இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘ஏன்டா இப்படி மறைந்து நிற்கிற’ என்று மிரட்டும் தோணியில் சிறுவனை பார்த்து கேட்டார் வசந்தகுமார்.
‘செண்பகம் அக்கா எப்போ வருவாங்க’ என்றான் அந்த சிறுவன்.
“ஏன் உனக்கு செண்பகத்தை ரொம்ப பிடிக்குமா”
‘ஆமா அந்த அக்கா எனக்கு பலகாரம் இனிப்பெல்லாம் செய்து தரும், நேத்து கூட செண்பகம் அக்காவுடைய அம்மாவும், அப்பாவும் தின்பண்டங்களை செய்து துணிப்பை நிறைய கொண்டு வந்தாங்க, ஆனா எல்லா தின்பண்டங்களும் வீணாகிடுச்சு’
“ஏன் வீணாகிடுச்சி.. யாரும் சாப்பிடலையா” என்று கேட்டார் வசந்தகுமார்.
அந்த சிறுவன் நேற்று மறைந்திருந்து பார்த்த எல்லா விஷயத்தையும் வசந்தகுமாரிடம் சொன்னான். அந்த சிறுவனை போக சொல்லிவிட்டு தானும் தன் ஜீப்பில் ஏறி புறப்பட்டான் வசந்தகுமார்.
இங்கிருந்து போன ஜீப் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வாசலை வந்தடைந்தது. ஜீப்பிலிருந்து கைது செய்யப்பட்ட மூவரையும் உள்ளே அழைத்து சென்றனர். உள்ளே நாற்காலியில் பூங்குழலியும் செண்பகமும் அமர்ந்திருந்தனர்.
செண்பகத்தை பார்த்த சுரேஷ், செண்பகத்தின் அருகே சென்று பற்களை கடித்துபடி “அடியே… ஊமக்கோட்டான் போல அமைதியா இருந்துகிட்டு காரியத்தை சாதிச்சிட்ட.. உன்ன பார்த்துக்கிறேன்டி” என்று மிரட்டும் தோனியில் பேசினான்.
‘டேய் பொறுக்கி உன்னால எதுவும் பண்ண முடியாது போயி கம்பி எண்ணுடா’
“ஏய் யார்கிட்ட பேசுறன்னு தெரியுமா” ‘நான் உன் புருஷன் டி’
“ச்சி மூடு வாயை.. நகையை திருடிட்டு யார் கூடயோ ஓடிப் போயிட்டேன்னு சொன்னியே அப்பவே உனக்கும் எனக்கும் உள்ள உறவு முடிஞ்சு போச்சு”
‘ஏய் உன்ன அப்பவே குழி தோண்டி புதைச்சி இருக்கணும் டி’ என்று ஆத்திரத்தில் கத்தினான்.
“கத்தியது போதும் போய் கம்பி என்ற வேலைய பாரு” என்று சொல்லியபடி அவனையும் அவன் அப்பாவையும் ஒரு சிறையிலும், அவன் அம்மாவை தனி சிறையிலும் அடைத்தனர் பெண் காவலர்கள்.
பூங்குழலியும், செண்பகமும் வீடு திரும்பினர். மாலை பொழுதானதும் வசந்தகுமாரும் வீட்டிற்கு வந்தார். வசந்தகுமார் செண்பகத்திடம் அந்த சிறுவன் காலையில் சொன்ன எல்லா விஷயத்தையும் சொன்னான்.
இதை கேட்ட செண்பகத்திற்கு தன் அம்மாவும் அப்பாவும் அவமானபடுத்தப்பட்டதை நினைத்து வருந்தினாள். தன் வீட்டிற்கு சென்று அம்மாவையும், அப்பாவையும் பார்க்க வேண்டும் என்று வசந்தகுமாரிடம் சொன்னாள்.
‘சரிங்க செண்பகம் நாளைக்கு காலையில உங்க வீட்டுக்கு போகலாம்’ என்றான் வசந்தகுமார்.
நாளைக்கு செண்பகம் தன் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி விடுவாளோ மீண்டும் இங்க வர மாட்டாளோ என்று பூங்குழலியின் மனதில் தோன்றியது.
செண்பகம் ஒரு நாள் தான் இங்கு தங்கி இருந்தாலும் செண்பகத்திற்கும் பூங்குழலிக்கும் இடையே ஒருவித நட்பு முளைத்தது. இதனால் தான் பூங்குழலிக்கு செண்பகத்தை விட்டுப் பிரியப் போகிறோமோ என்ற அச்சம் வந்தது. இதே உணர்வு தான் செண்பகத்திற்கும் இருந்தது.
“இந்த சிறிய வயதில் அப்பாவையும், அம்மாவையும் இழந்தாலும் குடும்பத்தை சிறப்பாக நடத்துகிறாளே” என்று அடிக்கடி பூங்குழலியை பெருமையாக நினைத்துக் கொள்வாள் செண்பகம்.
நாளை செண்பகத்தை பிரியப் போகிறோம் என்று பூங்குழலிக்கும், பூங்குழலியை பிரிய போகிறோம் என்று செண்பகத்திற்கும் கஷ்டமாக இருந்தது. செண்பகம் தன்னுடன் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான், செண்பகத்தை தன் அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுத்தாள்.
இவள் மட்டும் முடிவெடுத்தால் போதுமா இதற்கு அந்த இருவருமே சம்மதிக்க வேண்டும் அல்லவா. அண்ணனை கூட எப்படியாவது சம்மதிக்க வைக்கலாம். ஆனால், செண்பகம் இதற்கு சம்மதிப்பாங்களா? என்று தெரியலையே. இன்னைக்கு இராத்திரி சாப்பிட்டு முடித்த பிறகு இதைப்பற்றி செண்பகம் கிட்ட பேசணும் என்று தீர்மானித்தாள் பூங்குழலி.
இரவு உணவு முடிந்த பிறகு, வசந்தகுமார் தன் அறைக்குள் சென்றான். பூங்குழலியும், செண்பகமும் ஒரே அறையில் தூங்குவதால் பூங்குழலிக்கு இன்னமும் சுலபமாகிவிட்டது. செண்பகம் கட்டலின் மீது அமர்ந்திருந்தாள். அவள் அருகில் வந்தடைந்த பூங்குழலி செண்பகத்திடம் பேசத் தொடங்கினாள்.
“நீங்க தப்பா நினைக்கலனா உங்கள ஒன்னு நான் கேட்கலாமா”
‘என்னங்க சொல்லுங்க, நான் ஏதும் நினைச்சுக்க மாட்டேன்”
“உங்க வீட்டுக்காரர் சிறையிலிருந்து வெளிய வந்த பிறகு நீங்க அவர் கூட சேர்ந்து வாழ்வீங்களா” என்று கேட்டாள் பூங்குழலி.
‘அவன் கூட எந்த பொண்ணும் வாழ முடியாது, கொஞ்சம் நேரம் இருந்திருந்தால் என்னையே குழிதோண்டி புதைச்சிருப்பான், அது மட்டுமா நான் எவன் கூடயோ ஓடிப் போயிட்டேன்னு வேற கதை கட்டியிருக்கேன், அவன் கூட எப்படி மறுபடியும் சேர்ந்து வாழ முடியும்” என்று செண்பகம் சொன்னதும் பூங்குழலின் மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.
‘அப்படினா நீங்க வேறொரு கல்யாணம் கட்டிக்கிவிங்களா?’ என்று மீண்டும் கேள்வி கேட்டாள் பூங்குழலி.
“என்னை முதல் முறை கல்யாணம் கட்டிக்கவே யாரும் வரல, இப்போ இரண்டாம் தரமா யாருமா என்ன கட்டிக்க போறான்”
‘நான் உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து இருக்கேன் அவரை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க’
“காமெடி பண்ணாத பூங்குழலி”
‘ஐயோ… நான் காமெடி பண்ணல உண்மையா தான் சொல்லுறேன், நீங்க ஏன் என் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க கூடாது’
“என்ன சொல்ற பூங்குழலி”
‘என் அண்ணா ரொம்ப நல்லவரு நீங்க அவரை கட்டிக்கிட்டா உங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்’
“உங்க அண்ணன் எனக்கு இரண்டாவது முறையா வாழ்க்கை கொடுக்க தயாராக இருக்கலாம். அது அவருடைய நல்ல மனசு. ஆனா அதை ஏத்துக்கிற மனப்பான்மையில நான் இல்ல. இது வெளியே தெரிஞ்சா என்னாகும். என் ஊருகாரங்களுக்கு இது தெரிஞ்சா என்ன நினைப்பாங்க, புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டு வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாள்னு என்னை தான் தப்பா பேசுவாங்க. வேணாம் பூங்குழலி இது சரிபட்ட வராது…
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings