in ,

சவாரியும் சந்தோஷமும் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கவிதாவுக்கு ஒரு ஆசை. கன்னியாகுமரி முனையில் நின்றுகொண்டு சூரியன் உதிப்பதையும் பார்க்கலாமாம், மறைவதையும் பார்க்கலாமாம். அதனால் அங்கே ஒரு தடவை போய்வர வேண்டும் என்று நெடுநாளாய் ஆசை அவளுக்கு. அவளும் எத்தனையோ முறை கணவனைக் கேட்டுவிட்டாள்.

ராஜனோ ஒரே வரியில், ‘பார்க்கலாம்…’ என்று சொல்லி நழுவிக் கொண்டேயிருந்தான்.

அவனுக்கும் அங்கே போக ஆசைதான். ஆனாலும் வேலைப்பழுவும், போனால் மூன்று நாட்கள் போய்விடும் என்பதாலும், ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி நழுவிக் கொண்டே இருந்தான். அத்துடன் பணமும் ஒரு விஷயம்தானே.  நான்கு பேருக்கும் பஸ்ஸில் போக வர… அங்கே தங்க… தின்ன… லோகல் டாக்சி, ஆட்டோ  என்று செலவுக்கு கேட்கவா வேண்டும்…

ஆபீஸ் காலண்டரை திருப்பி வைக்கும்போதுதான் கவனித்தான், அதில் கன்னியாகுமரி முனையின் ஃபோட்டோ இருப்பதை. போட்டோவை பார்த்ததும்தான் கவிதா அங்கே போய் வரவேண்டும் சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அப்போது பார்த்து, முதலாளி கூப்பிட்டார் அவனை.

‘ராஜன்… இந்த பார்ஸலை எடுத்துக்கிட்டு போயி நம்ம ‘ஜனார்தனன் அண்ட் கோ ‘வுல முருகேஷன்னு ஒருத்தர் இருப்பார்… அவர்கிட்டே கொடுத்துட்டு வாங்க… நீங்க ஒரு கால் டாக்ஸி பிடிச்சிக்கிட்டு போயிடுங்க… சரியா… அங்கே அவர் காத்திட்டிருப்பார்… ‘ என்றார்.

பார்ஸலுடன் வந்து தனது சீட்டில் உட்கார்ந்து கால்டாக்ஸி விசிட்டிங் கார்டை எடுத்தான்.

‘மதி மணி டாக்ஸி… ‘ என்றது அந்த கார்டு. 

‘ஸார்… இதை பத்திரமா வச்சுக்கங்க… தேவைப்படும்போது கூப்பிடுங்க ஸார்… ‘ என்று கெஞ்சலாய் சொல்லி கொஞ்சநாள் முன்னாடி ஒரு டாக்சி டிரைவர் கொடுத்தது  அது.

கார்டின் இருந்த நம்பருக்கு கூப்பிட்டான். விவரம் சொன்னான். 

‘ஸார்… இதோ வந்துடறேன் ஸார்… வெயிட் பண்ணுங்க… ‘ என்று பதில் வந்தது.

‘ஏய்… முதல்ல ஃபோனை வை… எனக்கு ஒரு சவாரி வந்திருக்கு… ‘ என்று எரிச்சலாய் சொன்னான் டிரைவர் மணி.

அடுத்த மாதம் அவளுக்கு பிறந்தநாள் வருகிறது.  போட்டிருக்கும் கொலுசை மாற்ற வேண்டுமாம். வருகிற வருமானத்துக்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது.  திடீர் திடீர் என்று அதிகப்படியான செலவுகள் வைத்தால் எப்படி சமாளிப்பது… எரிச்சலுற்றான் அவன்.

ஒருமுறை கேட்டான், ‘ ஏன்டி… இந்த கொலுசு நல்லாத்தானேடி இருக்கு.  இப்போ ஏன்டி திடீர்னு இதை மாத்தனுங்கறே… ‘

அவளோ, ‘ கீழே இருக்கற சலங்கை மணிங்க சேரீல பட்டு சிக்கிவிடுதுங்க… இந்த மணி இல்லாம வாங்கணும்… ‘ என்றாள்.

‘ நீதானே ஜில் ஜில்னு சத்தம் வரும்னு கேட்டு மணி உள்ள கொலுசா வாங்கினே… இப்போ என்ன ‘ இதுக்கு ’ மாத்தனும்கறே… ‘  என்றான் சற்றே எரிச்சலாய்.

அவன் அபத்தமாக கேட்கவும், பதிலுக்கு அவளும் கோபமாய் கத்தினாள்.

‘ஆமா… நாந்தான் வாங்கினேன்… இப்போ அதுக்கு என்னங்கிறீங்க… எனக்கு இதை மாத்தணும்… அவ்ளோதான்… என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது… வாங்கித்தறீங்க… சொல்லிப்புட்டேன்… ‘

அதை நினைவுபடுத்தத்தான் இப்போது ஃபோன் போட்டாள் அவள்.  அதனால்தான் கொஞ்சம் எரிச்சல் பட்டு ஃபோனை வைக்கச் சொன்னான், அவன். 

காலை கட் பண்ணிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்த அடுத்த கணமே மறுபடியும் கூப்பிட்டாள் அவள்.  என்ன ஏது என்று கேட்காமலேயே சத்தம் போட்டான் அவன்.

‘தோ பார்… சம்பாதிச்சாதான் செலவு பண்ண முடியும்… இப்போ சவாரி வந்திருக்கு… கிளம்பறேன்… போனா நாலு காசு வரும்… சம்பாதிக்கப் போகட்டுமா… இல்லை உன்னோட மல்லுக் கட்டிக்கட்டட்டுமா… ‘ சொல்லிவிட்டு அவளது பதிலுக்கு எதிர்பார்க்காமல் காலை கட் பண்ணிவிட்டு வண்டியை விரட்டினான்.

 

பெரிய கடைவீதி  தாண்டியதும் டாக்ஸியை நிறுத்தினான்.  கூப்பிட்டவர் சொன்ன அடையாளம் சரியாக இருந்தது.

மொபைலை எடுத்து, ‘ ஸார் வந்துட்டேன்… வெளீல நிக்கறேன்… ’ என்றான்.

‘ ஓகே… வெயிட் பண்ணுங்க… தோ வந்துட்டேன்… ‘ என்று பதில் வந்தது.

கையில் பார்சலுடன் கை அசைத்தபடியே வெளியே வந்தான், ராஜன்.

‘ஹாய் ஸார்… நாந்தான்… ‘ என்று புன்னகைத்துவிட்டு அருகில் வந்ததும், ‘எப்படி இருக்கீங்க… ‘ என்றபடியே கதவையும் திறந்தான் ராஜன்.

‘ஏதோ இருக்கேன் ஸார்… ‘ என்றபடி உள்ளே இருந்து பின்பக்கக் கதவை வெளியே தள்ளிவிட்டான் மணி.

கதவை நன்றாக திறந்துகொண்டு உள்ளே உட்கார்ந்தபடி, ‘ஞாபகம் இருக்கில்ல… ரெண்டு மாசத்துக்கு முன்னே நான் உங்க டாக்ஸில அண்ணாமலை நகர் போயிட்டு வந்தேன்.  ‘ என்று இவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘ லேசா இருக்கு ஸார்… ‘ என்றான் மணி.

‘அப்புறம் சொல்லுங்க… ஏன் சலிப்பா சொன்னீங்க… எப்போவும் சந்தோஷமாவே இருங்க ஸார்…  சரி அதுக்கு முன்னே சொல்லுங்க என்ன அது, ‘ மதி மணி டாக்ஸி… ‘ ‘ என்றான் இவன்.

‘ஸார்… மதிங்கறது என் மிசஸ் பேரு… அவ முழு பேரு மாலைமதி. என் பேரு மணிமாறன். அவங்க பேரையும் என் பேரையும் சேர்த்து மதி மணி டாக்ஸினு  வச்சிருக்கேன்… அப்புறம்… சந்தோசமாவே இருக்க சொன்னீங்களே… நானும் இருக்கத்தான் ஸார் பார்க்கறேன்… எல்லாத்தையும் பணம்தானே ஸார் முடிவு பண்ணுது… ‘ என்றான் அவன் கொஞ்சம் சலிப்புடன்.

கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘நீங்க சொல்றதும் சரிதான்… ஓரளவுக்கு… ஆனாலும் மனைவிக்கு மரியாதை கொடுக்கறவர் சார் நீங்க… ‘ என்றான் இவன்.

சட்டென திரும்பிப் பார்த்து புரியாமல் முழித்தான் டிரைவர் மணி.

‘உங்க மனைவி பேரை முன்னாடி வச்சிருக்கீங்களே… மதி மணின்னு அதைச் சொன்னேன்… சரி டாக்ஸி எப்படி ஓடுது… ‘ என்றான்.

‘ஏதோ ஓடுது ஸார்… மூணு வருஷமா இதை ஓட்டிக்கிட்டிருக்கேன்… ரொம்ப அபூர்வமாத் தான் பெரிய சவாரி கிடைக்குது… மத்தபடி எல்லாமே லோக்கல்தான் ஸார்… கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு… ‘ என்றவன், அவனது ஃபோன் அடிக்க அதைக் கட் பண்ணிவிட்டு, ‘நல்லவேலையா கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து இதை வாங்கினேன்… பிரண்ட்ஸ்ங்க சொன்னாங்க, கையில இருக்கற காசை ஏன்ப்பா போடறே, லோனு கீனு போட்டுக்கோயேன்னுட்டு… லோனு போட்டிருந்தா இந்நேரம் இ.எம்.ஐ கட்டி கட்டியே நாசமாப் போயிருப்பேன்… என் பிரண்டு ஒருத்தன் ரெண்டு டியூ மிஸ் பண்ணிட்டான். ட்யூப்ளிகட் சாவி போட்டு ஆட்டோவைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க, தெரியுமுங்களா… ‘ என்றான், விரக்தியாய்.  

அதற்குள் அவனது ஃபோன் மறுபடியும் அடிக்க மறுபடியும் அவன் அதைக் கட் பண்ண, சிரித்தபடி, ‘ ஏதோ கால் வருது போல. எடுத்து பேசுங்க ஸார்… ‘ என்றான் இவன்.

சிரித்தபடி ‘அது கால் இல்ல ஸார்… கலகம்… ‘ என்றான் அவன்.

‘ புரியல… ‘ என்றான் இவன்.

கொலுசு மேட்டரை விளக்கிச் சொல்லிவிட்டு, ‘புரிஞ்சுக்கற பொண்டாட்டி கிடைச்சுட்டாலே அதை விட பெரிய சந்தோஷம் வேற ஒன்னுமே இருக்க முடியாது ஸார்… என் பொண்டாட்டி… ஹையோ… ‘ என்றுவிட்டு மறுபடியும் விரக்தியாய் சிரித்தான் அவன். ராஜன் கொஞ்சம் அமைதியாக வந்தான்.

‘ ஸார்… நீங்க சொன்ன இடம் வந்தாச்சு… ‘ என்று டிரைவர்  சொல்ல, சுயநிலைக்குத் திரும்பி வெளியே பார்த்துவிட்டு, ‘சரி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… வந்துடறேன்… ‘ என்றுவிட்டு பார்சலுடன் இறங்கி அந்தக் கட்டிடத்துக்குள்ளே போனான் இவன்.

பத்து பதினைந்து நிமிடங்களில் வெளியே வந்தான் ராஜன். டாக்ஸியில் உட்கார்ந்ததும், ‘ஒரு சந்தோசமான செய்தி… ‘ என்றான்.

‘சொல்லுங்க ஸார்… இப்படி சொல்றதை கேட்கறதுக்கே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுங்களா… ‘ என்றான் மணி.  பரவசம் முகத்தில் படர்ந்தது அவனுக்கு..

‘இந்த மாசக் கடைசில மூணு நாள் லீவு வருதில்லை… ஏதாவது புக்கிங் இருக்கா… ‘

‘வந்தாதான் ஸார் உண்டு… ‘

‘வந்திடுச்சுன்னு நினைச்சுக்கங்க… ‘

சட்டென திரும்பிய மணி புரியாமல் பார்த்தான் இவனை.

‘நாங்க கன்னியாகுமரி போகலாம்னு இருந்தோம்… உங்க மிசஸ் மாதிரிதான், என் மிசஸும். எப்போ போலாம்னு கேட்டு நச்சரிச்சிக்கிட்டே இருப்பாங்க… நீங்க லாங் சவாரி கிடைக்கறதே இல்லைன்னு வேறே சொல்லிட்டு வந்தீங்க இல்லையா, உள்ளே போயி வெயிட் பண்ணும்போது யோசிச்சேன்… அஞ்சு பேரும் பஸ்லயே போனாலும், இங்கே டாக்ஸி, அப்புறம் அங்கே லோக்கல்ல டாக்ஸி, சாபிட கொள்ளனு கூட்டிக்கழிச்சு பாத்தா சரியாத்தான் வரும்னு தோனுச்சு. கொஞ்சம் கேப் கிடைகும்போது மிசஸ்கிட்ட பேசினேன்… டாக்ஸில போலாமான்னு கேட்டேன்… ரொம்ப சந்தோஷமா சரின்னுட்டாங்க… உங்க டயரில நோட் பண்ணி வச்சுக்கங்க… முப்பது, ஒன்னு, ரெண்டு… கன்னியாகுமரி ட்ரிப்னு… ஏன் பேரு ராஜன்… நம்பரையும் நோட் பண்ணிக்கங்க… ‘ என்று விட்டு நம்பரும் கொடுத்தான்.

இப்போது டிரைவரின் முகத்தில் மட்டுமில்ல, அவர்கள் எல்லோருக்குமே சந்தோஷம்தான்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாய்த்துடுக்கு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு