in ,

ரோஜாவும் அரளியும்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“நீ பண்றது எதுவும் எனக்கு பிடிக்கலைம்மா!”

சூடாக சப்பாத்தியைக் கொண்டு வந்து தட்டில் போட்ட சுபத்ரா, “என்னம்மா சப்பாத்தி நல்லா இல்லையா?” என்று வினவினாள்.

“அது இல்லை! நீ என்னவோ உங்க லேடீஸ் க்ளப் பிரசிடென்ட் போஸ்ட்டுக்கு அந்த மேகலாவோட போட்டி போடுறயாமே! எதுக்கு உனக்கு இந்த வம்பு!”

“உனக்கு யார் சொன்னார்கள்!” ஆச்சரியத்துடன் வினவினாள் அம்மா.

“அந்த சூர்யா, அவங்க பொண்ணு, எங்க ஸ்கூல்ல தானே படிக்குது! அதுதான், உங்க அம்மாகிட்ட சொல்லி வை! தேவையில்லாத அவமானப்பட போறாங்க அப்படின்னு சொல்லுச்சு. உனக்கு அந்த‌ அம்மாவைப் பத்தி தெரியும் தானே! பணக்காரத்திமிர், அகம்பாவம் ஒண்ணு கூட குறைச்சல் இல்லை”. 

திவ்யா பொருமினாள். 

சுபத்ரா நிதானமாக பதில் சொன்னாள்.

“நான் எதுவுமே சொல்லலை. மீரா மேடம் தான் என் பேரைக் கொடுத்திருக்காங்க”

“நீ ஆட்சேபிக்கலையா!”

“சொன்னேன்! அவங்க நீ பேசாம இரு ! இது வேற ஒரு காரணத்துக்காக அப்படிங்கறாங்க.”

“எந்த காரணமானாலும் உன்னை ஏம்மா இதிலே இழுக்கிறாங்க!”

“அவ வந்து ரோஜாப்பூ எங்கே! அரளிப்பூ எங்கே!” என்று கிண்டல் பண்ணிவிட்டு போகிறாள்.”

“அப்பா வந்தா உன்னை அந்த க்ளப்புக்கே போகாதேன்னு சொல்லப் போறார். முதலில் போய் வேண்டாம்னு சொல்லு. நமக்கு இருக்கிற வேலையை மட்டும் பார்ப்போம்.”

‘நீ சொல்றதும் சரிதான்! தேவையில்லாத வம்புதான்” ஒத்துக்கொண்டவள், “சரி! போய் சொல்லிவிட்டு வரேன்” என்று கிளம்பிப் போனாள் சுபத்ரா.

அதற்குள் அங்கே பிரச்சினை வேறு வடிவம் எடுத்து விட்டது. “நீ வாபஸ் வாங்கினா , நான் தோத்துப் போயிடுவேன்னு பயப்படறதா சொல்றாங்க. தேவையில்லை. நான்தான் ஜெயிப்பேன். கண்டிப்பா நீ மண்ணைத்தான் கவ்வுவே! யாரோட போட்டி போட்டோம்னு அப்ப நினைச்சு வருத்தப்படு”

ஏளனமும் கேலியுமாக அவள் பேச சுபத்ரா எதுவும் பேசமுடியாமல் திரும்பி வந்தாள்.

எதற்காக இந்த போஸ்ட்டுக்கு இவ்வளவு சண்டை! சாதாரண ஒரு லேடிஸ் கிளப். நகரின் மையமான இடத்தில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நிறைய நல்ல காரியங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். அன்னதானம், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவி, எளிய நிலையிலுள்ளவர்களுக்கு இயன்ற உதவிகள் என்று பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்..

இந்த பதவியால்  என்ன ஆதாயம் என்று கூட சுபத்ராவுக்கு புரியவில்லை. மேகலா எதற்காக இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ணுகிறார்கள்!   யோசித்துக் கொண்டே அவள் நடந்து வந்தாள்.

வந்ததும் திவ்யா ஆவலாக கேட்டாள். “என்னம்மா ஆச்சு!”

அவள் நடந்ததை விவரித்தாள். “எனக்கு ஒண்ணுமே புரியலை, நடக்கிறது எதுவும் நல்லதா படலை. நீ அன்னைக்கு சொல்லிக் கொடுத்தியே,  பெரியவிடமே  சேரும்! பித்தர் முடி ஏறும்! அப்படின்னு எலுமிச்சம்பழத்துக்கும் பாம்புக்கும் சிலேடையா  சொல்வியே அப்படிக் கூட உங்க இரண்டு பேரையும் ஒப்பிட முடியாதும்மா!”

“சரிதான்! நானே ரொம்ப குழம்பிப் போயிருக்கேன்! நீ வேற என்னைப்படுத்தாதே”.

அப்படி சும்மா இருக்க முடியாமல் எங்கே பார்த்தாலும் அந்த மேகலா போர் முரசு கொட்டினாள். நக்கலும் நையாண்டியுமாக பேசினாள்.

மொத்தத்தில் இந்த தேர்தல் சீக்கிரம் முடிந்து அவள் ஜெயிக்க வேண்டும் என்று சுபத்ராவே வேண்டிக் கொள்ளும் அளவுக்கு பிரச்சினை விசுவரூபம் எடுத்தது.

மீரா சுபத்ராவிடம் வருத்தப்பட்டு சொன்னாள்.

“இந்த அம்மா இவ்வளவு தூரம் போவாங்கன்னு  எதிர்பார்க்கலை. போட்டியா ஒருத்தரை வைத்தால் நல்லா ஈடுபாட்டோட அவர்களுக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி இயன்ற உதவி வாங்கித் தருவார்கள் என்று நினைத்துத்தான் இப்படி செய்தோம். ஆக்கப் பார்வையை விட்டு அகம்பாவப் போர்வையை போர்த்திக் கொண்டு விட்டாளே!

நிறைய பெண்கள் அவங்க கஷ்டத்துக்கு உதவி கேட்டு வர்றாங்க.  அதிலே ஒரு சின்னப் பெண் குழந்தைக்கு ஹார்ட் ப்ராப்ளம்னு சொல்லி பணம் கேட்டாங்க. முடியாது என்று தட்டிக் கழிக்க முடியலை. கொடுக்க நம்மிடம் பணமும் இல்லை. மேகலா மாதிரி வசதியானவர்கள்  மனம் வைத்தால் முடியும். அவள் நிறைய பேரிடம் தனக்கு விளம்பரம் செய்யப் போவாள் என்று எதிர்பார்த்தோம்.

அதில் நம்முடைய கிளப் பற்றி தெரிந்து நிறைய பேர் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவள் தனக்குத் தானே விளம்பரம் செய்து கொள்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. உன்னை ஒரு உந்துசக்தியாகத்தான் பயன்படுத்த நினைத்தோம். அது இவ்வளவு மோசமாக போகும் என்று நினைக்கவில்லை.”

சுபத்ரா நிமிர்ந்தாள்.

“பரவாயில்லை மேடம்! இதை நான் ஒரு பெரிய விஷயமா நினைக்கப் போறதில்லை.”

சற்று தயங்கியவள்,  “எனக்கு ஒரு டிரஸ்ட் தெரியும். அதில் கேட்டுப் பார்க்கலாமா? தவிர எனக்கு தெரிந்தவர்களிடம் நானும் சொல்கிறேன்.”

“யாருமே லட்சக் கணக்கில் உதவ முடியாது!”

“அது சரிதான். ஆனால், சிறுதுளி பெரு வெள்ளம் என்று நீங்கள் கேட்டதில்லையா? ஒரு குழந்தைக்காக என்று சொல்லும் போது நிறைய பேர் தங்களால் இயன்ற வரை உதவ முன் வருவார்கள். ‘இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்! மடி நிறைய பொருள் இருக்கும்!மனம் நிறைய இருள் இருக்கும்! ‘ இந்த  பாட்டோட வரிகள் இன்றைக்கும் சத்தியம்.”

மீரா ஆச்சரியப்பட்டாள். இந்தப் பெண் தனக்காக சிந்திப்பதை விட மற்றவர்களுக்காக நிறைய   யோசிக்கிறாளே! ஆனால் மேகலா, அவளிடம் இப்போது எதுவும் சொல்லவும் முடியாது. வேறு ஏதாவது சாயம் பூசி விடுவாள். 

எல்லோரும் காத்திருந்த அந்த நாளும் வந்தது. தான்தான் வெற்றி பெறப் போகிறோம் என்று ஆர்ப்பாட்டமாக வந்த மேகலா  தோற்றுப் போயிருந்தாள். வெகு சிலரே அவளுக்காக வாக்களித்திருந்தனர். 

அவமானமும் அழுகையுமாக அமர்ந்திருந்தவளை நெருங்கினாள் மீரா.

“என்ன ஆச்சு! நீங்க எதிர்பார்க்கலை இல்லையா? “

அவள் மௌனம் சாதித்தாள்.

“இது ஒரு சாதாரண தேர்தல் தான். கல்லூரிகளில்  நாட்டில் நடக்கும் தேர்தல் மாதிரி பிரமாண்டமானது இல்லை. நிறைய பெண்கள் சேர்ந்தாலே அங்கு ஒற்றுமை இருப்பதில்லை என்று சொல்கிறார்கள். நாங்கள் அதை பொய்யாக்கலாம் என்று நினைத்தோம்.”

அவள் சீற்றத்துடன் நிமிர்ந்தாள்.

“நான் ஒண்ணும் யாரோடயும் சண்டைக்கு போகலையே! அதுக்காக என்னோட தகுதி அந்தஸ்து விட்டு கீழே இறங்கணும்னு எதிர்பார்க்காதீங்க. இது இல்லாட்டி இன்னொன்னு! வேற இடத்துக்கா பஞ்சம்!”

அவள் சிரித்தாள்.

“உண்மைதான்!  நீங்களே சொல்லிகிட்டு திரிஞ்சீங்களே நான் ரோஜாப்பூ, அவள் அரளி அப்படின்னு. ஆமாம்! நீங்க ரோஜா தான். அதனால தான் தனியா நிக்கிறீங்க! அரளிப்பூ ரொம்ப சாதாரணம் தான். ஆனா அது எந்தப் பூவோடும் சேர்ந்து மாலையாகும். தனியாகவும் சரமாகும். ஏழை எளியவர்களுக்கு எளிதில் கிடைப்பது அரளி தானே!

இந்த லேடீஸ் கிளப்புக்கு தேவையும் அதுதான். உங்களைப் போன்றவர்களிடம் எளிதில் நெருங்க முடியாது. அப்படியே நெருங்கி சொன்னாலும் உங்களால் அவர்களுக்குத் தேவையானதை செய்ய முடியாது. ஆனால் சுபத்ரா போன்றவர்கள் அப்படியில்லை. எந்த இடத்திலும் அவர்களை அணுக முடியும். மற்றவர்கள் கஷ்டத்தை தன்னுடையதாக நினைத்து வேதனைப்படுவதற்கு ஒரு மனசு வேண்டும். நீங்க, எங்களோட சேர்ந்து பணி செய்தாலும் சரி, இல்லை விலகிப் போனாலும் சரி! இந்த உண்மையை மட்டும் புரிஞ்சுக்கோங்க!”

அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு, வெற்றி பெற்ற சுபத்ராவை பாராட்ட நின்றிருந்தவர்களோடு சேர்ந்து கொள்ள  அவளை விட்டு விலகி நடந்தாள் மீரா.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 29) – ஜெயலக்ஷ்மி

    2023-24 போட்டிக்காக எங்கள் எழுத்தாளர்கள் எழுதிய 1294 படைப்புகள் ஒரே இணைப்பில் (Contest Posts Compiled in One Link)