in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 4) – ரேவதி பாலாஜி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3

முன்கதை சுருக்கம்:

தான் தாயானதை அறிந்து பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் கவியினியாள் தன் கணவரிடம் திருமண நாள் அன்று கூற திட்டமிடுகிறாள். அவள் திட்டப்படி நடந்ததா.. எப்படி ஆதியிடம் கூறினாள்.. ஆதிக்கு இதில் மகிழ்ச்சியா என்பதை காண்போம் 

இனி:

எப்படி சொல்வது என்று பலமுறை ஒத்திகைப் பார்த்தாலும் கடைசியில் தடுமாற்றம் தான் வருகிறது எனக்கு.

என் கணவரிடம் நாம் தாய் தந்தையர் ஆகிவிட்டோம் என்று சொல்லப்போகிறேன். ஒவ்வொரு பெண்ணிற்கும் இது மறக்க முடியாத கணமாக இருக்குமே. இதை எப்படி கையாள்வது. அவர் என்ன சொல்லப்போகிறார்.

என் கணவர் கேக் வாங்க வெளியில் சென்றிருந்த பொழுது நான் பரிசோதத்த கிட்டை ஒரு புதக்கத்தில் ஒட்டி அதில் நீங்கள் அப்பவாகி விட்டீர்கள் வாழ்த்துக்கள் (டேட் டூ பீ கங்கிறாட்ஸ்) என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தேன்.

வார்த்தை கை விடும் பொழுது இந்த வாசகத்தைக் காட்டத் திட்டமிட்டேன்.

அனைவரும் உறங்கச் சென்றப் பின் கேக்கை எடுத்துக் கொண்டு வந்து எங்கள் அறையில் வைத்தேன். ஆதியும் நானும் சேர்ந்து கேக்கை சுற்றி மெழுவர்த்தி ஏற்றினோம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு துண்டு கேக்கை உண்டு விட்டு உறங்கப் போகும் முக பாவத்தோடு அமர்ந்து இருந்தார்.

நேரம் 11.57

நான் எழுந்து உள்ளே சென்று தயார் செய்து வைத்திருந்த கிட்டை மறைத்து எடுத்து வந்து மற்ற விளக்குகளை அணைத்து விட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவர் முன் அமர்ந்தேன்.

சரியாக பன்னிரண்டு மணி.

“திருமண நாள் நல்வாழ்த்துக்கள் என் கவியினியாளுக்கு” என்று ஆதி கூறிவிட்டு மெழுவர்த்தியை ஊதி அணைக்க முயலும் பொழுது நான் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அந்த வாசகத்தைக் காட்டினேன்.

ஆதி திகைத்துப் போய் அந்த கிட்டையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சில நொடிகள் எதுவும் பேசவில்லை. கண்கள் வியந்து பார்த்துக் கொண்டே இருந்தார். அந்த முகபாவனையே ஆதியின் மகிழ்ச்சியை எனக்குத் தெரிவித்து விட்டது. அந்த நொடியே நான் திருப்தி அடைந்து விட்டேன்.

“நீ அப்பா ஆகிட்ட ஆதி” என்றேன்

நான் பேசப் பேச என் கண்கள் கலங்கி நீர் துளிகள் வழிந்தன.

முகம் நிறைந்த சிரிப்பொன்றை தந்தார்.

“நம்ம அப்பா அம்மா ஆயிட்டமா கவி” காதல் காமம் இதையெல்லாம் தாண்டி நமக்கொரு பிள்ளை பிறக்கப் போகிறது என்கிற பரிபூரண சந்தோஷத்தில் ஆதி.

நான் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு கண்ணீர் வழிய பார்த்தேன்.

“இந்த நிமிஷத்த நான் என் வாழ்நாள்ல மறக்க மாட்டேன் கவி.. ரொம்ப தேங்க்ஸ்”

ஆதி இத்தனை உணர்ச்சி பெருக்கோடு குரல் தழுதழுத்து பேசி முதல் முறை கேட்டேன்.

விரலிலே கொஞ்சம் கேக்கை எடுத்து ஆதியின் வாயில் வைத்து விட்டு கூறினேன்

“ஹாப்பி அன்னிவெர்சரி”

சிரித்தான். முழுமையான சிரிப்பு. சந்தோசத்தின் உச்ச சிரிப்பு.

சில நிமிடங்கள் உருகி கரைந்தோம். ஆகாயத்தில் மிதப்பதாய் மகிழ்ந்தோம். ஆசிர்வதிக்கப் பட்டதாய் உணர்ந்தோம்.

கேக்கை எடுத்து வைத்து விட்டு உறங்கச் சென்றோம்.

“இதெல்லாம் கனவா நிஜமான்னு தெரில கவி.. நிஜமாவே நான் அப்பா ஆயிட்டனா” கொஞ்சம் தெளிவாகி ஆதி சகஜமாய் பேச ஆரம்பித்தார்.

“எனக்கும் ஆச்சர்யமாதான் இருக்கு”

“நான் அப்பாவா பொறுப்பா இருப்பனா”

“அதெல்லாம் தானா அந்த பொறுப்பு வந்துடும் “

“எனக்கு தூக்கமே வரல.. சந்தோசமா இருக்கு கவி”

நான் அமைதியாக அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

“ஆமா ரெண்டு கிட் தான இருந்தது. அதும் யூஸ் பண்ணிட்டோம். எப்படி இது”

“நான் போய் வாங்கிட்டு வந்தேன். யாருக்கும் தெரியாம”

“எல்லாம் ப்ளான் பண்ணி தான் செஞ்சிருக்க.. உனக்கு முன்னாடியே தெரிஞ்சதா கவி”

“பெருசா தெரில ஆதி.. நம்பிக்கை இருந்துச்சி.. இப்போதான் அஞ்சு நாள் தள்ளி போயிருக்கு.. செக் பண்ணேன்.. பாசிட்டிவ்”

“எனக்கு கூட தோணிச்சு.. ஒன் இயர் ஆகப் போகுது கல்யாணம் ஆகி பேபி வந்தா கூட நல்லதான் இருக்கும்னு.. கடைசி இரண்டு மாசம் கூட நெகடிவ்ல.. சரி வரப்போ வரட்டும் நினச்சேன். இப்போ இன்னிக்கு நீ சொன்னது மறக்கவே முடியாது கவி”

இருவரும் எவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் என்று தெரியவில்லை.

நான் உறங்கிவிட்டேன். காலையில் எழுந்து பார்க்கும் பொழுது மணி ஏழு. என் கணவர் எழுந்து குளித்து தயாராக இருந்தார்.

“என்னையும் எழுப்பிருக்கலாம்ல.. நீ எப்போ தூங்கின எப்போ எழுந்த”

“எனக்கு தூக்கமே வரல.. மூணு மணிக்கு தான் தூங்குனேன்.. ஆறு மணிக்கு தூக்கம் போய்டுச்சு.. நீ வேற அசந்து தூங்கிட்டு இருந்த அதான் எழுப்பல”

“ஆபிஸ் போட்டா.. இன்னிக்கு என்ன பண்ணலாம்”

“உன் இஷ்டம்.. எங்கயாவது வெளில போலாம்னா லீவு போடு”

“எங்க போறது.. என் வயத்துல பாப்பா இருக்கு.. பாதுகாப்பா இருக்கனும்.. எப்போங்க எல்லார்டையும் சொல்றது”

“நீ குளிச்சிட்டு வா அம்மா அப்பாட்ட சொல்லிரலாம்.. அப்புறம் கோவில் போய்ட்டு உன்ன ஆபீஸ்ல விட்டரேன்”

குளித்து முடித்து தயாராகி இருவரும் அறையில் இருந்து வெளியே வந்தோம்.

கேசரி மணம் வீசியது. நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையின் வாசம் வீடெங்கும் வலம் வந்து கொண்டிருந்தது. எங்கள் திருமண நாளிற்காக என் அத்தை செய்து கொண்டிருந்தார்.

“இட்லி சூடா இருக்கு.. சாப்பிடலாம் வாங்க” என்றார் அத்தை.

“என்னம்மா வாசனை தூக்குது” ஆதி கேட்டான்.

“உங்களுக்காக தான்.. ஹாப்பி அன்னிவெர்சரி” என்று கூறியப்படியே கையை நீட்டினார் என் அத்தை.

நீட்டிய கையில் கிட்டை வைத்தார் என் கணவர். பெற்றோர்களிடம் கூறும் முன் இன்னொரு முறை பரிசோதிக்க முடிவெடுத்து காலையில் இரண்டாவது முறை எடுத்ததை அத்தையிடம் கொடுத்தார்.

கண்கள் விரிய அதிர்ச்சியில் அதையே பார்த்தார் என் அத்தை.

பின் விஷயத்தை உணர்ந்தார். சந்தோஷத்தில் என்னைப் பார்த்தார். எனக்கு வெட்கம் தாளாமல் என் கணவருக்கு பின் சென்று ஒளிந்தேன்.

எங்கள் அருகே நெருங்கி வந்து என் கையையும் கணவர் கையையும் பிடித்து வைத்துக் கொண்டு குலுக்கினார்.

“ரொம்ப சந்தோசம் டா” முழு மனதோடு சொன்னார்.

அவர் கண்களை சந்திக்க முடியாமல் கீழே குனிந்து நின்றேன்.

“அப்பா கிட்ட சொல்லுங்க”

என் அத்தை சொன்னவுடன் ஆதி அவரிடம் சென்றார்.

அவரிடமும் கிட்டை தான் காண்பித்தான். ஆதிக்கு வார்த்தையில் எப்படி சொல்வதென்று தெரியாமல் தவிக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன்.

“அவருக்கு அத காட்டின எப்படிடா புரியும். ஆதி அப்பா ஆகிட்டாங்க” என் மாமியாரே கூறினார்.

அவருக்கும் மகிழ்ச்சி. எங்களை வாழ்த்தினார்.

“எத்தனை நாள் தள்ளி போயிருக்கு” என் அத்தை என்னிடம் கேட்டார் 

“அஞ்சு நாள் அத்தை”

“அப்படியா.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. அதுவரைக்கும் யார்டையும் சொல்ல வேணாம்”

“சரிங்க அத்தை”

“ஹாஸ்பிடல் போய்.. ஸ்கேன் பார்த்துட்டு சொல்லிக்கலாம்”

இன்னும் மருத்துவமனை பரிசோதனை இருக்கிறது என்பதை நினைவு படுத்தினார் அத்தை. எனக்குள் பயம் எழுந்தது.

“உடம்பு பாத்துக்கோ.. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.. இனிமே தான் கதையே ஆரம்பம்”

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 15) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    அறை எண் 56ல் அமுதா (சிறுகதை) – முகில் தினகரன், கோவை