பள்ளிசெல்லத் தயாராகும் என்னைப் பார்த்துப்
பார்த்துப்போ இருபக்க சாலை தன்னை
துள்ளிநீயும் தெருநடுவில் ஓடி டாதே
துரத்திவரும் வண்டிமோதும் என்பார் பாட்டி !
பள்ளியிலே யாரிடமும் சண்டை போட்டும்
பக்கத்தில் இருப்போனைச் சீண்டிப் பார்த்தும்
தள்ளுமுள்ளு செய்துவிளை யாடிக் கொண்டும்
தறுதலையாய் ஆயிடாதே என்பார் தாத்தா !
புத்தகத்தைப் பேனாவைத் தொலைத்தி டாமல்
புதுப்பேனா தனைப்பார்த்துத் திருடி டாமல்
வித்தையினிக் காட்டுகின்ற குரங்கா காமல்
வினையமுடன் நடந்திடுவாய் என்பார் அண்ணன் !
புத்தியோடு விளையாடி மைதா னத்துப்
புழுதியிலே சட்டையினை அழுக்காக் காமல்
பத்திரமாய் வரவேண்டும் என்றே அக்கா
பாடத்தை எடுத்திடுவாள் அருகில் வந்தே !
எல்லோரும் எதைஎதையோ சொல்லு வார்கள்
எப்படிநான் நடக்கவேண்டும் என்று ரைப்பர்
வல்லவனாய் ஆவதற்குப் படிக்க வேண்டும்
வயதிதுதான் போனாலோ வாரா தென்பர் !
எல்லோரைப் போலன்றி அம்மா மட்டும்
எடுத்துவைத்த சாப்பாட்டை மிச்ச மின்றி
நல்லபடி நீஉண்ண வேண்டு மென்று
நயமாகச் சொல்லிடுவார் முத்த மிட்டே !
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings