in

பெண்ணியம் போற்றுவோம் (சிறுகதை) – ✍ ராஜதிலகம் பாலாஜி

பெண்ணியம் போற்றுவோம் (சிறுகதை)

திகாலைப் பொழுது வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கமலா

மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனம் ஒன்று அவள் வீட்டின் வாசல் முன் வந்து நின்றது

“ஏம்மா…இந்த ஊர் அரசு பள்ளிக்கூடத்துக்கு எப்படி போகணும்” எனக் கேட்க, அவள் பதிலேதும் கூறாமல் வீட்டினுள் சென்றாள் 

“சரியான திமிருப் பிடிச்ச  பெண்ணா இருக்கும் போல. பள்ளிக்கூடத்துக்கு வழி கேட்டா சொத்துல பங்கு கேட்ட மாதிரி பதில் சொல்லாம போகுதே. கிராமத்துல எல்லாப் பெண்களும் இப்படித் தான் இருப்பாங்க போல” என்றவாறே அங்கிருந்து சென்றான்

செல்லும் வழியில் இருந்த டீ கடைக்காரரிடம் வழி விசாரித்து, அங்கு ஒரு டீயையும் குடித்து விட்டு ஒரு வழியாக பள்ளிக்கு சென்று சேர்ந்தான் அவன் 

நுழைந்தவுடன் அங்கு ஒரு பெண் ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாரம்பரிய கலையும், தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்ப வித்தையை கற்பித்து கொண்டிருப்பதைக் கண்டு வாயடைத்துப் போனான்

பள்ளியின் சுற்றுச்சுவரில் அறிவியல் பூர்வமான ஓவியங்களும், பல அறிஞர்களின் ஊக்கம் தரும் பொன்மொழிகளும் எழுதியிருந்தது மனதை நிறைத்தது 

அதோடு மட்டுமல்லாது, பள்ளி வளாகத்தில் பச்சை பசேல் என கண்ணிற்கு குளுமையும், மனதிற்கு புத்துணர்ச்சியும் தரும் மரம் செடிகளும் இருந்தது

‘பரவாயில்லையே…  நினைத்ததை விட கிராமத்து பள்ளிக்கூடம் ரொம்ப அருமையாகவும், அழகாகவும் இருக்கிறது’  என மனதில் நினைத்த படி தலைமை ஆசிரியர் அறையை அடைந்தான் ருத்ரன்

அவனைக் கண்டதும், “வணக்கம் ருத்ரன் சார்… உள்ள வாங்க” என வரவேற்றார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை விமலா

‘இவங்களா தலைமை ஆசிரியை’ என வியப்புடன் பார்த்து அசையாமல் நின்று விட்டான்

“ருத்ரன் சார்…” என்ற குரல் கேட்டதும் சுயநினைவுக்கு வந்தான்

“இந்த வருகைப் பதிவு நோட்டில் கையெழுத்து போட்டுட்டு உங்க வகுப்புக்கு போலாம். உங்க வகுப்பு எதுனு ஆபிஸ்ல  அசோக் சார்கிட்ட கேட்டுக்கோங்க. மத்த விவரங்கள் கூட அவரே உங்களுக்கு சொல்லுவார்” என விமலா கூற 

“நன்றி” என்றதுடன் விடைபெற்றான் ருத்ரன்

பள்ளி அலுவலகத்துள் நுழைந்ததும், “வாங்க ருத்ரன் சார்” என்றார் அசோக்

“என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும் சார்?” என ருத்ரன் கேட்க 

“நேத்தே விமலா மேடம், நம்ம ஸ்கூலுக்கு நாளைக்கு புதுசா மேத்ஸ் டீச்சர் வரார், அவருக்கு தேவையான உதவியை செய்து குடுங்கனு சொல்லி்ட்டாங்க சார்” என எழுந்தவர், வகுப்பு பற்றிய விவரத்தோடு, பள்ளி பற்றியும் சொல்லிக் கொண்டே நடந்தார் அசோக்

“நாளைக்கு நம்ம ஸ்கூல் ஆண்டு விழா சார். சிறப்பு விருந்தினரா மாவட்ட ஆட்சியர் வரார்” என அசோக் கூற 

“சரிங்க சார்” என்ற ருத்ரன், “அசோக் சார் எனக்கு ஒரு சந்தேகம் தவறாக நினைக்க மாட்டீங்கனா உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா?” எனவும் 

“தாராளமா கேளுங்க சார்” என்றார் அசோக் 

“தலைமை ஆசிரியை பாக்க ரெம்ப சின்ன வயசா இருக்காங்க, சிலம்பம் வகுப்பு வேற சொல்லி தராங்க, எப்படி சார்?” என ருத்ரன் கேள்வியாய் பார்க்க 

“நீங்க ஆச்சர்யப்படறதுல ஒண்ணும் தப்பில்ல சார்”

“விமலா மேடம் இந்த ஸ்கூல்ல படிச்சு மாவட்டத்துல முதல் மதிப்பெண் வாங்கினவங்க. அதோட, காலேஜ்லயும் தங்கப் பதக்கம் வாங்கி, இளம் வயதிலேயே தலைமை ஆசிரியர் பொறுப்பேற்று ‘இளம் பெண் சாதனையாளர் விருது’ வாங்கிருக்காங்க. மேடம் படிப்பில் மட்டுமில்லாம, மாநில அளவிலான சிலம்ப போட்டிலையும் முதலிடம் வாங்கினவங்க 

ரொம்ப மதிப்பு, மரியாதை கொடுக்கும் பெண் சார் அவங்க. என் வயது 50, நான் பிளஸ் டூ தான் படிச்சிருக்கேன். மேடம் இந்த ஸ்கூலுக்கு வர்றதுக்கு முன்ன இங்க வேலை செய்யற டீச்சர்ஸ் எல்லாரும் என்னை அண்ணன்னு தான் கூப்பிடுவாங்க. சிலர் பேர் சொல்லியும் கூப்பிடுவாங்க

அதைப் பாத்துட்டு மேடம், ‘படிப்பை பாத்து மரியாதை கொடுத்தால் போதாது, வயசுக்கு மரியாதை குடுக்கணும். நம்மள பாத்து தான் ஸ்டுடென்ட்ஸ் கத்துக்குவாங்க, நாம அவங்களுக்கு முன்னுதாரணமா  இருக்கணும்னு சொல்லி என்னை எல்லாரும் சார்னு கூப்பிடணும்னு சொன்னாங்க சார்

மேடம் பத்தி சொல்லனும்னா ஒரு நாள் பத்தாது சார், போகப் போக நீங்களே தெரிஞ்சுப்பீங்க” என்றார் 

பின் மற்ற ஆசிரியர்களை அறிமுகம் செய்து, ருத்ரனின் வகுப்பறையை காட்டினார் அசோக்

அதோடு, “உங்களுக்கு எது தேவைனாலும் தயங்காம எங்கிட்ட கேளுங்க ருத்ரன் சார்” எனவும் 

“கண்டிப்பா… மிக்க நன்றி அசோக் சார்” என அவருக்கு விடை கொடுத்தார் ருத்ரன்

மறுநாள் காலை, அனைவரும் ஆண்டுவிழா சிறப்பு விருந்தினரின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். ருத்ரனும் மாவட்ட ஆட்சியரை பார்க்க மிக ஆவலாக இருந்தார்

மாவட்ட ஆட்சியரின் வண்டி சத்தம் கேட்டதும், அவரை வரவேற்க பூங்கொத்துடன் சென்றார் தலைமை ஆசிரியை

ஆட்சியர் வண்டியை விட்டு இறங்கியதை பார்த்த ருத்ரனுக்கு, தூக்கி வாரிப் போட்டது

‘இந்த பெண்ணா கலெக்டர், இதென்ன கனவா நிஜமா’ என கண்ணை கசக்கி பார்க்க, ‘நிஜம் தான், அந்த பெண்ணே தான் சந்தேகமில்ல, இன்னைக்கு நான் கம்பி எண்ணப் போறது உறுதி’ என நினைத்த நொடி, முன் வரிசையில் நின்று கொண்டிருந்த ருத்ரன் பின் வரிசைக்கு நகர்ந்தார் 

“மாவட்ட ஆட்சியர் வேற யாருமில்லை சார், நம்ம விமலா மேடத்தோட சிஸ்டர் தான்” என்றார் அங்கிருந்த அசோக் 

“என்ன சார் சொல்கிறீங்க?” என ருத்ரன் ஆச்சர்மாய் பார்க்க 

“ஆமா சார், நம்ம மேடம் பேர் விமலா, அவங்க சிஸ்டர் பேர் கமலா. கமலா மேடம் படிச்சதும் இதே ஸ்கூல்ல தான்” என்றதும் திடுக்கிட்டு நின்றார் ருத்ரன்

அப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் விதமாக நினைவு பரிசை வழங்க ஆசிரியர்களின் பெயரை வரிசையாக அழைத்து கொண்டிருந்தனர்

ருத்ரனின் முறை வந்த போது, கை கால் நடுங்க வியர்வை சொட்ட மனதில் பயத்துடன் மேடையேறினார்

மாவட்ட ஆட்சியரை நெருங்க நெருங்க, ருத்ரனின் இதயத் துடிப்பு வேகமானது

மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்கள் தெரிவித்து, நினைவுப் பரிசை ருத்ரனுக்கு வழங்கினார்

பரிசைப் பெற்று விலகிய பின் தான், ருத்ரனின் இதயத் துடிப்பு பழைய நிலைக்கு திரும்பியது 

அன்றிரவு முழுவதும் தூங்க இயலாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார் ருத்ரன்

மறுநாள் காலை பள்ளியில் உள்ள உணவகத்தில் இட்லி, சாம்பார் வாங்கிக் கொண்டு அங்கிருந்த மேஜையில் சிந்தித்த வண்ணமே அமர்ந்தார் ருத்ரன்

விமலாவும் அதே மேஜையின் எதிர்ப்புறத்தில் வந்து அமர, ருத்ரன் சட்டென்று எழுந்து வணக்கம் தெரிவித்தார்.

“உட்காருங்க சார், சாப்பிடும் போது எழுந்து மரியாதை கொடுக்கணும்னு அவசியமில்ல” என்றாள் விமலா

“சம்பார்ல உப்பு காரம் எல்லாம் சரியாக இருக்கா சார்?” எனக் கேட்க

“எல்லாம் சரியா இருக்குங்க மேடம்” என்றார் ருத்ரன்

“அதெப்படி சார்? சாப்பிடாமலே பொருளைப் பார்த்து கணக்குப் போடுவதில் கில்லாடியா இருப்பீங்க போல?” என கிண்டலாக விமலா கேட்க, அதன் மறைபொருள் அவருக்கு விளங்கியது

“என்னை  மன்னிச்சுடுங்க மேடம்” என ருத்ரன் முடிக்கும் முன் 

“எனக்கு எல்லாம் தெரியும் சார். இங்க வந்த அன்னைக்கு காலைல என் சிஸ்டர்கிட்ட நீங்க வழி கேட்டதும், கிராமத்து பெண்களைப் பத்தின உங்க கணக்கீடும் எனக்கு நல்லாவே தெரியும்” என்றார் விமலா 

“தப்பு தான் மேடம் சாரி” என ருத்ரன் மன்னிப்பை வேண்ட

“என் சிஷ்டருக்கு பிறவிலேயே காது கேட்கும் திறன் குறைவு. அதோட அவளுக்கு சமீபத்துல தான் காதுல சின்ன ஆபரேஷன் நடந்தது. ரெண்டு வார காலம் காத்து அதிகம் படக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்கார், அதனால காதுல  பஞ்சு வெச்சிருந்தா. அதனால தான் நீங்க அவள கூப்பிட்டது தெரியாம வீட்டுக்குள்ள போய்ட்டா. நான் மாடில இருந்து பாத்துட்டு தான் இருந்தேன், கீழ இறங்கி வர்றதுக்குள்ள நீங்க கெளம்பிட்டீங்க” என விளக்கமளித்தார் விமலா 

அதைக் கேட்ட விமலன், குற்ற உணர்வுடன் தலை குனிந்தார் 

“கிராமத்துல வளர்ந்த பெண்கள் பலர், விளையாட்டுத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை என மண்ணில் மட்டுமில்லாம விண்ணிலும் பல சாதனை செஞ்சுட்டு வராங்க. எதையும் தீர விசாரிக்காம கிராமத்து பெண்களை சாதாரணமாக எடைப்போட்டுடாதீங்க. பெண்ணியம் போற்றும் கண்ணியம் படைத்தவரா இருக்க முயற்சி செய்யுங்க சார்” என விமலா கூற 

“கண்டிப்பா மேடம்” என்றார் ருத்ரன்

#ad

                      

#ad 

              

          

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. இயல்பான நடை. இடையிடையே இழையோடும் நகைச் சுவை உணர்வு. படிக்கும் போது அலுப்புத் தட்டாமல் கதை நகர்கிறது. பாராட்டுகள்.

அப்பா ❤ (கவிதை) – ✍சௌமியா தட்சணாமூர்த்தி

ஜூன் 2021 போட்டி முடிவுகள் – ‘சஹானா’ இணைய இதழ்