ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“இதுவரைக்கும் ஆடிக்காத்து அந்த வாங்கு வாங்கிச்சு, வேண்டாம்னு விட்டிருந்தோம். இப்ப மழை போட்டு பின்னி எடுக்குது, என்ன பன்றதுன்னே தெரியலையே. அண்ணாதுரையைக் கூப்பிடலாமா வேண்டாமா?” யோசனையில் ஆழ்ந்தார்கள் விஜியும் அவனும்.
வேற வழியில்லாமல் ஒரு மனதாக முடிவு பண்ணி அவனைக் கூப்பிட்டார்கள்.
இனி விட முடியாது. ரோட்டுல போறவன் வர்றவன் யார் தலைலயாவது விழுந்து தொலைச்சுடப் போகுது.
போன் பண்ணினதும், ‘வந்துடறேன்னு’ சொல்லி வச்சுட்டான். சொன்னபடியே, காலைல ஐந்தே முக்கால் மணிக்கே வந்து காலிங் பெல்லை அழுத்தினான்.
“யாரது இந்த நேரத்துல..?” ஆச்சரியத்தோடு கதவைத் திறந்தால், அண்ணாத்துரை தான் நின்றிருந்தான்.
“நீ வர மாட்டயோன்னு நெனைச்சேன்” என்றதும்
“ஏனுங்க?” என்றான் ஆச்சரியத்தோடு
“மழை இப்படி வெளுத்து வாங்குது. ஆடி மாசம் மழைனு கூப்பிடலை, மரமெல்லாம் அந்த ஆட்டம் ஆடிச்சு. ஏறினா, விழுந்திடுவயோன்னு கூப்பிடலை” என்றாள் விஜி,
“என் வாழ்க்கையில உப்பு விக்கப் போனா மழை பெய்யறதும் மாவு விக்கப் போனா காத்தடிக்கறதும் சகஜம்ங்க, ஆனா, அதுக்காக வேலைக்குப் போகாம இருக்க முடியுமா?” என்றான் தென்னை மரமேறி தேங்காய் போடும் அண்ணாத்துரை.
“மழையில மரம் வழுக்குமே, மரமேற முடியுமா?”
“நான் வாடகை சைக்கிள் எடுத்துட்டு வரேன். நாள் வாடகை. சொந்தமா வாங்கினா அதுக்குப் பாடு பாக்கவே ஒழைக்கற காசு சரியாப் போயிடும், மரமேற காசு வீடு போய் தங்காது. மழையில வழுக்கும்தான், காத்து காலத்துல மரம் ஆடும்தான். அதெல்லாம் பார்த்தா முடியுங்களா? அப்புறம் பெத்த குழந்தை குட்டிய காப்பாத்தாறது எப்படிங்க? புள்ளீங்க படிக்க பேங்க் லோன் போட்டுருக்கேன், அதைத் தீர்க்கறது எப்படி?”
அவன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே போனான் அண்ணாத்துரை.
கோடிக்கணக்குல கடனை வாங்கீட்டு நாட்டை விட்டு ஓடிப்போறவனுக இருக்கற நாட்டுல, வாங்கிய வங்கிக் கடனை ஒழுங்காக் கட்டிவிடணும்னு வைராக்கியத்தோடு வேலைக்கு வாடகை சைக்கிள் எடுத்துட்டு வந்து, காத்து மழை பார்க்காம உழைக்கிற அண்ணாத்துரையைப் பார்க்கும் போது பெருமையாக இருந்தது.
மரமேறி தேங்காய் போட்டாலும் ‘ஒரு காய் குடுங்கன்னு’ ஓசில இன்னைக்கு வரைக்கும் யார்கிட்டயும் கேட்டதில்லை அவன். உழைப்பையும், நேர்மையையும் பற்றிப் படிக்க, பள்ளிக்கூடம் போக வேண்டாம். இந்த அண்ணாத்துரை மாதிரியான உழைப்பாளிகள் கற்றுத் தருவார்கள் ஓராயிரம் ஒழுக்க நெறிகளை.
“அப்பா கடவுளே… அவனுக்கு எந்த ஆபத்துமில்லாம துணையிரு”
அவன் மரமேறத் தொடங்கியதும், ஆண்டவனை மனதார வேண்டிக் கொண்டாள் விஜி.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings