in ,

சகுனம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மொபைல் அடித்தது. கையிலெடுத்தான் மாறன். அம்மாவின் நம்பர்தான். அதை அட்டென்ட் பண்ணலாம் என்று நினைத்த அதே நேரம் பியூன் அவன் முன் வந்து நின்றான். 

‘ சார்…உங்களை ஜி.எம்.கூப்பிடறார் ‘

அம்மாவிடம் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று அவளது காலை  அட்டென்ட் பண்ணாமல் சைலண்ட் மோடில் போட்டுவிட்டு மொபைலையும் வைத்துவிட்டு ஓடினான்.

புன்னகைத் தவழ எழுந்து நின்று கையையும் நீட்டினார் ஜி.எம்.

‘வாழ்த்துக்கள் மாறன்…  ப்ரோமோஷன் லிஸ்ட் வந்தாச்சு. அதுல உங்க பேரும் இருக்கு. இனிமே நீங்க ஆபீஸர் இல்லை, மேனேஜர்… ஆனா ஒன்னு… சென்னைக்கு மாத்தியிருக்காங்க… ‘ என்றவர், ‘ வீடு கட்டலாம்னு இருக்கேன்னு சொல்லிட்டிருந்தீங்க… இல்லே… இப்போ டிரான்ஸ்பர் வந்திடுச்சு… எப்படி வெளியூர் போறதுன்னு பார்க்காதீங்க… நாம வாழ்க்கைல உயரனும்னா, கஷ்டமெல்லாம் பார்க்கக் கூடாது… போய்க்கிட்டே இருக்கணும். நாம பக்கத்துலே இல்லாட்டியும் வீடு தானா உயரும்… உங்க பேரண்ட்ஸ் இருக்காங்கல்ல… அவங்க பார்த்துப்பாங்க… நீங்க மாசம் ஒருமுறை வந்து பார்த்துக்கலாம்… மறுபடியும் வாழ்த்துக்கள்…’ என்றார்.  

‘ தேங்க்ஸ் ஸார்… எல்லாம் உங்களோட ஆசீர்வாதம்… உங்களோட வழிகாட்டுதல்கள்… ‘ என்றான் இவன்.

‘ ஆர்டர்ஸ் என் மெயில் அட்ரஸ்க்கு வந்திருக்கு. நம்ம பிரான்ச் மெயிலுக்கு  ரெண்டையும் பார்வார்டு பண்றேன்… பார்த்து பிரின்ட் எடுத்துக்கங்க… ஓகே… ஆல் தி பெஸ்ட்… ‘ என்றுவிட்டு அடுத்த வேலையில் மூழ்கினார் ஜி.எம்.

குதூகலத்துடன் திரும்பினான் மாறன்.  அதற்குள் விஷயம் எல்லோருக்கும் கசிந்துவிட, எல்லோரும் பார்ட்டி எப்போது என்று கேட்க ஆரம்பித்தனர். நிச்சயம் தருகிறேன், பொறுங்கள் என்றுவிட்டு தனது இருக்கையில் போய் அமர்ந்தான் மாறன்.

‘உடனே அப்பாவுக்கு சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். விஷயம் தெரிந்தால், நிச்சயம் அப்பா சந்தோஷப்படுவார், நமது உத்தியோக விஷயங்களில் ஒவ்வொரு படியையும் அவர்தானே அமைத்துக் கொடுப்பவர். விஷயம் கேள்விப்பட்டால் பூரித்துப் போவார்… அப்படியே அம்மாவுக்கும் சொல்லவேண்டும்… ‘ என்று நினைத்துக் கொண்டான். அதே நேரம் அம்மாவின் ஃபோன்காலை அட்டன்ட் பண்ணாமல் விட்டதும் ஞாபகத்திற்கு வந்தது.

அப்பாவிடம் முதலில் பேசிவிட்டு அப்படியே அம்மாவிடமும் பேசிவிடலாம் என்றெண்ணியபடி அப்பாவுக்கு ஃபோன் போட்டான். ப்ரோமோஷன் கிடைத்திருப்பதுபற்றி கேள்விபட்டதும், ரொம்பவும் சந்தோஷப்பட்டார் மணியன்.  நிறைய பேசிவிட்டு பிறகு அவனது  அம்மாவிடம் கொடுக்கச் சொன்னான். மங்களமும் விஷயம் கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷப்பட்டாள். பேசி முடித்து ஃபோனை வைத்தான் இவன். 

சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பத் தயாராகும்போது அம்மாவின் ஃபோன்  திரும்பவும் வந்தது.

‘ தம்பி… காலைல நான் கூப்புட்டேன். லைன் கிடைக்கலை. அப்புறம் நீ ப்ரோமோஷன் பத்தி பேசினியா… அப்போவும் அதை நான் சொல்ல மறந்துட்டேன்… நான் எதுக்குக் கூப்பிட்டேன்னா… தரகர் ஒரு ஜாதகம் கொண்டு வந்து கொடுத்தார்ப்பா. ஊரு கும்பகோணம், பொண்ணு பார்க்க லட்சணமா இருக்கா… போருந்தற நட்சத்திரம்தான்… அப்பாவும் உட்கார்ந்து ஜாதகத்தை அலசிப் பார்த்துட்டார், பத்து பொருத்தம் பொருந்தி வருது… பொண்ணு டிகிரி முடிச்சிருக்கா… வேலையில இருக்கா… அவங்க குடும்பத்துல எல்லாருமே படிச்சிருக்காங்க, அப்பா அம்மா ரெண்டு பேரும் கூட வேலையில இருக்காங்க…’ என்று சொல்லிக்கொண்டே போனாள்.

‘அம்மா… வீட்டுக்குத்தான் வர்றேனேம்மா…பேசிக்கலாம்மா…’ என்றுவிட்டு ஃபோனைத் துண்டித்தான்.

xxxxxx

அப்பா ஸ்வீட் வாங்கி தயாராக வைத்திருந்தார். இவனும்தான் வாங்கிக்கொண்டுப் போயிருந்தான். முதலில் தான் வைத்திருந்த டப்பாவைத் திறந்து ஒரு மைசூர் பாக் துண்டை எடுத்து மகனின் வாயில் ஊட்டினார், மணியன்.

‘ரொம்ப சந்தோஷம்பா… எனக்கு முதல் ப்ரோமோஷன் கிடைச்சப்போகூட இவ்வளவு எமோஷனா இல்லை. நீ விஷயம் சொன்னதுமே போய் ஸ்வீட் வாங்கிவந்து பக்கத்துல எல்லாருக்கும் கொடுத்துட்டேன்… நீயும் சாப்பிடு… ‘ என்றவர், லேசாய் குரல் கரகரக்க, ‘என்ன… அடுத்த மாசம் நீ சென்னைக்கு போயிடுவே… அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. ஆனாலும் அதையெல்லாம் பார்த்தா முடியுமா… இதானே முதல் டிரான்ஸ்பர்… நாங்க எத்தனை டிரான்ஸ்பர் பார்த்துட்டோம். எத்தனை ஊர்களுக்கு சட்டிமூட்டைத் தூக்கிட்டு ஓடியிருக்கோம்… இனிமே நீயும் தூக்கணும்… ’ என்று சொல்லி கண் கலங்கினார், நெஞ்சு நெகிழ்ந்தார், மனம் மகிழ்ந்தார்…

முன்பே பதவி உயர்வு கிடைத்தால் டிரான்ஸ்பர் கண்டிப்பாய் வரும் என்று அவன் அம்மாவிடம் சொல்லியிருந்ததனால், அவள் ஒன்றும் பெரிதாகக் கவலைப் படாமல், ‘சரி விடுப்பா… ப்ரோமோஷன் வேணும், சம்பளமும் அதிகமா  வேணும்னா… அவன் போடற இடத்துக்கு போயித்தானே ஆகணும்…’ என்று சமாதானம் பேசியபடி ஒரு துண்டு ஸ்வீட்டை தானும் எடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டாள். கூடவே ஜாதகத்துடன் வந்திருந்த ஃபோட்டோவையும் எடுத்துக் காட்டினாள்.

‘ ஜோஷியர்கிட்டையும் போயி பார்க்கலாம்… அவரும் சரி சொல்லிட்டா இந்த இடத்தை விடக்கூடாதுப்பா… கடைகள்ல போயி துணிமணிகள் எடுப்போம்… நகை எடுப்போம். நிறைய பார்த்துட்டு கடைசியில முதல் முதல்லா பார்த்ததைத்தான் எடுப்போம்… அதுபோல முதல் வந்த ஜாதகம்… எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு… ‘ என்றாள்.

ஒரு முறை போட்டோவை ஏறிட்டான். பார்க்க  நன்றாகத்தான் இருந்தாள்.

‘பொண்ணு பி.ஸி.ஏ. முடிச்சிருக்காளாம். ஒரு கம்பெனில வேலை பண்றாளாம். அடுத்து ஒரு பையன் மட்டுமாம்… கல்யாணத்துக்கப்புறம் நாம சரி சொன்னா வேலைக்குப் போவாளாம், இல்லைன்னா நின்னுக்குவாளாம்….‘ என்றாள் அம்மா.  

ஓடிவந்த ராஜி…’ அண்ணா… உனக்குப் புரமொஷனாமே… வாழ்த்துக்கள்…‘ என்று கை கொடுத்தாள்.

அப்போது மொபைல் அடித்தது. ‘ அண்ணா உன் ஃபோன்தான் ‘ என்று மொபைலை எடுத்துக் கொடுத்தாள். வங்கியில் இருந்து மேனேஜர் கூப்பிட்டார்.

‘ மாலை வணக்கம்… உங்க ஹவுசிங் லோன் அப்ரூவல் ஆகிடுச்சு… இதை உங்களுக்கு சொல்ல நிறைய தடவை இன்னிக்கு கூப்பிட்டோம்… உங்க ஃபோன் என்கேஜ்டாவே இருந்தது… நல்லவேளை இப்போ கிடைச்சது… இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வாங்க… டாகுமேண்ட்டேஷன் முடிச்சுடலாம்… அன்னிக்கே பணத்தை ரெலீஸ் பண்ணிக்கலாம்… கன்ஸ்ட்ரக்ஷன் லோனுங்கறதால ஏற்கனவே சொன்ன மாதிரி மூணு நாலு இன்ஸ்டால்மேன்ட்டாத்தான் குடுப்போம்…  ஒவ்வொரு ஸ்டேஜா முடிச்சிட்டு முடிச்சிட்டு நீங்க ரிலீஸ் வாங்கிக்கலாம்… சரியா… ஆல் தி பெஸ்ட்… ‘

தனக்கு ப்ரோமோஷன் கிடைத்ததால் இன்று நிறைய ஃபோன் கால்கள் வந்த வண்ணமிருந்தன என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான் மாறன்.

லோன் அப்ரூவல் கிடைத்த விஷயம் கேள்விபட்டு அப்பா அம்மாவும் இருவருமே சந்தோஷமானார்கள். அம்மா வீட்டை ஒருமுறை முழுதாய் பார்த்தாள்.

‘ம்… இதான் நம்மளோட கடைசி வாடகை வீடு. ஒரு வழியா நம்மளோட புது வீட்டுக்கு போகப் போறோம்…‘ என்றவள் ஒரு பெருமூசெரிந்துவிட்டு, ‘உங்கப்பா ரிட்டையர் ஆனவுடனே ஒரு வீடு வாங்கலாம்னு சொன்னேன்… நீதான் யாரோ கட்டின வீட்டை வாங்கறதுக்குப் பதிலா, நாமே நமக்கு இஷ்டம் போல பார்த்து பார்த்து கட்டிக்கலாம்னு சொல்லி லோன் போட்டு இப்போ அப்ரூவலும் ஆகிடுச்சுன்றே… ரொம்ப சந்தோஷம்பா…’ என்றாள் அவள்.

‘வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பாரும்பாங்க… கரெக்டாத்தான் நடக்குது… லோனை வாங்கிட்டு வீட்ட கட்ட ஆரம்பிச்சிடலாம்… அது பாட்டுக்கு அது நடக்கட்டும்… கூடவே பொண்ணையும் பார்த்து நிச்சயம் பண்ணி வச்சுக்கறோம்… வீடு கிருகப்பிரவேசம் முடிச்சக் கையோட கல்யாணத்தை முடிச்சுடறோம்… ‘ என்றார் அப்பா. அங்கே எல்லோரது மனத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

 

ஊரை விட்டுக் கொஞ்சம் வெளியேதான்  இடம் கிடைத்தது.  அப்பாவின் ரிடையர்மென்ட் பணத்தில் இடத்தை வாங்கிப் போட்டிருந்தார்கள். ப்ளூப்ரின்ட் அப்ரூவல் வந்ததும் பேங்கில் லோன் போட்டார்கள். லோன் அப்ரூவல் ஆனதும் கணக்கில் பணம் வர, வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்.

‘ சரிப்பா… கட்டட வேலை ஒருபுறம் அதுபாட்டுக்கு நடக்கட்டும். நாம கும்பகோணத்துக்கு பொண்ணு பார்க்க எப்போ போகலாம்…’ என்று நினைவுபடுத்தினாள் அம்மா…

உடனே காலடண்டரை எடுத்து வைத்து கொண்டு உட்கார்ந்துவிட்டார் மணியன். ‘ இந்த வாரக்கடைசியில… ஞாயிற்றுக்கிழமை… நாள் நன்றாகத்தான் இருக்கிறது, அன்றைக்கே போய் பெண்ணைப் பார்க்கலாமே… ‘ என்றார் அவர்.  எல்லோரும் சரி என்றனர்.

அப்பா சொன்னார்…’ நம்ம குடும்பம் பெரிசாகப் போகுது… நாம ஒரு கார் வாங்கலாமே… ‘

ராஜி சொன்னாள், ‘ அப்பா… ஒரு மேனேஜருக்கு பொண்ணைக் கொடுக்கறவங்க கார் தரமாட்டாங்களா… நீங்க ஏன்பா காசு போட்டு காரு வாங்கணும்…’

‘ஹை… உன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளைக்கு கார் வாங்கித் தரம்னு மறைமுகமா சொல்றே…‘ என்று நக்கல் விட்டான் மாறன்.

‘ போண்ணா…’ என்று சிணுங்கினாள் அவள்.

‘ சரிப்பா… ராஜிக்கும் நல்ல இடமா வாய்ச்சா வாங்கி கொடுத்துட்டாத்தான் போச்சு… ‘ என்று சொல்லிவைத்தார் மணியன். 

மகளைப் பார்த்து சொன்னாள் மங்களம், ‘சரி… ஒருவேளை அவங்களே கார் கொடுத்தாக் கூட தம்பி வச்சி ஓட்டட்டும்… அப்பா சொன்ன மாதிரி காரை வாங்கி நாம வெச்சுக்கலாம்… நீயும் ஓட்டுவே… அப்பாவும் ஓட்டுவார்… ‘

உடனே,‘ ஆமா… அம்மா பக்கத்து சீட்டுல உட்கார்ந்துகிட்டு ராணி மாதிரி வருவா…’ என்று சிரித்தார் மணியன்.

‘ ஏன்… கார்ல போனாத்தான் ராணியா… நான் என்னிக்குமே ராணிதான்…’ என்று மங்களம் சொல்ல எல்லோருக்கும் செமசிரிப்பு.

Xxxxxx

ஞாயிறு வந்தது. காலையில் டிஃபன் முடித்துவிட்டு கிளம்பத் தயாரானார்கள். டாக்ஸி சொல்லியிருந்தார்கள். அது வந்ததும் கிளம்பிவிட்டார்கள்.  கொஞ்ச தூரம் போனவுடன்… டாக்ஸி தள்ளாடி நின்றது. திகைத்தனர் எல்லோரும். டிரைவர் இறங்கி பாத்துவிட்டு, ‘ டயர் பஞ்சர் சார்… எல்லாரும் கொஞ்சம் கோவிச்சுக்காம இறங்கினீங்கனா… நான் டயர் மாத்திடுவேன்…’ என்றான்.  எல்லோரும் கொஞ்சம் கலவரத்துடன் இறங்கினர்.

மங்களத்திற்கோ முகம் சுண்டி விட்டது. மணியனும் அதைக் கவனித்துவிட்டார்.  ‘என்னாச்சு மங்களம்,…ஏன் ஒருமாதிரியா இருக்கே  ‘ என்றார்…

‘ நல்ல விஷயமா போயிட்டிருக்கோம்… டாக்ஸில ஏறி பத்து நிமிஷம் கூட ஆகலே… டயர் பஞ்சர்… அதான் ஒரு மாதிரியா இருக்கு… ’ என்றாள்.

அவளை சமாதானப்படுத்தினார் மணியன்…’ கார்ல டயர்னு ஒன்னு இருந்தா அது பஞ்சர் ஆகத்தான் செய்யும்… அதுக்காக செண்டிமென்டெல்லாம் பார்த்துக்கிட்டிருப்பியா…? பேசாம வந்து இப்படி நிழல்ல நில்லு… ’ என்றார் மரநிழலைக் காட்டி..

ஒருவழியாக டயர் பங்க்சர் சரி செய்து திரும்பவும் கிளம்பிவிட்டனர். பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் போய்க்கொண்டிருக்கும்போது, அப்பா லேசாய் வயிற்றைப் பிடித்தார்… பதறிப் போனாள் மங்களம்…

‘ ஐயோ… என்னங்க ஆச்சு…’ என்று அவரது நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள் மங்களம்.

‘ ஒண்ணுமில்லே… லேசா வலி… நெஞ்சுல இல்ல… நெஞ்சுக்கு கொஞ்சம் கீழே… ’ என்றார்.

உடனே தான் கொண்டுவந்திருந்த வெந்நீர் பாட்டிலை எடுத்து  குடிக்கக் கொடுத்த மாறன்…’கொஞ்சம் இருங்கப்பா…வழில ஏதாவது ஆஸ்பத்திரி இருந்தா பார்த்துட்டே போய்டலாம்…’ என்றான்.  டிரைவரிடமும் சொல்லிவைத்தான்.

‘ அப்பா… நைட்டுல சிக்கன் சாப்பிட்டீங்கதானே… அதான் ஏதோ பண்ணுதுபோல…’ என்றாள் ராஜி.

‘ என்னவோ…’ என்றாள் மங்களம்…

வெண்ணீரை குடித்து முடித்து இரண்டு முறை ஏப்பம் விட்டார். கொஞ்ச நேரத்திலேயே, ‘இப்போ நல்லாருக்குப்பா… ஆஸ்பத்திரிக்கெல்லாம் போகவேண்டாம்…’ என்றார் மணியன்.

ஆனாலும் மாறன் விடாமல் இரண்டு பக்கங்களிலும் பார்த்துக்கொண்டே போய், ஒரு ஆஸ்பத்திரி பார்த்து,  டாக்சியை நிறுத்தி, டாக்டரிடம் கூட்டிப் போனான். பரிசோதித்துவிட்டு டாக்டர் சொன்னார், ‘ ஒன்றும் பயப்படும்படி இல்லை…  மாத்திரை கொடுத்திருக்கேன்… போட்டுக்கிட்டா சரியாகிடும்…’

பயமில்லை என்று டாக்டர் சொன்னபிறகுதான் அம்மாவுக்கு நிம்மதியே வந்தது. ஆனாலும் உள்ளுக்குள் அவளுக்கு கவலைதான்.  முதலில் டயர் பஞ்சர்… பின்னாடியே இவருக்கு இப்படி… என்று நினைத்துக் கொண்டாள். மெல்ல கணவனிடமும் அதுபற்றி கிசுகிசுத்தாள்.   அவர் முறைத்தார். 

‘ மண்டு…மண்டு… நீ என் இப்படி இருக்கே… எதையெதை எதெதுக்கு முடிச்சு போடறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா… கொஞ்சம் பேசாம வா…’ என்றார்.

‘ என்னப்பா ஆச்சு…’ என்றான் மாறன்…

‘உங்கம்மாவுக்கு  மனசுக்கு கஷ்டமா இருக்காம்… இதோட ரெண்டு தடங்கல் வந்துடுச்சாம்…’ என்று சிரித்தார் அப்பா.

குறுக்கிட்ட அம்மா ’ சிரிக்காதீங்க…’ என்றாள். பிறகு, ‘ தம்பி… ஏதாவது கோவில் கண்ணுல பட்டா டாக்ஸியை நிறுத்தச் சொல்லு… சாமி கும்பிட்டிட்டு அப்புறம் போகலாம் ‘ என்றாள். 

அம்மா சொன்னதற்கு மரியாதை கொடுத்து… டிரைவரிடமும் சொல்லிவிட்டு, ரோடின் இரண்டு புறமும் பார்த்துக் கொண்டே வந்தார்கள். கொஞ்ச தூரத்திலேயே ஒரு வியாநகர் கோவில் கண்ணில் பட, எல்லோரும் இறங்கிக் கொண்டார்கள்.

கோவில் திறந்திருந்தது.  ஒரு அர்ச்சனை தட்டு வாங்கிகொண்டு நான்கு பேருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்து சாமியை கும்பிட்டுவிட்டு பிரகாரத்தை சுற்றி வந்து, ‘ கொஞ்சம் உட்கார்ந்துட்டு போகலாமே ‘ என்று அம்மா சொல்ல, எல்லோரும் ஒரு ஓரமாய் உட்கார்ந்தார்கள்.

அம்மா கண்ணைத் துடைத்துக் கொண்டாள். மாறன் பார்த்துவிட்டான்.

‘ அம்மா… இன்னுமா… அதையே நீ நினைச்சிக்கிட்டிருக்கே…’ என்று முறைத்தான்.

‘ முதல் முதல்லா பொண்ணு பார்க்கப் போயிட்டிருக்கோம்… இப்படி தடங்கல் தடங்கலா… அபசகுனம் மாதிரி… அதான் சாமிக்கிட்டயும்… ’ என்று  இழுத்தாள்.  குரல் கரகரத்திருந்தது. கண்களும்  கலங்கின.

அவளது தோளைத் தட்டி சொன்னான் மாறன்… ’ அம்மா… டிரைவரே சொன்னான், அது நாலஞ்சு வருஷ பழைய டயராம். ஏற்கனவே நிறய தடவை பங்க்சர் ஆனதுதானாம். பழைய டயர்னா பிரச்சினை வரத்தான்மா செய்யும்… சரி அதை விடு… அப்பாவுக்கு அறுபத்தொன்னு ஆகிடுச்சு வயசு… நீதான் எனக்கு புரமோஷன் கிடைச்சதுக்கு விசேஷமா கொண்டாடனும்னு சிக்கன்லாம் வாங்கிவரச்சொல்லி வரைட்டியா பண்ணினே… ஆனாலும் அவருக்கு  எதுக்கு ராத்திரில  சிக்கன் கொடுக்கறே… ஏற்கனவே ராத்திரில சிக்கன் சாப்பிடாதீங்க, பரோட்டா சாப்பிடாதீங்கன்னு பல தடவை சொல்லியிருக்கேன். நீங்க மட்டும் கேட்கறதே இல்லை. அதுவும் காலைல பிரயாணத்தை வச்சிக்கிட்டு, ராத்திரியில சிக்கன் சாப்பிடலாமா… அதுதான் வயித்துல பிரச்சினை உண்டாக்கிடிச்சு… டாக்டரே பயம் இல்லைன்னு சொல்லிட்டார்… அப்புறமும் ஏன்மா மனசைப் போட்டு உலப்பிக்கறே… அபசகுனம் அது இதுன்னு சொல்லி வேற மனசைப் போட்டுக் குழப்பிக்கறே …’ என்றான் கொஞ்சம் அழுத்தமாய்.

‘ விஜி… அம்மாவுக்கு தண்ணீர்  கொடு… குடிக்கட்டும்… அப்போதான் பதட்டம் கொஞ்சம் குறையும்… ‘ என்றான் சிரித்துக் கொண்டே. தனக்குள் எழுந்த கோபத்தையும் மறைத்துக் கொண்டான்.

மறுபடியும் சொன்னான். ‘ நீதான் சொன்னே, பொண்ணு பார்க்க அழகா லச்சணமா இருக்கா… படிச்சிருக்கா, வேலைல இருக்கா, படிச்ச குடும்பமா இருக்கு… நட்சத்திரமும் பொருந்தி வருதுன்னு… முதல் முதலா வந்தா சாதம், இதையே முடிச்சிடலாம்னே… இப்போ திடீர்னு இப்படி சொல்றே…’ என்றவன் கொஞ்சம் நிறுத்தி… ’ பாரம்மா… ஜாதகம் வந்திருக்குன்னு நீ ஃபோன் பண்ணின அதே நேரம்தான் எனக்கு ப்ரோமோசன் வந்திருக்குன்னு ஜி.எம். கூப்பிட்டு சொன்னார்… வீட்டுக்கு வர்றேன்… ரெண்டு மூனு மாசமா இழுத்துக்கிட்டிருந்த லோன் அப்ரூவல் ஆகிடுச்சு… வீடு கட்டறது உறுதி ஆகிடுச்சு… அப்பாவும் திடீர்னு கார் வாங்கலாம்னு ஒரு ஐடியா சொன்னார்… இப்படி எல்லாம் நல்லவிதமா நடந்திக்கிட்டிருக்குன்னு நான் ரொம்ப சந்தோசப்பட்டுக்கிட்டிருக்கேன்.  நீ என்னடான்னா சகுனம் சரியில்லைன்னு கண்கலங்கறே… விட்டா… இந்தப் பொண்ணு வேண்டாம்… வாங்க இப்படியே திரும்பிடலாம்னு சொல்லுவே போலிருக்கே… ’ என்று சிரித்தான். அப்பாவும் விஜியும் கூட சிரித்தார்கள்.

தண்ணீரைக் குடித்துவிட்டு கண்களை சிலகணங்கள் மூடிக் கொண்டிருந்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள் மங்களம்.

‘நீ சொன்னது சரிதான்ப்பா… நான்தான் தேவையில்லாமல்  கொஞ்சம் குழம்பிப் போயிட்டேன்… இப்போ தெளிவாயிட்டேன்… வாங்க கிளம்பலாம்… பொண்ணு வீட்டிலேயும் நம்மளை எதிர்பார்த்து காத்துக்கிட்டிருப்பாங்க இல்லியா… ’ என்றாள்.

எல்லோரும் சந்தோஷத்துடன் மறுபடியும் பிரயாணமானார்கள்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காசியில் தொலைத்த கண்ணம்மா (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    அக்கம் பக்கம் (சிறுகதை) – பவானி உமாசங்கர்