எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஊரின் எல்லையில் அந்த முனிவர் சிறு குடில் அமைத்துத் தங்கியிருந்தார். வழிபாட்டிலும், இறை தியானத்திலும் திளைத்திருந்த அவர், கிடைத்ததை உண்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவர் குடிலில், எலிகளின் தொல்லை அதிகமாக, அதைக் கட்டுப்படுத்த ஒரு பூனையை வளர்க்கத்தொடங்கினார்.
பூனை பாலுக்காக அவரைச் சுற்றி வர, பாலுக்காக ஒரு பசு வளர்க்கத்தொடங்கினார். பசுவைப் பராமரித்து பால் கறக்க ஒரு இளம் பெண்ணைச் சேர்த்துக் கொண்டார். பெண்ணின் சேவைகள் பிடித்துப் போக, அப்பெண்ணை மணந்து கொண்டு இல்லறம் நடத்தி குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார்.
பக்தி மார்க்கத்தில் சென்று இறைவனின் திருவடியை அடைய நினைத்த அவர், சம்சார சாகரத்தில் மூழ்கி, ஒரு சாமான்ய மனிதனின் இன்னல்கள் நிறைந்த வாழ்க்கையை வாழத்தொடங்கினார். ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்ற புத்தனின் கோட்பாட்டுக்கு உதாரணமாக இந்தக் கதையைக் கூறுவார்கள்.
‘அக்காவும் தம்பியும் இப்ப என்னதான் சொல்ல வர்ரீங்க? கொஞ்சம் தெளிவாகத்தான் சொல்லுங்களேன்..’ என்றார் வெங்கடகிருஷ்ணன். எதிரில் உட்கார்ந்திருந்த தன் மனைவி மைதிலியையும், மச்சினன் நாராயணனையும் பார்த்து.
‘மாமா… நீங்களே சொல்லுங்க… கார் இல்லாத வீடு இப்போ எங்காவது இருக்கிறதா? நம்மைப் போன்ற நடுத்தர குடும்பத்தில், எல்லோரும் கார் வைத்திருக்கிறார்கள். அக்காவுக்கும், உங்களுக்கும் வயசாகிவிட்டது. பஸ்சில் ஏறி இறங்குவது எல்லாம் மிகவும் சிரமம். உங்களுக்கும் இன்னும் ஐந்து வருசம்தான் கவர்மெண்ட் சர்வீஸ் இருக்கிறது. அதற்குள் கார் வாங்கி, ஓட்டவும் கற்றுக் கொண்டால், ஓய்வு காலத்தில் உதவியாக இருக்கும். இதை நீங்கள் எப்போதோ செய்திருக்க வேண்டும்… டூ லேட்’ என்றான் நாராயணன்.
‘நானும் கார் ஓட்டக் கற்றுக் கொள்ளனுமா?’ என்றார் வெங்கடகிருஷ்ணன்.
‘நீங்க மாத்திரம் இல்லை… அக்காவும் தான்… புது காருக்கு புக் செய்தவுடன், ரெண்டு பேரும் டிரைவிங் கிளாசில் சேர்ந்து கொள்ளுங்கள்..’.
மைதிலிக்கு அவளின் இளம் வயதில் பார்த்த சினிமாக்களில் சரோஜாதேவி, சாவித்திரி போன்ற கதாநாயகிகள் கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு, ஸ்டைலாக கார் ஓட்டிக்கொண்டு வந்து இறங்குவதைப் பார்த்ததில் இருந்தே, அது போல் தானும் ஒரு காலத்தில் கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் முளைத்து, மரமாக வளர்ந்திருந்தது. தனது ஐம்பதாவது வயதில் அது நிறைவேறப் போகிகிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சி பொங்கியது அவள் மனதில்.
‘அதற்கு முன்னால் நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.. காரில் சி.என்.ஜி. என்ற கேஸ் கார், பெட்ரோல் கார், டீசல் கார் மற்றும் பேட்டரி கார் என்னும் E.V. கார்கள் தற்போது மார்க்கெட்டில் உள்ளன. சமீபத்தில் அமெரிக்கா, ஈரான் சண்டை நடந்தபோது கேஸ், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு வந்து மக்கள் அவதிப்பட்டனர். அதுபோல் அவதிப்படாமல் இருக்க பேட்டரி கார்தான் பெஸ்ட். பெட்ரோல், டீசல் எதுவும் போட வேண்டியதில்லை…’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்களில் ஆசை ஒளியுடன் இடைமறித்தார் வெங்கடகிருஷ்ணன்,
‘பேட்டரி காரே வாங்கிக் கொள்ளலாம்… பெட்ரோல், டீசல் போடவேண்டியது இல்லை…செலவு மிச்சம்..’ என்றார்.
‘ஆமாம்.. மூன்றே ரூபாயில் ஒரு கிலோ மீட்டர் பயணிக்கலாம்… ஆனால் E.V. கார் வாங்குவதற்கு முன்பு நீங்கள் இரண்டு முக்கிய வேலைகளைச் செய்ய வேண்டும். ஒன்று, கார் நிறுத்த வீட்டில் ஒரு ஷெட் கட்ட வேண்டும்…. இரண்டாவது E.V. கார் சார்ஜ் செய்ய அதிக கரண்ட் செலவாகாமல் இருக்க, வீட்டின் மொட்டை மாடியில் ஒரு சோலார் பேனல் அமைக்க வேண்டும்..’.
‘சோலார் பேனல் அமைக்க அதிகம் செலவாகுமோ?’ என்றார் வெங்கடகிருஷ்ணன் சுருதி குறைந்து.
‘அதெல்லாம் கவர்மெண்ட் மான்யம் கொடுக்கும்ங்க மாமா..’ என்ற நாராயணன், ‘மாமா.. இன்னொன்றை கவனச்சீங்களா? உங்களை ஆபிசில் உங்க தோழர்கள் உங்களை எப்படிக் கூப்பிடுவாங்க?’ என்றான் சம்பந்தம் இல்லாமல்.
‘ E.V. ‘ ன்னு.. இளங்கோ மகன் வெங்கடகிருஷ்ணன்… அட.. என் இனிசியலும் ‘ E.V.’ காரும் ‘ E.V.’ நல்ல பொருத்தம் போ..’ என்று அகமகிழ்ந்தார் வெங்கடகிருஷ்ணன்.
அடுத்த மூன்று மாதங்கள் வெங்கடகிருஷ்ணன் தம்பதியினருக்கு சுறுசுறுப்பான காலமாக இருந்தது. காலை ஆறு மணிக்கு இருவரும் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து கார் ஓட்டவும், பத்து மணியில் இருந்து கார் ஷெட் கட்ட வரும் மேஸ்திரியை சமாளிக்கவும், இடையில் சோலார் பேனல் அமைக்க வரும் கம்பெனி ஆட்களுக்கு மொட்டை மாடியில் இடம் காண்பித்து அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கவும் நேரம் சரியாக இருந்தது.
வெங்கடகிருஷ்ணன் இந்த வேலைகளுக்காக அலுவலகத்தில் அடிக்கடி லீவு கேட்கவும் வேண்டி வந்தது. கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது, வெங்கடகிருஷ்ணன் பயிற்சியாளரிடம் திட்டு வாங்குவதை மைதிலி மனதிற்குள் ரசித்துச் சிரித்துக் கொண்டாள்.
கார் ஷெட் கட்டும் மேஸ்திரியின் அட்டகாசம் தாங்கமுடியாததாக இருந்தது. ஒரு சின்ன சுவர் எழுப்பி, மேலே ஆஸ்பெஸ்டாஸ் சீட் போடுவதை, ஒரு தாஜ்மஹால் கட்டும் ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்தார்.
அவருக்கும், அவரின் துணை ஆட்களுக்கும் காலையும், மாலையும் வடையும், டீயும் வாங்கிக் கொடுத்தே சலிப்படைந்தார் வெங்கடகிருஷ்ணன். ஆனாலும் வீட்டுக்கு புதுக் கார் வரும் ஆர்வம், அவர்களின் பணிச் சுமையைக் குறைப்பதாக இருந்தது.
கார் புக் செய்த நாளில் இருந்து சரியாக அறுபது நாட்கள் கழித்து கார் கம்பெனியில் இருந்து கூப்பிட்டு, கார் ஷோ ரூமிற்கு வந்து விட்டதாகவும், பார்க்க வரலாம் என்றும் தெரிவித்தார்கள். நாராயாணனையும் சேர்த்துக் கொண்டு, மூவரும் சென்று காரைப் பார்த்தனர்.
கம்பீரமாக நின்று கொண்டிருந்த காரின் ஒவ்வொரு பாகத்தைப் பற்றியும், காரின் உள்ளே இருக்கும் வசதிகளையும் மேனேஜர் விளக்க, பிரமித்து நின்றனர் வெங்கடகிருஷ்ணன் குடும்பத்தினர். வாயில் சொல்லும் கட்டளைகளுக்கெல்லாம் பணிந்து பணிபுரிந்தது கார். ‘ஓபன் சன் ரூஃப்’ என்றவுடன் மேலே இருந்த சன் ரூஃப் திறந்தது. அதேபோல் வாய் உத்தரவுக்கு அடிபணிந்து குளிர் சாதனம் கட்டுப் படுவதும், ரேடியோ பாடுவதும் ஆச்சரியாக இருந்தது.
‘காரை எடுத்துக் கொள்ளலாமா?’ என்றார் வெங்கடகிருஷ்ணன் ஆர்வத்துடன்.
‘இல்லைங்க… ஆர்.டி.ஓ. ஆபீசுக்கு வண்டியை நாங்கள் எடுத்துச் சென்று நம்பர் பெற்று வந்தவுடன் நீங்க வண்டியை எடுத்துக்கலாம். உங்களுக்கு ஃபேன்சி நம்பர் வேணும்னா பணம் கட்டி பெற்றுக் கொள்ளலாம்..’ என்றார் மேனேஜர்.
ஒரு சுபயோக சுபதினத்தில், பூஜை போட்டு, காரை வீட்டுக்குக் கொண்டு வந்தனர் வெங்கடகிருஷ்ணன் குடும்பத்தினர்.
‘மாமா… இன்னுமொரு அதிர்ஷ்டத்தைப் பார்த்தீங்களா? கார் நம்பர் பாருங்க… TN 33 EV 6767 இதிலும் உங்க இனிஷியல் E.V. வந்து விட்டது… இந்தக் கார் உங்களுக்கு விசேசமாக அமைந்து விட்டது’ என்று அவர்களை மேலும் உற்சாகப் படுத்தினான் நாராயணன்.
‘மாமா… கார் வாங்கினா மாத்திரம் போதாது…எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் நிறையப் போடணும்..’ என்றான் நாராயணன்.
‘அது என்ன? ‘ என்றார் திகிலுடன் வெங்கடகிருஷ்ணன். ஏற்கெனவே செலவழித்திருந்த தொகை அவரின் சேமிப்பு முழுவதையும் கரைத்திருந்தது.
‘கார் சீட்டுக்கு கவர் போடவேண்டும். கால் வைக்கும் இடத்தில் ‘ஃப்ளோர் மேட்’ போடணும், கண்ணாடிக்கு கூலிங் ஷீட் ஒட்டணும்… இது போல நிறைய இருக்கு…..’.
‘என்னங்க காலையிலிருந்து பேப்பரும், பேனாவுமா இருக்கீங்க?’ என்றாள் மைதிலி.
‘கார் வாங்கினோம், ஷெட் கட்டினோம், சோலார் பேனல் போட்டோம், பணம் கட்டி ஃபேன்சி நம்பர் வாங்கினோம், காருக்கு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் போட்டோம்… நம்ம கதை பூனை வளர்த்த சாமியார் கதை மாதிரி ஆயிடுச்சே?’ என்றார் வெங்கடகிருஷ்ணன் பரிதாபமாக.
எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings