எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சாயந்தரம் ஆபீசிலிருந்து வந்தவுடனே ஷூசை கழட்டிட்டே உள் பக்கம் பாத்து குரல் கொடுத்தேன். “சுசிலா, என்ன இன்னிக்கு,யாரு வரப் போறா?”
டப்டப்னு காலைத் தட்டிக் கொண்டே (கோபத்தைக் காட்டறாங்களாம்)நடந்து வந்து சென்டர் டேபிள்ல காபி டம்ளரை டம்னு வச்சா.
“மெதுவா,மெதுவா காபி கொட்டிச்சுன்னா தேச்சு துடைக்கணும் திரும்ப”
“ஏன் நான் வீட்டை சுத்தமா வச்சிக்கறதில்லையா! யாராவது வரப் போறாங்கன்னாதான் கிளீன் பண்றேனா? தினம் பேப்பரை படிச்சுட்டு அங்கங்கே தூக்கிப் போட்டுட்டுப் போறது யாராம். இதோ இப்ப வந்து ஷூவை ஒரு பக்கம் சாக்ஸை ஒரு பக்கம் போட்டிருக்கறது யாராம்? வீட்டை ஒரு ஆள் மட்டும் கிளீனா வச்சுக்க முடியாது, இருக்கறவங்க எல்லாருக்கும் அந்த உணர்வு வேணும், நீங்க ஒரு பக்கம் உங்க பொண்ணு ஒரு பக்கம் வீட்டை அலங்கோலப் படுத்தறீங்களே, தினம் யாரு கிளீன் பண்றாங்களாம்” மூச்சு விடாம பேசி நிறுத்தினாள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க.
“நான் இப்ப என்ன கேட்டேன்னு இப்படி பொறிஞ்சு தள்றே யாராவது வரப் போறாங்களானு சாதாரணமாதானே கேட்டேன்”
“30 வருஷமா உங்க கூட குப்பை கொட்டற எனக்கு உங்க கிருத்திரமப் பேச்சு புரியாதா என்ன. உங்க அருமைத் தங்கையும் அவ ஆம்படையானும்தான் வராங்க ஏதோ சைதாப்பேட்டைல ஃபிரண்டு வீட்டு கல்யாணம்னு”
“எப்பவும் நம்ம வீட்டை நீதான் பளிச்னு வச்சிப்பே ,இன்னிக்கு சக்தி வாய்ந்த அதி தீவிர லிக்விட் டிடர்ஜன்ட் போட்டுக் கழுவின மாதிரி பளபளனு இருந்ததேனு கேட்டேன்”
“போறும் சமாளிச்சது, போய் எதாவது சமையலுக்கு காய்கறி,பாயசம் பண்ண சேமியா, கண்டென்ஸ்ட் மில்க், வச்சுக் கொடுக்க எதாவது கிஃப்ட் எல்லாம் வாங்கிட்டு வாங்க”
“அதென்ன பிரமாதம் அமேசான்,இன்ஸ்டாமார்ட் எத்தனை இருக்கு,ஆர்டர் பண்ணினா அரை மணி நேரத்துல வரப் போறது.”
“உங்கம்மா, உங்களை எந்த நேரத்துலதான் பெத்தாளோ! தெரு முனைல இருக்கற கடையை விட்டுட்டு ஆன்லைனாம், அவன் கண்டதை நம்ம தலைல கட்டி காசும் எக்கச்சக்கமா பிடுங்கிடுவான்”
“சரி சரி தேவையில்லாம போய் சேந்த புண்யவதி என் அம்மாவை இழுக்காதே நானே போய்த் தொலையறேன்”
“உங்கம்மாவை சொன்னா இப்படி சுருசுருனு கோவம் வருதே வார்த்தைக்கு வார்த்தை என் அம்மா, அப்பாவை இழுக்காம இருந்திருக்கீங்களா”
“அம்மாடி சுசிலா,ஆபீஸ்ல அந்த புதுசா வந்திருக்கற மேனேஜர் பொம்பளை,வீட்டுக்கு வந்தா நீ,போறும்டா சாமி அடுத்த ஜன்மத்துலயாவது ஒரு பொண்ணாப் பிறந்து எல்லாரையும் ஆட்டிப் படைக்கணும்”
சிரிப்பை அடக்கிட்டு,” ரொம்ப சலிச்சிக்காம போயிட்டு வாங்க, உங்களுக்கு பிடிச்ச மாதிரி வெண்டைக்கா ரோஸ்ட் பண்றேன் நைட்டுக்கு”
“நைட்டுக்கு அது மட்டும்தானா”
“உங்க பொண்ணு வர நேரமாச்சு கன்னா பின்னானு பேச ஆரம்பிக்காம போயிட்டு சீக்கிரம் வாங்க, வழில உன் பிரண்ட் ரேணுகாவைப் பாத்தேன்னு இளிச்சிட்டு நிக்காம”
எப்படியோ வாரம் ஒரு விருந்தினர் வீட்டுக்கு வந்தா வீடு படு சுத்தம் ஆறது, கொஞ்சம் செலவானாலும் வீடு சுத்தமா இருந்தா சரிதான்.
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings