in ,

பூ ஒன்று புயலானது! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

எதிர்பார்த்தபடியே அல்லது பயந்தபடியே  உள்ளே நுழைந்தாள் பொன்னி. வீடு  களேபரமாக காணப்பட்டதுடன் வீட்டுக்குரியவளும் கடுமையான முகத்துடன் எதிர் கொண்டாள். 

“தினமும் உன்னோடு இது ஒரு பிரச்சினை.சீக்கிரம் வரமாட்டாயா?” சிடுசிடுத்த முகத்துடன் வார்த்தைகளையும் கடித்து துப்பினாள்  பவானி.

“மன்னிச்சுக்கோங்க அம்மா!”, என்றபடியே உள்ளே நுழைந்தவள் பரபரவென்று வேலைகளைத் தொடங்கினாள்.

இது தினமும் நடக்கும் கதை தான் என்றாலும் பொன்னியின் மனது அலை பாய்ந்தது. ஒரு நாளாவது மனுஷியாக நடத்தியிருக்கிறார்களா! ஏதோ ஒரு மெஷினை ரோபோவை விலைக்கு வாங்கி விட்டது போல ஒரு அலட்சியம்.

ஏழைகள் என்றாலே எல்லோருக்கும் அசட்டைதான் வெறுப்பு தான். அவர்கள் செய்யும் வேலைகள் மட்டும் வேண்டும். ஒரு பரிவான வார்த்தை , ஒரு டம்ளர் காபி  சாப்பாடு எதுவுமே கிடைக்காது.‌ அதுதான் சம்பளம் தருகிறோமே என்று தான் அலட்சியமாக சொல்லுவார்கள்.‌ மூன்று வருஷமாக அதே சம்பளம் தான். விலை வாசி கூடியது அவர்களுக்கு மட்டும் தான் என்பது போல பேசுவார்கள்.

என்ன செய்வது! ஏமாந்தவர்களிடம் தானே இவர்கள் ராஜ்யம் செல்லும்! வறுமைக்கு வாழ்க்கைப் பட்டவர்கள்  வசதிகளையோ அன்பான வார்த்தைகளோ எதிர்பார்க்கலாமா! தினமும் பாத்திரம் தேய்த்து வீடு துடைத்து கைகள் மட்டுமில்லாமல் மனமும் காய்த்துப் போனதுதான் மிச்சம்.

தினமும் நடப்பதுதான் என்றாலும் மனது அலை பாயத்தான் செய்கிறது. பொன்னி வழக்கம் போலவே தொய்ந்த மனதுடனும் உடலுடனும் வீட்டை அடைந்தாள்.  எப்போதும் போல‌ அன்றாட வேலைகள் அவளுக்காக காத்திருந்தன. சலிப்புடன்  வேலைகளை முடித்துவிட்டு களைத்துப் போய் பாயில் படுத்தாள் அவள்.

“வந்தியா! வா, வா, எங்கேயாவது இலவசம் கிடைக்கும் என்று போய் விட்டாயோ என்று பார்த்தேன்”. உள்ளே நுழையும் போதே பவானி கிண்டலாக சொன்னாள்.

இலவசமாக  கோவிலில் கிடைக்கும் பிரசாதமும் நீர் மோரும் தான் அவள் வாழ்வின் ஆதாரமே! கொஞ்சமாவது உடல் இயங்க சக்தி வேண்டுமே! அதை அவளிடம் சொல்லிட்டு தப்பிக்க முடியுமா!

வீட்டு சாப்பாடு மிச்சமாக இருந்தால் கூட கொடுக்க மனது வராது. இவளுக்கு எதற்கு நல்ல சாப்பாடு  என்று தான் நினைப்பாள்.

“வீடு நல்லா சுத்தம் பண்ணு. நாளைக்கு பவனோட பிறந்தநாள் பார்ட்டி இருக்கு. அதோட நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் வரப் பாரு. சாயந்திரமும் வந்து மிஞ்சியிருக்கிற வேலையைப் பாரு”.

அதட்டலாக சொல்லிவிட்டு கையிலிருந்த மொபைலில் கவனத்தை செலுத்தினாள் பவானி.

“அம்மா!” என்றவளின் குரலில் கலைந்து நிமிர்ந்தாள்.

“கொஞ்சம் பணம் வேணும்மா!”

“பணமா ! எதுக்கு! இப்போ தானே பத்து நாள் முன்னாடி சம்பளம் வாங்கினே! அதுக்குள்ளே கேட்டா எங்கே போறது!”

‘அவசர செலவும்மா!’

“எப்போதான்  செலவு இல்லை உனக்கு? பாதி நாள் ஓசி சாப்பாடு. அதில் இந்த தேர்தல் வந்தாலும் வந்தது இலவசம் இலவசம் என்று ஓடிக் கொண்டிருந்தாய்! அது மாதிரி எல்லாம் கொடுக்கமுடியாதும்மா!” வார்த்தைகளை கேலியும் கிண்டலும் கலந்து துப்பினாள் அவள்.

“இந்த அரசியல்வாதிங்களை சொல்லணும் எப்போ பார்த்தாலும் இலவசம்னு கொடுத்து கொடுத்து உங்களை எல்லாம் கெடுத்து வைத்திருக்கிறார்கள். நாளைக்கு வேலை முடிச்சுட்டு வாங்கிட்டு போ. சும்மா , சும்மா பணம் கேட்காதே!”

இழுத்து செருகியிருந்த சேலையை சரி செய்து கொண்டு விசனத்துடன் வெளியேறினாள் பொன்னி. அவசரத்துக்கு காசு கொடுக்கலைன்னா வட்டிக்குத் தான் பணம் வாங்கணும்.

செஞ்சு வேலைக்கு சம்பளம் கொடுக்கவே  இந்த அம்மா ரொம்ப அலுத்துக்குது. நமக்குன்னு வந்து வாய்க்கிறாங்க பாரு. யோசித்தபடியே வேகமாக நடந்தாள் அவள்.

மறுநாள் எப்போதும் போலவே வேலைகள் காத்துக் கிடந்தன. கூடுதலாக அலங்கார தோரணங்கள் கட்டுவது திரைச்சீலைகள் மாற்றுவது  என்று வேலை நெட்டி  வாங்கியது.

இந்த அதிகப்படியான வேலைக்கு பார்த்து கொஞ்சம் அதிகம் கொடுப்பார்களா என்றால் அதுதான் கிடையாது. ஏதோ கொத்தடிமையை வேலைக்கு வைத்திருப்பது போல நினைப்பு. உள்ளுக்குள் பொருமினாலும் வெளியே சிரித்துக்கொண்டே வேலைகளை பார்த்தாள் அவள்.‌

ரோபாட் மாதிரி வேலை செய்தாலும் மனித இயந்திரம் களைத்துப் போகாதா என்ன! சுற்றியிருப்பவர்களின் கலகலப்பும் உற்சாகமும் அவளுக்கு  உவப்பளிக்கவில்லை. ஏதோ ஒரு குழந்தை கையில் இருந்த கப்பை கீழே  போட்டு விட்டது போலிருக்கிறது.

“ஏய்! பொன்னி ! இதை வந்து க்ளீன் பண்ணு! ” அதிகாரமான குரலில் கட்டளை இட்டாள் அவள்.  அந்த குழந்தையின் அம்மா சிதறிய துண்டுகளை எடுத்துக் கொண்டு இருந்தாள்.

“நீங்க எதுக்கு சிரமப்படுறீங்க! பொன்னி வந்து செய்வா! ” அந்தப் பெண் உதவி செய்வது கூட  பவானிக்கு பிடிக்கவில்லை! 

“பார்த்து வேகமா செய் !”என்று விரட்டினாள்.

“சுறுசுறுப்பே காணாது ! எங்கேயாவது காசு கொடுக்கிறாங்க அப்படின்னா ஓடிப்போவா! ” நிஷ்டூரமாக வந்த வார்த்தைகளில் கலங்கிப் போனாள் பொன்னி.

பீங்கான் துண்டு ஒன்று கையில் குத்தி ரத்தம் வந்ததையும் பொருட்படுத்தாது வெறுப்பும் கோபமுமாக எஜமானியை பார்த்தாள்.

“காலையில் இருந்து இங்கே தானே இருக்கேன்! ஒரு வாய் சாப்பிட்டியான்னு கேட்டீங்களா! இல்லை ஒரு வாய் காப்பியாவது கொடுத்தீங்களா! வேலை வாங்குறதுக்கு ஏத்தமாறி சம்பளமாவது தரீங்களா?” கூட்டத்துக்கு நடுவே அறைபட்ட மாதிரி உணர்ந்தாள் பவானி.

மகன் பிள்ளைக்கு பிறந்த நாள் கொண்டாடி தன் பெருமையை வெளிக்காட்ட நினைத்தவள் வேலைக்காரியின் பேச்சில் தடுமாறிப் போனாள். அதை எல்லாம் கவனிக்காதவளாக  மேலே பேசினாள் பொன்னி.

“நாலு வருஷமா அதே சம்பளம். எதுவும் சாப்பாடு கொடுக்க மாட்டீங்க ! வீணா குப்பையில் கொட்டினாலும் கொட்டுவீங்களே தவிர ஒரு ஏழைப் பொண்ணு பசியோட வேலை செய்யுதே அப்படின்னு நினைக்க மாட்டீங்க.எக்ஸ்ட்ரா வேலை வாங்குவீங்க! கூட பணம் கொடுக்க மனசே வராது”. பவானியை கூறு கூறாக கிழித்துப் போட்டாள் பொன்னி.

பல வருடத்து ஆதங்கமும் வேதனையும் பசியும் சேர்ந்து அவளை பேச வைத்தன.

சமாளித்துக் கொண்டு பவானி “ஏய்! வெளியே போ! எங்கே வந்து என்ன பேசுற! “என்று கத்தினாள்.

“சரிதான், நிறுத்தும்மா! என்னமோ நல்லவ மாதிரி பேசுற!  வேலை பாக்கிறவங்களோட கஷ்டத்தை என்னிக்காவது நீ உணர்ந்திருக்கியா! நீங்க என்னிக்கோ வேலை பார்த்ததுக்கு இன்னிக்கும் பென்ஷன்  வாங்குறீங்க! நாங்க இன்னிக்கு செய்ற வேலைக்கு கூட மதிப்போ மரியாதையோ இல்லாம தவிக்கிறோம். எப்போ பார்த்தாலும் இலவசம் இலவசம் அப்படின்னு சொல்றீயே! உங்களை மாதிரி இருக்கிறவங்க உங்க கிட்ட வேலை செய்றவங்க குடும்பத்துக்கு கை தூக்கி விடணும்னு என்னிக்காவது நினைச்சிருக்கீங்களா!

அப்படி நீங்க நாலு பேர் செஞ்சா நாங்க ஏம்மா இலவசத்துக்கு அலையப் போறோம்! எங்க அம்மா எங்களைப் பாத்துப்பாங்கன்னு நிம்மதியா இருப்போமே! அந்த மாதிரி ஒரு  அமைதியான வாழ்க்கையை எங்களுக்கு கொடுத்திருக்கீங்களா! எப்போ பார்த்தாலும் கடனும் கஷ்டமுமா தவிக்கிறது தான் எங்களோட நிலைமை!”

சுற்றி இருந்த எல்லோரும் அவர்கள் இருவரையுமே வேடிக்கை பார்க்க அவமானத்துடன் பவானி நின்றாள்.

மனதில் இருந்த அத்தனையும் கொட்டிவிட்ட திருப்தியில் அங்கிருந்து வெளியேறினாள் பொன்னி. வயிறு காலியாக இருந்தாலும் மனது  மழை வந்து கொட்டித் தீர்த்தமாதிரி குளிர்ந்திருந்தது.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நாம கம்பீரமானவங்க…! (சிறுவர் கதை) – பிரபாகரன்.M