sahanamag.com
சிறுகதைகள்

சோறும் சகதியும் (சிறுகதை) – ✍ உமாதேவி வீராசாமி, மலேசியா.

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ரண்டு நாள் தொடர் மழை காராக் பட்டணத்தை உருக்குலையச் செய்திருந்தது என்னமோ உண்மைதான். வரலாறு காணாத வெள்ளம். கண்ணை மூடித் திறப்பதற்குள் வெள்ளம் எனும் பேரரக்கன் தன் தீராப் பசியைத் தீர்த்துக் கொண்டான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் நட்ட நடுநிசியில் அலறியடித்துக் கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பட்டபாடு கல்லையும் கரைத்து விடும்.

ஒரே இரவில் காராக் பட்டணத்தில்  தன் குடியிருப்புப் பகுதியும் அடையாளம் காண முடியாத அளவிற்குச் சிதைந்திருந்ததைப் பார்க்க பார்க்க இதயத்திற்குள் ஆயிரம்  ஊசிகளால் தைப்பது போன்ற ஒரு வலி வந்து போனது ராஜனுக்கு.

ராஜனும் காராக்கில் பிறந்து வளர்ந்தவன் தான். அப்பா நாகையா முன்னாள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர். அம்மா மரகதம் குடும்ப மாது. ஒரு மாதத்திற்கு முன்பு தான் கோலாலம்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தான். 

வெள்ளம் ஏற்படுவதற்கு முதல் நாள் தன் பெற்றோரைச் சந்திக்க நிறைந்த ஏக்கத்தோடு வீடு திரும்பினான். அதுவும் நன்மைக்கே, இல்லையென்றால் வயதான நாகையாவும் மரகதமும் வெள்ளத்தை எதிர்கொள்ள முடியாமல் மிரண்டு  போயிருப்பர்.

வெள்ளம் வடிந்து இரண்டு நாட்களாகி விட்டன. ஆனால், தாமான் கெனாங்கா மக்களின் கண்ணீர் வடிந்த பாடில்லை. வாழ வீடில்லை. உடுத்த உடையில்லை. சேர்த்து வைத்த பொருளில்லை. மனத்திலே மகிழ்ச்சியில்லை. அகதிகளாய் பள்ளி மண்டபத்திலும் சுற்றத்தார் வீட்டிலும் நண்பர்கள் வீட்டிலும் அடைக்கலம் புகுந்தவர்கள் விக்கித்து நின்றதைப் பார்க்க முடியவில்லை.

ராஜனும் உடைந்துதான் போயிருந்தான். பள்ளி மண்டபத்தில் தரையில் தன் வலது கையைத் தலையணையாக்கி ஒருக்கலித்துப் படுத்திருந்த அம்மாவைப் பார்க்க முடியாமல் தவித்தான். அப்பா நாகையாவைச் சொல்லவே வேண்டாம். பிரம்மை பிடித்தவராய்ச் சுவரோடு சுவராய் ஒட்டி அமர்ந்திருந்தவரின் கண்கள் உயிரற்று இருந்தன.

“அப்பா, இந்த தண்ணீய குடிங்க.  சாப்பிடாம இருந்தா, போனதெல்லாம் வந்துருமா? மனச தேத்திக்கிங்கப்பா!” ராஜனின் வார்த்தைகளில் கருணையும் அன்பும் இழையோடின.

ஆனால், நாகையாவிடமிருந்து பதிலேதும் வரவில்லை. ராஜன், அப்பா நாகையாவைக் கூர்ந்து பார்த்தான். அவர் மண்டபத்தின் விட்டத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆயிரமாயிரம் கேள்விகள் அவர் மனத்தில் தோன்றியிருக்க வேண்டும். பலப்பல குழப்பங்கள் அவரைச் சூழ்ந்திருக்க வேண்டும். புரிந்துகொண்டான் ராஜன்.

“அப்பா! அப்பா! உங்களத்தான்… தண்ணிய குடிங்கப்பா,” நாகையாவின் தோள் பட்டையை லாவகமாய்ப் பிடித்து உலுக்கினான் ராஜன்.

பிரம்மையிலிருந்து மீண்டவராய் ராஜனை ஏறிட்டுப் பார்த்தார். ராஜன் கையில் இருந்த மினரல் வாட்டர் போத்தலை நீட்டினான். தண்ணீரைக் குடிக்குமாறு சைகை காட்டினான்.

“எல்லாம் போச்சிப்பா. இப்ப என்ன பண்ணப் போறோம்னு தெரியல,” நாகையாவின் குரலில் ஒரு வித நடுக்கம். பயமா, விரக்தியா,ஏமாற்றமா? யோசிக்கத் தொடங்கினான்.

ராஜனின் இதயம் அவன் பேச்சைக் கேளாமல் பதற்றத்தில் வேகமாய்த் துடிக்கத் தொடங்கியது. அடக்கப் பார்த்தான். முடியவில்லை. அப்பாவின் கவலை தோய்ந்த முகம் அவனை என்னமோ செய்தது.

இதுவரை ராஜன் அப்பாவை இப்படிப் பார்த்ததில்லை. ஆசிரியராக இருந்த காலக்கட்டத்தில் அவரைக் கண்டால் பயப்படாத மாணவர்கள் இல்லை. பெற்றோரும்கூட அவரிடம் மிகக் கவனமாய்ப் பேசுவதை ராஜன் பலமுறை பார்த்திருக்கிறான்.

கண்டிப்பானவர். ஆனால், இன்று அவரும் சாதாரண மனிதராய், துன்பத்தை எதிர்கொள்ள முடியாதவராய் உடைந்து போயிருந்தார். மனம் சோர்ந்து போயிருந்தார்.        

அப்பாவின் அருகில் அமர்ந்து கொண்டான் ராஜன். அவர் கைகளை எடுத்துத் தன் கைக்குள் வைத்து அழுந்த பிடித்துக் கொண்டான். அது நாகையாவிற்கு ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும். மூச்சை ஆழமாய் உள்ளே இழுத்து விட்டார். அவர் மூச்சுக் காற்று அனலாய்ச் சுட்டது. அவர் முதுகைத் தடவிக் கொடுத்தான் ராஜன்.

“ஹலோ… நகருங்க… நகருங்க. அப்படி ஓரமா நில்லுங்க. ஒய்.பி. வராரு,” இளைஞன் ஒருவன் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்தான்.

மண்டபத்தில் சலசலப்பு. அவன் பின்னால் பெரிய மனிதர் தோற்றத்தில் இரண்டு மூன்று பேர். வலது இடதெனத் தலையைத் திருப்பிப் பார்த்துக் கையசைத்துக் கொண்டு வந்தனர். அவர்கள் முகத்திலும் சோகம் பரவியிருந்தது. அந்தச் சோகத்தின் உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஒய்.பி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பலரும் எழுந்து நின்றுகொண்டனர். ராஜனும்தான். ஆனால், நாகையா எழ முயற்சிக்கவில்லை. தரையில் படுத்திருந்த மரகதம் அவசர அவசரமாய் எழுந்து உட்கார்ந்து கொண்டார். தலை முடியைச் சரி செய்து கொண்டார்.

அழுது வீங்கியிருந்த முகத்தைக் கீழே குனிந்துகட்டியிருந்த கைலியால் துடைத்து விட்டு  எழுந்து நிற்கப் பார்த்தார். தடுமாறி கீழே விழப் போனவரைத் தாங்கிப் பிடித்தான் ராஜன். மரகதம் மனதளவில் மட்டுமல்ல உடல் அளவிலும் பலவீனமாய் இருப்பது ராஜனை வருத்தியது.

“அம்மா, பரவால்ல ஒக்காருங்க,” ஒய்.பி’யின்அன்பும் அக்கறையும் மனத்தைத் தொட்டது. மரகதம் உட்காராமல் ராஜனின் பக்கத்திலேயே நின்று கொண்டார்.

“யாரும் கவலப்படாதீங்க. உங்களுக்குத் தேவையானத நாங்க செய்றோம். உங்களுக்குச் சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செஞ்சிட்டோம். சாப்பிட்டுத் தெம்பா இருங்க,” தைரியம் சொன்ன ஒய்.பி. கடவுளாய்க் காட்சியளித்தார்.

“ரொம்ப நன்றிங்க ஐயா. உங்கள நம்பித்தான் இருக்கோம். எல்லாத்தையும் வெள்ளத்தில எழுந்திட்டோம். ஏதாவது பாத்து செய்ங்க ஐயா” கூட்டத்தில் இருந்த வயோதிகரின் குரலில் ஏக்கம் கிலோ கணக்கில் தேங்கியிருந்தது. எதிர்பார்ப்பும் தெரிந்தது.

அரைமணி நேரத்தில் சலசலப்பு அடங்க, அமைதி நிலவியது. யாருக்கும் பேசத் தெம்பில்லை. சுருண்டு படுத்துக் கொண்டனர் சிலர். விதியை நினைத்துக் கலங்கிப் போயிருந்தனர் பலர். ராஜன் மீண்டும் அப்பாவின் அருகில் அமர்ந்து கொண்டான்.

அப்பாவின் போக்கில் மாற்றம் ஏதும் தெரிவதாய் இல்லை. ராஜனும் மௌன சாமியாரானான். ஆனால், மனத்தின் ஆழத்தில் பெரும்  போராட்டம் நடந்து கொண்டிருப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

“ராஜன்…! இப்ப என்னடா செய்யப் போற?” மனசாட்சியின் குரல் தலையைக் குடைந்தது. தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டான். மூளை வேலை செய்ய முரண்டு பிடித்தது. நிராயுதபாணியாய் நிற்பதாய் உணர்ந்தான் ராஜன்.

ஐந்து நிமிடங்கள் கண்களை இறுக மூடிக் கொண்டான். மண்டையில் யாரோ சுத்தியலால் அடிப்பது போன்ற உணர்வு. மீண்டும் மண்டையை அழுத்திப் பிடித்துக் கொண்டான். இடத்தை விட்டு எழுந்தான்.

“எங்கடா போற?” அப்பாவின் குரல். அவர் பார்வை முழுவதுமாய் ராஜன் மேல் இருந்தது.

“கொஞ்ச நேரம்பா, இப்ப வந்திடறேன்” சொல்லிக் கொண்டே மண்டபத்தை விட்டு வெளியேறினான். பள்ளியின் முன் வெறிச்சோடி இருந்த சாலையோரமாக நடக்கத் தொடங்கினான்.

சாலை நெடுகிலும் சகதி. சாலையின் இரு மருங்கிலும் செயலற்று நின்ற வாகனங்கள், முழுவதாய்ச் சேற்றை ஆடையாய் உடுத்தியிருந்தன. நடையைத் தொடர்ந்தான். பார்க்கும் இடமெங்கும் குவியல் குவியலாய்த் தளவாடப் பொருள்கள். எங்கெங்கிருந்தோ அடித்து வரப்பட்டு, போகும் வழி தெரியாமல் சிக்கிக் கொண்டனவோ என்னவோ.

உரிமையாளனும் அடையாளம் காண முடியாத நிலையில். ஐந்நூறு வெள்ளி சோபாவும் ஐயாயிரம் வெள்ளி சோபாவும் தகுதி மறந்து ஒன்று சேர்ந்திருந்தன. பார்த்ததும் ராஜனின் மனம் கலங்கிப் போனது. இருபது நிமிடங்கள் நடந்திருப்பான். வியர்த்துக் கொட்டியது. சட்டைக் காலரால் வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

தாமான் கெனாங்காவில் கலக்கத்தோடு நுழைந்தான். இரண்டு வரிசை வீடுகள். தரை வீடு ஒரு வரிசை, மாடி வீடு ஒரு வரிசை. இரண்டுக்கும் இடையில் அமைந்திருந்த சாலையில் சகதியைத்  தாண்டிச் செல்வது ராஜனுக்குப் பெரும் சவாலாய் இருந்தது.

தொங்கல் வீடு வேறு. நிதானமாய் அடி எடுத்து வைத்தான். சகதியிலிருந்து ஒரு காலை எடுத்து மறுகாலை வைப்பதற்கே போதும் போதும் என்றாகி விட்டது. கொஞ்சம் அசந்தாலும் வழுக்கி விழுந்து விடுவான். பெருமூச்சு  ஒன்று அவன் துன்பத்தைப் பெரிதாய்ச்  சொல்லிச் சென்றது.

வீட்டின் உள்ளே சென்றான். சாலையில் மட்டுமல்ல, வீடு முழுவதுமே சகதி நிறைந்திருந்தது. அம்மா போற்றிக் காத்து வந்த பழங்காலத்து அலமாரி, முதல் அறையில் குப்புற விழுந்து கிடந்தது. பத்திரங்கள், துணிமணிகள் அனைத்தும் சகதியோடு சகதியாய் ஐக்கியமாகியிருந்தன. 

சாப்பாடு மேசை, பாத்திரங்கள் எதுவும் கண்களில் தென்படவில்லை. சென்ற மாதம் அம்மா பார்த்து பார்த்து வாங்கிய கேஸ் அடுப்பு இருந்த இடம் தெரியவில்லை. இதயத் துடிப்பு நின்று விடும்போல இருந்தது. நல்ல வேளை. ராஜனின் அம்மா அப்பா வரவில்லை. வீட்டின் நிலையைப் பார்த்தால் அவர்கள் கட்டாயம் நொந்து போய் விடுவார்கள்.

“அண்ணே, என்னாண்ணே பண்றீங்க? வீடு சுத்தம் பண்ணப் போறிங்களா?” இரண்டு மூன்று இளைஞர்கள் கேட்டுக் கொண்டே ராஜனை நெருங்கி வந்தனர்.

“சுத்தம் பண்ணனும்தான். ஆனா, சுத்தம் பண்ண கையில ஒன்னுமில்லையே. அதான்…” தயங்கினான் ராஜன்.

“அண்ணே, நாங்க இருக்கோம். வாங்க சுத்தம் பண்ணலாம்!” இளைஞர்களில் ஒருவன் உற்சாகமாய்க் கூற ராஜன் புத்துயிர்ப் பெற்றான்.

“மம்முட்டி, ஸ்லோப்பு எதுவும் இல்ல. எப்படி?” மீண்டும் அதே தயக்கம்.

“எங்ககிட்ட எல்லாம் இருக்கிண்ணே, வாங்க சுத்தம் பண்ணலாம்” அதே இளைஞன் அதே உற்சாகத்தோடு சொல்ல ராஜனுக்கு ஏனோ மனம் கனத்துப் போனது.  

சற்று நேரத்தில் மேலும் சிலரும் அங்கு வந்து சேர, வெள்ள நிவாரணப் பணி துரிதமானது. பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒரு சிலரும் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கும் தேவையான உதவிகளை அளிக்க இளைஞர் பட்டாளம் திரண்டிருந்தது.

“இப்ப உள்ள பிள்ளைங்க ஒழுங்காவா வளருதுங்க. கொஞ்சங்கூட பொறுப்புன்றது கெடையாது, தருதலையா ஊர சுத்துதுங்க. கலி காலம்!” என்ற அப்பா நாகையா என்றோ ஒரு நாள் சலித்துக் கொண்டது காரணமே இல்லாமல் நினைவுக்கு வந்து போனது.

இளைஞர்கள் உடலெல்லாம் சகதி. அதைப் பற்றி அவர்கள் கொஞ்சமும் கவலைப்படுவதாய்த் தெரியவில்லை. வாளி வாளியாய்ச் சகதியை அள்ளி, தூக்க முடியாமல் தூக்கி வெளியே கொண்டு போய்க் கொட்டி விட்டு வந்தனர்.

பல முறை சகதியில் விழுந்தும் எழுந்தனர். ஆனால், ஒருவரும் துவண்டு போகவில்லை. பல மணி நேரங்கள் சளைக்காமல் கைக்கொடுத்த இளைஞர் அணியைப் பார்க்க பாவமாய் இருந்ததுராஜனுக்கு. 

“தம்பிங்களா, ரொம்ப நேரமா சுத்தம் பண்றீங்க. சாப்பிடக் கூட இல்ல. பரவாயில்ல நீங்க போங்க. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. இனி நான் பாத்துக்கிறேன்” குருட்டுத் தைரியத்தில் வார்த்தைகளை அடுக்கினான் ராஜன்.

“அண்ணே, என்னண்ணே இப்படி சொல்றீங்க? அங்க பாத்தீங்களா? அவங்கெல்லாம் எங்க பிரண்ஸ்தான். தாமான் கெனாங்கா வீடுங்கள சுத்தம் பண்ணத்தான் நாங்க எல்லாம் வந்திருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்தில சாப்பாடும் வந்துரும். சாப்பிட்டுட்டு இன்னைக்குள்ள உங்க வீடுங்கள சுத்தம் பண்ணிக் கொடுத்திடுவோம். நீங்க கவலப்படாம இருங்கண்ணே. என்ன மச்சான்! நான் சொல்றது சரிதானே?” பக்கத்தில் இருந்தவன் தோளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டு சுருட்டைத் தலை இளைஞன் கூற மலைத்துத்தான் போனான் ராஜன்.

சொன்னது மட்டுமல்ல. செய்தும் காட்டியது அந்த இளைஞர் கூட்டம். மாலை  ஏழு மணி இருக்கும். வீட்டை நிரப்பி இருந்த சகதி அப்புறப்படுத்தப்பட்டது. ‘போம்பா பை’ப்பில் வந்த தண்ணீரைக் கொண்டு வீட்டைக் கழுவி விட்டனர். அதே போம்பா பைப் தண்ணீர்தான் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் பேருதவியாய் இருந்தது.

சகதியில் புனித நீராடியிருந்த பொருள்களை சிலவற்றை இளைஞர்களின் உதவியோடு வீட்டிற்கு வெளியே குவித்து வைத்தான் ராஜன். நாளை அவற்றையெல்லாம் சுத்தம் செய்து விட வேண்டும். முடிவெடுத்தான் ராஜன். சுத்தம் செய்ய தண்ணீர் இல்லை. சிந்தனை தடைபட்டது. பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான்.

“அண்ணே, நாளைக்கும் வருவோம். மிச்சம் மீதி வேலைய முடிச்சிடலாம், தேங்க்கல(tank) தண்ணீ எடுத்து வறோம். ஓகேவா?” மனமறிந்து சிக்கலுக்குத் தீர்வு சொன்னான்.    

கடவுளா அந்தச் சுருட்டைத் தலை இளைஞன்? மனம் கேள்வி கேட்டது. மனிதனும் கடவுளாகலாம். அதே மனம், பதிலைத் தேடிக் கண்டுபிடித்தது.

வேலைக்கிடையே அம்மா அப்பாவை மறந்து போனான் ராஜன். அவர்கள் நினைவுக்கு வந்ததும் தன்னையே திட்டித் தீர்த்துக் கொண்டான்.

காலை பதினோரு மணிக்கு வந்தவன். மாலை மணி ஏழாகி விட்டது. கண்டதை நினைத்து பயந்து போயிருப்பார்கள் பாவம். நடையைத் துரிதப்படுத்த முயன்றான். முடியவில்லை. சகதியுடன் போராடச் சத்தியமாய் அவனால் முடியவில்லை. பல மணி நேர வேலை வேறு. உடல் சோர்ந்திருந்தது. மெதுவாய் மண்டபத்திற்குப் போய்ச் சேர்ந்தான். நாகையாவும் மரகதமும் ஓட்டமும் நடையுமாய் அவனை நோக்கி வந்தனர்.

“இவ்வளவு நேரம் எங்கடா போன? பயந்து போயிட்டோம் தெரியுமா?” அம்மாவின் விழியோரத்தில் கண்ணீர் கசிவதைப் பார்க்க முடிந்தது. அப்பா பார்வையில் கேள்விகள் வரிசைகட்டி நின்றன.

“வீட பாக்கலாம்னு போனே, அப்படியே கொஞ்சம் சுத்தம் பண்ணிட்டு வந்துட்டேன். அதான் லேட்டாச்சு. சோர்ரிம்மா!” அம்மாவைக் கட்டி அணைத்துக் கொண்டான். குழந்தையாய் மாறிப் போனார் அம்மா. அப்பாவின் முகத்தில் அமைதி பரவத் தொடங்கியிருந்தது. இருவரையும் அழைத்துச் சென்று பழைய இடத்திலேயே உட்கார வைத்தான்.

உடலெல்லாம் வியர்வை நாற்றம். சகித்துக் கொள்ள முடியவில்லை.  மண்டபத்தின் மூலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த சட்டைகளில் தனக்குப் பொருத்தமான ஒன்றை எடுத்துக் கொண்டான். எந்தப் புண்ணியவானோ கொடுத்த சட்டை. விலை அதிகமாக இருக்க வேண்டும். ஊகித்துக் கொண்டான்.

கொடுக்க மனம் வந்ததை எண்ணி நெகிழ்ந்து போனான். சட்டை கசங்கி இருந்தது. கசங்கிய சட்டையை அணிந்து பழக்கமில்லாதவன். எத்தனையோ முறை சட்டையை இஸ்திரி பண்ணாமல் வைத்ததற்காக அம்மாவைக் கடிந்து பேசியிருக்கிறான். அழ வைத்திருக்கிறான். இன்று அதைப் பற்றியெல்லாம் யோசிக்கும் நிலையில் அவன் இல்லை. இயற்கை எவ்வளவு சக்தி வாய்ந்தது! மனிதனின் ஆணவத்தை அடக்கும் வல்லமை கொண்டது!

மண்டபத்தின் வலது பக்கத்தில் இருந்த ஆண்கள்  கழிவறைக்குள் நுழைந்தான். வெந்நீர் இல்லை. இது என்ன அவன் வீடா? நினைத்த நேரத்தில் வெந்நீரில் குளிக்க. குளிர்ந்த நீரில் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டான். லைவ் பாய் சவர்க்காரம் இல்லாமல் குளித்ததில்லை அவன். ஆனால், இன்று சவர்க்காரமே இல்லாமல் குளித்தான். இருந்தாலும் மனதும் சேர்ந்து சுத்தமானது போல் ஓர் உணர்வு. உடல் நடுங்கியது. பொறுத்துக் கொண்டான். இந்த இரண்டு நாளில் பலவற்றையும் சகித்துக்கொள்ள கற்றுக் கொண்டான் ராஜன்.

கழிவறையிலிருந்து வெளியானவன் நேரே மண்டபத்திற்குள் நுழைந்தான். காலையில் இருந்த அதே சலசலப்பு. மண்டபமே அமர்க்களப்பட்டது.

“யோவ் பெரியவரே, கொஞ்சம் பொறுமையா இருங்க. ஏன் இடிச்சி தள்ளிகிட்டு வறீங்க? எல்லாருக்கும் சாப்பாடு இருக்கு” முறுக்கு மீசைக்காரன் குரலை உயர்த்தினான். அவன் முன் நின்ற பெரியவர் கண்களில் பசியின் அறிகுறி. நேற்றையிலிருந்தே சரியாக உணவு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

யாரிடம் உரிமையோடு கேட்பது? கிடைத்ததை உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அங்கிருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை. ராஜனையும் சேர்த்து.

“கொஞ்சம் தள்ளி நில்லுங்க. சாரு வராரு, அவரு உங்ககிட்ட ஏதோ சொல்லனுமாம்!” சாப்பாட்டுப் பங்கீடைத் தற்காலிகமாய் நிறுத்தினான் முறுக்கு மீசைக்காரன். பெரியவர் முகம் வாடிப் போனது.

வெள்ளையும் சொள்ளையுமாய்  முறுக்கு மீசைக்காரன் சொன்ன சார் வந்தார். வேறு யாருமல்ல. அந்தப் பட்டணத்தில் முதல் பணக்காரர். மாநாடு என நினைத்து வந்தாரோ என்னமோ. கழுத்தில் பட்டையாய்ச் சங்கிலி. ஐந்து பவுன் தேறும். கைகளில் தடித்த பொன் காப்ப, எஜமான் பாணியில். விரல்களில் பல ரகங்களில் மோதிரங்கள். செழுமையின் செல்லப்பிள்ளையாய் அவர் தோற்றமளித்தார்.

“எல்லாருக்கும் வணக்கம். உங்க கஷ்டம் எங்களுக்குப் புரியுது. உங்களுக்குத் தேவையான உதவி செய்ய காத்திருக்கிறோம். இந்த ரெண்டு மூனு நாளுக்கும் உங்களுக்குத் தேவையான சாப்பாட தயார்ப் பண்ண சொல்லிட்டேன். வயிறு நெறைய சாப்பிடுங்க” முகம் மலரச் சொன்னவர் கைகளைக் கூப்பிப் பெரும் வணக்கம் வைத்தார். எல்லோரது பார்வையும் அவரது பளபளக்கும் மோதிரங்களின் மேல்தான் இருந்திருக்க வேண்டும்.

அவருடைய சிஷ்யப் பிள்ளைகளை அவரை வளைத்து வளைத்துப் படம் பிடிப்பதில் மும்முரமாய் இருந்தனர். சாரும் சளைத்தவர் அல்ல. பல வகையான போஸ் கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் களைத்துப் போனாரோ என்னவோ. சிஷ்யப் பிள்ளைகளில் ஒருவரை அழைத்தார். காதில் ஏதோ ஓதினார். சிஷ்யப் பிள்ளை தலையைத் தலையை ஆட்டிக் கொண்டான்.

“சாரு இப்ப சாப்பாட அவர் கையால கொடுக்கப் போறாரு. எல்லாரும் வரிசையா நில்லுங்க” சிஷ்யனின் அதிகாரம் தூள் பறந்தது. அதே முதியவர் முண்டியடித்துக் கொண்டு முன்னுக்கு வரப் பார்த்தார். பாவம் தோற்றுப் போனார். அவரை முந்திக் கொண்டு வேறு பலரும் முன் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டனர்.

“நில்லுங்க, மொதல்ல படம் பிடிக்கனும். அங்கள்..! சார்கிட்ட சாப்பாட வாங்கிகிட்டே இங்க பாருங்க… ஓகே…. ஓன்… டூ… த்ரீ… ஓகே… அடுத்தவரு வாங்க…  கேமராவ பாருங்க…. ஓன்… டூ… த்ரீ… ஓகே…” சகிக்க முடியாமல் ராஜன் அவன் இடத்திற்குச் சென்று அமைதியாய் அமர்ந்து கொண்டான். கொஞ்ச நேரத்தில் சலசலப்பு அதிகரித்தது. கூட்டம் சிதறத் தொடங்கியது.

“டேய்… தாத்தா மயக்கம் போட்டுட்டாருடா… அவர சீக்கிரம் தூக்கி ஓரமா ஒக்கார வையிங்க…. மத்தவங்க வாங்க… பழைய மாதிரி வரிசையில வந்து சாப்பாட வாங்கிக்கிங்க…. சாரு வேற எடுத்துக்கும் போகனும். சீக்கிரம் வரிச நில்லுங்க. இங்க பாருங்க… ஓகே…. ஓன்… டூ… த்ரீ…” கோமாளிகளின் ஆட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. கூட்டமாய், தனித்தனியாய் எனப் படங்கள் எடுக்கப்பட்டன. கேமராவிற்கு மட்டும் வாய் இருந்தால் கதறிவிடும்.

ராஜன் கண்களை இறுக மூடிக் கொண்டான். காலையிலிருந்து தாமான் கெனாங்கா மக்களுக்காக மாடாய் உழைத்த சுருட்டை முடி இளைஞனும் அவன் நண்பர்களும் கண் முன் வந்து போயினர் காரணத்தோடு. ராஜனின் இதழோரத்தில் விரக்தியின் அடையாளமாய் மெல்லிய  புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது.

(முற்றும்)

Similar Posts

One thought on “சோறும் சகதியும் (சிறுகதை) – ✍ உமாதேவி வீராசாமி, மலேசியா.
  1. “VeLLaththil sikki avathippadum intha kathaiyinil vivarikkappatta manitharGaLin avala nilaiyinai muzhuvathaiyum vivarikka iyalumaa? iyalaathathu thaan. Ovvoruththarin thukkamum ovvoru maathirithiriyE. AnthO. KaRpanaik kathaiyil naamum oru kaRpanaiyaich cheythukoLvOmE !!! SarithaanE !!!
    – “M.K. Subramanian.”
    Juliet Court cul de saq,
    Chapel Hill, North CarOlina,
    USA.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!