in ,

ஆரோக்கிய வாழ்விற்கு யோகா (ஆரோக்கியம்) – பாலாஜி ராம்

இந்தத் தொடரின் மற்ற பாகங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அறிமுகம் மற்றும் வரலாறு:

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் நாம் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகிறோம். நம் உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளுக்கு மனம் தான்  முதல் காரணம். நாம் மனதளவில் ஆரோக்கியமாக இருந்தால் நமது உடலும் நல்ல முறையில் இயங்கும். 

நம் மன எண்ணங்களை ஒழுங்கு படுத்தவும், மன அழுத்தங்களை நீக்கவும், நமக்கு புத்துணர்ச்சியை கொடுக்கவும் யோகா ஒரு சிறந்த வழியாக உள்ளது.  

யோகா அனைவரும் செய்யக்கூடிய எளிமையான மற்றும் வலிமைமிக்க மருத்துவமாக உள்ளது. நாம் பலரும் யோகாவை உடற்பயிற்சியாக மட்டுமே பார்க்கிறோம் இது பல நோய்களை குணமாக்கும் வல்லமையும் பெற்றுள்ளது. யோகா உடலளவிலும், ஆன்மீக ரீதியாகவும், மனதளவிலுயும் மிகவும் தொடர்பு கொள்கிறது. 

யோகா என்னும் வார்த்தை “யுஜ்” என்னும் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்துள்ளது. ஆன்மீக ரீதியாக யோகா என்பதற்கு ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைக்கும் ஒரு கருவி என அழைக்கப்படுகிறது. 

யோகா நம் உடலையும் மனதையும் சமநிலைப்படுத்துகிறது. நம் உணர்வுகளை கட்டுப்படுத்துகிறது. 

ஆசனம், பிராணயாமம், முத்திரை, பந்தா, சத்கர்மா மற்றும் தியானம் போன்ற பல உள்ளடக்கங்களை கொண்டதே யோகா.  

யோகா தோன்றிய வரலாறு:

யோகா பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. தொல்லியல் ஆராய்ச்சியின் பொழுது  ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ போன்ற இடங்களில் பல்வேறு சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் சிவன் மற்றும் சக்தியின்  (பார்வதி தேவி) சிலைகள் இருந்தன. 

சிவன் மற்றும் சக்தியின் உருவ சிலைகள் தியானம் செய்வது போன்றும் பல ஆசனங்கள் செய்வது போன்றும் இருந்தது. இதன் மூலம் யோகா பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என உறுதியாகிறது. 

இந்த உலகத்திற்கு யோகாவை வழங்கியவர் சிவபெருமான். சிவபெருமான் பார்வதி தேவிக்கு இந்த யோகாவை பற்றி உபதேசித்தார். பார்வதி தேவியே சிவபெருமானின் முதல் சீடர் ஆவார். பார்வதி தேவி இந்த யோக அறிவை சித்தர்களுக்கு உபதேசித்தார். இவற்றில் அகத்திய முனிவரே முதன்மையானவர். சித்தர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று இந்த யோக அறிவை பரப்பினார்கள். இவ்வாறாக யோகா இவ்வுலகில் தோன்றியது. பதஞ்சலி முனிவர் யோகாவின் தந்தை என அழைக்கப்படுகிறார். 

பதஞ்சலி முனிவர் மகாவிஷ்ணுவின் பக்தரான ஆதிசேஷனின் அவதாரமாக கருதப்படுகிறார். ஆயிரம் சிரம் கொண்ட ஆதிசேஷனின் மீது தான் மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார். ஆதிசேஷனே நாகங்களின் தலைவராக போற்றப்படுகிறார். 

பதஞ்சலி முனிவர் 196 யோக சூத்ராக்களை கொடுத்துள்ளார். இவற்றை, 

1.சமாதிபாதம்

2.சாதனபாதம்

3.கைவல்யபாதம்

4.விபூதிபாதம் 

என 4 பாதங்களாகப் பிரித்து கொடுத்துள்ளார். 

மேலும் அஷ்டங்க யோகாவையும் இவர் கூறியுள்ளார். அஷ்டங்க யோகா என்பது எட்டு பாகங்களை உடையது. 

1.யாமம்

2.நியமம்

3.ஆசனம்

4.பிராணயாமம்

5.பிரத்யகாரம்

6.தாரணம்

7.தியானம்

8.சமாதி

மகாபாரதத்தில் யோகா:

மகாபாரதத்தில் குருச்சேத்திர போரின் போது அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மாவால் உபதேசிக்கப்பட்டது தான் கீதை. இந்த பகவத் கீதையில் கிருஷ்ணர் யோகாவை பற்றி விளக்கமாக கூறுகிறார். மேலும் ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் போன்றவற்றையெல்லாம் விளக்கி உள்ளார். 

வேதத்தில் யோகா:

வேதம் என்பது மிகவும் பழமையானது. இவை நான்கு பிரிவுகளை உடையது. 1.ரிக் வேதம் 

2.யஜுர் வேதம் 

3.சாம வேதம் மற்றும் 

4.அதர்வன வேதம் 

இவற்றில் ரிக், யஜுர், சாம வேதங்கள் மிகவும் பழமையானது எனவும் அதர்வண வேதம் பிற்காலத்தில் இணைக்கப்பட்டது எனவும் கூறுவர். குறிப்பாக ரிக் வேதத்தில் ஆறு இடங்களில் யோகா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது வேதம் உருவான காலத்திலேயே யோகாவும் உருவாகி இருக்கும் என தோன்றுகிறது. 

 உபநிடதங்களில் யோகா;

உபநிடதம் என்பது ஆசிரியரின் அருகில் மாணவர் அமர்ந்து கொண்டு, ஆசிரியர் சொல்ல சொல்ல மாணவர் நூலை எழுதுவது. உப்பநிடதங்கள் மொத்தம் 108 உள்ளது. இவற்றில் 10 உபநிடதங்கள் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. இந்த உபநிடதங்களில் யோகாவை பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் சில கருத்துக்கள் உள்ளன. யோகாவை பற்றி மைத்ரேய உபநிடதம், தைத்ரேய உபநிடதம், கத உபநிடதங்கள் போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன. 

குண்டலினி யோகா: 

குண்டலி என்பது நமது முதுகு தண்டின் அடிப்பகுதியில் தூங்கிக் கொண்டிருக்கும் பாம்பு. நம் உடலில் பல சக்தி மையங்கள் உள்ளன. இவற்றையே நாம் சக்கரா என்று சொல்லுகிறோம். முதன்மையாக ஏழு சக்கரங்கள் நம் உடலில் உள்ளது. இந்த சக்கரங்கள் தூண்டப்படுவதையே நாம் குண்டலினி யோகம் என்று சொல்கிறோம். மூலதரசக்கரங்கள் தூண்டப்பட்டு மேலெழும்பி ஒவ்வொரு சக்கரங்களாக தூண்டப்பட்டு இறுதியாக சகஸ்ரார சக்கரம் தூண்டப்படுகிறது. குண்டலினியை மேல் எழுப்புவதன் மூலம் நாம் அஷ்டமா சித்திகளை பெறலாம் என்றும் இறைவனுடன் ஐக்கியம் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. 

யோகாசனங்கள்:

முனிவர்களாலும் யோகிகளாலும் வழங்கப்பட்ட கடுமையான யோகாவை கூட இன்று எளிமையான முறையில் பயிற்சி செய்யும் அளவிற்கு 

 குருமார்கள் யோகாவில் பல மாற்றங்கள் கொண்டு வந்துள்ளனர். 

நாம் ஒவ்வொரு யோகாசனாவையும் பயிற்சி செய்யும் பொழுது நம் உடலில் உள்ள சக்தி மையங்கள் தூண்டப்படுகிறது. முதன் முதலில் பயிற்சி செய்பவற்கு யோகா கடினமாக தோன்றலாம். இதுவே தொடர் பயிற்சிகள் மூலம் அவை சுலபமாகும். தொடக்கத்தில் நாம் எளிமையான 

யோகாவை பயிற்சி செய்ய வேண்டும். அவற்றை சிறப்பாக செய்யும் பொகுட்டி நாம் அடுத்தடுத்த யோகாவை பயிற்சி செய்ய வேண்டும். 

நாம் இனிவரும் பகுதிகளில் எளிமையான நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய யோகாசனங்கள் மற்றும் அவை செய்யக்கூடிய முறை, இவற்றின் பயன்கள், யாரெல்லாம் செய்யலாம், யாரெல்லாம் செய்யக்கூடாது போன்றவற்றையெல்லாம்  தொடர்ந்து பார்க்கலாம். 

நான் பாலாஜி இராமதிலகம். யோகா மற்றும் இயற்கை மருத்துவ மாணவன். 

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பூங்குழலி (இறுதி அத்தியாயம்) – பாலாஜி ராம்

    அலமரல் (அச்சம் – 2) – விடியல் மா.சக்தி