in ,

குளிர்ச்சாதனப்பெட்டி (சிறுகதை) – வெங்கடேஷ் கணபதி

எழுத்தாளர் வெங்கடேஷ் கணபதி மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

நீங்கள் எப்போதாவது பெங்களூரு நந்திதுர்கா சாலைக்கு அருகிலுள்ள இந்தியன் வங்கிக் கிளைக்குச் சென்றால், அங்கே அலுவலக உதவியாளர் அருணைத் தவறாமல் சந்திக்க நேரிடும். அந்தக் கிளையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் அவர் அருண் அண்ணா. சில வாடிக்கையாளர்கள்கூட அவரை அருண் அண்ணா என்றுதான் அழைப்பார்கள்.

எல்லோரிடமும் அன்பாகப் பழகும் இயல்புடைய அருண் அண்ணா, கடின உழைப்பாளியும்கூட. தினமும் காலை ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி விடுவார். கோக்ஸ் டவுனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்திலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி, அவருடைய எளிய வீடு அமைந்திருந்தது.

அங்கிருந்து தனது மொபெட்டில் வங்கிக்குப் புறப்படுவார். அந்த மொபெட்டை வங்கியின் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து வாங்கியிருந்தார். அது அருண் அண்ணாவுக்கு நன்றாகவே ஒத்துழைத்தது.

இந்தியன் வங்கியில் அருண் அண்ணா பணியாற்றி ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் எம்.ஜி. சாலைக்கு அருகிலிருந்த இந்தியன் வங்கிக் கிளையில் பணிபுரிந்தார். அது வங்கியின் தலைமை அலுவலகம். 2014ஆம் ஆண்டு முதல் நந்திதுர்கா சாலையிலுள்ள இந்தக் கிளையில் பணியாற்றி வந்தார்.

அருண் அண்ணாவின் மனைவி விமலா. கோக்ஸ் டவுன், ஃப்ரேசர் டவுன் பகுதிகளில் ஏறக்குறைய எட்டு வீடுகளுக்குக் காலையிலும் மாலையிலும் சென்று சமையல் செய்து கொடுத்து வந்தார்.

அருண் அண்ணாவின் மூன்று தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்குள் அவர்கள் பெரும்பாடுபட்டு விட்டார்கள். அருண் அண்ணாவின் ஒரே மகள் சிந்து, வசந்த் நகரில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியில் படித்து வந்தாள். அவள் பி.ஏ. முதலாம் ஆண்டு மாணவி.

விமலாவுக்கு வெகு நாட்களாகவே ஒரு ஃபிரிட்ஜ் வாங்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், பட்ஜெட் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

கடந்த ஆண்டு தீபாவளியின்போது அருண் அண்ணா இந்தியன் வங்கியில் ஒரு தொடர் வைப்பு கணக்கைத் தொடங்கி, மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தத் தொடங்கியிருந்தார். இந்த ஆண்டு தீபாவளிக்கு, தனது அன்பு மனைவி விமலாவுக்கு ஒரு ஃபிரிட்ஜைப் பரிசாக வாங்கிக் கொடுக்கத் தயாராக இருந்தார்.இந்தச் செய்தியைக் கேட்டதும் விமலாவுக்கு ஒரே மகிழ்ச்சி!

ஆக, தீபாவளியும் நெருங்கிவிட்டது. நாளை காலையில் அந்தத் தொடர் வைப்பு கணக்கை முடித்துவிட்டால், பணம் அருண் அண்ணாவின் வங்கிக் கணக்குக்கு வந்து விடும்.

கடந்த வாரமே அருண் அண்ணாவும் விமலாவும் சிந்துவை அழைத்துக்கொண்டு குந்தன் எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் சென்றிருந்தார்கள். அங்கே பலவிதமான குளிர்சாதனப் பெட்டிகளைப் பார்த்து, எந்த மாதிரியான பெட்டியை வாங்குவது என்றும் முடிவு செய்து விட்டார்கள்.

மறுநாள் காலையில் வங்கி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அருண் அண்ணா சிஸ்டர் நிர்மலாவைச் சந்திக்க நேர்ந்தது.

“காலை வணக்கம், சிஸ்டர்!” என்று பணிவுடன் வணக்கம் தெரிவித்தார் அருண் அண்ணா.

“நீங்கள் நலமாக இருக்கிறீர்களா, அருண்? கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று மெல்லிய புன்னகையுடன் பதிலளித்தார் சிஸ்டர் நிர்மலா.

ஃப்ரேசர் டவுனுக்கு அருகில், பார்வையற்ற சிறுவர்களுக்கான விடுதி ஒன்றை நடத்தி வந்தார் சிஸ்டர் நிர்மலா. அன்று அவரது முகத்தில் கவலைக் கோடுகள் படர்ந்திருந்தன.

“சிஸ்டர், ஏன் உங்கள் முகம் வாடியிருக்கிறது? ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டார் அருண் அண்ணா.

“பிரச்சினை என்று சொல்ல முடியாது, அருண். ஆனால், நன்கொடை வழங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. ஸ்டான்லி பிரான்சிஸ் உயிருடன் இருந்தவரை, ஒவ்வொரு தீபாவளிக்கும் நன்கொடை வழங்குவார். தீபாவளியன்று குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்களும் இனிப்புகளும் கொடுத்து மகிழ்விப்பார்.

அவர் இயேசுவின் திருவடிகளை அடைந்த பிறகு, அவருடைய மகன் ஃபிராங்க்ளின் ஏனோ தெரியவில்லை, நன்கொடை வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவரை இரண்டு மூன்று முறை நேரில் சென்று பார்த்துவிட்டேன். ஆனால், அவர் சரியாகப் பேசக்கூட இல்லை.

வங்கியில் இருக்கும் ஒரு நிலையான வைப்புத் தொகையை (Fixed Deposit) முடித்துத்தான் இந்த ஆண்டு எங்கள் ஆசிரமத்தில் தீபாவளியைக் கொண்டாடப் போகிறோம். எதிர்காலத்தை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது” என்று தன் மனக்குறையைச் சொல்லி முடித்தார் சிஸ்டர் நிர்மலா.

சிஸ்டர் நிர்மலா வங்கியிலிருந்து சென்று வெகுநேரம் ஆன பிறகும் அருண் அண்ணா அதையே நினைத்துக்கொண்டிருந்தார்.

தன் தந்தைக்கு கண்களில் கண்புரை (கேடராக்ட்) வந்தபோது, மகனுக்குச் செலவு வைக்கக் கூடாது என்று நினைத்து, அதை அவரிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார். பின்னர் பார்வையை இழந்து அவர் பட்ட சிரமங்களை நினைத்துப் பார்த்தபோது, அருண் அண்ணாவின் கண்கள் குளமாயின.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையாக இருக்கட்டும், சென்னை சங்கர நேத்ராலயாவாக இருக்கட்டும், அவரது பார்வையை மீட்டெடுக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

இது நடந்த பிறகு, அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருந்தார். மற்றவர்களுக்குப் பாரமாகிவிட்டோமே என்ற வேதனையும் கவலையும் அவரை உள்ளுக்குள் உருக்கிவிட்டன.

அன்று மாலை அருண் அண்ணா வீட்டுக்குச் சென்றபோது, விமலா அவருக்காகக் காத்திருந்தாள்.

“என்னங்க, எப்போ கிளம்பலாம்?  மறந்துட்டீங்களா? ஃபிரிட்ஜ் வாங்க வேண்டாமா?” என்று கேட்டாள் விமலா.

“விமலா, நான் ஒன்று சொன்னால் கோபித்துக்கொள்ளக் கூடாது. ஃபிரிட்ஜ் வாங்குவதை அடுத்த வருஷம் வரைக்கும் ஒத்திப்போடலாமா?” என்று கேட்டார் அருண் அண்ணா.

பின்னர், சிஸ்டர் நிர்மலாவைச் சந்தித்தது முதல் அவர் கூறிய விஷயங்கள் வரை அனைத்தையும் விமலாவிடம் விவரித்தார்.

“என்னங்க, ஃபிரிட்ஜ் வாங்குவதற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தை அந்தப் பார்வையற்ற சிறுவர்களுக்குத் தீபாவளிப் பரிசாகக் கொடுக்கப் போகிறீர்கள். அப்படித் தானே?” என்று கேட்டாள் விமலா.

அருண் அண்ணா, ‘ஆமாம்’ என்பதுபோல் தலையசைத்தார்.

“எனக்கு இதில் முழு சம்மதம். நீங்கள் அந்தப் பணத்தைப் பார்வையற்ற சிறுவர்கள் இல்லத்துக்குக் கொடுத்துவிடுங்கள். இத்தனை நாட்களாக ஃபிரிட்ஜ் இல்லாமலேயே சமாளித்து விட்டோம். இன்னும் ஒரு வருடம் பொறுத்து வாங்கினால் குறைந்தா போய் விடுவோம்? அவரவர் வசதிக்கேற்ப உதவி செய்வதில் என்ன தவறு இருக்கிறது? நானும் உங்களுடன் சிஸ்டர் நிர்மலாவைப் பார்க்க வருகிறேன்” என்றாள் விமலா.

மனைவியைப் பெருமிதத்துடன் பார்த்தார் அருண் அண்ணா. அவரது முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி ததும்பியது.

எழுத்தாளர் வெங்கடேஷ் கணபதி மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பல் துலக்கி [டூத் பிரஷ்] (சிறுகதை) – வெங்கடேஷ் கணபதி