in

திசையறியா பயணம் (நாவல் – அத்தியாயம் 3) – ✍ ராஜதிலகம் பாலாஜி, ஹங்கேரி

திசையறியா பயணம் (அத்தியாயம் 3)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

அத்தியாயம் 1  அத்தியாயம் 2

ற்கனவே குழப்பத்தில் இருக்கும் பூஜாவிற்கு சட்டென்று கண்ணாடி உடையும் சத்தம் கேட்டதும் பயத்தில் “அம்மா…” என்று கத்திவிட்டாள். அவள் கத்திய சத்தம் வெளியே கேட்டதும் வேகமாக ப்யூன் மேனேஜர் அறைக்குள் விரைந்து வந்து பார்த்தார்.

“என்ன சார் ஆச்சு? எதுக்கு இந்தப் பொண்ணு இப்படி கத்துச்சு?” என்று மேனேஜரிடம் கேட்டார்.

“அந்த வால் க்ளாக் திடீருனு கீழே விழுந்து உடைஞ்சிருச்சு. அந்தச் சத்தத்துல தான் பயந்துட்டாங்கனு நினைக்கிறேன்”

“பூஜா…. பூஜா செத்த கண்ணை திறந்து பாரும்மா? நீ பயப்படற மாதிரி ஒன்னும் இல்ல…” என்றார் ப்யூன் முனுசாமி.

மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள் பூஜா. சுவரில் மாட்டியிருந்த சுவர் கடிகாரம் கீழே விழுந்து பீங்கான் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது.

“நீங்க சீக்கிரம் கண்ணம்மாவ வந்து இந்த இடத்தை கிளீன் பண்ண சொல்லுங்க” என்று ப்யூனிற்கு உத்தரவிட்டார் மேனேஜர்.

பூஜாவிற்கு சுவர் கடிகாரம் கீழே விழுந்து நொருங்கியதைப் பார்த்ததும் அவளுடைய கணவர் வீரனின் நியாபகம் வந்துவிட்டது.

பூஜாவின் கணவருக்கு விபத்து நடந்த அன்று கூட இதே போலத்தான் ஒரு சம்பவம் அவளது வீட்டில் நிகழ்ந்தது.

துருப்பிடித்த கடிகாரம் ஒன்று இன்றோ நாளைக்கோ கீழே விழுந்து உடையும் நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

சரியாக வீரன் வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டு செல்லும் சமயம் பார்த்து டப்புனு அந்த சுவர் கடிகாரம் கீழே விழுந்து உடைந்ததில் பீங்கான் தெறித்து சிதறியது. அதில் ஒரு சிறிய துண்டு வீரனின் காலில் லேசாக கீறியதில் இரத்தம் கசியத் தொடங்கியது.

பதறிப்போய் கண்களில் கண்ணீருடன், “ஐயோ மச்சான்…” என்று பதற்றத்துடன் விரைந்து சென்று அவனுடைய காலில் வரும் இரத்த கசிவைத் துடைத்து மஞ்சள் பொடியைத் தடவினாள்.

“ஏய் புள்ள… என்னாச்சுனு இப்போ கண்ண கசக்கிட்டு இருக்குற? சின்னதா காயம், இதுக்கு போய் இம்புட்ட கண்ணீரு வடிக்கிற”

“இல்ல மச்சான்… எனக்கு ஏதோ சரியா படல. நீ இன்னைக்கு வேலைக்கு போக வேணாம் மச்சான்”

“கடிகாரம் விழுந்ததுக்கா புள்ள போக வேணாம்னு சொல்லுற?”

“அதுவும் ஒரு காரணம் தான் மச்சான். ஆனால் என் அம்மா அடிக்கடி சொல்லும், கண்ணாடி பொருள் எதாவது உடைஞ்சா வீட்டுக்கு ஆகாதுனு. உடைஞ்சதும் மட்டுமில்லாம உன்னோட காலுல வேற கீறி இரத்தம் வந்திருச்சு” என்றாள்.

“நீயும்மா புள்ள இந்த மாதிரி மூட நம்பிக்கையெல்லாம் நம்புவ?”

“முதல்ல நான் நம்ப மாட்டேன் மச்சான். இந்த மாதிரி தான் போன மாசம் கூட ஊறுகாய் பாட்டில் உடைஞ்சது. என் அப்பா கீழே விழுந்து தலையை உடைச்சிட்டு வந்தாரு”

“அந்த மாதிரி தொடர்ந்து நடக்கவும் நம்பித்தான ஆக வேண்டியதிருக்கு”

“உன் அப்பா நல்லா தண்ணி அடிச்சிட்டு புஃல் போதையில நடந்து வரும் போது நிதானமில்லாம எதிருல வர்ற வண்டிக்கூட தெரியாம முட்டி மோதி தலையை உடைச்சுட்டு வந்திருக்கு. நல்லவேளை எதிருல வந்த மனுஷன் நிதானத்தோட ஓட்டுனதால உயிர் தப்பிச்சு”

“இந்த கடிகாரத்த நாம என்னம்மோ நேத்து தான் புதுசா வாங்கி மாட்டி இன்னைக்கு கீழே விழுந்த மாதிரி பேசுற”

“அதுவே துருப்பிடிச்சு போன கடிகாரம். அதான் கீழ விழுந்து உடைஞ்சிருச்சு. இதுக்கு போய்கிட்டு வேலைக்கு போகாதனு சொல்லி பெரிய ஆர்ப்பட்டம் பண்ணுற புள்ள”

“மச்சான்… நான் சொல்லுறத கேளு மச்சான்” என்று வீரனை கட்டியணைத்து கெஞ்சிப் பார்த்தாள் பூஜா.

“புள்ள நான் சொல்லுறத கேளு. நாமளே தினக்கூலியை வச்சு தான் குடும்பத்த நடத்துறோம். நம்மலாம் இந்த சகுனம் பார்த்தா வாழ முடியாது புள்ள. ஒரு நாள் நாம பட்டினியா இருந்திருவோம், ஆனா நம்ம புள்ளைங்கள கொஞ்சம் நினைச்சு பாரு. நம்மளோட சேர்ந்து அதுகளையும் பட்டினியா கிடக்க சொல்ல போறீயா? எனக்கு ஒண்ணும் ஆகாது, நீ தைரியமாயிரு புள்ள. நான் போய்ட்டு வர்றேன்” என்று பதிலுரைத்து விட்டு கிளம்பிய வீரன், அன்று இரவு பொழுதாகியும் வீடு திரும்பவே இல்லை.

தன் கடந்த கால காட்சிகள் நினைவுக்கு வர, மேலும் கதி கலங்கி போய் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் பூஜா.

“பூஜா… பூஜா…” என்று மேனேஜரின் குரல் கேட்டதும் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு வந்தாள் பூஜா.

“என்னாச்சு பூஜா? சாதாரண கடிகாரம் உடைஞ்சதுக்கா இவ்வளவு பீஃல் பண்ணுறீங்க… ஆர் யூ ஓகே?”

மேனேஜரிடம் தன் கடந்த கால வாழ்க்கையை சொல்ல விருப்பமில்லாமல், “இல்ல சார்… கடிகாரம் டப்னு விழுந்ததும் அந்தச் சத்தம் கேட்டு பயந்துட்டேன். வேற ஒண்ணும் இல்ல” என்று பேசி சமாளித்தாள்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், ப்ரவீன் இடையே புகுந்து, “பார்க்க ரொம்ப தைரியசாலி பொண்ணு மாதிரி இருக்கீங்க… இதுக்குலாம் பயந்தா இன்னும் வாழ்ககையில எவ்வளவோ பார்க்க வேண்டியதிருக்கு பூஜா…” என்றான்.

அதற்கு எதுவும் பதில் பேசாமல் மௌனமாக இருந்தாள் பூஜா.

“ஓகே பூஜா! இந்த பேப்பர்ஸ்ல நான் இன்ட் மார்க் போட்டிருக்கும் எல்லா இடத்துலையும் கையெழுத்து போடுங்க” என்று கூறி ஒரு இருபது பேப்பர்கள் கொண்ட டாக்யூமென்டை அவள் முன் நீட்டினார் மேனேஜர். அதை கையில் வாங்கிய பூஜா வேகமாக புரட்டிப் பார்த்தாள். அவளுக்கு அதில் உள்ள வார்த்தைகளுக்கு சரியாக அர்த்தம் புரியாமல் மீண்டும் மீண்டும் திருப்பிப் பார்த்தாள்.

“வாட் ஹேப்பன்ட் பூஜா?”

“இல்ல சார்… இதுல என்ன எழுதியிருக்குனு எனக்கு எதுவும் விளங்கல சார். கோபிச்சுக்காம இதுக்கு கொஞ்சம் அர்த்தம் சொல்லுறீங்களா?” என்று மேனேஜரிடம் சிறிது தயக்கத்துடன் கேட்டாள்.

“கண்டிப்பா…” என்று கூறி டாக்யூமென்டில் உள்ள ஒவ்வொரு பக்கத்தையும் அவளிடம் படித்துக் காட்டி அர்த்தம் கூறினான்.

ஒவ்வொரு பக்கத்தையும் படித்து அர்த்தம் சொல்லும்போது ப்ரவீனிடம் கண் ஜாடையில் ஏதோ சிக்னல் கொடுத்தார் சங்கர்.

இறுதியில் “நான் என் முழு மனதுடன் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய ஒப்புக் கொள்கிறேன்” என்று கூறி முடித்தார் மேனேஜர்.

“ஓகே சார், தாங்க் யூ சார்”

“நோ ப்ராப்ளம் பூஜா… இட்ஸ் மை ட்யூட்டி” என்றார் மேனேஜர்.

வேகமாக பேனாவை வாங்கி கையெழுத்து போடும் சமயம் பார்த்து, பேனா எழுதாமல் போனது. அடுத்தடுத்து தடங்கல் வருவதைப் பார்த்து பூஜாவிற்கு மனதிற்குள் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. மறுபக்கம் தன் கணவருக்கு நிகழ்ந்த சம்பவமும் சேர்ந்து மனதை உலுக்கி எடுத்து கொண்டிருந்தது.

இருந்தபோதிலும் தன் குடும்ப வறுமைக்காகவும், பல தெருநாய்களின் தேவையற்ற சீண்டுதலில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து சகுனம் பார்ப்பதையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு பல பிரச்சனைகளின் பிடியிலிருந்து சிக்கிக் கொள்ளாமல் தன் வாழ்க்கையின் புதிய தொடக்கத்திற்கான வழியாக இந்த வாய்ப்பைக் கருதி, வேறொரு பேனாவை மேனேஜரிடம் இருந்து பெற்று டாக்யூமென்டில் கையெழுத்திட்டாள் பூஜா.

இந்தக் கையெழுத்து அவளுடைய தலையெழுத்தை மாற்றும் என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டாள். பேப்பரை வாங்கி சரி பார்த்ததும், அட்வான்ஸ் பணத்தை ப்ரவீன் நேரிடையாக பூஜாவிடம் கொடுத்தார்.

மேனேஜரும், “இது எப்போதும் உள்ள வழக்கம் தான் பூஜா. டாக்யூமென்ட்ல சைன் பண்ணாலே உங்களுக்கு வேலை உறுதியான மாதிரிதான்” என்று கூறினார்.

“ரொம்ப நன்றி சார்…” என்று கூறினாள்.

“ஓகே பூஜா! அடுத்த வாரத்துல இருந்து டெய்லியும் இரண்டு மணி நேரம் மட்டும் ட்ரெயிணிங் அட்டன் பண்ணா போதும்” என்றார் மேனேஜர்.

“என்ன சார் இரண்டு மணி நேரம் போதுமா?” என்று மிகவும் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“எஸ் பூஜா… இந்த வேலை ரொம்ப சுலபம். அதனால தான்….”

“ஓகே சார்! இப்போ நான் கிளம்பலாமா?”

“எஸ்” என்று மேனேஜர் கூறியதும், அந்த அறையிலிருந்து வேகமாக கிளம்பிச் சென்றாள் பூஜா.

“வாவ் மிஸ்டர் சங்கர்! கரெக்ட்டா காய நகர்த்தி வேலைய இவ்வளவு கச்சிதமா முடிச்சுட்டீங்க. நான் கூட ஆரம்பத்துல கடிகாரம் விழுந்ததப் பார்த்து அபசரகுனமா நடக்குதுனு அந்தப் பொண்ணு சைன் போடாம கிளம்பி போயிருமோனு நினைச்சேன். டாக்யூமென்ட் அர்த்தம் கேட்டதும் நான் ஒரு நிமிஷம் படபடத்து போய்டேன். பரவாயில்ல சும்மா சொல்ல கூடாது, நல்ல பேப்பரோட ரூல்ஸ் அர்த்தத்தை மாத்திச் சொல்லி கரெக்ட்டா வேலைய முடிச்சு கையெழுத்து போட வச்சுட்டீங்க. க்ரேட் மிஸ்டர் சங்கர்”

“இப்படி பொண்ணுங்கலாம் நமக்கு கிடைக்குறது ரொம்ப கஷ்டம் மிஸ்டர் ப்ரவீன்”

“எஸ் மிஸ்டர் சங்கர், செம பிகரு…” என்று சொல்லிக் கொண்டு சிரித்தான் ப்ரவீன்.

மேனேஜரின் அறையிலிருந்து முகத்தில் சிறிது படபடப்புடன் அவசரமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் பூஜா.

“ஏம்மா பூஜா…” என்று அழைத்தார் ப்யூன்.

“சொல்லுங்க அண்ணே”

“இப்போ நார்மலாகிட்டீயாம்மா? கடிகாரம் கீழ விழுந்த சத்தத்துக்கே நீ ரொம்ப பயப்படற. நீ வெளிநாட்டுல தனியா இருந்து சமாளிச்சுருவியாம்மா?”

“அதெல்லாம் அட்சஸ் பண்ணி இருந்திருவேன் அண்ணே. இந்த வேலைக்கு நான் எப்படியாவது போயே ஆகனும். சரி, அப்போ நான் கிளம்புறேன் அண்ணே” என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைப் பெற்றாள் பூஜா.

வீட்டிற்குள் நுழைந்தவளைப் பார்த்து, “என்னடி பூஜா, முகம் வாட்டம்மா இருக்கு. போன காரியம் என்னாச்சு?” என்று முத்தம்மா கேட்டார்.

அம்மாட்ட மட்டும் ஆபிஸ்ல கடிகாரம் விழுந்து உடைஞ்சத சொன்னா, வேலைக்கு போகவே வேணாம்னு சொல்லிரும். அப்புறம் மறுபடி நம்ம புழைப்பு திண்டாட்டம் தான் என்ற மனதிற்குள் மணக்கணக்கு போட்டவள் உண்மையை மறைத்து, “அதெல்லாம் வேலை கன்பார்ம் பண்ணி அட்வான்ஸ் பணமா பத்தாயிரம் கொடுத்துட்டாங்கம்மா” என்றாள் பூஜா.

“இம்புட்டு பணத்தை வேலைக்கு போறதுக்கு முன்னாடியே கையில கொடுத்துட்டாங்கடி. இவ்வளவு பணம் தர்றாங்கனா அப்போ வேலையும் ரொம்ப அதிகமா இருக்கும் போல தெரியுதுடி பூஜா. என்னை திட்டாத, நீ சமாளுச்சுருவியாம்மா?” என்று அவர் அவளிடம் கேட்கும் போது முத்தம்மாவின் முகத்தில், மகளின் வேலையைக் குறித்த ஒரு வித பயமும் வேதனையும் தெரிந்தது.

“இங்க யாராவது நோகாம வேலையும் கொடுத்து துட்டையும் சும்மா தூக்கிக் கொடுப்பாங்களாம்மா. நீ எதை நினைச்சும் கவலைப்படாதம்மா, எப்படிப்பட்ட வேலையா இருந்தாலும் நான் சமாளுச்சு பாத்துக்குவேன்ம்மா. சரிம்மா, நான் வேலைப் பாக்குற வீட்டுக்கெல்லாம் போய்ட்டு, இனி வேலைக்கு வர மாட்டேனு சொல்லிட்டு வந்திர்றேன்” என்று கூறிவிட்டு மீண்டும் கிளம்பிச் சென்றாள்.

முதலாவதாக சிந்துவின் வீட்டிற்கு சென்றாள் பூஜா. பூஜா வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்ததும், “வா பூஜா, உன்னை தான் இவ்வளவு நேரமா எதிர்ப்பார்த்துக்கிட்டு இருந்தேன்” என்று கூறி முதன் முறையாக பூஜாவிற்கு கையைக் கொடுத்து குலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதோடு ஒரு கண்ணாடி கப்பில் காபியும் கொடுத்தார்.

கப்பை சிறிது தயக்கத்துடன் வாங்கி காபியை பருகினாள். இதையெல்லாம் பார்த்ததும் பூஜாவிற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

“மேனேஜர் சொன்னாரு பூஜா, உனக்கு வேலை கன்பார்ம்னு. நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி தான் பூஜா. இதுக்கு முன்னாடி நிறைய பேரை இந்த வேலைக்கு ரெக்கமன்ட் பண்ணிருக்கேன், ஆனால் யாருக்கும் அவ்வளவு சீக்கிரமா இந்த வேலை கிடைச்சது இல்ல. உன்னை தான் பர்ஸ்ட் டைம் பார்த்ததும் செலெக்ட் பண்ணிருக்காரு” என்றாள்.

“உங்களுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கேன் மேடம். என் உடம்புல உசுரு இருக்குற வரைக்கும் இந்த உதவிய நான் மறக்கவே மட்டேன்” என்று கைக் கூப்பி நன்றி தெரிவித்தாள்.

ஒரு பெண், “மேடம்” என்று சிந்துவை அழைப்பதைப் பார்த்து திரும்பிப் பார்த்தாள் பூஜா.

“இனி நீ வேலைக்கு வர முடியாதுல பூஜா, அதான் புதுசா வேலைக்கு ஆள் வேணும்னு நம்ம ஆபிஸ்ல வேலைப் பாக்குற ஒரு மேடம்கிட்ட சொல்லிருந்தேன். அவுங்க வீட்டுல வேலை பாக்குற பொண்ணையே அனுப்பி வச்சிருக்காங்க” என்றார் சிந்து.

“சரிம்மா, அப்போ நான் கிளம்புறேன்” பூஜா கூறியதும் அவளது கையில் வீட்டில் சமைத்து வைத்திருந்த புது சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொடுத்தார்.

“இல்லம்மா… இருக்கட்டும்”

“சும்மா பிடி பூஜா” என்று கூறி கையில் கொடுத்தார். பாக்ஸை எடுத்துக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றாள் பூஜா. பூஜா கிளம்பியதும், சிந்துவின் கணவர் சிந்துவை வேகமாக படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று கதவை மூடினார்.

“ஏய் சிந்து… நீ பண்ணுறது கொஞ்சம் கூட நியாயமில்ல. உனக்கு மனசாட்சியே இல்லையாடி. என்ன காரியம் செஞ்சிக்கிட்டு இருக்க? உனக்கு ப்ரோமோசன் கிடைக்கிறதுக்காக இப்படி ஒன்னுமே தெரியாத பொண்ண பலி ஆடா ஆக்குறடி?”

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. சூப்பர் திலகா.. சுவாரசியமாக எழுதுகிறீர்கள், அடுத்து என்ன என்று யோசிப்பதுடன் பூஜா பத்திரமாக இருக்க வேண்டும் என்றும் மனம் இறைவனை வேண்டுகிறது.

என்னவளே ❤ (கவிதை) – ✍ சங்கரி முத்தரசு, கோவை

அதெல்லாம் பார்த்தா முடியுங்களா? (ஒரு பக்க கதை) – ✍ வளர்கவி, கோவை