in

முதல் மரியாதை (சிறுகதை) – ✍ கீதா ராணி பிரகாஷ், திருப்பூர்

முதல் மரியாதை (சிறுகதை)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“இவ எல்லாம் ஒரு பொண்ணா?” 

செங்கமலத்தின் காதில் விழுந்த வார்த்தைகள் ஈயம் போல் உள்ளிறங்க,எதுவும் பேசாது மருத்துவர்கள் நீட்டிய அந்த காகிதங்களில் தனது கையப்பத்தைப் பதிந்து கொடுத்து விட்டு கண்களில் நீர் வழிய நின்றவளின் அருகில், உறவுகள் என்று யாருமே இல்லை! 

உறவுகள் அனைத்தும் அவளை விட்டு சென்று விட்டனர். ஆனால் நன்றியோடு நான்கு கரங்கள் அவளை கையடுத்துக் கும்பிட்டபடி நின்றிருந்தது. அவர்களுக்கு அவள் தெய்வமாகத் தெரிந்தாள்!! 

மலையனூர் ஜமீனின் கடைசி வாரிசான செங்கமலத்தின் மனம் லேசாகியதைப் போல் இருந்தது. தான் செய்ய வேண்டிய பாவ நிவர்த்திகளை செய்து முடித்து விட்டு தன் தந்தை சென்றதாகவேக் கருதினாள்

மெதுவாக மருத்துவமனை வளாகத்தில் இருந்து நீர் பெருகும் கண்களுடன், மௌனமாய் வெளியேறிய அவளின் பின்னே கணக்குப் பிள்ளை சங்கரன் ஐயாவும், எடுபிடியாக இருந்த வேட்டுவனும், வண்டி ஓட்டி சுப்புடுவும் வர வெளியே, வந்த அவர்களின் முன்னே அவசர ஊர்தியில் ஜமீன் சிவ சேகரனின் உடல் வந்து நின்றது!!! 

அந்த அவசர ஊர்தியில் இரண்டு பணியாட்கள் மட்டுமே இருக்க, மலையனூர் கிராமம் நோக்கி செல்ல தயார் நிலையில் இருந்த வண்டி கமலம் என்னும் செங்கமலத்தின் தலை அசைவுக்காக காத்திருக்க, அவள் தலை அசைந்து உத்தரவு தெரிவித்த உடனே, ஜமீனை நோக்கி சிவ சேகரனின் பூதஉடல் தனது யாத்திரையை தொடங்கியது. 

அதற்கு பின்னே செங்கமலமும் காரில் செல்ல, அவள் மனமோ அதற்கு முன் சென்றது. 

செங்கமலத்தின் தந்தையான சிவ சேகரன் சிறு பிள்ளையாக இருந்த போதே, அவரின் தந்தை ரத்ன சேகரனின் தொல்லை தாங்காமல் தாய் அம்பிகாவதி மேலே போய் விட, அடுத்து யாரையும் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், ரத்ன சேகரன் ஆடிய ஆட்டத்தை பார்த்தே வளர்ந்த சிவ சேகரனுக்கு, தந்தை மேல் நல்அபிப்ராயங்கள் எதுவும் இல்லை எனினும், அவர் மீது பயம் அதிகம்!! 

காரணம்… அவர் கண்ட காட்சிகள்!! 

அவரை எதிர்த்து பேசுபவர்கள் எவராயினும் அவரின் கரங்கள் கட்டப்பட்டு, அந்த கரங்கள் குதிரையின் பின்னங்கால்களுடன் இணைக்கப்பட்டு, குதிரையின் பின்னால் சவுக்கால் அடிக்க, கோபம் கொண்ட குதிரை வெகுவேகமாக ஓட, அதன் பின்னங்காலில் கட்டப்பட்டவரின் நிலைமை !! சொல்ல வேண்டியது இல்லை. 

அந்த பிரச்சினை, அதோடு போகாது. தன்னை எதிர்த்துப் பேசியவர்களின் குடும்பங்களையும் ஒரு வழி செய்து விடுவார் ஜமீன் ரத்ன சேகரன். அவர்கள் வீட்டில் பெண்கள் இருந்தால் அதோ கதி தான் !!

ஆதலாலே அவரை யாரும் எதிர்த்து பேச மாட்டார்கள். இந்த தண்டனையை தன் சொந்த மாமனுக்கே கொடுத்த பெரிய மனம் படைத்தவர் ரத்ன சேகரன், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அந்த குடும்பத்தினர் கொடுத்த சாபமும் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போய் தந்தையை விட்டு சற்று தள்ளியே வளர்ந்தார் சிவ சேகரன். 

ரத்ன சேகரன் ஊருக்குள் வருகிறார் என்றால், மலையனூரே ஒரு நடுங்கு நடுங்கும் ! மிகவும் மோசமானவராக இருந்தார் ரத்ன சேகரன். 

சிறுவயதில் தன் தாயின் பாசமும், தந்தையின் அரவணைப்பும் கிடைக்காத பொழுது அவர் தோட்டத்திற்கு சென்று அமர, அங்கே தோட்ட வேலை செய்யும் செங்காளியோடு பழக, அவரின் அன்புக்கு அடிமையாகிப் போனார்! 

அவரின் மகள் நல்லம்மாளிடம் நல்ல அபிப்பிராயம் தோன்ற, நல்லம்மாளிடம் பழக ஆரம்பித்த பத்து தினங்களுக்குள் தந்தை ரத்ன சேகரன் காதுகளுக்கு விஷயம் எட்ட, அடுத்த நான்கு நாளில் நல்லம்மாள் நாய்களால் குதறப்பட்ட மானைப் போல் ஏரி கரையில் கண்டெடுக்கப்பட, அதைப் பார்த்ததுமே பதினன் பருவத்தில் இருந்த சிவ சேகரனுக்கு விஷயம் புரிந்து போனது. 

தோட்டக்காரன் செங்காளிக்கு மட்டும் புரியாதா என்ன? 

அவன் வயிறு எரிய கொடுத்த சாபம் தான் மிகக் கொடுமையாக ஜமீனைப் பிடித்தது என்று சொல்ல வேண்டும். சிவ சேகரன் அதற்கு பின்னே யாரோடும் அதிகமாக நெருங்கிப் பழகவில்லை!! தன்னால் மற்றவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணமே அதற்கு காரணம். 

அவர் உண்டு அவர் படிப்புண்டு என்று இருந்து விட்டார், வேலை கூட தந்தை சொன்னது போலவே வெளியே எங்கும் போகாது ஜமீனை மட்டும் கவனித்துக் கொண்டார்.  

தந்தையின் விருப்பப்படி அவரின் நண்பரான சோலையூர் ஜமீன்தார் மகளான மைனாவதியையேத் திருமணம் செய்தார். 

சிவ சேகரனுக்குத் திருமணமாகி கிட்டத்தட்ட ஆறு ஏழு வருடங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில், அவர்கள் இருவரையும் புண்ணிய ஷேத்திரம் செல்ல சொல்லி அனைவரும் அறிவுறுத்தவே, ரத்ன சேகரன் இருவரையும் புண்ணிய ஷேத்திரங்களுக்கு அனுப்பி வைத்தார். 

அவர்கள் கோவிலில் இருக்கும் வேளையில் இங்கே ரத்ன சேகரனுக்கு விபத்து ஏற்பட்டது. தகவல் தெரிவித்து இருவரையும்  அழைத்து வந்தனர் ஆட்கள். அரை உயிரோடு இருந்தவர் இவர்களைப் பார்த்து விட்டு கண்மூடினார். 

அடுத்தது என்ன என்று யோசிக்க கூட சிவசேகரனால் இயலவில்லை. மனைவி மைனாவதி நல்ல திறமைசாலி ஆதலால், ஓரளவு தெளிந்து வந்த அவர்களுக்கு வெகுகாலம் கிடைத்து பிறந்த மகளே செங்கமலம்..!! 

ரத்ன சேகரனின் மறைவிற்குப் பின்னர் ஜமீனின் செல்வாக்கு குறைந்து போனது, மலையனூர் மக்கள் தந்தை மீது காட்ட முடியாத வெறுப்பை மகனிடம் காட்டினர்.  

ஜாமீனில் நிலங்கள் இருந்தன ஆனால் பண்ணையம் செய்ய முடியவில்லை. 

மனைவி மைனாவதியின் தந்தை சோலையூர் ஜமீன்தார் உதவியுடன் பல ஆலைத் தொழில்களில் முதலீடு செய்திருந்ததால் நிரந்தர வருமானம் கிடைத்தது. மற்றபடி ஜமீனில் பிரச்சினைகள் அடிக்கடி தலை தூக்கிக் கொண்டே இருக்கத் தான் செய்தது. 

“தந்தை செய்த பாவம் மகன் தலையில்” என்று சிவ சேகரன் காதுபடவே சிலர் பேசினர்

தந்தையின் சொத்து மட்டும் அல்ல அவரின் சாபங்களையும் சேர்த்துப் பெற்றதாலே நிறையப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது இருந்தது சிவ சேகரனுக்கு. இடையில் மனைவி மைனாவதியின் மறைவு அவரை பெரிய அளவில் பாதித்தது.  

மகளின் இரண்டும் கெட்டான் வயதில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தவருக்கு, வேலை ஆட்களான சுப்புடுவும் அவர் குடும்பமும், கணக்கு பிள்ளை குடும்பமும் உதவியாக இருந்தனர். 

மலையனூர் ஜமீனின் வாரிசு என்ற பட்டமும், அவரிடம் இருந்து சொத்துக்கள் மட்டுமே சொந்தங்களின் குறியாக இருக்க, சிவ சேகரனை மீண்டும் ஒருமுறை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினர். ஆனால் சிவ சேகரன் உறுதியாக அதை மறுத்து விட்டார். 

மகளுக்கு நல்ல முறையில் கல்வி அளித்து, அவளை அறிவில் சிறந்தவளாகவே வளர்த்தார். தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட எந்த சங்கடங்களும் அவளுக்கு ஏற்படாதவாறும், பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதையும் கற்றுக் கொடுத்தார். 

ஒரு நல்ல நாளில் தங்களுக்கு தேவையான அளவு மட்டுமே சொத்துக்களை வைத்துக் கொண்டு மற்றவைகளை ஏழைகளுக்கு கொடுக்க தீர்மானித்து தந்தையும் மகளும் அதை அறிவிக்க, சுற்றி இருந்த சொந்த பந்தங்கள் பெரும் ஆட்சேபனை செய்ய, அதை அவர்கள் கண்டு கொள்ளாமல் போகவே மிரட்டல் விடுத்தனர்.  

இவர்கள் சொத்துக்களை கொடுத்தது போல தேவைக்கு அதிகமா தங்களுடைய சொத்துக்களையும் கொடுக்க வேண்டியது வருமோ என்ற அச்சமே அதற்கு காரணம். 

குறித்த நாளில் அவர்கள் சொத்துக்களை மக்களுக்கு ஒப்படைக்க கிளம்பிய சமயம், தனக்கு நேரப் போவதை அறிந்தவர் போல், சிவ சேகரன் தன் நம்பிக்கைக்குரிய வேலை ஆட்களிடமும், மகளிடமும் ஒரு பத்திரமும் சில விபரங்களும் கூறிய பின்னரே கிளம்பினார் 

அது மக்களுக்கு சேர வேண்டிய சொத்துக்களின் விபரம் அடங்கிய பத்திரங்கள்!! அவர்கள் கிளம்பி செல்லும் வழியில் மிகப் பெரிய விபத்து ஏற்பட, அவருடன் வந்த நம்பிக்கையான பணியாட்கள் அதே இடத்தில் இறந்து விட, சிவ சேகரன் தன் மகளைக் காண வேண்டி உயிர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். 

செங்கமலம், கணக்குப் பிள்ளை மற்றும், சுப்புடுவுடன் மருத்துவமனை வந்து சேர்ந்த பின்னர், மகளிடம் தான் கூற வேண்டியதை கூறி விட்டு கண் மூடினார் சிவ சேகரன். அதுவே தந்தையின் தவறுகளுக்கு மகனின் பிராயச்சித்தமாகிப் போனது ! 

மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூற, செங்கமலம் தன் தந்தையின் ஆசைப்படியே அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தாள். 

ஆம்..! சிவ சேகரன், சிறுவயதில் இருந்தே தன் தந்தையால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு வளர்ந்ததால், அவர்களுக்கு ஏதாவது உதவ நினைத்து முடியாது போன தனது கையாலாகாத தனத்திற்காகவே தன் தேவைக்குப் போக எஞ்சிய சொத்துக்களை ஏழை மக்களுக்கு எழுதி வைத்தார். அது மட்டும் போதாது என்று தோன்றியதே அவரின் மரணத்திற்கு பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தது!! 

உயிர் பிரியும் தருவாயிலே மகளிடம் கூறினார். அவள் படித்த பெண், இறப்பிற்குப் பின்னரும் தன் தந்தை தன்னுடன் வாழ ஆசைப்பட்டே இந்த முடிவை திடமான மனத்துடன், எவரையும் பொருட்படுத்தாமல் எடுத்தாள்.  

அப்போது அவள் முன் கை கூப்பி நின்றவர்கள் அவளின் தந்தையின் உறுப்புகளை தானம் பெற்றவர்கள், தந்தை கூறியதை செய்வதற்கே செங்கமலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன சொந்த பந்தங்கள்.  அவள் கண்டு கொள்ளாததே முன் சொன்னது போல பெண்ணா இவள்? என்ற வசைபாடல்!! 

சொத்துக்களும் இல்லை, சொன்னதையும் இவள் கேட்கப் போவதில்லை என்று தெரிந்து சொந்தங்கள் விலகிய போயின. மரியாதைக்குரிய பணியாளர்கள் இல்லை, அவள் குடும்பத்தில் ஒருவராகிப் போன சங்கரன் ஐயாவும், வேட்டுவனும், சுப்புடுவும் இன்னும் சிலர் மட்டுமே ஜமீன் சிவ சேகரன் உடலுக்கு மரியாதை தர பயணிக்கின்றனர். 

தகவல் தெரிந்த உடன் மலையனூர் ஜமீனின் மரியாதைக்குரிய ஜமீனாய் ஜமீன் சிவ சேகரன் ஆகிப் போனார்.மலையனூரில் ஜமீனுக்குத் தர வேண்டிய இறுதி மரியாதைகளுக்காக அந்த ஊரே திரண்டு நின்றது..! 

தனக்கு எது வேண்டும் என்று கூட கடைசி வரை கூறாத ஒரு நல்ல மனிதர், இறப்பிலும் அடுத்தவருக்கு நல்லது செய்த ஒரு உத்தமர், தன்னால் யாருக்கும் எந்த கெடுதலும் வரக் கூடாது என்று நினைத்தே வாழ்ந்த மாமனிதருக்கு ஊர் தரும் மரியாதை. அதற்காகவே அனைவரும் திரண்டு நின்றனர்.         

செங்கமலத்திற்கும் அவளுடன் வரும் மற்றவர்களுக்கும் தெரியாது, “ஜமீன் சிவ சேகரன் தன் தந்தை ரத்ன சேகரன் தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்த உன்னதமான மகன் என்பதை அறிந்த மலையனூர் ஜமீன் மக்கள், அவரின் பூத உடலுக்கு மரியாதை செய்ய வெள்ளமாக திரண்டு நிற்பது”. 

வானமும் கண்ணீர் விட, பூமியே சோகமாகியதைப் போல அமர்ந்திருந்த செங்கமலத்திற்கு, இனி மலையனூரே உறவாகி நிற்கப் போகிறது…! இனியாவது அவளின் வருங்காலம் வசந்தமாகட்டும். 

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 5) – ✍ விபா விஷா, அமெரிக்கா

    வல்லபி ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை