in

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 5) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காதலாய் ❤ (பகுதி 5)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

குறிஞ்சி மலையாய்

குறைவின்றி உயர்ந்து..

முல்லை வனமென

முகில் தொட வளர்ந்து..

மருத வயலாய்

மண்ணெங்கும் விரிந்து..

நெய்தல் கடலென

நிலமெங்கும் நிறைத்து..

பாலை நிலமாய்

பசலை தரும் உன் காதல்..

தனது கல்லூரிக் காலத்திலேயே அபியின் காலில் விழுந்து விட்டேன் என்று வம்சி கிருஷ்ணா கூறக் கேட்ட அவனின் தாய் நளினியும், தங்கை தன்யாவும் அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றனர்.

பின்னே… இங்கே வீட்டிற்குள் காட்டு சிங்கமென இருப்பவன், தான் ஒரு பெண்ணின் காலில் விழுந்ததாய்க் கூறவும், அம்மாவுக்கும், மகளுக்கும் அதிர்ச்சி. அதையும் இவன் என்னவோ சின்னத்திரை விருது வாங்கியது போலச் சிரித்துக் கொண்டே கூறவும், அவர்கள் இருவரும் மேலுயும் கீழேயும் அவனைப் பார்த்தனர்.

தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருந்தவன், சற்று பொறுத்து அவர்களைத் திரும்பிப் பார்க்கவும் தான், அவ்விருவரும் அவனை வேற்றுலக ஜந்துவைப் போலப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

சட்டென நிமிர்ந்தவன், “என்ன அப்படிப் பார்க்கறீங்க?” என்று கேட்கவும்

அவன் அம்மா நளினியோ, “இல்ல… இப்படிச் சிரிச்சுட்டே சொல்ற அளவுக்கு அப்படி என்ன தான் நடந்துச்சு? எதுக்காக அபி கால்ல நீ விழுந்த?” என்று கேட்டார்.

அதற்கு மீண்டும் சிறுவெட்கம் கலந்த சிரிப்பே வெளிவர அதை முயன்று அடக்கினான் கிருஷ்ணா. அதைப் பார்த்த தன்யாவிற்கு, லேசாக மனதில் சிறுசந்தேகம் வரத் தொடங்கியது.

“சொல்லு அண்ணா.. அம்மா கேட்கறாங்கல்ல? எதுக்காக நீ அபி கால்ல விழுந்த?” என்று இம்முறை அவள் அழுத்திக் கேட்கவும், ஒரு கணம் நிதானித்துப் பின் சுதாரித்தான் கிருஷ்ணா.

பிறகு, மீண்டும் முகத்தை வழமை போல கடுகடுவென வைத்துக் கொண்டு, “என்ன ரெண்டு பெரும் என்னையே குறுக்கு விசாரணை செஞ்சுட்டு இருக்கீங்க?” என்று கேட்கவும்

அவன் சுதாரித்துக் கொண்டதை உணர்ந்த தன்யா, “இல்லண்ணா.. நீ தான சொன்ன? காலேஜ் படிக்கறப்போ அபி கால்ல விழுந்தனு.. அதான் என்னன்னு கேட்டேன்” என்று மீண்டும் விசாரணையைத் தொடரவும்

அந்தக் கடுகடு முகத்தினை மாற்றாமலேயே, “ஹ்ம்ம்.. அது என்னன்னு உன்னோட அபிகிட்டயே கேளு..” என உரைத்துவிட்டுக் கிளம்பி விட்டான்.

அம்மாவும், மகளும் ஆச்சரியத்திலும், குழப்பத்திலும் தலையைப் பிய்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

அந்தச் சிந்தனையிலேயே உழன்றிருந்த தன்யாவிடம், “ஹே தனு.. நாளைக்கு எப்படியாவது அபிகிட்ட பேசி கிருஷ்ணா எதுக்காக அவளோட கால்ல விழுந்தான்னு கேட்டுடு… என்ன நடந்ததுன்னு தெரியாம, தலையே வெடுச்சுடும் போல இருக்கு” என்று நளினி கூறவும்

“ஹ்ம்ம் நான் அத மட்டுமா கேட்கப் போறேன்… அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன நடந்துச்சுன்னு முழுசா விசயத்த கறந்துட மாட்டேன்…” என்று சவாலாய்க் கூறினாள் தன்யா.

மறுநாள் பொழுதும், புள்ளினங்களின் பூபாளத்துடன் அழகாகவே விடிந்தது.

அனைவரும் வழக்கம் போலத் தத்தமது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த சமயம், சமையலறையில் தன் அத்தையுடன் நின்று கொண்டிருந்த அபியிடம் வந்தான் கிருஷ்ணா.

வந்தவன், “என்ன அபி நீ ரெடியா? கிளம்பலாமா?” என்று கேட்கவும், அவனைப் பார்த்தது புருவம் சுருக்கியவள், “எங்க கிளம்பலாமான்னு கேட்கறீங்க? நான் தான் நேத்தே உங்ககூட எங்கயும் வரலன்னு சொல்லிட்டேன்ல?” என்று சிடுசிடுக்க

ஆனால் வம்சி கிருஷ்ணாவோ, அப்பொழுது மட்டும் நல்ல பிள்ளையாக, தன் தாயிடம், “அம்மா.. நீங்களே சொல்லுங்கம்மா.. இப்படி வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தா எப்படி? கொஞ்சம் வெளில அங்க இங்கன்னு போயிட்டு வந்தா தான மனசு ரிலாக்ஸ் ஆகும். இல்லனா இப்படி உர்ருன்னு உராங்குட்டான் மாதிரி இருக்க வேண்டியது தான்” என்று அவளை உசுப்பேத்தும் விதமாகக் கூறவும், கோபம் சிலுப்பிக் கொண்டு வந்தது அபிக்கு.

“என்ன… யாரு உராங்குட்டான்? நானா? அதுவும் உம்முன்னு இருக்கறத பத்தி நீங்க.. சொல்றீங்களா? உர்ருன்னு இருக்கற உராங்குட்டானுக்கு எல்லாம் தலைவனே நீங்க தான்னு இங்க இருக்கற எல்லாருக்கும் தெரியும். அது மட்டுமில்லாம, நான் உங்ககூடத் தான் வெளில வர மாட்டேன்னு சொன்னது. நான்.. நான்..” என்று இறுதியில் திணறியவளை, அப்பொழுது தான் தனது வீட்டிலிருந்து அங்கு வந்த தன்யா காப்பாற்றினாள்.

அவளைப் பார்த்ததும், ஒரு முடிவுக்கு வந்தவளாக, “நான் தன்யா கூட வெளில போகப் போறேன். நீ ரெடியா தான வந்த தனு? நாம பிரேக்பாஸ்ட் முடுச்சுட்டு வெளில போறோம் சரியா?” என்று அவளைப் பார்த்துக் கேட்டாள்.

தலையும் புரியாது வாலும் புரியாது.. திருதிருவென விழித்த தன்யா, ஆமாம் என்றோ இல்லை என்றோ யாருக்கும் புரியாதபடிக்கு ஒரு தலையசைவை பதிலாய் அளித்தாள்.

அதைக் கண்ட அபி, “பார்த்தீங்களா தன்யாவே சரின்னுட்டா, நாங்க ரெண்டு பெரும் இன்னைக்கு வெளில போறோம்” என்று வீறாப்பாய் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

நிஜமாகவே அங்கே என்ன நடக்கிறதென்று நளினிக்கும் சரி, தன்யாவிற்கும் சரி… ஒன்றுமே விளங்கவில்லை.

“ஏய் ஏன்டா அவளைச் சும்மா வம்பிழுத்துகிட்டே இருக்கற? அவ உன்னோட அத்தை பொண்ணு தான், அது மட்டுமில்லாம உன்னோட காலேஜ் ஜுனியர் தான். அதுக்காக இப்படி டீஸ் பண்ணிகிட்டே இருக்கக் கூடாதுடா கண்ணா…” என்று சீரியஸான குரலில் நளினி கூறவும், அவரைப் பார்த்துத் தன்மையாகச் சிரித்தான் கிருஷ்ணா.

“அம்மா… உங்களுக்கு ஒன்னு புரியல… இவ்வளவு நாள் நீங்க அவகிட்ட பாசமா எவ்வளவு தூரம் உருகி உருகி பேசியிருப்பீங்க? அப்போ எல்லாம் உங்ககிட்டயோ, இல்ல தனுகிட்டயோ சகஜமா பேசி இருக்காளா? இப்போ நான் கொஞ்சம் டீஸ் பண்ணினதும் பாருங்க உங்க கூட ஒட்ட ஆரம்பிச்சுட்டா.. அவ அப்படித் தான் மா. அவளை எப்படி வழிக்குக் கொண்டு வரதுன்னு நான் பார்த்துக்கறேன்” என்று தாயிடம் கூறியவன்

தன்யாவிடம் திரும்பி, “சீக்கிரம் சாப்பிட்டுட்டு ரெடியாகு தனு. ரெண்டு பேரும் சீக்கிரம் போயிட்டு வந்துடுவீங்களாம்” என்று என்னமோ தானே அவர்கள் இருவரையும் ஒன்றாய் வெளியே போகச் சொன்னவன் போலச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அவன் சென்ற பிறகு நளினியும் தன்யாவுமோ இவர்களுக்கு இடையில் இருப்பது வெறும் கல்லூரிக்கு கால நட்பு மட்டும் தானா? என்று சந்தேகிக்கத் துவங்கினர்.

பிறகு சற்று நேரத்தில் தன்யாவும், அபியும் வெளியே ஷாப்பிங் செல்வதென முடிவெடுத்து மாலுக்குச் சென்றனர்.

என்ன வாங்குவது ஏது வாங்குவதென எதையும் யோசியாமல், கால் போன போக்கிலே ஒவ்வொரு கடைக்குள்ளும் ஷாப்பிங்.. (பல கடைகளில் விண்டோ ஷாப்பிங்) செய்து கால்கள் களைத்து, “போதும் பா.. விட்டுடு பா..” என்று கெஞ்சும் வரையில் சுற்றி, இறுதியில் இருவரும் அந்த ஒரு நாளிலேயே உற்ற தோழிகளாயிருந்தனர்.

பின்பு வீடு வரும் வழியில், அதுவரை தன் மனத்தில் அரித்துக் கொண்டிருந்த கேள்வியை அபியிடம் கேட்க முடிவெடுத்தாள் தன்யா.

சாதாரணமாகக் கிருஷ்ணாவைப் பற்றிப் பேசத் தொடங்கியவள், அவன் பேச்சை எடுத்ததுமே அபியின் முகம் மாறுவதைக் குறிப்பெடுத்துக் கொண்டாள்.

பின்பு பேச்சுவாக்கில் அவர்களது கல்லூரிக்குக் காலத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, “அப்பறம் அபி.. உங்க காலேஜ்ல ஜூனியர்ஸ் தான் சீனியர்ஸை ராக் பண்ணுனீங்களாம்?” என்று தன்யா கேட்கவும்

சிறு தடுமாற்றத்துடன், “என்ன தனு சொல்ற? எனக்குப் புரியலையே?” எனக் கேட்டாள் அபி.

“அது தான் அபி.. நீ காலேஜ் சேர்ந்த ரெண்டாவது நாளே கிருஷ்ணாவை உன் காலுல விழ வச்சுட்டியாம்?” என்று சகஜம் போலச் சிரித்துக் கொண்டே கேட்கவும், அபியின் மனம் சிறிது தடுமாறி… ஆறு ஆண்டுக்கு முன் விழுந்தது.

அன்று தான் லயா கல்லூரியில் சேர்ந்த முதல் நாள். ரதிக்கு மருத்துவத்தின் மேல் விருப்பம், அதனால் அவள் பிரபல மருத்துவக் கல்லூரியில் சேர, லயாவோ கணினியின் மேல் கொண்ட காதலால் பொறியியலைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.

அதனால் இருவருக்கும் வெவ்வேறு கல்லூரிகள். அதனால் அப்பொழுது முதல் நாள் கல்லூரிக்குப் பேருந்தில் வரும் பொழுதே, அவளைப் போலவே புதியவளான அக்கல்லூரியின் முதலாமாண்டு பொறியியல் மாணவி ஒருத்தியை சிநேகம் செய்து கொண்டிருந்தாள் லயா.

அவர்கள் இருவரும் கல்லூரிக்குள் நுழைந்த பிறகு முதலாமாண்டு மாணவர்களை வரவேற்பதற்காக ஒரு ஆடிட்டோரியத்தில் விழா வைத்திருப்பதாகக் கூறவும், அங்குச் செல்ல முனைந்தனர்.

அப்பொழுது அங்கு வந்த சில மாணவர்களும், மாணவிகளும் அவர்களை வழிமறித்தனர். அவர்கள் பேசிய பாங்கிலேயே தெரிந்தது.. அவர்கள் அக்கல்லூரியின் சீனியர் மாணவர்கள் என்பது.

அதில் ஒருத்தி, லயாவையும் அந்த மற்றொரு பெண்ணையும் அருகே அழைக்க, தயக்கத்துடன் அவர்களிடம் சென்றனர்.

“என்ன? ரெண்டு பேரும் காலேஜ்க்கு புதுசா வந்தவங்க மாதிரி பயந்துட்டு வராம, ரொம்பத் தெனாவெட்டா வர மாதிரி தெரியுதே?” என்று அந்தச் சீனியர் மாணவி இவர்களை வேண்டுமென்றே வம்பிழுக்க

 லயாவுடன் வந்த மற்றொருத்தியோ, “ஹையோ.. அப்படியெல்லாம் இல்லங்க சிஸ்டர் .. எங்களுக்கு அந்த ஆடிட்டோரியம்ல எதோ inauguration function இருக்குன்னு சொன்னாங்க. அத பத்தி தான் நாங்க பேசிட்டு வந்தோம் சிஸ்டர்” என்று சிறு பயத்துடன் கூறினாள்.

அதைக் கேட்ட அந்தச் சீனியர் பெண்மணி கோபத்துடன், “ஹேய் இங்க பாருடா, நான் இவளுக்குச் சிஸ்டராம். இந்த அக்கா தங்கச்சி சென்டிமென்ட் எல்லாம் என்கிட்டே வேண்டாம், ஒழுங்கா சீனியர்ன்னு கூப்பிடு. அப்பறம் அந்த மேடம் என்ன பேச மாட்டங்களாம்மா? மௌன விரதமா?” என்று லயாவைப் பார்த்துக் கேட்க

அவளோ.. “அச்சச்சோ.. மௌனமும் இல்ல விரதமும் இல்ல சீனியர்.. நீங்க இவ்வளவு நேரம் எனக்குச் சீனியர்ன்னு தெரிலைய சீனியர்.. அதனால தான் நான் பதில் சொல்லல சீனியர்..” என்று வேண்டுமென்றே நக்கலாகக் கூறினாள்.

அவள் பேசியத்தைக் கேட்டு, அந்தச் சீனியர் மாணவி மேலும் கடுப்படைந்தாள் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

எனவே அவள்..”ஹேய்.. என்ன? உன் பேச்சுல திமிர் தெரியுதே.. உன்ன…” என்று கூறிவிட்டு சற்று யோசிக்கவும் செய்தாள்.

பிறகு.. “ம்ம்.. நீங்க ரெண்டு பேரும் என்ன செய்யறீங்கன்னா.. இப்போ உங்களுக்கு inauguration function தான? சோ, நாம அந்த function அ இங்க.. இப்போ celebrate பண்ணப் போறோம். எப்படித் தெரியுமா? இந்த வழியாத் தான் எல்லா ஸ்டுடென்ட்ஸும் கிளாஸ்குள்ள போகணும். அதனால நீங்க என்ன செய்யறீங்கன்னா.. இந்தப் பெஞ்ச் மேல ஏறி நின்னுட்டு வர எல்லா ஸ்டுடென்ட்ஸுக்கும் சல்யூட் வச்சு.. வெல்கம் பண்றீங்க. சரியா?” என்று அவர்கள் இருவரிடமும் கூறிவிட்டுத் தன் நண்பர்கள் பட்டாளத்தைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தாள்.

அதைக் கேட்ட லயாவுடன் இருந்த மற்றொருத்தி அழாத குறையாக.. “அச்சச்சோ சீனியர்… வேண்டாம் சீனியர், எல்லாரும் பார்த்து சிரிப்பாங்க” என்று கூறவும், அமைதியாக அந்தப் பெஞ்சின் மேலே ஏறி நின்றாள் லயா.

அதைப் பார்த்த அந்தச் சீனியர் மாணவர்கள் தான் வாயடைத்து நின்றனர். ஏனென்றால் இப்படி ஒரு டாஸ்க் கொடுத்தால், அவள் பயந்து போய்த் தங்களிடம் மன்னிப்பு கேட்பாள் என்று அவர்கள் எண்ணியிருக்க, அபி லயாவோ, அவர்கள் கூறியதை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதைப் போலச் செய்யவும், அதற்கு மேல் அவளை என்ன செய்வதென்று தெரியவில்லை அவர்களுக்கு.

ஆனால், அபி லயாவின் தோழி தான் மிகவும் பதறிப் போனாள்.

“ஏய் அபி…. என்னடி? அவங்க தான் சொன்னாங்கன்னா.. நீயும் இப்படிப் பெஞ்ச் மேல ஏறி நிக்கற. யாராவது பார்த்தா பிரச்சனை ஆகிடப் போகுது, இறங்கு அபி” என்று அவள் கூற

“ஹேய் இதுல என்னடி பிரச்சனை ஆகப் போகுது? யாராவது கேட்டா, நம்ம சீனியர்ஸ் தான் இப்படிச் செய்யச் சொன்னாங்கன்னு சொல்லிட்டா போச்சு” என்று தன் தோழியிடம் கூறிய லயா

அந்தச் சீனியர் மாணவியிடம் திரும்பி, “என்ன சீனியர் நான் சொன்னது சரி தான? யாராவது கேட்டாங்கன்னா, நீங்க தான் சொன்னீங்கன்னு சொல்லிட்டறேன். உங்க பேர சொன்னதுக்கப்பறமும் யாராவது எங்களைக் கேள்வி கேட்பார்களா? ஆமா உங்க பேரு என்ன சீனியர்?” என்று இம்முறை படு கிண்டலாக அவள் கேட்கவும், அந்தச் சீனியர் மாணவிக்கு வியர்த்து விட்டது.

பின்னே… இப்படி அவள் ராகிங் செய்கிறாள் என்று கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரிந்தால் போதுமே. இவளது படிப்பே பாழாகிவிடும் அல்லவா? அதனால் மனதுள் அவளுக்குப் பயம் எழுந்தது உண்மையே.

ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாது, முகத்தில் அந்தக் கெத்தும் குறையாமல், “ஏய் என்ன ரொம்ப ஸீன் போடற? முதல்ல பெஞ்சுல இருந்து கீழ இறங்கு” என்று அதட்டலாகக் கூறினாள்.

ஆனால் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாத அபி லயா, “அய்யயோ சீனியர்.. உங்க வார்த்தை தான் எனக்குக் கட்டளை.. அது தான் எல்லாருக்கும் சாசனம். அப்படி இருக்குறப்போ நான் எப்படி உங்க ஆர்டெர மீறுவேன். அதுமட்டுமில்லாம, சீனியரோட வார்த்தை எப்பவுமே ஒன் வே தான், ரிட்டர்ன் வாங்கக் கூடாது” என்று வடிவேலு பாணியில் நக்கலாகக் கூறிவிட்டு, பிடிவாதமாக அந்தப் பெஞ்சின் மீதே நின்றாள்.

அவளை எப்படிக் கீழே இறக்குவதெனத் தெரியாமல், அந்தச் சீனியர்கள் பட்டாளம் கையைப் பிசைந்து கொண்டு நிற்க.. அப்பொழுது அவர்களுள் ஒரு மாணவன் அலறும் சப்தம் கேட்டது.

அனைவரும் அவனை என்னவென்று கேட்க, அவன் தன் சுட்டு விரல் கொண்டு ஓர் இடத்தைக் காண்பித்தான். அவன் சுட்டும் இடத்தைப் பார்த்த மற்றவர்கள், பயத்தில் வியர்த்து விறுவிறுத்துப் போனார்கள்.

ஏனெனில்… அங்கு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.. வம்சி கிருஷ்ணா.

(தொடரும் – சனிக்கிழமை தோறும்)

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 17) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

    முதல் மரியாதை (சிறுகதை) – ✍ கீதா ராணி பிரகாஷ், திருப்பூர்