எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சாணக்ய நாட்டின் பட்டத்து யானை கஜமுகன் ஆழ்ந்த யோசனையில் இருந்தது. அது தேசத்தின் பட்டத்து இளவரசரை எப்படித் தேர்வு செய்யப் போகிறோம் என்ற குழப்பத்தில் இருந்தது. நாளை காலை இரத வீதியின் வழியாக அதனை அழைத்துச் செல்வார்கள். அப்போது அங்கு குழுமியிருக்கும் பாலகர்களில் இருந்து ஒருவனைப் பட்டத்து இளவரசனாக அது தேர்வு செய்ய வேண்டும்.
தற்போது கஜமுகனின் அகவை அறுபது. அது மூன்று வயதிலிருந்து அரண்மனையில் தான் வளர்ந்து வருகிறது. மன்னரின் பிரியத்திற்குரியது. அது மன்னருடன் ஏராளம் போர்களைக் கண்டு விட்டது. மன்னருடன் கஜமுகன் களம் கண்டு விட்டால் போதும். எதிரிகளைப் பந்தாடி விடும். ஏராளம் விழுப்புண்களுடன் கோட்டையில் இன்றும் அது கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
போர் என்பது வீரம் செறிந்த செயல். ஒரு களிற்றிடம் வீரத்திற்கு பஞ்சமா என்ன? ஆனால் ஒரு இளவரசரைத் தேர்வு செய்ய எத்தனை விவேகம் வேண்டும்? அதனால் அது சற்றுத் தயக்கத்துடன் குழம்பி நின்றது.
அரண்மனையின் பின்புறம் ஒரு சந்தனக்காடு. அரண்மனையில் வீசும் காற்றில் எப்போதும் நறுமணம் கமழ வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட காடு அது. அதில் குயில் ஒன்று வசித்து வந்தது. அந்தக் குயில் கஜமுகனின் தோழி. அது அவ்வபோது கஜமுகனைச் சந்திக்க வரும். கஜமுகனோடு அளவளாவும். ஓருநாள் அது கஜமுகனைச் சந்திக்க வந்தது. அதனிடம் கஜமுகன் தனது எண்ணத்தைச் சொன்னது.
“நீ போற பாதைல இருக்குற யாராவது பாலகன் கழுத்துல மாலையப் போட்டுட்டா வேலை முடிஞ்சது! அவ்வளவுதான்!” – என்று கஜமுகனைச் சீண்டியது குயில்.
“மன்னருக்குப் பின்னால் இந்த ராஜ்யத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பை சுமக்க வேண்டியவன் இவன்! அப்படி என்றால் நாம் எத்தனை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்?” – கஜமுகன் எதிர்கேள்வி கேட்டது.
“யாரைத் தேர்வு செய்தாலும் அவனை அரச மாண்புகளுக்குத் தகுந்த மாதிரி மாற்றி விடப் போகிறார்கள்! இது என்ன கம்ப சூத்திரமா?” – என்றது குயில். கஜமுகனுக்கு கோபம் வந்தது.
“நீ எனக்கு ஆலோசனை சொல்ற மாதிரி தெரியல! வேனும்னே சீண்டி பாக்குற! போர் என்பது வீரம்! ஆனா இது முழுக்க முழுக்க விவேகம் மட்டும் இல்லையா?” – கேட்டது கஜமுகன்.
போர்னா வீரம்னு யார் சொன்னது! கிடையாது! அது பெரிய அளவிலான அங்கீகரிக்கப்பட்ட வன்முறை! அதுனாலதான் வயசு ஏற ஏற நம்ம ராஜா போர் போர்னு அக்கப்போர் பண்ணாம நெஞ்சை நிமிர்த்தாம நேசக்கரம் நீட்டுறாரு! புரிஞ்சுக்கோ!” – என்றது குயில்.
“குதர்க்கமாவே பேசுற! இளவரசரைத் தோந்தெடுக்குறதுக்கு இப்ப நான் என்ன செய்யனும்! அதுக்கான வழியைச் சொல்லு! – என்றது கஜமுகன்.
“ராஜ்யத்தை காப்பாத்துறது ராஜானா அந்த ராஜாவை போர்ல காப்பாத்துறது நீ ! அதுக்கு வெறும் உடல் பலம் மட்டும் போதாது! புத்திகூர்மை சாதுர்யம் நினைவாற்றல் அவசியம்! இதெல்லாம் உங்கிட்ட நிறையவே இருக்கு! அந்தப் பெருமிதத்தோட போயி இளவரசனைத் தேர்ந்தெடு போ!” – கஜமுகனை சீண்டியது போதும் என்று நினைத்த குயில் அக்கறையுடன் பேசியது.
அதுவே தொடர்ந்து “தேரோடும் சித்திரை வீதிகள் வழியா உன்னை கூட்டிட்டுப் போவாங்க! தங்கள் இளவல் பட்டத்து இளவரசனா ஆகனும்னு ஆசைப்படுற பெற்றோர்கள் தங்கள் பாலகர்களை அந்த வீதில நிறுத்தி வைச்சிருப்பாங்க! நீ அவங்கள பாத்துட்டு போகும் போது உனக்குப் பிடிச்சவங்களை மனசுல குறிச்சு வைச்சுக்கோ! அரண்மைனை நோக்கித் திரும்ப வரும் போது நீ யார் கழுத்துல மாலை போடுறியோ அந்த பாலகன்தான் இந்த நாட்டின் பட்டத்து இளவரசன்! இதுதான் நடைமுறை!” –என்றது குயில்.
“நடைமுறை சரி! நான் எப்படி என் மனசுக்குப் பிடிச்சவங்கள கண்டுபிடிக்கிறது?”
“உனக்கு யோசனை சொல்றதுக்கு பதிலா நானே தேர்ந்தெடுத்துரலாம்! ஆனா ஒரு மக்கு புறாவை நம்புற அளவுக்கு குயிலை நம்ப மாட்டாங்க!” என்ற குயில் தொடர்ந்து “ரொம்ப எளிது! சில பாலகர்களை ரொம்ப ஆடம்பரமா இப்பவே இளவரசனாயிட்ட மாதிரி ஆடைகள் ஒப்பனைலாம் பண்ணி நிப்பாட்டி வைச்சிருப்பாங்க! இவங்க பெற்றோர்களும் கிட்டத்தட்ட அதே மாதிரி ஒப்பனைகளோட நிப்பாங்க! உன்னோட கவனத்தை கவர்றதுக்காக அதீதமா உன்னை வணங்குவாங்க! அதுல ஒரு செயற்கைத்தனம் இருக்கும்! இவங்களை நீ நிராகரிக்கனும்! ஏன்னா இவங்க ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கிட்டு இருக்கவங்க! அரியணை ஏறிட்டா சதாகாலமும் அந்த பதவி சுகத்தைத் துய்ப்பதுலதான் கவனமா இருப்பாங்க! மக்களைப் பத்தி கொஞ்சமும் அக்கறைப்பட மாட்டாங்க!” – என்றது குயில்.
“சரி! அடுத்து?” – என்றது கஜமுகன்.
“இன்னும் சில பேரு தங்களோட பாலகர்களை ஏதோ நிர்ப்பந்தம்ங்குற மாதிரி நிப்பாட்டி வைச்சிருப்பாங்க! அதுல ஒரு கம்பீரம் இருக்காது! இவங்க தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டாலும் அதுக்கான தகுதி இருக்காது! தயக்கம் இருக்கும்! ஒருவித அச்சம் இருக்கும்! ராஜபதவில நாட்டு மக்களுக்கு நல்லது செய்யுறதுல்ல இது பல விதத்திலும் தடையா இருக்கும்! இந்த மாதிரி ஆட்களையும் நீ தவிர்க்கனும்!” – என்றது குயில்.
“நல்ல யோசனைதான்!” – என்றது யானை.
“இன்னும் சில பேர் தங்களோட பாலகர்களை ரொம்ப யதார்த்தமா நிப்பாட்டி வைச்சிருப்பாங்க! அவங்களோட ஆடைகளும் அங்க அசைவுகளும் உன்னோட கவனத்தை அளவுக்கு அதிகமா கவர்ற மாதிரி இருக்காது! ஆனா ஈர்ககுற மாதிரி இருக்கும்! இவங்க உன்னை வணங்குறதும்; இயல்பா இருக்கும்! ஒருவேளை தங்கள் பாலகர்களுக்கு வாய்ப்பு கிடைக்காட்டா கூட அதை இயல்பா ஏத்துக்குற மனப்பக்குவம் அந்தப் பெற்றோர்களுக்கு இருக்கும்! இந்த மாதிரி பாலகர்ளைத்தான் நீ மனசுல குறிச்சு வைச்சிக்கனும்!” என்றது குயில்.
“ஒரு சின்ன சந்தேகம்! ஓன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்களை நான் மனசுல குறிச்சு வைச்சுக்குறேன்னு வைச்சிக்கோ! அப்ப அதுல இருந்து எப்படி ஒரு பாலகனைத் தேர்வு செய்யுறது?” – என்றது கஜமுகன். அதற்கு குயில் பதில ஏதும் சொல்லவில்லை. கஜமுகனின் காதில் ஏதோ கிசுகிசுத்தது. கஜமுகனும் தலையாட்டிக் கேட்டுக் கொண்டது.
மறுநாள் காலையில் கஜமுகனை தேரோடும் வீதிகள் வழியாக அழைத்துச் சென்றார்கள். கஜமுகனும் ஒவ்வொரு பாலகனாக உற்றுப் பார்த்து எடை போட்டுக் கொண்டே வந்தது. முடிவில் அது மூன்று பாலகர்களை மனதில் குறித்து வைத்துக் கொண்டது. அந்த மூவரும் வயதுகேற்ற வளர்ச்சியுடனும் புத்திகூர்மை உடையவர்களாகவும் காணப்பட்டார்கள்.
அரண்மனை திரும்பும் வழியில் அந்த மூவரில் யாரைத் தேர்வு செய்வது என அது ரொம்பக் குழம்பியவாறே வந்தது. ஒரு சிறுவனைக் கடக்கும் போது மேலே ஆகாயத்தில் கழுகு ஒன்று அந்த இடத்தை கிறீச்சிட்டபடி கடந்து சென்றது. அப்போது கஜமுகனுக்கு குயில் காதில் கிசுகிசுத்தது நினைவிற்கு வந்தது.
“நீ மனசுக்குள்ள குறிச்சு வைச்சிருக்கிறதுல ஒருவனைத் தேர்வு செய்யுறப்பம் ஏதேனும் நல்ல நிமித்தம் தெரியும்! அதை நீ சரியாப் புரிஞ்சிக்கனும்!” – இது குயிலின் வார்த்தைகள்.
கஜமுகன் யோசித்தது. பறவைகளில் கழுகை ராஜபறவை என்பார்கள். அது ஏன் இச்சமயம் பார்த்து கடந்து செல்ல வேண்டும்? சாணக்ய தேசத்தின் கொடியும் கழுகு சின்னம்தான். ஏதோ ஒன்றுக்கொன்று இணைவது போல் இருந்தது. இதுதான் குயில் கூறிய நிமித்தமா? இருக்கலாம்.
கஜமுகன் ஒரு கணம் அந்தச் சிறுவiனின் கண்களை உற்றுப் பார்த்தது. அதில் தெரிந்த ஒளி…!!! அவனின் தலைக்குப் பின் தெரிந்த அந்த ஒளி ஆரம்!!! கஜமுகன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த பாலகனின் கழுத்தில் மாலையிட்டது.
அடுத்த கணம் “நம் சாணக்ய தேசத்தின் பட்டத்து இளவரசர் வாழ்க!” – என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. கஜமுகனால் தேந்தெடுக்கப்பட்ட சிறுவன் அதன் முதுகில்; அம்பாரி ஏற்றப்பட்டான்.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings