in ,

நாம கம்பீரமானவங்க…! (சிறுவர் கதை) – பிரபாகரன்.M

Vector Illustration of a happy elephant on the Savannah. File saved on layers for easy editing.

எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முல்லை வனத்தின் பரந்த ஆற்றங்கரைப் பிரதேசம். குட்டி யானை அப்பு தனது பெரிய கூட்டத்தோடு அந்தப் பகுதியில்தான் வசித்து வந்தது. அப்பு ரொம்பவே துறுதுறுப்பாக இருக்கும். ஓரிடத்தில் நில்லாமல் குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டே இருக்கும். பெரிய யானைகளின் செயல்களை அது எப்போதும் வேடிக்கை பார்த்தபடி இருக்கும். பெரிய யானைகளிடம் அப்பு ஒரு விஷயத்தைக் கவனித்தது.

எல்லாப் பெரிய யானைகளும்; சதாகாலமும் ஏதோ ஒரு வேலையைச் செய்தபடி இருந்தன. சில யானைகள் சந்தனம் தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்களை வனத்திற்குள் கொண்டு சென்றன. சில ஆற்றில் நீர் அருந்த வரும் மற்ற பறவைகள் மிருகங்களைக் கண்காணித்தபடி இருந்தன.

சில யானைகள் இரவு நேரத்தில் வனத்தை சுற்றி வந்து காவல்  காத்தன. இன்னும் சில நதி நீரை உறிஞ்சிக் கொண்டு போய் காடுகளில் ஆங்காங்கே தெளித்தன. இன்னும் சில யானைகள் ஒரே பாதையில் நடந்து நடந்து சென்று வழித் தடத்தை உருவாக்கின.

அம்மா யானை அப்புவிடம் “நீயும் வளர்ந்த பின்னாடி இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யனும்!” – என்று சொல்லும். சிறிய பலாப்பழத்தைக் கையில் கொடுத்தால் கூட அப்புவால் அதைப் பிய்த்துச் சாப்பிட முடியாது. அம்மாதான் பழத் தோலை நீக்கி சுளைகளை அப்புவிற்கு உண்ணக் கொடுக்கும்.

ஈரமண்ணில் பொதிந்து கிடக்கும் சிறு மரமுண்டைக் கூட அப்புவால் நெம்பித் தள்ள முடியாது. அதுதான் தொபுக்கடீர் என்று கீழே விழும். அப்படி இருக்கும் போது கடினமான வேலைகளை எப்படிச் செய்ய முடியும்? அப்பு யோசிக்கும். அதற்குத் தெரிந்ததெல்லாம் நதி நீரை துதிக்கையால் உறிஞ்சித் தன் வயதை ஒத்த மற்ற  குட்டிகளின் மேல் தெளித்து விளையாடுவதுதான்.  அதுதான் அதுக்கு ரொம்பப் பிடிக்கும்.

குட்டி அப்பு இன்னொரு விஷயத்தையும் கவனித்திருக்கிறது. மற்ற பறவைகள் மிருகங்கள் யானைக் கூட்டத்தைப் போன்று வேலை செய்வதில்லை. புலிகள் அதன் தூறில்தான் எப்போதும் அடைந்து கிடக்கின்றன. மான்களும் வரிக்குதிரைகளும் புற்பரப்பில் மேய்ந்தபடி இருக்கின்றன.

நரிகள் ராத்திரிப் பொழுதில் ஊளையிடுவதோடு சரி. பறவைகளைப் பற்றிச் சொல்ல வேண்டாம்.   கிடைத்த பழங்களைக் கொறித்து விட்டு அதன் எச்சங்களை பொறுப்பின்றி அங்கும் இங்கும் வீசிச் செல்கின்றன. சிங்கராஜாவோ வெறும் உலா மட்டும்தான். யானைக் கூட்டம்தான் நிறைய வேலைகள் செய்வதாக அதற்குத் தோன்றியது.

அது அம்மாவிடம் “நாம மட்டும் ஏம்மா இவ்வளவு வேலை செய்யுறோம்? மற்ற பறவை மிருகங்கள்லாம் எந்த வேலையும் செய்யுறதுல்ல?” – என்று கேட்டது.

“யார் சொன்னது மற்ற பறவை மிருகம்லாம் வேலை செய்யலைனு? எல்லாம் அதுக அதுக வேலையைப் பாத்துக்கிட்டுதான் இருக்குதுங்க! நாம பெரிய உருவம்ங்குறதுனால நாம் செய்யுற வேலை பெரிசா வெளில தெரியுது!” – என்றது அம்மா யானை. இருந்தாலும் அப்புவுக்கு சமாதானம் ஆகவில்லை.

அதைப் புரிந்து கொண்ட அம்மா யானை “வேலை செய்யுறதுக்கு யோசிக்கக் கூடாது! அது நம்ம உடலுக்கு பலம்தான்?” –என்றது.

“நான் அதைச் சொல்லலமா? எதுக்காக நாம மட்டும் அதிகமா வேலை செய்யுறோம்னு  கேக்குறேன்!” – என்றது அப்பு.

“இந்தக் காட்டுலேயே எது அதிக வளமான பகுதி?” – கேட்டது அம்மா யானை.

“வேற எது? நாம வசிக்கிற இந்த ஆற்றங்கரைப் பகுதிதான்!” – சொன்னது அப்பு.

“இந்த வளத்தை நாம அனுபவிக்கறதுல நமக்கு ஏதாவது தடைகள் இருக்கா?” -இது அம்மா யானை.

“கிடையாது!” – தலையாட்டியது அப்பு.

“ஆனா மத்த பறவை மிருகம்லாம் தண்ணீர் குடிக்க ஆத்துக்கு வரனும்னா நம்மகிட்ட கேட்டுட்டுதான் வரனும்! சிங்கராஜா கூட அவருக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்துலதான் இங்க தண்ணீர் அருந்த வர முடியும்!”  என்ற அம்மா யானை தொடர்ந்து பேசியது.

“இந்த பெரிய ஆறு நம்ம வனத்துக்கு இயற்கையாகவே அமைஞ்ச பாதுகாப்பு அரணா இருக்கு! ஆத்துக்கு மறுபக்கம் இருந்து எதிரிகளால நமக்குத் தொல்லைகள் வராம காவல் காக்குற வேலையை நாம செய்யுறோம்! ஆத்துல வெள்ளம் போற பேரிடர் காலங்கள்ல்ல எச்சரிக்கை கொடுத்து மத்தவங்களை காப்பாத்துறதும் நாமதான்.! மான்கள் வரிக்குதிரைகள் காட்டெருமைகள் மேயுறதுக்குத் தேவையான புல்வெளிகளையும் நாமதான் உருவாக்குறோம்! நாம ஏற்படுத்துற வழித்தடத்துலதான் மத்த மிருகங்கள்ல்லாம் நடந்து போகுது!” – என்றது அம்மா.

கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் இதையெல்லாம் எதற்கு அம்மா தன்னிடம் விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது என்று அப்பு குழம்பியது.

அப்போதுதான் அம்மா அப்புவின் கேள்விக்கு வந்தது. “எப்பலாம் பெரிய பொறுப்புகளை நாம ஏத்துக்குறோமோ அப்பலாம் நமக்கு மத்தவங்களை கட்டுபடுத்துற அதிகாரம் கிடைக்கிறதையும் நீ கவனிக்கனும்! பொறுப்பு அதிகாரத்தைக் கொடுக்கும்! அதிகாரம் சுதந்திரத்தைக் கொடுக்கும்! பொறுப்பு அதிகாரம் சுதந்திரம் இந்த மூன்றும் எல்லாருக்கும் கிடைச்சிராது! தலமைப் பண்புகள் இருக்குறவங்களுக்கு மட்டும்தான் கிடைக்கும்! நம்மகிட்ட  தலமைப் பண்புகள் இருக்கு! நாம வேலை செய்யவும் தயாரா இருக்கோம்! அது நமக்கு கூடுதல் வளங்களையும் கொண்டு வந்து சேர்க்குது!” –என்றது அம்மா யானை.

அதுவே சற்று இடைவெளி விட்டு “இந்தக் காட்டுல எது நல்லது நடந்தாலும் அது நம்மளைச் சுத்திதான் நடக்கும்! ஏன்னா நாம கம்பீரமானவங்க!” – என்று சற்று அழுத்திச் சொன்னது.

அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே சிவிங்கி குட்டி மான்குட்டி இதெல்லாம் பின்னால் வந்து அப்புவை விளையாட வரச் சொல்லிச் சுரண்டிக் கொண்டிருந்தன. அப்புவும் அம்மாவிடம் பேசுவதை விட்டுவிட்டு குடுகுடுவென்று அவர்களோடு விளையாட ஓடியது.

அதற்கு அம்மா சொன்னது முழுமையாகப் புரியவில்லை. ஆனால் அது அம்மா சொன்ன ‘நாம கம்பீரமானவங்க!’ – என்ற வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டது. அது அந்த வார்த்தைகளை ஒரு முறை உச்சரித்துப் பார்த்தது. அப்போது அதன் மனத்தில் கொஞ்சம் பெருமிதம் உண்டானது.  

எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    யாருக்கு அம்பாரி? (சிறுவர் கதை) – பிரபாகரன்.M

    பூ ஒன்று புயலானது! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்