாள். ஆனால் இரட்டைவடச் சங்கிலியை மட்டும்தான் காணவில்லை. அதைப் பற்றி கேட்கலாம் என்றால் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லாமல் உள்ளுக்குள் புலம்பித் தீத்தாள் மங்களம்.
முன்பு ஒருதடவை ராஜன் சொல்லிக்கொண்டிருந்தான், பக்கத்து பேங்கில் ஒரு லாக்கர் கேட்டு வாங்கவேண்டும், நகைகளை அங்கே பத்திரப்படுத்தி வைக்கவேண்டுமென்று. அது இப்போது ஞாபகத்திற்கு வர, ஒருவேளை அவன் சொன்னது போல எல்லா நகைகளையும் லாக்கரில்தான் கொண்டு போய் வைத்துவிட்டானோ… ‘ என்று நினைத்துக் கொண்டவள், ‘ சரி… அவர்களாகவே எப்போதாவது சொல்லுவார்கள்… ‘ என்று அப்படியே விட்டுவிட்டாள். ஆனாலும் லாக்கரில் கொண்டுபோய் வைக்கும்போது நம்மிடமும் ஒரு வார்த்தைக்காகவாவது சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது மங்களத்திற்கு.
xxxxxxxxx
காலையில் ஆறு மணிக்கே எல்லோரும் காரில் கிளம்பிவிட்டார்கள். சம்பந்தி வீடு அங்கிருந்து ஐம்பது கிலோமீட்டர்தான். காஃபி பரிமாறினார்கள். அப்படியே ஒரு பெரிய வண்டி வைத்து பிளாட்டிற்கு போய்ச் சேர்ந்தார்கள்.
பூஜை நடந்தது. எல்லோருக்கும் இனிப்பு எடுத்துக் கொடுத்தாள் சம்பந்தி. மாலினியின் தம்பி ஒரு வரைபடத்தைக் காட்டி வாஸ்துப்படி எங்கே வாசல்படி, எங்கே சமயலறை, எங்கே பூஜையறை என்றெல்லாம் எல்லோரிடமும் காட்டிக்கொண்டிருந்தான்.
சம்பந்தியின் வீட்டிற்கு திரும்பி வந்து சாப்பிட்டு முடித்து ராஜனும் மாலினியும் ஆபீஸிற்கு கிளம்பி விட்டார்கள். மங்களமும் தன் கணவனுடம் கிளம்பத் தயாரானபோது சம்பந்தி ஓடிவந்து ஒரு பையைக் கொடுத்தாள்.
அது என்ன பை என்று மங்களம் யோசிக்கும் முன்பே, ‘ சம்பந்தி… இதுல கொஞ்சம் ஸ்வீட் இருக்கு… வீட்டுக்கு எடுத்துப் போங்க… மாப்பிள்ளைக்கு ஜாங்கிரினா ரொம்பப் பிடிக்கும் இல்லையா… ‘ என்றாள். அவளே தொடர்ந்து, ‘ மாப்பிள்ளை மட்டும் உதவலைனா ரிஜிஸ்ட்ரேஷனே முடிஞ்சிருக்காது… ‘ என்றாள்.
புரியவில்லை மங்களத்திற்கு. சம்பந்தியே தொடர்ந்தாள்… ‘ பாங்க்ல வீட்டு லோன் கேட்டிருந்தானில்லையா ராஜேஷ். தொண்ணூறு பரஸ்ன்ட்தானே லோனு கிடைக்கும். பத்து பரஸ்ன்ட் நாம போடணுமே. அதயும் முன்னாடியே கட்டணுமே. முன்பணம் கட்டினாத்தான் லோன் ரிலீஸ் பண்ணுவோம்னுட்டாங்க பேங்க்ல. மாப்பிளைதான் உடனே மாலினியோட நகைகளை கொண்டுவந்து கொடுத்து அடமானம் வச்சி பணத்தைக் கட்ட வச்சார்… லோனும் சாங்க்ஷன் ஆச்சு. நேத்திக்கே மாப்பிள்ளைக்கிட்ட நகைகளை திருப்பச் சொல்லி பணத்தை திருப்பிக் கொடுத்துட்டான் ராஜேஷ்… ‘
இப்போதுதான் மங்களத்திற்கும் விடை கிடைத்து மனசு லேசாகியது.
சாயங்காலம் ராஜனும் மாலினியும் ஒரே நேரத்தில் வந்து வீட்டில் இறங்கும்போது மங்களம் உற்றுக் கவனித்தாள், மாலினியின் கழுத்தில் பழைய சங்கிலியுடன் அந்த இரட்டைவட சங்கிலியும் மின்னியது.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
மங்களத்துக்கு மன நிம்மதி வந்தது இறுதியில்