in ,

வாக்கிங் போகிறான் மணி (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ருநாள் ஆறுமுகம் ஸாரை ஒரு வேலை விஷயமாய் போய் பார்த்து வரச் சொல்லியிருந்தார் மணியின் அப்பா. மணி மொபைலில் கூப்பிட்டான். அந்தநேரம் அவர் ஒரு கிரவுண்டில் வாக்கிங் போய்க் கொண்டிருப்பதாகவும் அப்போதே வர வேண்டுமென்றால் அங்கே வந்து பார்க்கச் சொல்லியும் சொன்னார். உடனே மொபெட்டை எடுத்துக் கொண்டு அங்கே போய் விட்டான்.

அது ஒரு பெரிய கிரவுண்ட்.  ஜனங்கள் நடந்து நடந்து அந்த கிரவுண்டில் ஒரு நீள் வட்ட வடிவ சாலையே உருவாகி இருந்தது.

தூரத்தில் இருந்தே அவரை பார்த்துவிட்டான். மொபெட்டை மரநிழலில் நிறுத்தினான். அப்போது பார்த்து இரண்டு பெண்கள் தங்களது ஸ்கூட்டியை அவனது மொபெட்டின் அருகே நிறுத்திவிட்டு அவர்களும் அதே கிரவுண்டை நோக்கி நடந்தனர்.

‘அடடா… என்ன அழகு… என்ன அழகு… எங்கே போயிருந்தார்கள் இவர்கள், இத்தனை நாளாய், நமது கண்ணில் படாமல். இவ்வளவு அழகாக இருக்கிறார்களே, யார் இவர்கள், நடிகைகளே இவர்களிடம் தோற்றுப் போய்விடுவார்கள் போலிருக்கிறதே… ‘

எண்ணிக்கொண்டே மணி நடக்க… அவர்களும் முன்னே நடக்க… ஆறுமுகம் ஸாரை நெருங்கி விட்டான். அவருடன் பேசினான். அவனைப்பற்றி கேட்டார்.  முடிவில் மறுநாள் மதியம் தனது கம்பெனியில் தன்னை வந்து பார்க்கச் சொன்னார். ஆனாலும் அவனது மனதெல்லாம் அவர்களுக்கு முன்னாள் வாக்கிங் போய்க்கொண்டிருக்கும் அந்த இரண்டு ரதிகளின் மேலேயேதான் லயித்திருந்தது.

‘ சரி தம்பி… அப்பாக்கிட்டே சொல்லிடு… நான் ஆறு ரவுண்டு முடிச்சிட்டேன்… கிளம்பறேன்… ‘ என்றுவிட்டு நடைபாதையை விட்டு விலகினார், அவர்.   இவனுக்கோ கிளம்ப மனதில்லை. 

‘ நல்ல வேலை… அவர் கிளம்பிட்டார்… இனிமே நல்லா ரசிச்சிக்கிட்டே பின்தொடரலாம்… ‘

யோசித்துக்கொண்டே அவர்களது வேகத்துக்கு இணையாக நடந்தான்.

‘ கல்லூரி பெண்களா… அல்லது எங்காவது வேலை செய்பவர்களா… ச்சே… எத்தனை காலமாக இவர்கள் இங்கே வந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லையே. நாமும் இத்தனை நாட்களாக இப்படி ஒரு வாக்கிங் போவதைப் பற்றியே யோசிக்கவில்லையே… மிஸ் பண்ணிவிட்டோமே. இனிமேல் தினமும் இங்கே வாக்கிங் வந்துவிட வேண்டியதுதான்… ‘

யோசித்துக்கொண்டே கொஞ்சம் விரைவாக நடந்து அவர்களை நெருங்கினான்.  அவர்கள் என்ன பேசிக்கொண்டு நடக்கிறார்கள் என்று கவனிக்க ஆவல் இவனுக்கு.

அவர்கள் பையன்களைப் பற்றி பேசுகிறார்கள் என்று புரிந்தது.

‘ ஓ… ஆண்களுக்கு பெண்களைப் பற்றி பேசுவதும், பெண்களுக்கு ஆண்களைப் பற்றி பெசுவதும் தானே இயல்பு…  பேசட்டும் பேசட்டும்… ‘

அவர்கள் பேசிக்கொள்வதைப் பார்த்தால், கல்யாணம் ஆனவர்களைப் போலத் தெரியவில்லை.  கல்லூரிப் பெண்களாக இருந்து பையன்களை கலாய்ப்பது போலவே இருந்தது. உன்னிப்பாக கவனித்தான். ஒருத்தி கழுத்தைச் சுற்றி துப்பட்டா போட்டிருந்தாள். கழுத்தில் தாலி இருந்தாலும் தெரியாது. காலைக் கவனித்தான். மெட்டி தெரியவில்லை. அடுத்தவள் ஒரு சங்கிலி மட்டும் போட்டிருந்தாள். தாளிக்கொடியாக இருந்தால் கொஞ்சம் தடிமனாக அல்லவா இருந்திருக்கும். இது மெலிதாக இருந்தது. ஆக அது தாலிக்கொடி அல்ல. காலைப் பார்த்தான். கேன்வாஸ் ஸு போட்டிருந்தாள்.

‘ சரி, கல்யாணம் ஆனவர்களாய் இருந்தால் என்ன… ஆகாதவர்களாய் இருந்தால் என்ன… நமக்குத் தேவை கண்களுக்கு குளிர்ச்சி… நடப்போம்… ‘

அந்த நேரம் பார்த்து அப்பாவிடம் இருந்து ஃபோன்.  வெறுப்புடன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

‘ சரி… நாளைக்கும் இதே நேரத்துக்கு இங்கே வந்துவிட வேண்டியதுதான்… ‘ என்று முடிவும் செய்துகொண்டிருந்தான்.

ஒரு கார் கம்பெனி ஒரு புது ஷோரூம் திறப்பதாக இருந்தது.  ஆறுமுகம் வேறொரு கார் கம்பெனியில் சூப்பர்வைசர். இவனது அப்பாவும் அவரும் கொஞ்சம் நெருங்கிய நண்பர்கள். இவனும் மெக்கானிகல் இஞ்சினீயரிங்கில் டிப்ளோமா பண்ணியிருக்கிறான். அந்தப் புது கம்பெனியில் ஏதாவது ஒரு வேலைக்கு அவனை ரெக்கமென்ட் பண்ணச் சொல்லியிருந்தார். இவன் போய் பேசியதும் அந்த கார் கம்பெனியின் ஜெனெரல் மேனேஜரிடம் பேசுவதாக சொல்லிவிட்டு மறுநாள் தன்னை வந்து பார்க்கச்சொல்லி அனுப்பினார்.

றுநாள்  வேலைக்குக் கிளம்பிப்போய் பார்த்தான். வேலை நடந்தது. அதெல்லாம் மறுபக்கம். ஆனால் முதல்நாள் முடிவுசெய்திருந்தபடி சாயங்காலம் வாக்கிங் போக முடிவு செய்துவிட்டான்.

‘ என்னடா… வெளியிலயா… ‘ அம்மா கேட்டார்கள்.

‘ ஆமாம்மா… வாக்கிங்  போக ஆரம்பிச்சிட்டேன்… ‘ என்றான் கொஞ்சம் தயக்கமாய்.

‘ அட… என்ன இது புதுசா… ’

‘உடம்புக்கு நல்லதுமா… வேலைக்கும் போகப்போறேனில்லையா.. உடம்பை பிட்டா வச்சுக்க வேணாமா… ‘ என்றபடி வெளியேறிவிட்டான்.

நல்ல வேலை ஆறுமுகம் ஸார் இன்னும் வரவில்லை.  ஆனால் அந்த இருவரில் ஒரு பெண் மட்டும் தனியாக நடந்து கொண்டிருந்தாள்.

பின் தொடர்ந்து நடக்கலாமா… அல்லது வேகமாய் நடந்து முன்பக்கமாய் நடக்கலாமா… இல்லை பேச்சு கொடுக்கலாமா… ச்சே… முன்னே பின்னே தெரியாதவளிடம் போய் என்ன பேச முடியும்… அதிகப் பிரசங்கித் தனமாக போய்விடாதா… நீ யாரைய்யா… என்று முகத்தில் அடிப்பது போல அவள் பேசிவிட்டால்.

புரிந்து போனது, முந்தின நாள் துப்பட்டாவை கழுத்தில் சுற்றியிருந்தவள்தான் அது.  இப்போது துப்பட்டா இல்லை. அத்துடன் இவளும் மெலிதான சங்கிலி ஒன்றைத்தான் போட்டிருந்தாள்.

‘ இப்போலாம் பொண்ணுகளுக்கு தாலி கழுத்துல இருக்கணும்ங்கறதே இல்லை. ஏதாவது விசேஷம்னாத்தான் போட்டுக்கறாளுக… வரவர இது ஒரு  ஃபேஷனாவே போச்சு… ’ அம்மா ஒருமுறை அங்கலாய்த்துக் கொண்டிருந்தது இப்போது ஞாபகத்துக்கு வந்தது.  பார்க்க ஒரு இருபது வயது இருக்கலாம், அவளுக்கு. 

ஒரு ரவுண்டு முடியும்போது அடுத்த பெண்ணும் வந்து சேர்ந்தாள்.

அப்பாடா… இனிமேல் நமது காட்டில் அடைமழைத்தான்… !

‘ ஏ… ராதி… முன்னாடியே வந்துட்டியா… ‘ என்றபடியே நெருங்கினாள், அவள்.

அப்படியென்றால் முன்னாள் போகிறவளின் பெயர் ராதிகாவாக இருக்குமோ… !  இல்லை ராதாவாக இருக்குமோ…

திகைத்தான்.  வந்து சேர்ந்தவள் முதல்நாள் ஸு போட்டிருந்தவள். இப்போது செப்பல் போட்டிருந்தாள். உற்றுக் கவனித்தான். கால் விரல்களில் மெட்டி இருந்தது. 

‘ ஓ… இவள் கல்யாணம் ஆனவளோ… அதனால் என்ன… இன்னொருத்தி கல்யாணம் ஆகாதவள் போலத்தானே தெரிகிறாள்… ‘

பேச்சுவாக்கில் இவளது பெயர் செல்வி என்றும் புரிந்து போனது.  எதேச்சையாக அந்த செல்வி என்பவள் திரும்பி இரண்டு முறை இவனைப் பார்த்துவிட்டாள். இவனுக்கு திக் என்றது.

நாம் அவர்களை தொடர்ந்து நடப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்களோ. யாரிவன் நம்மைப் பின்தொடர்ந்து வருவது போலவே வருகிறானே என்று தப்பாய் ஏதும் நினைத்துக் கொல்வார்களோ…

கொஞ்சம் வேகமாய் நடந்து அவர்களைக் கடந்து போனான்.  கடக்கையில் கொஞ்சம் திக் திக் என்றுதானிருந்தது.

‘ ச்சே… நாம் ஏன் பயப்பட வேண்டும்… நாம் வாக்கிங் போகிறோம்… அவ்வளவுதானே… ! ‘

நான்கு ரவுண்டு முடித்துவிட்டான். அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள்.  கொஞ்சம் மெதுவாக நடந்து அவர்கள் இவனுக்குப் பின்னால்  நெருக்கமாய் வருவது போல நடந்தான்.

‘ அப்புறம்… குழந்தைக்கு காய்ச்சல் எப்படி இருக்கு… ‘

‘ டாக்டர்கிட்டே போயி ஊசி போட்டோம்… இப்போ பரவால்ல… ‘

சட்டென திரும்பிப் பார்த்தான்.  முன்னதாக வந்து நடந்தவள்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘ ஐயோ… இவளும் கல்யாணம் ஆனவள்தானா… அம்மா சொன்னதும் சரிதானோ…  வர வர கல்யாணம் ஆனதுக்கான அடையாளமே இல்லாமல் வருகிறார்களே, ஐயோ… கடவுளே…  ‘

பேச்சு வாக்கில் நண்பன் முருகனிடம் இதைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தான் மணி.   ‘அய்யே… நீ ராமாவரம் கிரவுண்டுக்கு வா… அங்கே கலர் கலரா பொண்ணுங்க வர்றாளுங்க… அங்கேதான் நாலு மாசமா நான் ரவுண்டு போயிட்டிருக்கேன்… ‘ என்றான் அவன்.

மறுநாள் அவனுக்கு ஃபோன் போட்டான்.

‘ மச்சி… அந்த கிரவுண்ட் எங்கே இருக்கு. லொகேஷன் மேப் அனுப்பே… ‘

‘ ஸாரி மச்சி… நான் பைக்லேர்ந்து விழுந்து பிராக்ஸர் ஆகி  படுத்திருக்கேன்டா… ‘

வெறுப்பே வந்துவிட்டது. 

‘ ச்சை…  அவன் நேற்று பேசும்போது ஒரு க்ளூ கூட கொடுக்கவில்லையே, அது எந்த கிரவுண்டு என்று… இப்போது என்ன செய்யலாம்… அவனையே கேட்டுவிடலாமா… ஐயோ… என்னை பார்க்க உனக்குத் தோணவில்லை, கிரவுண்டு மட்டும் கேட்கிறதா என்று அவன் கேட்டுவிட்டால். ‘

புது கிரவுண்டு. கலர்கலராய் பெண்கள். அந்த யோசனையில் புது கேன்வாஸ் ஸு எல்லாம் வாங்கியிருந்தான்.

‘ ச்சே… என்ன செய்யலாம்…  ‘

உங்களுக்குத் தெரிந்த கிரவுண்டு ஏதாவது இருந்தா சொல்லுங்களேன்… பாவம், மணி நொடிந்து போய் உட்கார்ந்துவிட்டான்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    லிஃப்ட் (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

    ஒரு மாலை (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு