in

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 4) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காதலாய்...❤ (பகுதி 4)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

உன்னையும் என்னையும் தனித்திங்கு பிரித்து.,

உயிரால் உனையே என்னுடன் பிணைத்து.,

சர்வாதிகாரமாய் என்னுள் உனது அரசாட்சி..

அதுவே காதலின் பிரித்தாளும் சூழ்ச்சி!!

அங்கிருந்தோர் அனைவரும் அந்த இன்னொரு பெண் யாரென்பது போல அபியைப் பார்க்க, அதுவரை மௌனித்திருந்தவள் மெல்லத் தன் வாயைத் திறந்தாள்.

“இது என்னோட தங்கை… அபி லயா..” என்று கூறவும், மற்றவர் பார்வையில் சந்தேகம் கூடியது. அபியின் அத்தை, மாமா, தாத்தா, பாட்டியுடன், கிருஷ்ணாவும் கூட இம்முறை அவளைக் கூர்மையாக நோக்கினான் .

அவர்கள் பார்வைக்குப் பதிலளிக்கும் விதமாக, “இது என்னோட தங்கை தான். நான் இந்த வீட்டு பொண்ணுன்னா, இவளும் இந்த வீட்டு பொண்ணு தான். இவ வேற நான் வேற இல்ல.. இன்னும் சொல்லணும்னா.. இவ இடத்துல உங்க அபிரதி இருந்தா…” என்று கூறி முடிப்பதற்குள், வம்சி கிருஷ்ணா வேகமாக அவன் கைக்கொண்டு அவளது வாயை அடைத்தான்.

நிதானமாக அவனது கையை விலக்கியவள், “நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடுச்சுடறேன் கிருஷ்ணா…” என்று கூறிவிட்டு, மற்றவர்களிடம் திரும்பி, “இந்த இடத்துல உங்க அபிரதி இருந்தா அவளுக்கு என்ன மரியாதை செய்வீங்களோ, அதே மரியாதை இவளுக்குக் கிடைக்கணும். இல்லனா… நான்.. எங்க ஊருக்கு போய் என் அப்பாக்கும், தங்கைக்கும் செய்ய வேண்டிய இறுதி காரியங்களைச் செஞ்சுக்கறேன்” என்று கறாராகக் கூறினாள்.

அதைக் கேட்டு மற்றவர்களிடம் சலசலப்பு. ஏற்கனவே துளசியின் வரவினால், தனது மகள் ரஞ்சனி, வம்சி கிருஷ்ணாவை மணக்க முடியாது போய் விடுமோ என்ற கடுப்பில் இருந்த, நளினியின் அண்ணனும், அவரது மனைவியும், இப்பொழுது வேண்டுமென்றே பிரச்னையைப் பெரிதுபடுத்த ஆரம்பித்தனர்.

“என்னமா… யாரோ ஒரு பொண்ண காமிச்சு, இது என்னோட தங்கச்சின்னு சொல்ற? ஆனா இத பார்த்தா.. உன்னோட வயசு மாதிரி தான் தெரியுது. கண்ட கண்டவங்களுக்கும் நாங்க இறுதி காரியம் செய்ய முடியுமா? இந்தக் குடும்பத்தோட கௌரவம் என்னாவது?” என்று வம்சியின் மாமா நாகேந்திரன் கேட்க,

“இவளும் செழியன், துளசியோட பொண்ணு தான். இவளுக்கு அந்த மரியாதையை நீங்க தருவீங்கன்னா.. நான் இங்க இருக்கேன். இல்லனா இப்போவே கிளம்பறேன்” என்று கூறிவிட்டு, தனது கைபேசியை எடுத்து யாருக்கோ அபி போன் செய்ய முயல, வெடுக்கென அவளது கைபேசியைப் பறித்தான் வம்சி கிருஷ்ணா.

“அபி… நீ மாறவே மாட்டியா? எப்பவும் இப்படித் தான் கோபத்துல அவசரப்பட்டு முடிவெடுக்கற. அதனால மத்தவங்க மனசு என்ன கஷ்டப்படும்னு ஏதாவது யோசிக்கறயா? உனக்கென்ன அதுக்குள்ள அவ்வளவு கோபம்? இந்த வீட்டுல முடிவெடுக்கற உரிமை தாத்தாக்கு மட்டும் தான். அதனால நீ அமைதியா இரு” என்று கூறினான்.

அவன் அபியிடம் பேசியதைக் கேட்டு நாகேந்திரன் வேறெதுவோ பேச முயல, சிறிது தொண்டையைக் கனைத்து, மற்றவர் கவனத்தைத் தன் பக்கம் இழுத்தார், அரங்கநாதன்.

உடனே மற்றவர் அமைதியாகி அவரைப் பார்த்தனர். எல்லாரையும் விட எதற்கும் அசராத பார்வையுடன் நாகேந்திரன், மற்றும் அவரது மனைவி மஞ்சு.

அனைவரையும் கூர்மையாகப் பார்த்த அரங்கநாதன் பொதுவாக, “சொந்தக்காரங்க… எப்பவும் சொந்தக்காரங்க மாதிரி நடந்துக்கிட்டா நல்லது. எந்த எல்லையில் இருக்கணுமோ  அந்த எல்லையில் இருக்கணும்” என்று கூறியதும், அபியைத் தான் கூறுகிறார் என்றெண்ணி நாகேந்திரனும், மஞ்சுளாவும் அபியை நோக்கி கர்வமாய்ப் பார்த்தனர்.

ஆனால் மேலும் தன் பேச்சைத் தொடர்ந்த அரங்கநாதன், “சொந்தக்காரங்கன்னா நல்லது கெ,ட்டதுக்கு வந்தோமா, தலையைக் காமிச்சோமா, சத்தமில்லாம கிளம்பினோமான்னு இருக்கணும். அத விட்டுட்டு என் வீட்டுக்குள்ள வந்துட்டு என்ன மீறி எந்த நாட்டாமையும் செய்யலாம்னு நினைக்காதீங்க” என்று நாகேந்திரனைப் பார்த்துக் கூறியவர், தனது மருமகள் நளினியைப் பார்த்து, “என்னமா சரிதானே?” எனக் கேட்டார்.

அதற்கு அவரும், “சரி தான் மாமா..” என்று கூறிவிட்டு தன் அண்ணன் நாகேந்திரனை கடுகடுவெனப் பார்க்க, தோளில் போட்ட துண்டை வெடுக்கென உதறிவிட்டு நாகேந்திரன் அவரின் குடும்பத்தினருடன் வேறெதுவும் பேசாது கிளம்பி விட்டார்.

அதன் பின்பு, செழியன் மற்றும் ரதியின் இறுதிக் காரியங்கள் நடைபெற, உயிரில்லாத ஓவியமாய் இருந்தாள் அபி.

அப்படியே இருவாரங்கள் கழிய, அவளது முகத்தின் சோகமும், கண்களின் வேதனையும் மட்டும் மாறவில்லை. அவளுடன் யாராவது பேச முயன்றால், ஓரிரு வார்த்தைகளிலேயே பதிலளித்து விட்டுப் பேச்சை முடித்துக் கொள்வாள்.

ஆனால், தினமும் காலையில் ஒருமுறையும், மாலையில் ஒருமுறையும் மருத்துவமனைக்குச் சென்று தன் தாயுடன் சிறிது நேரம் செலவிட்டுவிட்டு வருவாள்.

இதையெல்லாம் கவனித்து வந்த கிருஷ்ணாவோ, தன் தாயிடம், அபியின் மனநிலையைப் பற்றிக் கூறி, அவரால் அதற்கு ஏதாவது உபாயம் செய்ய முடியுமா எனக் கேட்பதற்காக, அவரின் அறைக்குச் சென்றான்.

அப்பொழுது, நளினியின் அறையிலே தன்யாவும் இருந்தாள். அவன் அங்குச் செல்லும் போதே அவர்களது பேச்சுச் சத்தம் அவனுக்கு அறைக்கு வெளியிலேயே கேட்டது. அவர்களும் அபியைப் பற்றித் தான் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

“என்னம்மா செய்யறது. அவ தான் நத்தையா சுருண்டு இருக்காளே.. நான் கூட மாமா, அத்தைய பத்தி பேசினா அவ மனசு கஷ்டப்படுவாளேன்னு அவளோட காலேஜ் வாழ்க்கையைப் பத்தி பேச ஆரம்பிச்சேன்.. ஆனா.. அதுக்கும் ஒன்னு ரெண்டு வார்த்தையைப் பதில் சொல்லிட்டு எழுந்து போய்டறா. வேறே ஏதாவது ஆறுதலா சொல்லலாம்ன்னா அழுக ஆரம்பிச்சுடறா. அத விட, அவளோட கண்ணீர் நமக்குத் தெரியக் கூடாதுன்னு, வைராக்கியமா கஷ்டப்பட்டு அந்த அழுகையைச் சமாளிக்கறா பாருங்க.. அது தான் இன்னும் கஷ்டமா இருக்கு” என்று வருத்தமாகத் தன்யா கூறக் கேட்டவன், ஒரு முடிவுக்கு வந்து, அமைதியாக அங்கிருந்து சென்றான்.

அன்றிரவு, தாத்தாவும், பாட்டியும் வயது முதிர்வின் காரணமாக எப்பொழுதும் போல நேரமே உணவை முடித்துக்கொண்டு விட, கோவேந்தனும், தந்தையுடன் பிசினஸ் பேசிக் கொண்டே உணவருந்திப் பழக்கம் என்பதால், அவரும் அவர்களுடனே உணவை முடித்து விட்டார்.

இப்பொழுது கிருஷ்ணா, தன்யா, அபி, இவர்கள் அனைவரும் உணவருந்த உணவு மேஜையின் முன் அமர்ந்திருந்த நேரம்.. வேலைக்காரப் பெண், உணவெல்லாம் எடுத்து வைத்துவிட்டு அகன்ற பொழுது, நளினி அனைவருக்கும் பரிமாறிவிட்டு, தானும் உணவருந்த அபியின் அருகிலேயே அமர்ந்தார்.

அப்பொழுது அபியோ, உணவை அளந்து கொண்டிருக்கக் கண்டதும், “என்ன அபி.. உனக்குச் சாப்பாடு பிடிக்கலையா?” என்று குரலில் வாஞ்சையுடன் வினவினார்.

அதற்கு அவளோ, “இல்ல.. இல்ல அத்தை..” என்று சமாளிக்கவும், இடையிட்ட கிருஷ்ணாவோ, “அம்மா.. அவ ஒரு நான்-வெஜிடேரியன். அப்பறம் எப்படி அவளுக்கு இந்தச் சாப்பாடு பிடிக்கும்?” எனவும்

“டேய் நான்-வெஜிடேரியன்னா, சைவம் சாப்பிட மாட்டாங்களா?” என்று நளினி கேட்க

“அதெல்லாம் மத்தவங்களுக்கு, நம்ம அபி கம்ப்ளீட் நான்- வெஜிடேரியன். அவ சைவத்தைக் கையால தொட கூட மாட்டா” என்று கூறினான்.

“அப்படியா அபி?” என்று அவளைப் பார்த்துக் நளினி கேட்க

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று சிறிது சந்தேகத்துடன் சிறிது புருவம் உயர்த்திக் கிருஷ்ணாவிடம் வினவினாள் தன்யா.

“என்ன அபி, தன்யா கேட்கறதுக்கு நான் பதில் சொல்லிடட்டுமா?” என்று கிருஷ்ணா கேட்க… அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் மற்ற இருவரும் அபியையும், கிருஷ்ணாவையும் மாறி மாறி பார்த்தனர்.

“சரி நான் சொல்ல வேண்டாம்னா நீயே சொல்லிடு.. உனக்கு நான் யாருன்னு..” என்று அவன் விஷமத்துடன் கூற, அபியின் முகத்தில் லேசாகச் செம்மை படர ஆரம்பித்தது.

அதைக் கண்ட நளினியும், தன்யாவுமோ ஆச்சர்யத்தில் வாய் பிளந்து நின்றனர்.

ஆனால் அபியோ அந்த முகச் சிவப்பை மறைத்து விட்டு, கருங்கல்லென முகத்தை மாற்றியவள், “இவரு.. வந்து.. கிருஷ்ணா.. எனக்குக் காலேஜ்ல சீனியர்” என்று உண்மையை உடைத்துக் கூறினாள் .

ஆனால் விடாக்கண்டனாக, “ஹோ அவ்வளோ தான் உனக்கும் எனக்கும் உள்ள உறவா அபி?” என்று குறும்புச் சிரிப்புடன் கிருஷ்ணா கேட்கவும்,

“க்ரிஷ் ப்ளீஸ்…” என்று அவனிடம் முணுமுணுத்துவிட்டு, “அது.., எனக்கும் கிருஷ்ணாக்கும் உள்ள உறவுன்னா.. அவர் எங்க காலேஜ் ஸ்டூடன்ட் சேர்மன், அவ்வளோ தான்” என்று கூறிவிட்டு, மீண்டும் தன் தட்டை நோக்கி பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள் அபி.

அவளது தலைக்கு மேலே நளினியும், தன்யாவும் கிருஷ்ணாவை “அடப்பாவி..” என்பது போலப் பார்த்தனர்.

பிறகு தன்யா அபியிடம், “என்ன அபி… நான் காலையில தான் உன்கிட்ட உன் காலேஜ் லைஃப் பத்தி கேட்டேன். ஆனா அப்போ கூட நீ இந்த விசயத்த சொல்லலியே?” என்று கேட்டாள்.

அதற்கு அபி கொஞ்சம் தடுமாறவும், கிருஷ்ணாவே உதவிக்கு(!) வந்தான்.

“அது தன்யா.. அபிக்கு என்ன பத்தி உன்கிட்ட சொல்ல கொஞ்சம் வெட்கமா இருந்துருக்கும்” என்று மீண்டும் சிரிப்புடன் கூறினான்.

அதைக்கேட்டு விறுக்கென நிமிர்ந்த அபி, “இதுல வெட்கப்பட என்ன இருக்கு, அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்று படபடவெனக் கூறியவள், நளினியிடம் திரும்பி, “அத்தை எனக்குத் தூக்கம் வருது… நான் தூங்கப் போறேன்” என்று கூறிவிட்டு விறுவிறுவென எழுந்து சென்றாள்.

அப்பொழுது கிருஷ்ணா, “ஹேய்.. கோல்ட் பிஷ்…” என்று சத்தமாக விளிக்கவும், தூக்கிவாரிப் போட திரும்பிய அபி… “க்ரிஷ்.. என்னதிது?” என்று பதட்டத்தில் தானும் வாயை விட்டாள்.

அதற்கு நிதானமாக, “ஒண்ணுமில்ல.. நாளைக்கு நாம ரெண்டு பேரும் மட்டும் வெளில போறோம். காலையில பதினோரு மணிக்கு..” என்று கிருஷ்ணா கூறவும்

பட்டென, “நான் வர மாட்டேன்” என்று கூறினாள் அபி.

அதற்குச் சற்றும் சளைக்காத கிருஷ்ணா, “பதினோரு மணி…” என்று கூறிவிட்டு, தலையை ஒரு விரலால் தொட்டுக் காண்பித்து.. ‘ஞாபகம் வைத்துக் கொள்’ என்பதாய் சைகை காண்பித்தான்.

அதற்குப் பதிலேதும் பேசாது, அவனை முறைத்து விட்டு சென்று விட்டாள் அபி.

அவளது முறைப்பைக் கண்டு தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டு திரும்பியவனை, கண்களில் கொலை வெறியுடன் தாயும் தங்கையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்தும் லேசாகச் சிரித்தவனை இருவரும் பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டனர்.

“டேய்.. அவ யாருடா.. ஏன்டா அவளை உனக்கு ஏற்கனவே தெரியும்னு நீ சொல்லல?” என்று தயார் கேட்டார் என்றால்

தங்கையோ, “என்ன அண்ணா… நீ அபியை கோல்ட் பிஷ்னு கூப்பிடற ? அவ உன்ன க்ரிஷ்னு கூப்பிடறா? என்ன தான் விஷயம்? எத எங்ககிட்ட இருந்து நீங்க ரெண்டு பேரும் மறைக்கறீங்க?” என்று கேட்டாள்.

இருவரது கேள்விக்கும் அந்த மாயக் கண்ணன் மர்மச் சிரிப்பையே பதிலாகத் தந்தான்.

கடுப்படைந்த தன்யா, அவனது சட்டையைக் கொத்தாகப் பிடித்து, “இப்போ நீ உண்மையைச் சொல்லல… அவ்வளவு தான்” என்று மிரட்டினாள்

ஆனால் அவளது மிரட்டலுக்கெல்லாம் மசிகின்ற ஆளா அந்தக் கிருஷ்ணா? அப்பொழுதும் கூட இன்னும் பெரிதாகச் சிரித்தானே ஒழிய பதிலில்லை அவனிடம்.

ஆனால் நளினியோ சிறிது பதட்டப்பட்டவராக, “என்னடா நீ பாட்டுக்கு சிரிக்கற? அது மட்டுமில்லாம, இப்பவும் காலேஜ் சீனியர் மாதிரியே அவள கோல்ட் பிஷ் அது இதுன்னு சொல்லி ராக் பண்ற? அவ பாட்டுக்கு கோவிச்சுட்டு இங்கிருந்து கிளம்பிடப் போறா டா..” என்று சற்று சீரியஸாக வினவவும், கிருஷ்ணாவுக்கு மேலும் சிரிப்பு தான் வந்தது.

“அம்மா.. அம்மா.. எனக்கு அபியை பத்தி தெரியும். அவ அப்படி எல்லாம் பயந்து போயோ, இல்ல கோவிச்சுட்டோ கிளம்பற ஆள் கிடையாது. அவ எப்படி இழுத்தா எப்படி வளைவாள்ன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அதனால நீங்க கவலையேபடாதீங்க. அப்பறம் என்ன சொன்னீங்க? நான் அவளை ராக் பணறேன்னா?” என்று இறுதி வரியைக் கூறிவிட்டு மீண்டும் பெரிதாகச் சிரித்தவன்

“அம்மா.. அவ காலேஜ் சேர்ந்த ரெண்டாவது நாள்லயே என்ன அவளோட கால்ல விழ வச்சா தெரியுமா? அதுவும், அவ பர்ஸ்ட் இயர், நான் பைனல் இயர். அப்படி இருந்தும் கூட, சீனியர்ன்ற பயம் கொஞ்சம் கூட இல்லாம, திமிரா என்ன அவ கால்ல விழ வச்சா..” என்று குரலில் ரசனையுடன் கிருஷ்ணா கூறவும்..

“என்னது.. நீ ஒரு பொண்ணு கால்ல விழுந்தியா?” என்று மற்ற இருவரும் திகைப்பில் விழி விரித்து நின்றனர்.

(தொடரும் – சனிக்கிழமை தோறும்)

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 16) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

சோறும் சகதியும் (சிறுகதை) – ✍ உமாதேவி வீராசாமி, மலேசியா.