in

மது (சிறுகதை) – ✍ விடியல் மா. சக்தி

மது (சிறுகதை)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“தர்மா.. தர்மா… ஏப்பா தர்மா”தர்மன் வீட்டுக் கதவை தட்டிக் கூப்பிட்டான் சேகர்.

வெளியே எட்டிப் பார்த்த தர்மன்,  கண்களை துடைத்தபடியே வந்து, “என்னப்பா, இவ்வளவு நேரமாவா தூங்குவே. நேத்து நைட்டெல்லாம் கச்சேரி போல?” என்று சேகர் கேட்தற்கு

தூங்கி வழிந்த முகத்தை கழுவி விட்டு சேகரிடம் வந்து நின்ற தர்மன், சேகரைப் பார்த்து, “அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா… ஆமா என்ன காலங்காத்தாலயே வந்துட்ட, ஏதாவது விஷயமா?”

“ஆமாப்பா இன்னைக்கு ஒரு ஊர்வலத்துக்கு ஆள் கூப்புடுறாங்க போலாமா?”

“ஊர்வலமா… என்னா ஊர்வலம்?”

“அதாம்ப்பா… நாளைக்கு நியூ இயராமா, அதனால இன்னைக்கு நைட்டெல்லாம் பசங்க தண்ணிய அடிச்சுட்டு சுத்துவானுங்கல்ல, அதனால நம்ம ஏரியா இன்ஸ்பெக்டரு ‘மது ஒழிப்பு’ விழிப்புணர்வு பிரசாரம் செய்றாரமா அதுக்குதான் ஆள் கூப்புடுறாங்க” என்று சேகர் கூறியதும்

“ஹா… ஹா.. ஏம்ப்பா சாராயம் குடிக்க வேண்டான்னு சாராயம் குடிக்கற நம்மளே சொல்றதா தமாஷா இருக்குதுப்பா” என்றான் தர்மன்.

“அதெல்லாம் நமக்கெதுக்குப்பா, ஆள் கூப்புடுறாங்க போலாம் அவ்வளவுதான்”

“சரி… போலாம், ஆனா அங்க நமக்கு என்ன கெடைக்கும்”

“அதெல்லாம் நான் பேசிட்டேன், ஆள் கூப்புடுறான்ல்ல அந்த கமிட்டி செயலாளரு அந்தாளுகிட்ட. ஆளுக்கு ஒரு கோட்டரு, நூரூவா பணம்… என்ன போலாமா வேண்டாமா?” என்று கூறிய சேகரிடம்

“சரிப்பா போலாம்… என்னடா… இன்னைக்கு கோட்டருக்கு வழிய காமிக்கலியேன்னு நெனச்சேன் காட்டிட்டாம்ப்பா கடவுளு”

அடுத்த ஒருமணி நேரம் கழித்து தர்மனும் சேகரும் அந்த மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்துல கலந்துகிட்டு ஊர்வலம் போயிட்டிருந்தார்கள்.

“ஏம்ப்பா தர்மா நேத்தெல்லாம் ஒரே ஜாலியா என்ன?” என்று சேகர் தர்மனிடம் கேட்க

“அதெல்லாம் ஒன்னுமில்ல சேகரு”

“ஏம்ப்பா பொய் சொல்ற, நேத்து பாருல உம்பேச்சுதான் அதிகமா அடிபட்டுச்சு”

“யாரு சொன்னா உங்கிட்ட?”

“யாரோ சொன்னாங்க உண்மையா, பொய்யா? அதச்சொல்லு”

“அட.. ஆமாம்ப்பா”

“அது சரி நேத்து சாயந்திரம் நாங்கேட்டப்ப காசே இல்லேன்னு  சொன்ன, அப்புறம் எப்படி?”

“அதுவா… அது வந்து…”

தர்மன் சுற்றிலும் பார்த்து விட்டு சேகருகிட்ட போய் கிசுகிசு குரலில், “அது…. எம்பயனுக்கு காலேஜ் பீஸ் கட்டறதுக்கு எஞ்சம்சாரம் காசு வச்சிருந்தா, அத தெரியாம எடுத்துட்டு வந்துட்டேன் ” என்றான்.

“அடப்பாவி ! அந்த காசுலதான் கும்மாளமா? சரி என்னைய ஏன் கூப்புடவே இல்ல?”

“ஏய் சும்மா பேசாதப்பா, நான்  உங்க வூட்டுக்கு வந்து உன்னைய கூப்புட்டேன், உம்பொஞ்சாதி நீ இல்லேன்னு சொல்லிடுச்சு அதாம் போயிட்டேன்”

அடுத்து அம்பது பேர் கொண்ட அந்த ஊர்வலம் நகரத்தின் நால் ரோடு பிரிவில் வந்து சேர்ந்தது. அங்கு ஒரு சின்ன ஸ்டேஜ் போடப்பட்டிருந்தது.

ஊர்வலம் வந்தவர்கள் அனைவருமே அந்த மேடையின் முன்பு அமர வைக்கப்பட்டனர். மேடையில் குழுமியிருந்த முக்கிய ஆட்களில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் ஒவ்வொருவராக விழிப்புணர்வு குறித்து பேசத்தொடங்கினர்.

கடைசியாக இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பேசினார், “அன்பார்ந்த இந்த நகரத்தின் மக்களே, எனக்கு முன்பு உரையாற்றிய ஐயா பெருமாள் அவர்களே, மற்றும் இங்கு மேலும்  உரையாற்றிய பெருமக்களே, இந்த மேடையின் முன்பு அமர்ந்திருக்கும்  இளைஞர்களே, நன்பெருமக்களே, முதற்கண் இந்த மது விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதோடு எனக்கு மிகவும் பெருமையாய் இருக்கிறது இந்த மதுவை ஒழிக்க வேண்டும் என்ற உங்களது ஆர்வத்தை பாராட்டுகிறேன். இந்த மதுவினால் எத்தனை குடும்பங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

மேலும் மது, இன்றைய இளைய தலைமுறையினரை எவ்வாறு சீரழித்து கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். நாளைய தினம் ஆங்கில புத்தாண்டு என்று அறிவீர்கள், இந்த நாளை கொண்டாடுவதற்காக இன்றைய இளைஞர்கள் எவ்வாறெல்லாம் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் அறிவீர்கள்….”

இவ்வாறாக அந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அந்த மதுஒழிப்பு விழிப்புணர்வு குறித்து அரைமணி நேரம்பேசினார். அவர் பேசி முடித்தவுடன் கூட்டம் முடிவுக்கு வந்தது.

கூட்டம் முடிந்தவுடன் பரஸ்பரம் கைகுலுக்கள் முடிந்து அனைவரும் கலைந்து சென்றனர். தர்மனும் சேகரும் அவரவர் கையில் கொடுக்கப்பட்டிருந்த போர்டுகளை தூக்கி எறிந்தனர்.

அந்த போர்டில் எழுதப்பட்டிருந்த அந்த வாசகங்களை தர்மன் ஒருமுறை படித்துப் பார்த்தான்.

அதில், “மதுவை ஒழிப்போம்” “இளைஞர்களை காப்போம்” என்ற வாசகங்களைப் படித்து விட்டு, அந்த போர்டை தொட்டுக் கும்பிட்டான்.

“உன்னாலதான் இன்னைக்கு எனக்கு கோட்டர் கெடச்சுது தேங்க்ஸ்” என்று கூறி விட்டு திரும்பி நடக்கையில் அந்த போர்டின் வாசகங்களை குறிச்சு சேகரிடம், “பாத்தியாப்பா அந்த போர்டுல எழுதிருக்கிறத, மதுவை ஒழிக்கனும்மாமா, அதுவும் நாம. நல்ல தமாசா போச்சு போ அத நெனச்சு சிரிப்பு சிரிப்பா வருது” என்று கூறியபடியே நடந்தான்.

பின்னர் அவர்களுக்குரிய கோட்டரையும் பணத்தையும் வாங்கிக் கொண்டு நகரத்தின் எல்லையில் ஒரு பாழடைந்து போன ஒரு ஒதுக்குபுறமான கட்டடத்துல உட்கார்ந்து, வாங்கிட்டு வந்த சாராயத்தை ரெண்டு பேரும் சேர்ந்து குடித்தனர்.

அதன் பின்னர் சேகர் மட்டும் எழுந்து, “சரிப்பா தர்மா, நான் கெளம்புறேன் என் பொஞ்சாதி வேற தேடுவ. கொண்டுபோயி இந்த நூரூவாய குடுத்துட்டா சமாதானம் ஆயிடுவா வரட்டுமா” என்று கூறி விட்டு ஊரை நோக்கி நடந்தான்.

தர்மன் மட்டும் ஊர்வலத்துல கொடுத்த கோட்டர் இல்லாம கையில் கொடுத்த நூறு ரூபாயுக்கும் எக்ஸ்ட்ரா ஒரு கோட்டரையும் வாங்கி அதையும் குடிக்க போதை தலைக்கேற அங்கேயே படுத்துக் கிடந்தான்.

இருட்டியவுடன் அவனோட பையன் சண்முகம் அவன தேடிட்டு வந்தான். ரெகுலரா அங்கதான் உட்கார்ந்து தண்ணி அடிப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டு கீழே விழுந்து கிடந்த  தர்மனை கைத்தாங்கலாக வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போனான்.

வீட்டிற்குச் சென்று சேர்ந்ததும் அவனோட பொண்டாட்டி கண்ணியம்மாள் வாசல்லியே காத்திருந்தாள்.

இவன் அங்க போனவுடன் கண்ட மேனிக்கு, “ஏய்யா டெய்லியும் குடிச்சுட்டு வர்றே, உன்ன என்னிக்காவது கேட்டிருக்கேனா ? ஆனா, நேத்து பையனுக்கு காலேஜ்க்கு கட்ட வச்சிருந்த எக்ஸாம் பீசை எடுத்துட்டு போயிட்டியேயா நான் இப்ப எப்படி அவனுக்கு பீசை கட்டுறது. நானே அங்கயும், இங்கயும் வாயை கட்டி, வயித்த கட்டி சேத்து வச்சுருந்தேன், அதப் போய் எடுத்துட்டு போயிட்டியே நீயெல்லாம் மனுசனா ” என்று அழுது கொண்டே  திட்டினாள்.

அதற்கு தர்மனோ, “ஏய்… போடி….இவன்… பெரிய கலெக்டரருக்கு படிக்குறான் கட்.. டிக்.. கலாம்… போடி ” என்று கூறி விட்டு பாயில் விழாக்குறையாக படுத்துக்கொண்டான்.

சண்முகம் அவன் அம்மாவை பார்த்தான், அவன் அம்மா கண்ணியம்மாள், “போ கண்ணு போய் படு, நாளைக்கு எதாச்சும் பண்ணலாம்” என்று அழுதபடி கூறினாள்.

அவனும் சமாதானமாக போய் படுத்துக் கொண்டான். இரவு வெகு நேரமாகியும் கண்ணியம்மாளின் விசும்பல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

அடுத்த நாள் ‘நியூ இயர்’ அதிகாலை ஐந்து மணி இருக்கும். அப்போது தர்மனின் வீட்டு வாசற்கதவை தட்டும் சத்தம் கேட்டது. தர்மன் பட்டென கண் திறந்து பார்த்தான்.

அப்போது வீட்டுக் கதவு தட்டபடும் சத்தம் கேட்க, உடனே எழுந்து போய் கதவைத் திறக்க, அங்கே இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சாரும், கூடவே ஒரு காண்ஸ்டபுளும் நிற்பதைக் கண்டு பயந்தான்.

“யோவ் தர்மன் நீதான?”

“ஆ.. ஆமாங்க சார்!”

“நேத்து நைட்டு தண்ணியடிச்சீங்களே அப்ப உங்கூட இருந்தது யாரு?”

“சார்!, நானும் எம் ப்ரண்ட் சேகருந்தான் சார், நாங்க ஒரு தப்பும் பண்ணல சார்”

“ஓ.. உங்கோட இருந்தது சேகரா? சரி எங்கூட வா வந்து வண்டியில ஏறு”

“எதுக்கு சார்!, நாந்தா ஒரு தப்பும் பண்ணலியே பின்ன எங்க சார் கூப்பிடுறீங்க?”

” தப்பு எதுவும் பண்ணலதான், வாய்யா வந்து வண்டியில ஏறு வா… வாய்யா” தர்மனின் சட்டையை பிடித்து இழுக்காத குறையா இழுத்துச் சென்றார் அந்த காண்ஸ்டபுள்.

வண்டியில ஏறினவுடன், வண்டி மெதுவாக திரும்பி அவங்க ரெண்டு பேரும் தண்ணி அடிச்சிட்டு இருந்த இடத்தை கடந்து வலது புறம் திரும்பி ஒரு மண் ரோட்ல போய் நின்றது.

இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தர்மனை பார்த்து, “யோவ் எறங்குய்யா எறங்கி வா” என்று கூப்பிட தர்மனும் பயத்தோட இறங்கினான்.

*இங்க வா… எங்க பின்னாலேயே வாய்யா” என்று தர்மனை அந்த இடத்திற்கு அருகில் ஆளில்லா ரயில் வே கிராஸிங்க்கு கூட்டிட்டு போனார்.

“சார் என்ன எதுக்கு சார் இங்க கூட்டிட்டு வந்தீங்க?”

“ம்ம் அதுவா இங்க வந்து பாரு, யோவ் காண்ஸ்டபுள் அந்த துணிய நீக்குய்யா”  என்று கூற, அந்த காண்ஸ்டபுளும் அங்கே வெள்ளைத் துணி போட்டு மூடி வைத்திருந்ததை திறந்து காண்பித்தார்.

அங்கே ரயில் தண்டவாளத்தில் சிக்கி அடிபட்டுப்போய் உருக்குலைந்து போன, இரத்தக்களரியில் ஒரு சடலத்தை கண்ட தர்மன் சட்டென தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

பின்  சுதாரித்துக் கொண்டு மீண்டும் பார்த்தான். அந்த மங்கலான காலை வெளிச்சத்தில் சரியாக அடையாளம் தெரியவில்லை. பின் நன்றாக உற்றுப் பார்த்தான்.

உருக்குலைந்து கிடந்த அந்த சடலம் யாருடையது என்று அவனுக்கு புலப்பட, “அய்யோ…. சண்முகா!!” என்று கதறியடித்து ஓ.. வென கத்தி அழுதான்.

“அய்யோ..! அய்யோ…! அய்யோ!  சண்முகா, எம்மவனே, நீ இப்படி ஒரு முடிவையாட எடுப்ப உங்கம்மாவுக்கு நான் என்னடா பதில் சொல்லுவேன்?”

அவனுடைய அந்த கதறலைக் கேட்டு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கண்களில் கண்ணீர் விட்டார் தர்மனின் அருகில் சென்று அவன் தோளை தட்டி, “இந்தா… இந்தாய்யா ஒம்பையன் சாகறதுக்கு முன்னாடி லெட்டர் எழுதி வச்சுட்டு செத்திருக்கான் இந்தா… படி படிச்சுட்டு அப்புறமாவது திருந்துங்கியா”  என்று கூறிவிட்டு அந்த லெட்டரை அவன் கையில் கொடுத்தார்.

தர்மன் கைகள் நடுங்க, அதை வாங்கி படித்தான்.

“அப்பா அம்மாவுக்கு வணக்கம்,

இந்த லெட்டரைப் படிக்கும் போது நான் உயிரோட இருக்க மாட்டேன். அப்பா, உங்களைத் திருத்த அம்மாவும் எவ்வளவோ முயற்சி பண்ணாங்க, ஆனா நீங்க அந்த குடிய விடல. கடைசியா அம்மா என்னோட எக்ஸாம்க்காக சேர்த்து வச்சிருந்த பணத்தையும் எடுத்துட்டு போய் தண்ணி அடிச்சீங்க. அந்த எக்ஸாம் பீசை கட்ட முடியாம மனசால ஒடஞ்சு போயிட்டேம்ப்பா.

உங்களை எப்படியாவது திருத்தனும், உங்களை மட்டுமே இல்ல  உங்களைப் போல நிறைய அப்பாக்கள்னால என்னை மாதிரி அப்பாவி இளைஞர்களோட எதிர்காலம் அழிஞ்சு போயிடுது. அவங்களுக்கெல்லாம் என்னோட சாவு ஒரு பாடமா இருக்கனும், என்னோட சாவுக்கு பின்னால உங்களை மாதிரி இருக்கும் அப்பாக்கள் அனைவருமே திருந்திடுவாங்க அப்படீங்கற நம்பிக்கையில நான் சாகுறேன் இனிமேலாவது திருந்திடுங்கப்பா

இப்படிக்கு

உங்கள் அப்பாவி மகன்

சண்முகம்”

லெட்டரைப் படித்து முடிச்சவுடன் தர்மன் எதுவுமே பேசாமல் அப்படியே பித்து பிடித்மவன் போல நடந்தான்.

நடந்து, நடந்து நேற்று தூக்கியெறிந்த அந்த பிரச்சார போர்டை தேடிப்பிடித்து எடுத்தான். அதில் எழுதியிருந்த வாசகங்களை மீண்டும் ஒரு முறை படித்தான்.

“மதுவை ஒழிப்போம்”

“இளைஞர்களை காப்போம்”

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 9) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

கடல் தாலாட்டும் கட்டுமரங்கள் (சிறுகதை) – ✍ Dr. பாலசுப்ரமணியன், சென்னை