in ,

டீ கேக் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்    

தாம்பரம் ஆனந்தா பேக்கரி வாசலில் செந்தில் வந்து நின்றபோது, மணி மாலை ஐந்து முப்பது. வீடு போய்ச்சேர ஏழு மணியாவது ஆகிவிடும். பசி இப்போதே எட்டிப் பார்த்து வயிற்றை இம்சித்தது. ஆனந்தா பேக்கரியில் கேக் நன்றாக இருக்கும். டீ அதைவிட அருமையாக இருக்கும்.

ஒரு டேபிள் காலியாக இருப்பதைப் பார்த்ததும் உள்ளே நுழைந்தான் செந்தில். பேக்கரிக்கே உரிய கேக்கின் இனிமையான மணமும், ஏலக்காய் தேநீரின் மணமும் பசியை இன்னும் தூண்டிவிட்டன. ஓரமாக இருந்த அந்த இருக்கையில் போய் அமர்ந்து, முதுகில் சுமையாக அழுத்திக்கொண்டிருந்த லேப்டாப் பையை எடுத்து மேசைக்கடியில் வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டான். 

செந்தில் அடிக்கடி ஆனந்தா பேக்கரிக்கு வருவதுண்டு. பெயர்தான் பேக்கரி. ஆனால் உள்ளே இருபது இருபத்தைந்து பேர் அமர்ந்து உண்ணக்கூடிய வசதியுடன் இருந்தது. காலை மாலை இருவேளையும் டீ, காஃபி கிடைக்கும். மதிய வேளைகளில் பழச்சாறுகள் கிடைக்கும். அதுபோக, அனைத்து வகையான கேக்குகளும், பிரட் வகைகளும் சுத்தமாகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் எப்போதும் அங்கு கூட்டம் இருப்பதைப் பார்க்கலாம். வேலை முடித்து பேருந்துக்காகக் காத்திருக்கும் பொழுதுகளில், செந்தில் இங்கேதான் பசியாறுவான். 

அங்கே வருபவர்களின் தேவையை அறிந்து பரிமாற இரண்டு இளைஞர்கள் உண்டு. அதில் ஒருவன் திவாகர். திவாகருக்கு செந்திலை நன்றாகத் தெரியும். செந்தில் எப்போது அங்கே வந்தாலும், அவன்தான் உரிமையோடு வந்து கேட்டு பரிமாறுவான். செந்திலின் கண்கள் திவாகரைத் தேடின. சற்று நேரத்தில் திவாகரே அவனைத் தேடி வந்தான். 

“வாங்க சார். என்ன சாப்பிடறீங்க? வழக்கம்போல உங்களுக்குப் புடிச்ச ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் தானே?”

சிரித்துக்கொண்டே ‘ஆமாம்’ என்பதுபோல் தலையசைத்தான் செந்தில். கேக் வரும் வரைக்கும் கண்களை அங்கே சுழலவிட்டான். பள்ளிச் சிறுவர்கள் முதல் வேலை முடித்துத் திரும்பும் இளைஞர்கள், பெரியவர்கள் எனப் பலவிதமானவர்கள் அங்கே பசியாறிக் கொண்டிருப்பதைப் பார்க்கமுடிந்தது.

அப்போது உள்ளே வந்த ஒரு குடும்பம், செந்தில் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு வந்தார்கள். செந்தில் அருகில் அந்த குடும்பத் தலைவன் அமர்ந்துகொள்ள, எதிர் இருக்கையில் அவன் மனைவியும் மகனும் அமர்ந்துகொண்டார்கள். அந்தச் சிறுவனுக்கு நாலிலிருந்து ஐந்து வயதுக்குள் தான் இருக்கும். அவன் பசியோடு இருப்பதை அவன் முகமே காட்டிக் கொடுத்தது. மற்ற மேசைகளில் இருக்கும் உணவுப் பதார்த்தங்களை அவன் கண்கள் ஆவலோடு பார்ப்பதைக் கண்ட செந்திலுக்கு, மனதை என்னவோ செய்தது. 

அதற்குள் அந்தக் குடும்பத் தலைவன் மூன்று பேருக்கும் தேநீரைச் சொல்லிவிட்டு, சட்டைப் பையில் தேடி, ஒன்றிரண்டு ரூபாய் நோட்டுகளையும் சில்லறைகளையும் எண்ணிப் பார்த்துக்கொண்டான். அந்தக் குடும்பத்தின் நிலையை அப்போதே புரிந்து கொண்டான் செந்தில்.

செந்தில் கேட்டிருந்த ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கைக் கொண்டுவந்து வைத்தான் திவாகர். திவாகருக்கு நன்றி சொல்லிவிட்டு கேக்கைப் பார்த்த செந்திலின் கண்கள், அவனையும் அறியாமல் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவனை நோக்கியது. அந்தக் குழந்தையின் கண்களில் ஏக்கம் நிரம்பி வழிவதை செந்திலால் புரிந்துகொள்ள முடிந்தது. சிறுவனுக்கும் கேக் வாங்கிக் கொடுத்து, அவன் சந்தோஷப்படுவதைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை எழும்பியது. கூடவே ஒரு பழைய நினைவும் எட்டிப் பார்த்து அவன் மனதில் கலக்கத்தையும் பாரத்தையும் ஏற்றியது. 

இதேபோல் ஒரு சூழ்நிலை செந்திலின் சிறுவயதில் ஏற்படுத்திய காயத்தை அவனால் இன்னமும் மறக்க முடியவில்லை. செந்திலுக்கும் அப்போது இந்தச் சிறுவனின் வயது தான் இருக்கும். அவன் அப்பாவுடன் ஒரு உணவகத்திற்குப் போனபோது, அப்பா இருவருக்கும் தேநீர் சொன்னார்.

அந்த வயதில் அப்பாவுடன் உணவகத்திற்குப் போவதே பெரிய சாதனைதான். அத்தனை சுலபத்தில் வெளியே சாப்பிட அழைத்துப் போகமாட்டார். அதற்கான தேவையும் வசதியும் அப்போது இல்லை என்பதே நிதர்சனம். யாரோ உறவினர் வீட்டு விசேஷத்திற்குப் போய் விட்டு, செந்தில் மட்டும் அப்பாவுடன் ஊர் திரும்பினான். அவன் அம்மாவும் தங்கையும் மறுநாள் வருவதாகச் சொல்லவும், செந்திலும் அவன் அப்பாவும் பேருந்தில் ஊர் திரும்பினார்கள். 

வரும் வழியில் ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, அங்கேயிருந்த உணவகத்திற்கு அழைத்து வந்தார். வரும்போதே செந்திலின் கண்களில் ஒரு மின்னல். அந்த வயதில் அத்தனை சிறிய உணவகமே அவனுக்கு வியப்பான, எதிர்பாராத ஒரு விஷயம்தான். மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க, அதே உற்சாகம் அவன் நடையிலும் தெரிந்தது. 

“அப்பா, இங்க சாப்பிடப் போறோமா பா?” கண்களில் மகிழ்ச்சி மின்ன ஆர்வத்துடன் கேட்டான் செந்தில்.

“சாப்பிடவா? இப்போதானே கல்யாண வீட்டுல சாப்பிட்டே? பஸ்ல போகும்போது நிறைய சாப்பிட்டா வயித்தைப் பிரட்டும். டீ மட்டும் குடிக்கலாம். இன்னும் ஒரு மணி நேரத்துல வீட்டுக்குப் போயிரலாம். அதுவரைக்கும் பேசாம வரணும்.” 

அப்பா எப்போதுமே இப்படிக் கறாராகத்தான் பேசுவார் என்பதை அந்த வயதிலேயே அவன் புரிந்து வைத்திருந்தான். அதுபோக அம்மாவும் எல்லாம் சொல்லித்தான் அனுப்பினாள். 

“செந்திலு, அம்மா நாளைக்கு வந்துருவேன். நீயும் என்கூடவே கிளம்பலாம். வீட்டுக்குப் போய் உன் சிநேகிதப் பயலுககூட விளையாடணும்னு அடம்புடிச்சு கிளம்பிப் போறே. அப்பா கூடப் போகும்போது அடம்புடிக்காம போகணும் என்ன. அப்பா என்ன சொல்றாரோ அதுபடி கேட்டு நடந்துக்க, புரியுதா.” 

இப்படி ஒரே விஷயத்தை வேறுவேறு விதமாகச் சொல்லித்தான் அனுப்பினாள் அம்மா. அப்பாவைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான். அவன் ஏதாவது அடம்பிடித்து குறும்பு செய்தால், அதன் பின்விளைவுகள் அம்மாவைப் பாதிக்கும் என்பதும் செந்திலுக்கு ஓரளவுக்குப் புரிந்திருந்தது. அதனால் அப்பாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல், உள்ளே வந்து உட்கார்ந்து ஆர்வமுடன் கண்களைச் சுழலவிட்டான். 

அடுத்த மேசையில் உப்பலாகத் தெரிந்த பூரியை, கண்கள் விரிய ஆச்சரியமாகப் பார்த்தான். இன்னொரு மேசையில் இருந்த நீளமான தோசை அவன் நாவில் எச்சிலை ஊற வைத்தது. மொறுமொறு தோசை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அம்மாவிடம் ஆசையாகக் கேட்டதுண்டு. அம்மாவுக்கு இவ்வளவு முறுகலாக தோசை சுடத் தெரியவில்லை என்பதே அவனது புரிதல். அதற்குத் தேவையான எண்ணெய் அல்லது நெய் வீட்டில் இல்லை என்பது அந்த வயதில் அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஆவி பறக்கும் தேநீரை அவன் முன்னால் வைத்தபோது, கீற்று போன்ற ஒரு புன்னகை அவன் முகத்தில் தோன்றி மறைந்தது. அவனைப் பொறுத்தவரை தேநீரே பெரிய வரம் தான். அம்மா எப்போதும் பால்தான் தருவாள். டீ குடிக்க இன்னும் கொஞ்சம் பெரியவனாக வேண்டும் என்று சொல்வாள். அம்மா குடிக்கும் டீயில் ஒரு வாய் ருசிபார்க்கத் தருமாறு நிறைய முறை கேட்டதுண்டு. 

“சின்னப் புள்ளைங்க காஃபி, டீ எல்லாம் குடிக்கக்கூடாது செந்திலு. நீ பெரிய பையன் ஆனதும் குடிக்கலாம். இப்போ பால் குடிச்சாத்தான் நீ பெரிய பையனா, அப்பா மாதிரி வளர முடியும்” என்று அம்மா ஒவ்வொரு முறையும் சமாளிப்பாள். 

இன்று கேட்காமலேயே அப்பா டீ வாங்கித் தருகிறார். அந்தப் பிஞ்சு மனதில் இப்போது அப்பா உயர்ந்து நின்றார். கிடைத்தற்கரிய பொக்கிஷமாக தேநீர் கண்முன் உட்கார்ந்திருந்தது. 

“செந்திலு, டீ ஆறிரும், எடுத்துக் குடி. சீக்கிரம் குடிக்கணும்.” 

அப்பாவின் குரலால் இயல்பானவன், டம்ப்ளரில் இருந்து தேநீரை டபராவில் ஊற்றினான். அந்த நேரத்தில், தன்னைப் பெரிய மனுஷனாக உணர்ந்தான். கை சுட்டது என்றாலும், டபரா டம்ப்ளரோடு டீ தருவதெல்லாம் பெரியவர்களுக்குத்தான் என்ற எண்ணமிருந்த அவனுக்கு, சூடு பெரிதாகத் தெரியவில்லை. தேநீரை ஊதி, ஒருவாய் குடித்தபோது அவன் மனத்தில் படபடத்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அதே உற்சாகத்துடன் தேநீர் முழுவதையும் குடித்துமுடித்தான். 

அதோடு முடிந்திருந்தால், அன்று குடித்த தேநீரின் சுவை இப்போதும் நாவில் நிறைந்திருக்கும். ஆனால் நடந்தது வேறு. செந்திலின் துறுதுறுப்பையும், கண்களில் மின்னிய ஆர்வத்தையும் பார்த்த பக்கத்து மேசை முதியவருக்கு, என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒரு கேக்கை வாங்கிக் கொண்டுவந்து அவன் முன்னால் வைத்து, “தம்பி, இந்தா கேக் சாப்பிடு,” என்றார். 

அப்பாவுக்கு வந்ததே கோபம். வயதில் பெரியவர் என்றும் பாராமல் கண்டபடி கத்தினார். 

“தப்பா எடுத்துக்காதீங்க சார். என் பேரன் மாதிரி இருக்கான். அதான் அவனுக்குப் பிடிச்ச கேக்கை உங்க மகனுக்கு வாங்கிக் குடுத்தேன். குழந்தைதானே, ஆசையா சாப்பிடட்டும்.” 

எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தார் பெரியவர். அப்பா மசியவே இல்லை. அதை மிகவும் அவமானமாக நினைத்தார். 

“என் புள்ளைக்கு கேக் வாங்கிக் குடுக்க நீங்க யாரு? அவனுக்கு என்ன குடுக்கணும்னு பெத்தவன் எனக்குத் தெரியாதா?” 

கேக்கைப் பார்த்ததும் செந்திலின் கண்களில் பூத்த ஆசை அப்படியே வடிந்துபோனது. கேக்கைத் தொட நீண்ட கையை அப்படியே குறுக்கிக் கொண்டான். அதன்பிறகும் வாக்குவாதம் சற்று நேரம் நீடித்தது. கைக்கு எட்டிய கேக் வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றத்தில் இருந்த செந்திலுக்கு, அப்பா அதன்பிறகு பேசிய எதுவும் காதில் விழவில்லை. சற்றுமுன் ஹீரோவாகத் தெரிந்த அப்பாமேல் இப்போது கோபமும் இனம் புரியாத பயமும் எட்டிப்பார்த்தன. அதன்பிறகு எதுவும் பேசாமலேயே வீடு வந்துசேர்ந்தான்.

இப்போது அந்த சம்பவம் அவன் மனத்தில் படம்போல் ஓடி அவனைக் குழப்பியது. எதிரே இருந்த சிறுவனுக்குக் கொடுக்காமல் கேக்கை சாப்பிட அவனுக்கு மனமில்லை. அந்தச் சிறுவன் தன் முன்னால் இருந்த தேநீரைக் குடிப்பதா வேண்டாமா என யோசித்தபடி, செந்தில் முன் இருந்த கேக்கையே அடிக் கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான்.

“சார், டீ கொண்டு வரட்டுமா?” என்று திவாகர் கேட்டதும், சட்டென்று “இன்னொரு கேக் கொண்டு வாப்பா.” என்றான் செந்தில்

திவாகர் கேக்கைக் கொண்டுவரும்வரை, அந்தச் சிறுவனையே பார்த்துக் கொண்டிருந்தான் செந்தில். அவன் அம்மா தேநீரை ஆற்றிக் கொடுக்க, அதை ரசித்துக் குடித்தபடியே அவ்வப்போது செந்திலின் கேக்கைப் பார்த்தபடியே இருந்தான் அந்தச் சிறுவன். திவாகர் இன்னொரு ப்ளாக் ஃபாரஸ்டைக் கொண்டுவந்து எங்கே வைப்பது எனத் தெரியாமல் குழம்பினான். 

“அந்தக் குழந்தைக்குக் குடு திவாகர்,” என்று செந்தில் சொல்லவும், புன்னகையுடன் கேக்கை சிறுவன் முன்னால் வைத்துவிட்டு நகர்ந்தான் திவாகர். 

“சார், எதுக்கு… நீங்க எதுக்கு?” தடுமாறினார் அந்தச் சிறுவனின் தந்தை. 

அந்தக் குழந்தை இந்த வகை கேக்கை இதுவரை சாப்பிட்டதாகத் தெரியவில்லை. கண்கள் விரிய கேக்கை ஆசையுடன் பார்த்தான். கூடவே தன் அப்பா அம்மாவையும் பார்த்தான். அவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பதைபதைப்பும் அந்தக் கண்களில் ஒளிந்திருந்தது. என்ன சொல்லி கேக்கை சாப்பிடவைப்பது என்ற குழப்பமும், தன்னால் அந்தக் குழந்தை திட்டு வாங்கிவிடக் கூடாதே என்ற கவலையும் ஒன்றுசேர்ந்து செந்திலைக் கலங்கடித்தன. 

“அங்கிள், இன்னிக்கு உங்களுக்குப் பொறந்தநாளா?” 

என்ன சொல்வது என்ற குழப்பத்திலிருந்த செந்திலுக்கு, இந்தக் கேள்வி பெரிதும் உதவியது. 

“ஆமா, அதான் உனக்கும் கேக் வாங்கினேன். சாப்பிடு தம்பி.” 

“அப்படியா சார்? ஹேப்பி பர்த்டே! ராஜா, அங்கிளுக்கு தேங்க்ஸ் சொல்லு. ஹேப்பி பர்த்டே சொல்லு,” என்ற அப்பாவின் வார்த்தைகளில் தனக்கு கேக் கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட்டதோ என்னவோ. மலர்ந்த முகத்துடன் 

“ஹேப்பி பர்த்டே அங்கிள்,” என்று சொல்லிவிட்டு, தன் அப்பாவைப் பார்த்தான் சிறுவன். 

அவர் தலை அசைத்ததும், கேக்கை அருகே இழுத்து, கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டான். அவன் மனம் மகிழ்ந்ததை கண்கள் காட்டின. அதில் நன்றியும் சந்தோஷமும் படர்ந்திருந்ததைக் கண்ட செந்தில், மன நிறைவுடன் தன் கேக்கை சாப்பிட்டான்.

அதன்பின் செந்தில் தேநீரை வரவழைத்துக் குடித்து முடிக்கும்வரை பொறுமையாகக் கேக்கை ரசித்து உண்டான் அந்தச் சிறுவன். அவன் பெற்றோருக்கும் சாப்பிடக் கொடுத்தான். மூவரும் கண்களால் நன்றியைத் தெரிவித்தார்கள். புன்னகையைப் படரவிட்டு, வயிறும் மனமும் நிரம்பிய உணர்வில், ஆனந்தா பேக்கரியிலிருந்து வெளியே வந்தான் செந்தில்.

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பள்ளி தோழன் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்