இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என் பொண்ண கொடுமை பண்ணியவன் ஜெயில்லயே களி திண்ணட்டும்” என்று ஆதங்கத்தில் பேசினார் செண்பகத்தின் அப்பா.
‘என்னங்க இப்படி பேசுறீங்க அவன் ஜெயில்லயே இருந்தால், நம்ம பொண்ணோட வாழ்க்கை என்னாகுறது அவள் வாழாவெட்டியா இங்கேயே இருப்பாளா?” என்று பூமாரி சொன்னதும்
“நான் இங்கே இருந்தாலும் இருப்பேனே தவிர அவன் கூட போயி குடும்பம் நடத்த மாட்டேன்” என்று அழுது கொண்டே சொன்னாள் செண்பகம்.
இதற்கு இடையில் வசந்தகுமார் பேச தொடங்கினான் ‘இந்த விஷயத்தை அப்புறம் பேசிக்கலாம், இப்போ அப்பாவ ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போகணும்’ என்றான்.
“ஆமாம் அண்ணா நீங்களும் செண்பகமும் அப்பாவ ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போங்க, நானும் அம்மாவும் இங்கே இருக்கிறோம்” என்று பூமாரியை பார்த்துக் கொண்டே தன் அண்ணனிடம் சொன்னாள் பூங்குழலி.
இதைக் கேட்டதும் பூமாரிக்கு, பூங்குழலி மீது ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. வசந்தகுமார் தனது காரில் செண்பகத்தின் அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான். உடனே செண்பகமும் தன் அப்பாவுடன் மருத்துவமனைக்கு சென்றாள்.
இதுதான் சரியான நேரம் என்று எண்ணியவள் தனியாக இருந்த பூமாரியிடம் பேச வந்தாள் பூங்குழலி.
“அம்மா நீங்க அந்த சுரேஷ் சிறையிலிருந்து வெளியே வந்ததும் செண்பகம் அக்காவை மறுபடியும் அவன் கூட அனுப்பிவீங்களா” என்று கேட்டாள் பூங்குழலி.
‘இல்லம்மா என் பொண்ணு வாழா வெட்டியா இங்கேயே இருந்தாலும் கூட பரவாயில்லை, ஆனா அவன் வீட்டுக்கு மட்டும் அனுப்ப மாட்டேன்’ என்றாள் பூமாரி.
“அப்படினா செண்பகத்துக்கு நீங்க இரண்டாவது திருமணம் செய்து வைக்கப் போறீங்களா”
‘இரண்டாம் தாரமா எவன் கல்யாணம் பண்ணிக்குவான், நீயே சொல்லு பூங்குழலி…’ இன்று பூமாரி சொன்னதும்,
“என் அப்பாவும், அம்மாவும் கொரோனா நேரத்தில் இறந்துட்டாங்க, இப்போ எனக்குன்னு இருக்கிறது என் அண்ணா மட்டும் தான். என் அண்ணாவுக்கும் நான் மட்டும் தான் இருக்கிறேன். அந்த வகையில என் அண்ணாவுக்கு செண்பகத்தை பொண்ணு கேட்டு வந்திருக்கேன்” என்று சொன்னாள் பூங்குழலி.
இதைக் கேட்டதும் பூமாரியின் முகம் அதிர்ந்து போனது. மேலும் பேசத் தொடங்கினாள் பூங்குழலி. தன் வீட்டில் நடந்த எல்லா விஷயத்தையும், தன் அண்ணனை பற்றியும் பூமாரியிடம் சொல்லி முடித்தாள்.
‘பூங்குழலி நீ சின்ன பொண்ணா இருந்தாலும், உன் மனசு பெரிய மனசு, இதுக்கு உங்க அண்ணன் என்ன சொல்லுவாரு? அவரு சம்மதிப்பாரா?’ என்று பூமாரி கேட்டாள்.
அதெல்லாம் என் அண்ணன் கிட்ட நான் பேசுறேன் என்றாள் பூங்குழலி.
பூங்குழலி சொன்னதை கேட்ட பூமாரிக்கு சரி என்று தோன்றினாலும், ஒரு பக்கம் பயமாகவே இருந்தது, சுரேஷ் ஏதாவது பிரச்சனையை செய்வானோ என்று.
தன் கணவன் வீடு திரும்பியதும் இதைப் பற்றி பேசி ஆகணும் என்று நினைத்தாள் பூமாரி.
மூன்று மணி நேரம் கழித்து வசந்தகுமாரின் கார் மீண்டும் செண்பகத்தின் வீட்டை அடைந்தது. மருத்துவமனைக்கு சென்ற மூவரும் வீட்டிற்குள் வந்தனர். பூங்குழலியும், பூமாரியும் நலம் விசாரித்த பிறகு, பூங்குழலி சொன்னதை பூமாரி தன் கணவனிடம் சொன்னாள்.
“இதுல நம்ம என்ன முடிவெடுக்கிறது இரண்டு பேருக்கும் சம்மதம் என்றால் கல்யாணத்தை முடிக்க வேண்டியது தானே” என்றார்.
இதைக் கேட்டதும் வசந்தகுமாருக்கும் செண்பகத்துக்கும் அகத்தில் அல்லியும் மல்லியும் பூத்தது. பூங்குழலி தன் அண்ணனை பார்த்து, “அண்ணா உனக்கு செண்பகத்தை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா எல்லாரும் முன்னாடியும் சொல்லுங்க” என்றாள்.
‘எனக்கு சம்மதம்’ என்று பொறுமையாக பதில் சொன்னான் வசந்தகுமார்.
உனக்கு சம்மதமா செண்பகம் என்று பூமாரி செண்பகத்திடம் கேட்டாள். ‘எனக்கும் சம்மதம்’ என்று சொன்னாள் செண்பகம்.
இதைக் கேட்டு குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தது. திருமண ஏற்பாடுகள் ஒவ்வொன்றாக நடக்க தொடங்கியது.
இது இருவருக்கும் இரண்டாவது திருமணம் என்பதால் வெளியே யாருக்கும் சொல்லாமல் எளிமையாக நடத்தலாம் என்று முடிவெடுத்தனர். பூங்குழலிக்கு பிடித்த கருமாரியம்மன் கோவிலிலே இருவருக்கும் தை மாதம் முதல் நாளில் திருமணம் நடத்த முடிவானது.
சுரேஷுக்கும், செண்பகத்திற்கும் புதுதுணியும், நகையையும் அப்போது எடுத்தார்களே அந்த நகையையும் துணியையும் செண்பகத்திற்கும், வசந்தகுமாருக்கும் கொடுத்தாள் பூமாரி. மற்ற செலவுகளையெல்லாம் வசந்தகுமார் பார்த்துக் கொண்டான்.
தை முதல் நாள் செண்பகம் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான் வசந்தகுமார். பிறகு கோவிலுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கிவிட்டு வீட்டிற்கு புறப்படும் வேளையில் பூங்குழலியை காணவில்லை.
வசந்தகுமார் கோவிலின் எல்லா இடங்களிலும் தேடி விட்டு இறுதியாக கருமாரியம்மன் சன்னதி முன் வந்து நின்றான். அங்கே தான் பூங்குழலி நின்று கொண்டிருந்தாள்.
“பூங்குழலி நேரமாகிவிட்டது சீக்கிரம் வாம்மா..” என்றான் வசந்தகுமார்.
‘அண்ணா நீங்க காரிலேயே வையிட் பண்ணுங்க, நான் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்” என்றாள் பூங்குழலி. வசந்தகுமாரும் பூங்குழலிக்காக காரில் காத்திருந்தான்.
அம்மா தாயே கருமாரி…. என் வேண்டுதல் வீண் போகல, இவ்வளவு சீக்கிரம் என் கஷ்டத்தை தீர்த்து வைப்பேனு நினைச்சு கூட பாக்கல. என் அண்ணனோட வாழ்க்கையில ஒளி ஏத்தி வச்சதுக்கு உனக்கு கோடான கோடி நன்றி அம்மா… என்று மனம் உருகி, உள்ளம் மகிழ நன்றி சொன்னவள், அங்கிருந்து புறப்படும் நேரத்தில் கோவில் மணி ஒலித்தது.
கருமாரியம்மன் முகத்தை மீண்டும் ஒருமுறை திரும்பி பார்த்து விட்டு, “தான் நினைத்ததை சாதித்த” மகிழ்வுடன் தன் வீட்டிற்கு சென்றாள் பூங்குழலி.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings