எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து, கடந்து செல்லும் மனிதர்களையும், பசுமை படர்ந்து கிடக்கும் அந்த மண்ணையும் பிரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வேதா. மஞ்சளும், வாழையும், கரும்பும், நெல்லும் விளைந்து கிடக்கும் அந்தப் பசுமைச் சூழல், அந்தப் பூமி அவளை அரவணைத்து வரவேற்பதைப் போலவே இருந்தது.
எத்தனையோ ஆண்டுகள் சொந்த மண்ணைப் பிரிந்திருந்து, பின் ஒரு நாள் அதிகாலையில், தலை முடி காற்றில் பறக்க, விரைந்து செல்லும் பேருந்தில் ஓரத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு, சொந்த மண்ணைக் கண்கள் விரியப் பார்க்கும் உணர்வின் அழகு அதை அனுபவிக்கும்போதுதான் யாருக்கும் புரியும்.
மனிதர்கள் எல்லோருக்கும் அழகான, வளமான ஊரில் பிறந்து வளரும் பாக்கியம் கிடைத்து விடுவதில்லை. ஆனால் அவளுக்கு அவளின் இளமைக் காலத்தில் அது வாய்த்திருந்தது. அவள் பிறந்து வளர்ந்த அந்த ஊரின் ஒரு புறத்தில், கோவில் வாசலில் கரை புரண்டு ஓடும் காவிரி, மறு புறத்தில் நொய்யல் ஆறு, ஊரை ஒட்டி வருடம் முழுதும் தண்ணீர் ஓடும் கீழ்பவானி பாசன வாய்க்கால், கூடவே காளிங்கராயன் கட்டி வைத்த காளிங்கராயன் வாய்க்கால். இதைத் தவிர வேறென்ன வேண்டும் ஒரு ஊர் செழித்திருப்பதற்கு?.
கொடுமுடி நான்கு கிலோமீட்டர் என்று எழுதப்பட்டிருந்த மஞ்சள் வண்ணப் பலகையை அந்தப் பேருந்து கடக்கும் போதுதான், இளமைக் கால நினைவுகளிலிருந்து மீண்டு, நிகழ்காலத்திற்கு வந்தாள் வேதா.
நிகழ்காலம், போக்கிடமற்ற அவளின் தற்போதைய நிலமையைப் பயமுறுத்தியபோது, இளமைக் கால உள்ளூர்த் தோழி கமலாவின் நினைவுதான் அவளைக் கொஞ்சம் சாந்தப் படுத்தியது. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, பக்கத்து ஊரில் கமலாவுக்கு மாப்பிள்ளை பார்த்து மணம் செய்து வைத்து விட்டனர் அவளின் பெற்றோர்.
ஒன்று, அவள் இப்போது தன் கணவன் ஊரில் இருக்க வேண்டும் அல்லது அவர்கள் பிறந்து, ஒன்றாக வளர்ந்த கிராமத்தில் இருக்க வேண்டும். எப்படியும் அவளைப் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில், படபடப்பாயிருந்த தன் மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டாள் வேதா.
கமலாவைக் கட்டிக் கொடுத்திருந்த அந்தக் கிராமத்தில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை விசாரித்த போது, ஒரு சிறிய ஓட்டு வீட்டைக் காண்பித்தான் அவன். ஓட்டு வீட்டை ஒட்டி, தென்னை ஓலையால் மறைக்கப் பட்டிருந்த பகுதிதான் அந்த வீட்டாரின் குளியல் அறையாக இருக்கும் என யூகித்தாள் வேதா.
‘கமலா…’ என்ற குரலுக்கு எதிரொலி போல் ‘யாரு?’ என்ற குரல் வீட்டின் உள்ளிருந்து வந்தது.
குரலுக்குப் பின்னே வெளியே வந்தவள் கமலாதான் என்பதைக் கண்டு பிடிக்க உதவியது அவளின் நெற்றியில் இருந்த பெரிய தழும்புதான். கிராமத்து வழக்கப்படி கணவனை இழந்தவர்கள் உடுத்தும் வெள்ளைச் சேலையும், வெள்ளை ரவிக்கையும் உடுத்தியிருந்தாள்.
கண்களை இடுக்கி, குழப்பத்துடன் பார்த்தவளைப் பார்த்துக் கேட்டாள் வேதா,
‘என்னை அடையாளம் தெரிகிறதா? ‘.
சில வினாடிகள் உற்றுப் பார்த்த பின், ‘வேதா’ என்று ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் கமலா. இருபது வருடப் பிரிவை ஈடு செய்வது போல் இருந்தது அவளின் இரும்புப்பிடி அணைப்பு.
‘எப்படிடீ கண்டு பிடிச்சே ?’ என்று ஆச்சரியப் பட்டாள் வேதா.
‘ம்.. உன் உதட்டுக்கு மேல் இருக்கும் இந்த மச்சத்தை வைத்துத்தான்… இதைப் பார்த்து பள்ளியில் படிக்கும் காலத்தில் எத்தனை நாள் உன் மேல் பொறாமைப் பட்டிருக்கிறேன். பார்த்து எத்தனை வருசம் ஆச்சு… சரி..சரி.. உள்ளே வா பேசலாம்..’ என்று அவளின் கையைப் பற்றி உள்ளே இழுத்துச் சென்றாள் கமலா.
மூன்றே வரிகளில் தன் கதையைச் சொல்லி முடித்துக் கொண்டாள் கமலா. திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியில், நான்கு வருடங்களுக்கு முன் அவளின் கணவன் இறந்து விட்டான். எட்டு வயதில் ஒரு பெண், உள்ளூர் அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள். சொந்தமாக இருப்பது இந்த ஒரு வீடு மட்டும். பிழைப்புக்கு, உள்ளூரில் விவசாயக் கூலி வேலைக்குச் சென்று தன் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாள் கமலா.
இது போல், ஒவ்வொருவர் வாழ்க்கையும் மூன்றே வரிகளில் சொல்ல முடிவதாக இருந்தால், மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு சிக்கலில்லாமல் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் வேதா.
தயக்கத்துடன் ஆரம்பித்தாள் கமலா, ‘கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே… பார்க்க நீயும் என் நிலைமையில இருக்கிற மாதிரி தான் இருக்கிறாய். உங்க அப்பா இறந்த பிறகு, நீயும் அம்மாவும் உன் பெரியம்மா வீட்டுக்குப் போறதாச் சொல்லி சென்னைக்குப் போனீங்க… அதுக்கு அப்புறம் நமக்குத் தொடர்பே இல்லை. என்ன நடந்தது?’.
‘சென்னைக்குப் போய் கொஞ்ச வருசத்தில அம்மா இறந்து விட்டாங்க… பெரியம்மாவுக்கு பாரமா இருக்க வேண்டாம்ணு ஒரு பெயிண்ட் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். அங்கே சேல்ஸ் ரெப்பாயிருந்த ஒருத்தரை விரும்பிக் கல்யாணம் செய்து கொண்டேன். ஆனா எங்களுக்கு ரொம்ப வருசம் குழந்தை இல்லாததால, என் அனுமதியோட அவரு வேற ஒரு கல்யாணம் செய்துக்கிட்டாரு. பெரியம்மாவும் வயசாயி இறந்துட்டாங்க. தனிமை, பொருளாதாரம் போன்ற பிரச்சினைகளால் சென்னை போன்ற நகரங்களில் இருக்க முடியல… அதுதான் இங்க கிளம்பி வந்துட்டேன். நானும் உன் கூட கூலி வேலைக்கு வருகிறேன். இருக்க வாடகைக்கு ஒரு வீடு மாத்திரம் பார்த்துக் கொடு. அது போதும்..’ என்றாள் வேதா.
இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்கிறோமே, அதுவும் தன் உயிர்த்தோழியிடம் என்ற குற்ற உணர்ச்சி உறுத்தினாலும், அப்போதைய நிலைமையைக் கருதி தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.
‘நல்லா இருக்குடி… நான் இங்க இருக்கும்போது நீ வேற வீட்டுக்குப் போறதா? பேசாம என் கூடவே இரு.. என் கூடவே வேலைக்கும் வா… எல்லா வேலைகளையும் உனக்குக் கத்துக் குடுக்கறேன். ஆனா ஒரு கண்டிசன்… வீட்டு வாடகைக்குப் பதிலா, நீ என் பொண்ணுக்கு வீட்டுப்பாடம் சொல்லித் தரணும்… சரியா?’ என்றவளை இழுத்து இறுகக் கட்டிக் கொண்டாள் வேதா. எத்தனை காலம் ஆனாலும் சில மனிதர்கள் தங்களின் குணங்களில் மாறுவதில்லை என்பது ஆச்சரியமான விசயம்தான்.
அடுத்த ஓரிரண்டு மாதங்களில் களை எடுப்பதிலும், கடலைச் செடியைப் பிடுங்கி கடலை பறிப்பதிலும், நாற்று நடுவதிலும் தேர்ச்சி பெற்று விட்டாள் வேதா. கிடைக்கும் கூலியை வீட்டிற்குள் இருக்கும் ஒரு பானைக்குள் போட்டு வைத்து விடுவார்கள் இருவரும். யாருக்கு எவ்வளவு காசு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளலாம். வேதாவிடம் இரண்டே இரண்டு நூல் சேலை மட்டும் இருந்ததால், அவளை வற்புறுத்தி புதிதாக இரண்டு நூல் சேலை எடுத்துக் கொடுத்தாள் கமலா. கமலாவின் பெண் வாணி ‘பெரியம்மா’ என்று பாசத்துடன் வேதாவிடம் ஒட்டிக்கொண்டு விட்டதால் பெரும் நிம்மதியடைந்தாள் கமலா.
தனிமையில் இருக்கும்போது, தன் உயிர்த் தோழியிடம் பொய் சொல்ல வேண்டி வந்து விட்டதே என்று வருத்தத்தில் உறைவாள் வேதா. சொந்த ஊரிலிருந்து கிளம்பி, அவள் அம்மாவுடன் சென்னை சென்ற போது நடந்த உண்மை நிகழ்வுகள் அவள் மனத்திரையில் ஓடின.
சென்னை வந்த பிறகு, அவள் படித்த புத்தகங்களும், பார்த்த கலை நிகழ்ச்சிகளும் அவளுக்கு நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. அந்தக் கல்லூரியில்தான் அவள் சஞ்சீவனை சந்தித்தாள். இளமையின் அழகும், நடிப்புத் திறமையும் ஒருங்கே கொண்டிருந்த அவனுக்கும் வேதாவைப் பிடித்திருந்தது.
நடிப்புக் கல்லூரியில் படிப்பு முடிந்தும் கூட, சஞ்சீவனுக்கு எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புக்கள் வராததால், மிகவும் சோர்வடைந்திருந்தான். ஆனால் வேதா கொடுத்த ஊக்கமும், தன்னம்பிக்கையும் அவனுக்கு பெரிய மன வலிமையைக் கொடுத்து அவன் சோர்வை நீக்கின.
வேதா அவன் நம்பிக்கைக்காகக் கூறியதை மெய்யாக்குவது போலவே, சிறிய பட்ஜெட்டில் அவன் கதாநாயகனாக நடித்த அவனின் இரண்டாவது திரைப்படம் பெரும் வசூலைக் கொடுத்து அவனைத் திரையுலகில் பிரபலமாக்கியது. அதற்குப் பின் அவன் திரையுலக வாழ்க்கை சரிவில்லாமல் ஏறுமுகமாகவே இருந்தது.
வயது மூப்பின் காரணமாக அம்மாவும், பெரியம்மாவும் ஒருவர் பின் ஒருவராக வேதாவை விட்டுப் பிரிந்த போது, ஒரு நாள் அவள் முன் வந்து நின்றான் சஞ்சீவன்.
‘உன் தாயைப் பிரிந்த வேதனை குறையட்டும் என்றுதான் இவ்வளவு நாள் காத்திருந்தேன். சரி… கிளம்பு… போகலாம்..’ என்றவனை ஏறிட்டுப் பார்த்தாள் வேதா. தனிமையில், பற்றிக் கொள்ள ஆதரவு இல்லாமல் காற்றில் தள்ளாடிக் கொண்டிருந்த ஒரு செடிக்கு, படர ஒரு கிளை கிடைத்தது போல் இருந்தது அவளுக்கு அவனின் வார்த்தைகள்.
‘எங்கே போவது? ‘ என்றாள் மெதுவாக.
‘நம்ம வீட்டுக்குத்தான்.. வேறு எங்கே? ‘ என்றான். தற்போது வாடகை வீட்டில் குடியிருக்கும் அவன், நகரின் மையப் பகுதியில் நிலம் வாங்கி, பெரிய அளவில் வீடு கட்டிக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியும்.
அவள் தயங்குவதைப் புரிந்து கொண்டவன் மென்மையாகச் சொன்னான்,
‘திரைத்துறையில் வளர்ந்து வரும் நிலையில், இப்போது நம் திருமணம் ஆடம்பரமாக இருக்க வேண்டாம் என்பதால், பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்துள்ளேன். திருமணம் முடித்த பிறகு நீ வர விரும்பினால், இன்னும் ஒரு மாதம் மட்டும் பொறுத்துக் கொள். திருமணம் முடிந்த கையோடு நாம் புது வீட்டிற்குக் குடி போய் விடலாம். உன் விருப்பம் என்ன?’ என்றவனைக் காதலோடு பார்த்து, ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் வேதா. கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் போது கூட, பழைய காதலை மறக்காத அவனின் நேர்மை அவளை வசீகரித்தது.
அடுத்த நான்கு ஆண்டுகள் அவளை ஒரு மகாராணி போல் செல்வச்செழிப்பில் மிதக்க விட்டான் சஞ்சீவன். அந்த பங்களாவில் எல்லா வேலைகளுக்கும், எல்லா இடங்களிலும் ஆட்கள் நிறைந்திருந்தார்கள். அவளுக்கென்று இரண்டு கார்கள் டிரைவருடன் எப்போதும் காத்திருந்தன.
அவளுக்கென்று கொடுக்கப்பட்டிருந்த டெபிட் கார்டுகள் பணத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. லஷ்மி தேவியே அவன் வீட்டிற்குக் குடி வந்து விட்டாளோ என்று நினைக்குமளவிற்கு சஞ்சீவனுக்கு பட வாய்ப்புக்களும், பணமும் குவிந்தன. வருடத்திற்கு ஐம்பது கோடி வருமானவரி கட்டுவதாக அவனே ஒருமுறை அவளிடம் கூறினான்.
ஆனால் இத்தனை வசதிகள் இருந்தும் வேதாவின் மனம் எப்போதும் வெறுமையாகவே இருந்தது. சஞ்சீவனுக்கு அவளிடம் பேசக் கூட நேரம் கிடைக்காமல் எப்பொழுதும் படப்பிடிப்பில் இருந்தான். உள்ளூரில் இருக்கும் நாளில் கூட நள்ளிரவில் மது வாசனையுடன் வந்து படுத்துக் கிடப்பான்.
காலையில் டிபன் சாப்பிடும்போது மாத்திரம் சில வார்த்தைகள் பேச நேரம் வாய்க்கும். மற்ற பெண்களைப் போல ஷாப்பிங் போன்ற ஆடம்பர பொழுது போக்கில் வேதாவுக்கு நாட்டம் இல்லாததால், நேரம் கடத்துவது பெரும் பாடாக இருந்தது அவளுக்கு. சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருந்தது.
அவளுக்குப் பிடித்த புத்தகங்கள் அனைத்தையும் தேடித் தேடிப் படித்து முடித்தாள். நகரில் நடக்கும் ஆன்மீகச் சொற்பொழிவு, நாட்டியம், கலை நிகழ்ச்சிகளில் மட்டும் அவ்வப்போது கலந்து கொள்வாள். ஆனால் எந்த இடத்திலும் தான் சஞ்சீவனின் மனைவி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. நாட்களை நகர்த்துவது பெரும் பிரயத்தனமாக இருக்கும் போது மட்டும் நினைத்துக் கொள்வாள், ஒருவேளை தனக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தால் இந்த சங்கடம் வந்திருக்காதோ என்று.
‘என்ன சொல்கிறாய் வேதா? வீட்டை விட்டுப் போகிறாயா? பைத்தியமா உனக்கு? என்னால் உன் கூட நேரம் செலவழிக்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி தினமும் என்னை வதைத்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியாது. உனக்கு என்ன வேண்டும் கேள். எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கிறேன். ஆனால் என்னை விட்டுப் போகாதே.. ப்ளீஸ்..’ என்றான் சஞ்சீவன் அவளிடம்.
‘இல்லை சஞ்சீவா.. நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளாய். உன்னிடம் குறை கண்டு நான் போகவில்லை. நீ கொடுக்கும் பணம் மட்டுமே என்னுடைய வாழ்வின் வெறுமையைப் போக்கி விடாது. நான் இத்தனை வருடங்கள் என் வாழ்க்கையை இந்த வீட்டில் வீணடித்து விட்டேன் என்றுதான் தோன்றுகிறது. இப்படி பொம்மை போல வாழ நான் பிறவி எடுக்கவில்லை என்பது தாமதமாக இப்போதுதான் புரிகிறது.
தரையில் வாழும் தவளை தண்ணீரில் வாழ இறங்கிய நிலைதான் தற்போது என் நிலை. தங்கக் கூட்டில் அடைக்கப்பட்ட கிளி போல் எனக்கு மூச்சுத் திணறுகிறது. இதே சூழலில் இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்தால் மன நோய்க்கு ஆளாகி விடுவேனோ என்ற பயம் எனக்குள் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு வேளை நான் படித்த புத்தகங்களும், கேட்ட சொற்பொழிவுகளும் என்னை இப்படி மாற்றி விட்டதோ என்றும் தோன்றுகிறது. இதற்கு நீ எந்த விதத்திலும் பொறுப்பில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
இனி நான் மீதி இருக்கும் காலத்தையாவது எனக்குப் பிடித்த வகையில் வாழ்ந்து கொள்கிறேன். ஆனால், அதே சமயம் நான் உன் வாழ்க்கைக்குத் தடையாக இருக்க மாட்டேன். என் கையெழுத்திட்ட விடுதலைப் பத்திரம் தயாராக எழுதி வைத்துள்ளேன். நல்லவேளை, நான் உன் மனைவி என்பது வெளி உலகத்திற்குத் தெரியாது. நாம் இதுவரை ஒன்றாக வெளியில் எங்கும் சென்றதும் இல்லை, என் புகைப்படமும் எந்தப் பத்திரிகையிலும் வந்தது இல்லை.
அதனால் என் எதிர்கால வாழ்க்கை எந்தச் சூழ்நிலையிலும் உன் புகழைக் குறைக்காது. கடந்த ஒரு மாதமாக கடும் முயற்சி செய்து என் தோற்றத்தை ஒரு சாதாரணப் பெண் போல மாற்றிக் கொண்டுள்ளேன். உன் செல்வாக்கை உபயோகித்து என்னைத் தேட மாட்டேன் என்ற ஒரே ஒரு உறுதி மாத்திரம் கொடு போதும் ‘.
பதில் பேசாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. எதிர்பாராத அதிர்ச்சி அவனைத் தாக்கியிருக்கிறது என்பதை அவன் முகம் காட்டியது. ஆனாலும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, மஞ்சள் பையில் அவள் சேமித்து வைத்திருந்த இரண்டு நூல் புடவைகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் அந்த வீட்டை விட்டுக் கிளம்பினாள் வேதா.
ஒரு வருடத்திற்குள் கமலாவும், வாணியும் பசை போல் ஒட்டிக் கொண்டனர் வேதாவிடம். அதுவும் வாணி தன் அம்மாவை மறந்து விட்டு எப்போதும் வேதாவையே சுற்றிச் சுற்றி வந்தாள். ஒரு சிறு பெண்ணின் அணைப்பில் இவ்வளவு சுகம் இருக்கும் என்பதை வாழ்வில் முதன் முதலாக உணர்ந்தாள் வேதா.
பொங்கலுக்கு வேதா தன் செலவில் வாணிக்கு ஒரு பட்டுப் பாவாடை எடுத்துக் கொடுத்த போது அதை அணிந்து கொண்டு, ‘எங்க பெரியம்மா எடுத்துக் கொடுத்தாங்க..’ என்று தன் தோழிகளிடம் பீற்றிக் கொள்வதைப் பார்த்து வேதாவும், கமலாவும் புன்னகைத்துக் கொண்டனர்.
வாழ்க்கை இனிமையாக, வேதாவின் மனதிற்குப் பிடித்தாற்போல கடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, ஒரு நாள் ஊருக்குள் ஏதோ விற்றுக் கொண்டு வந்த ஒருவன் வேதாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். அவள் விபரம் கேட்க வாய் திறப்பதற்கு முன்பே சைக்கிள் ஏறி சிட்டாகப் பறந்து விட்டான்.
சுற்று முற்றும் பார்த்து யாரும் அந்தக் காட்சியைப் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அந்தக் கடிதத்தைப் பிரித்தாள் வேதா. அருகிலுள்ள ஒரு நகரத்தின் பெயரையும் அங்குள்ள ஒரு தங்கும் விடுதியின் பெயரையும் குறிப்பிட்டுவிட்டு, ‘ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்குக் காத்திருப்பேன். தவறாமல் வரவும். ரிசப்சனில் உன் பெயரை மட்டும் சொல். வேறு எதுவும் சொல்லவேண்டாம்’ இப்படிக்கு ‘சவி’ என்று எழுதப்பட்டிருந்தது. ‘சவி’ என்ற சொல் அவளுக்கும் சஞ்சீவனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசிய வார்த்தை.
நகரத்து நூலகத்திற்குப் போய் வருவதாக கமலாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் வேதா. அந்தத் தங்கும் விடுதியின் வரவேற்பாளரிடம் ‘வேதா’ என்று சொன்னவுடன் அவர் பணிவாக ஒரு பெண் பணிப்பெண்ணுடன் முதல் மாடிக்கு அவளை அனுப்பி வைத்தார். அந்த அறையின் கதவின் முன்பு அவளை விட்டுவிட்டு நகர்ந்து விட்டார் அந்தப் பணிப்பெண்.
கதவைத் திறந்த சஞ்சீவன் அவளுக்குக் கை கொடுத்து உள்ளே அழைத்து கதவைத் தாளிட்டான். கொஞ்சம் உடல் மெலிந்து, முகம் களையில்லாமல் இருந்தான். பல நாள் தூக்கமில்லாமல் இருந்த சோர்வு அவன் கண்களில் தெரிந்தது.
‘உன்னை ஒரு தடவை ‘ஹக்’ பண்ணட்டுமா?’ என்றான் மெதுவாக.
கைகளை விரித்து அவள் அனுமதித்தவுடன், குழந்தையைப் போல அவளை அணைத்துக் கொண்டான். அவனின் நெஞ்சு விம்முவதை அவளால் உணர முடிந்தது.
‘எப்படிக் கண்டு பிடித்தாய்?’ என்றாள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டே.
‘பணம்.. டப்பு… மணி.. மணி..’ என்றான் லேசாகச் சிரித்துக் கொண்டே.
‘உலகத்தில் என்னைத் தவிர எல்லோருக்கும் பணம் பிடித்திருக்குது போல..’ என்றாள் வேதா குறுஞ்சிரிப்புடன்.
‘நல்லா இருக்கியா? நீ விரும்பிய வாழ்க்கை கிடைத்துவிட்டதா?’ என்றான் ஆவலுடன்.
‘ம்..ஓரளவிற்கு…மனசில் பாரமில்லாமல் இருக்கிறேன். சில புதிய உறவுகள் கிடைத்துள்ளன. மனமும், எண்ணமும் தெளிவாக இருக்கின்றன. உன்னை மட்டுமே காதலித்துக் கொண்டிருந்த எனக்கு இப்போது யாரைப் பார்த்தாலும் அன்பு செலுத்தத் தோன்றுகிறது.. சரி…அதை விடு.. எதற்காக நீ கொடுத்த வாக்கை மீறி என்னைப் பார்க்க வந்தாய்?’ என்றாள்.
‘மெலிந்து கருத்துப் போய் விட்டாய்… இது என்ன உள்ளங்கை எல்லாம் சிவந்து போயிருக்கு?’ என்று அவளின் உள்ளங் கையைப் பிடித்துக் கேட்டான்.
‘ஒரு நாளைக்கு ஒரு மூட்டை கடலைக்காய் பறித்தால் கை சிவக்காமல் இருக்குமா?.. சரி… நீ வரச்சொன்ன காரணத்தைச் சொல்லு.. நான் போக வேண்டும்’ என்றாள்.
‘நீ இன்னும் மாறவே இல்லை… உனக்கு அன்று மனநிலை எப்படி இருந்ததோ, அப்படி இப்போது எனக்கும் ஆகிவிட்டது. ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வர அறவே பிடிக்கவில்லை. உயிரற்று, ஜீவனற்றுப் போய் விட்டது நம் வீடு. அப்போதெல்லாம் எங்கிருந்தாலும் நீ வீட்டில் இருக்கிறாய் என்ற ஞாபகம் என்னை வீட்டை நோக்கி இழுக்கும். இப்போது எங்கு போனாலும் தனிமை என்னை விரட்டுகிறது. அப்போது என்னுடன் நீ இருக்கிறாய் என்ற எண்ணமே எனக்கு யானை பலத்தைக் கொடுத்திருந்தது.
மனிதன் உயிர்த்துடிப்போடு இருப்பதற்கு, உண்மையான அன்பு செலுத்தும் மனிதர்கள் அவனைச் சுற்றி இருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்கிறேன். என் பணத்திற்காகவும், புகழுக்காகவும் நெருங்குபவர்களிடம் சுயநலமற்ற அன்பை எதிர்பார்க்க முடியவில்லை. இப்போதே என்னோடு வந்து விடு வேதா… ஊரறிய, உலகமறிய நீ என் மனைவி என்பதை அறிவிக்கிறேன். இதோ பார், நீ எழுதிக் கொடுத்த விடுதலைப் பத்திரம். இதை உபயோகப் படுத்தும் எண்ணமே எனக்கு வரவில்லை. உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் நான் நடிப்பதைக் கூட விட்டு விடுகிறேன். வந்து விடு ப்ளீஸ்..’
மண்டியிட்டு கை கூப்பியவன் கண்களில் நீர்த்துளிகள் கசிந்தன.
‘இல்லை சஞ்சீவா.. இப்போதுதான் நான் நானாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதைக் கெடுத்து விடாதே.. இப்போது நீ விடுக்கும் வேண்டுகோள் கூட சுயநலமானதுதான்.. என்னைக் கட்டாயப் படுத்தாதே…நான் வருகிறேன்’ என்று கிளம்பியவள் கொஞ்சம் தயங்கி நிற்பதைப் பார்த்ததும், கெஞ்சிக் கேட்டான் சஞ்சீவன்.
‘என்னிடம் ஏதாவது கேள் வேதா…’.
‘உன்னிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன்? கொஞ்ச நாட்களாக என் மனதில் ஒரு பயம் வந்து போகிறது சஞ்சீவா… நான் இறந்த பிறகு என்னைத் தூக்கிப் போட யாரும் இல்லாமல் அனாதையாய்க் கிடப்பேனோ என்று. என் உடம்பைச் சுற்றி நாய்களும், நரிகளும், கழுகுகளும் நிற்பதைப் போல கனவும் அடிக்கடி வந்து போகிறது. பைத்தியக்காரத்தனமான கனவு என்றாலும் அடி வயிற்றில் ஒரு கலக்கம்… அன்று தாய் ஆர்யாம்பாள் தன் மகன் ஆதி சங்கரரிடம் கேட்டது போல் கேட்கிறேன். நீ வராவிட்டாலும் பரவாயில்லை, யாரையாவது அனுப்பியாவது என்னைப் பொசுக்கிவிடு…செய்வாயா?’ என்றாள் வேதா.
அவளின் வார்த்தைகள் அவனைத் தாக்கி கதி கலங்க வைத்தன. தைரியமான அவளிடம் இந்த பயத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. ஒரு காகிதத்தை எடுத்து ஒரு தொலைபேசி எண்ணை எழுதி அவளிடம் கொடுத்து விட்டுச் சொன்னான், ‘இந்த எண்ணுக்கு அழைப்பு வராமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றான்.
‘பைத்தியம்… மரணத்தை வென்றவர் யார்? ‘காதற்ற ஊசியும் வாராது காண்’ என்ற பட்டினத்தார் பாடலை நீ கேட்டது இல்லையா?’ என்றவாறு நடந்து செல்லும் அவளைப் பார்த்தவாறு சிலையாக நின்றான் சஞ்சீவன்.
எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings