in ,

அவரவர் நியாயங்கள்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தற்செயலாக அறைப் பக்கம் வந்த மகேஸ்வரி மகனும் மருமகளும் பேசிக் கொண்டு இருப்பதைக் கேட்டாள்.

அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இருக்காதா பின்னே! தன்னைப் பற்றி அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்கும் அவள் மகன் ரமேஷ் மீது எரிச்சல் வந்தது. 

எவ்வளவு வேலை செய்து கொடுக்கிறேன். குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன். எல்லாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்கள் இரண்டு பேரும். அவ்வளவு செய்து கொடுக்கிற அப்பா அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டியது என் கடமை என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டியதுதானே! பேசாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறான் புத்தி கெட்டவன்.தனக்குள் அர்ச்சித்தபடி அந்த இடத்தை விட்டு அகன்றாள் அவள்.

இன்றைக்கு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. முன்பெல்லாம் மாமியார் என்றால் ஒரு பயம், மரியாதை இருக்கும். இப்போது அப்படி எல்லாம் எதிர்பார்க்க ஏன் நினைக்கக்கூட முடியாது. முதியோர் இல்லங்கள் ஒருபக்கம் பெருகுவதற்கு இந்த மாதிரி மருமகள்கள் தானே காரணம்!

கணவனிடம் போய் தன் ஆற்றாமையைக் கொட்டினாள் மகேஸ்வரி. பரமேசுவரன் எதுவும் சொல்லாமல் மௌனம் சாதித்தார். அவரால் என்ன செய்ய முடியும்! 

“நான்  ரமேஷ்கிட்ட கண்டிப்பா கேட்பேன். அவள் கிளம்பிப் போகட்டும்” என்று கறுவிக் கொண்டே  இருந்தாள். என்ன முயன்றும் சாயந்திரம் தான் அவளால் அவனிடம் பேச முடிந்தது.

விளையாடும் பிள்ளைகள், பக்கத்தில் குடியிருந்த மகள் வருகை என்று தடைப்பட்டுக் கொண்டே போய்  கடைசியாக அவனைத் தனிமையில் பிடித்தாள் அவள்.

“உனக்கு அப்பா அம்மா என்கிற பாசமோ மரியாதையோ இல்லை!”,  என்று ஆரம்பித்தவள் படபடவென  பொரிந்தாள். மௌனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தவனை அவள்  வெறித்தாள். 

“ஒண்ணுமே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்!”

சத்தம் கேட்டு அவன் அப்பாவும் அங்கு வந்தார்.

“என்ன சொல்றான்?”

“என்ன சொல்லுவான்? அவளைப் பேசினால் அவனுக்குப் பிடிக்காதே!”

“ஒரு நிமிஷம்! “என்று சொல்லிவிட்டு எழுந்து நின்றான் ரமேஷ்.

“அவள் என்ன பேசினாள்! எதற்காக பேசினாள் என்று எதுவும் உங்களுக்கு தெரியாது. தேவையில்லாமல் பேசாதீர்கள்! “

“எதற்காக பேசினாலும் பெத்தவங்களை பேசுவதற்கு அவளுக்கு எந்த உரிமையும் இல்லை”.

அதட்டலாக சொன்ன மகேஸ்வரியை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

“நானும் எப்படி சொல்றது அப்படின்னு தெரியாமல்தான் விழித்துக் கொண்டு இருக்கிறேன்”.

பெருமூச்சு விட்டவன், “இந்த மாசம் செலவு எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. மாசா மாசம் இந்த புது வீடு வாங்கியதற்கு பாங்க் லோன் கட்டணும். மாசக் கடைசிங்கிறது  முதல் வாரத்திலேயே வந்து விடுகிறது”. தளர்வுடன்  சொன்னான் அவன்.

“சிக்கனம் என்பது நம் வீட்டில் இல்லவே இல்லை. எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை”. அவன் குரலில் இருந்த கவலையோ வேதனையோ அவள் மனதை அசைக்கும் என்று எதிர்பார்த்தான்.

கொஞ்சமும் கலங்காமல் “அதற்கு நாங்க எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை”, திட்ட வட்டமாக சொன்னவளை ஏறிட்டுப் பார்த்தான் அவன்.

“வாஸ்தவம் தான்! நீங்க எப்படி பொறுப்பாக முடியும்.! திவ்யா வரும் போதெல்லாம் மளிகைச்சாமான், காய்கறி கொடுத்து விடுகிறீர்கள். வாரா வாரம் இங்கிருந்து இட்லி மாவு அரைத்து அனுப்புகிறீர்கள். அப்பாவுடைய வருமானமும் அவளுக்கே செலவழிக்கிறீர்கள். எதையுமே  யோசிக்காமல் மகளுக்கு என்று வாரிவிடுகிற உங்களை மகன் மீது கொஞ்சம் கூட பாசம் இல்லாத உங்களை அவள் எப்படி மதிப்பாள்!”

“உன் தங்கையடா அவள்!”

“அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா! “

“அப்பாவுக்கு தினமும் சூடிதார் தையல் கூலி, புடவை ஓரம் அடிக்க என்று குறைந்தது ஆயிரம் ரூபாயாவது வரும். ஆனால் உங்களுக்கான மருந்துகள் கூட நான் தான் வாங்கித் தர வேண்டும். நான் என்ன சுமைதாங்கியா?”,

மூச்சு விடாமல் பேசியவன் ஜன்னல் அருகே சென்று வானத்தை வெறித்தான்.

“எங்கள் இருவர் வருமானத்தில் தான் எல்லாமே நடக்கிறது. உங்களை பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்புதான்! அதே மாதிரி என்னுடைய கஷ்டத்தை என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா! பெண்ணுக்கு கொடுக்கும் அதே பாசம் மகன் என்று வரும் போது வறண்டே போகிறதே! எப்போதாவது எதைப் பற்றியாவது நீங்கள் கேட்டிருக்கிறீர்களா!கடன் வாங்கியாவது நான்தான் செலவழிக்க வேண்டுமா!”

இதைத்தான் அவள் கேட்டாள்.

“ஒரு மனைவிக்கு இந்த உரிமை கூட கிடையாதா! அவளோடு போய் இருந்து கொள்ளுங்கள் என்று சொல்லச் சொன்னாள். உங்களுக்கு அவள் மேல் இருக்கிற பாசம் சீனப் பெருஞ்சுவர் மாதிரி எங்கள் வாழ்க்கையை  இருட்டாக்குகிறது. நாங்களும் நடுத்தர வருமானம் உடையவர்கள் தானே!  உன் மகளும் வேலைக்குப் போகிறாள். அவளுக்காவது என்னுடைய கஷ்டம் புரிகிறதா என்றால் இல்லையே!”

அவள் ஏதோ பேச வாயைத் திறந்தாள்.

“இரு.‌நான் முழுசும் சொல்லி முடிச்சுடறேன். இதே அப்பாவோட தங்கைக்கு அதான் என் அத்தைக்கு இப்படி நீ செய்ய விடுவியா! நான் என்ன செய்ய முடியும்? அவள் சொன்னதில் என்ன தப்பு? அவளிடத்தில் நீ இருந்தால் என்ன செய்திருப்பாய்?”

அவன் கேட்ட கேள்விகள் அவர்கள் இருவரையுமே தாக்கியது.

“அவள் நம் வீட்டுப் பெண் இல்லையா? அவளுக்கு செய்றது உன் பொண்டாட்டிக்கு கண்ணை உறுத்துது இல்லையா?”

அவன் வறட்சியாக முறுவலித்தான்.

“உங்க பொண்ணுக்கு செய்றதை அவ வீட்டிலேயே போய் இருந்து செய்யுங்கள். நான் இந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு சின்னதாக பிள்ளைகள் ஸ்கூல் பக்கத்தில் ஒரு வீடு பார்த்திருக்கிறேன். கட்டு மீறிப் போகும் செலவுகளை எங்களால் அடக்க முடியவில்லை”.

“பொண்ணு வீட்ல போய் எப்படி இருக்கமுடியும்? “

எதிர்க் கேள்வி எழுப்பியவளிடம் “அவளுக்கு அளவுக்கு மிஞ்சி செய்யறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கும்போது உங்களை பார்த்துக்கற கடமை அவளுக்கும் இருக்கு. எங்களையும் கொஞ்ச நாளைக்காவது நிம்மதியாக இருக்க விடுங்கள்”.

தீர்மானமாக சொல்லிவிட்டு அவர்களை நிமிர்ந்தும் பார்க்காமல்  அந்த இடத்தை விட்டு வெளியேறினான் ரமேஷ்.

மகேஸ்வரி  இனி என்ன செய்வது என்று தடுமாறி நின்றாள். மகள் வீட்டில் போய் இருப்பதன் சாதக பாதகங்களை யோசிக்க தொடங்கினாள். கண்டபடி வாரி விட்ட போது இல்லாத உணர்வு இப்போது வந்து புயலாகத் தாக்கியது.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காலம் ஒரு நாள் மாறும் (சிறுகதை) – சுஶ்ரீ

    மனித நேயம் (சிறுகதை) – மணிராம் கார்த்திக்