in

திசையறியா பயணம் (நாவல் – அத்தியாயம் 2 ) – ✍ ராஜதிலகம் பாலாஜி, ஹங்கேரி

திசையறியா பயணம் (அத்தியாயம் 2 )

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

அத்தியாயம் 1

“ஆமாம்மா… பிரியா மேடம் வீட்டுகாரருக்கு பெரும்பாலும் நைட் ஷிப்ட் தான் வேலை இருக்கும். பகல் நேரத்துல வீட்டுல தான் இருப்பாரு. மேடம் குழந்தைய கொண்டு போய் ஸ்கூலுல விட்டுட்டு அப்படியே அவங்க வேலைக்கு போயிருவாங்க. நான் வீடெல்லாம் பெருக்கிட்டு பாத்திரத்த கழுவி வச்சிட்டு கிளம்பிருவேன். ஒரு நாள் வீட்டுல ஆள் இல்லாத நேரம் பார்த்து கையில இரண்டாயிரம் ரூபாய் தாளு இரண்டு நோட்டக் கொண்டு வந்து என் கையில கொடுத்தாரும்மா”

“எதுக்குடி கொடுத்தாரு?” என்று வேகமாக பூஜாவிடம் கேட்கும் பொழுது

வீட்டு வாசலில் நின்று “முத்தக்கா… முத்தக்கா…” என்று யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது.

“சரி, இதைப் பத்தி பிறகு பேசிக்கலாம். நான் யாருனு போயீ பாத்துட்டு வந்திர்றேன்…”

“சரிம்மா…”

“வா இராக்காயீ, என்ன இந்த நேரத்துல வந்திருக்க?”

“அக்கா கொஞ்சம் சீக்கிரமா வாக்கா. நம்ம முனியம்மா மகளுக்கு இடுப்பு வலி வந்திருச்சு. ஆஸ்பத்திரி போறதுக்குள்ள பிள்ள பிறந்தாலும் பிறந்துரும் போல இருக்கு, நீ வேகமாக வாக்கா…”

“சரி சரி… இருடி வர்றேன்” என்று கூறிவிட்டு பூஜாவிடம் விவரத்தைக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி முனியம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார் முத்தம்மாள்.

பூஜாவின் இரண்டு குழந்தைகளும் அசந்து நன்கு தூங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகளைப் பார்த்து பூஜாவிற்கு கண்களில் கண்ணீர் பெருகியது. குழந்தைகளின் தலையை தடவிக் கொண்டே இருந்தாள்.

தன் அம்மாவிடம் தைரியமாக பேசிய பூஜாவிற்கு, ‘குழந்தைகளின் முகத்தைப் பார்த்ததும் நம்மால் நான்கு வருட காலம் குழந்தைகளைப் பார்க்காமல் அங்கு நிம்மதியாக வேலைப் பார்த்திட முடியுமா?’ என்ற கேள்வி மனதில் எழத் தொடங்கியது.

வேகமாக எழுந்து ஒரு தூசடைந்த இரும்பு பெட்டியைத் திறந்து, அதிலிருந்த கிழிந்து கசங்கி போன கருப்பு வெள்ளை நிறம் கொண்ட புகைப்படத்தை எடுத்து தன் மார்பில் ஒத்திக் கொண்டு அழுதாள். அந்த புகைப்படம் பூஜாவின் கணவருடைய பாஸ்போட் சைஸ் போட்டோ.

“நீ இல்லாம நான் எவ்வளவு கஷ்டப்படுறேனு தெரியுமா மச்சான். நீ இருக்கும் போது நான் ரொம்ப பாதுகாப்பா இருந்தேன் மச்சான். ஒருத்தரு கண்ணுக்கூட என் மேல தப்பான நோக்கத்துல பார்க்க விடமாட்ட, ஆனால் இன்னைக்கு சிறிசுல இருந்து பெருசு வரை எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க மச்சான். அந்த நிமிஷம் உடம்பெல்லாம் எனக்கு கூசுது மச்சான். எனக்கு வாழனும், சுத்தமா விருப்பமில்ல மச்சான். நம்ம பிள்ளைங்க மட்டுமில்லாட்டி நானும் உன் கூடவே வந்திருவேன் மச்சான். இப்போ நான் எடுத்திருக்க முடிவு சரியா, தப்பானு கூட தெரியல மச்சான், ஆனால் எனக்கு வேற வழி தெரியல.

ஒரு பக்கம் குடும்பத்தையும் பிள்ளைங்களையும் காப்பாத்தனும். மறுப்பக்கம் என் மானத்தையும் காப்பாத்தனும். இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இப்படி இவுங்களுக்கு பயந்து நான் ஓடனும்னு தெரியல மச்சான், ஆனால் என்னுடைய நிலைமை எப்பவும் நம்ம பிள்ளைங்களுக்கு மட்டும் வந்திடக் கூடாதுனு ஒரு வைராக்கியத்துல தான் இந்த முடிவு எடுத்திருக்கேன். நம்ம பிள்ளைங்களாவது படிச்சு ஒரு நல்ல வேலைக்கு போய் சம்பாதிச்சு நல்லபடியா வாழனும் மச்சான்” என்று தன் மனதில் சுமந்துக் கொண்டிருந்த சுமைகளையெல்லாம் தன் கணவருடைய போட்டோவைப் பார்த்து அழுதுக் கொண்டே கூறினாள் பூஜா.

“பூஜா… நீ தூங்காம இன்னும் என்னடி பண்ணுற?”

“இல்லம்மா… மச்சான் நினைப்பு வந்துச்சு அதான் வேற ஒண்ணுமில்ல” என்று தன் மகள் மனதில் ஏதோ மறைத்து கொண்டு வெளியே பூசி முழுகி பேசுவதை கண்டுபிடித்துவிட்டார் முத்தம்மாள்.

இருந்த போதிலும் மேற்கொண்டு எதையும் கேட்டு அவளை சங்கப்படுத்த விரும்பாமல், “சரி சரி… கால காலத்துல தூங்குடி, மத்ததெல்லாம் காலையில பேசிக்கலாம்”

“நீ போன காரியம் என்னாச்சும்மா?”

“இந்த முறையும் முனியம்மா மகளுக்கு பொண்ணு பிறந்திருச்சுடி. மூனாவது பொம்பள பிள்ளைனு தெரிஞ்சா, அவ்வளவு தான் பங்கஜம் மாமியா ஒரே ஆட்டம்மா ஆடிருவா. பாவம் பங்கஜம், இனி அந்த குடும்பத்துல போய் எப்படி வாழப் போறாளோ தெரியல”

“ஏன்ம்மா பங்கஜம் மாமியாரும் ஒரு பொண்ணு தான, குழந்தை பிறக்குறதுலாம் நம்ம கையிலயாம்மா இருக்கு. ஆண்டவன் என்ன நம்ம தலையில எழுதிருக்கானோ அதான் நடக்கும். கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி நானும் பங்கஜமும் கோயிலுக்கு போயிருந்தப்போ, இரண்டாவது குழந்தையோட போதும். இனி குழந்தை வேண்டாம். ஏற்கனவே இந்த இரண்டு பிள்ளைகளுக்கு கஞ்சி ஊத்த முடியாம தள்ளாடுறேன். இதுல அடுத்து பிள்ளைய பொத்துக்கிட்டா நான் எப்படி காப்பாத்த முடியும் பூஜா.

என்னோட மாமியாரு என்னடானா ஒரு ஆம்பள பிள்ளை வேணும் பெத்துக்கோனு சொல்லி வீட்டுல ஒரே சண்டை சச்சரவா இருக்குது. ஏற்கனவே என் குடும்பத்துல பல பிரச்சனை இருக்கு, போதாத குறைக்கு என் மாமியாரு வேற அவுங்க பங்குக்கு எப்போ பாரு ஒவ்வொரு மாசமும் நான் தலைக்கு ஊத்துற நேரத்த கரெக்ட்டா குறிச்சு வச்சு, என்ன இந்த முறையும் நிக்கலையானு கண்டபடி வாய்க் கூச்சமில்லாம பச்ச பச்சையா கேக்குறாங்கனு ரொம்ப மனசு சங்கடம்மா இருக்குனு சொல்லி அழுதாம்மா…” என்று பங்கஜத்தோட கதையைக் கூறினாள் பூஜா.

“காலம் எத்தன மாறினாலும் சில ஜென்மங்கள திருத்தவே முடியாதுடி. அந்த லிஸ்ட்ல நம்ம பங்கஜம் மாமியாரும் ஒரு ஆளு”

“வீட்டுக்கு வீடு வாசப்படி. சரி நீ முதல்ல போய் எதையும் யோசிக்காம நிம்மதியா தூங்கு, காலையில மத்தத பேசிக்கலாம்”

“சரிம்மா…”

தன் குழந்தைகளுக்கு நடுவில் சென்று படுத்து உறங்கினாள் பூஜா.

மறுநாள் காலையில் எழுந்து வேகவேகமாக கிளம்பினாள் பூஜா.

“என்னடி இவ்வளவு வேகமா கிளம்பி எங்கடி போற?”

“நேத்து ராத்திரி விடிய விடிய கதைய கேட்டுட்டு மறுபடியும் முதல்ல இருந்து கேக்குறம்மா…”

“இன்னைக்கு போய் அந்த அக்ரீமன்ட் பேப்பர்ல கையெழுத்து போடனும். அதுக்கு பிறகு தான் நான் வெளிநாடு போறதுக்கான ஏற்பாட செய்ய தொடங்குவாங்க”

“உன்னால எங்கள விட்டுட்டு போய் தனியா இருக்க முடியுமாடி? ஒரு தடவைக்கு பத்து தடவ நல்லா நிதானமா யோசிச்சு முடிவெடுடி. இன்னைக்கு இருக்குற சூழ்நிலைய வச்சு நீ முடிவெடுத்திருக்க, ஆனால் இதெல்லாம் சமாளிச்சும் உன்னால வேலைப் பார்க்க முடியும் பூஜா”

“எப்படிம்மா சமாளிக்க சொல்லுற? அந்த ப்ரியா மேடம் வீட்டுகாரரு ரூபாய் நோட்டக் காட்டி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என் கூட படுக்கைக்கு வானு சொன்னாரு. அப்படி போய் புழைப்ப நடத்தனும்னு சொல்லுறியா”னு கோபத்தில் கதறி அழுகத் தொடங்கி விட்டாள்.

பூஜா அழுவதைப் பார்த்து தன்னுடைய அம்மா எதற்காக அழுகிறாள் என்று கூடத் தெரியாமல், அவளது கண்ணீரைத் துடைத்தது விவரம் அறியா பூஜாவின் மகள் செல்வி.

குழந்தை வந்து கண்ணீரைத் துடைத்ததும்… வேதனையில் தாங்க முடியாமல் மகளைக் கட்டி அணைத்து முத்தமிட்டு, “அம்மா… அழ மாட்டேன் செல்லம்” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அழுதாள்.

தன்னுடைய மகளின் கண்ணீரையும் அவளுக்கு ஏற்பட்ட நிலைமையும் பார்த்து துடிதுடித்துப் போனார் முத்தம்மாள்.

மகளின் அருகே சென்று அவளது கண்ணீரைத் துடைத்து, “நீ எங்க போய் வேலைப் பார்க்கனுமோ அங்க போ பூஜா. கண்ட கண்ட தெரு நாயுங்க தொந்தரவு இல்லாம நீ அங்க நிம்மதியா இருந்தா அது போதும். பிள்ளைங்கள நான் பாத்துக்கிறேன், நீ தைரியமா ஆபிஸூக்கு கிளம்பும்மா” என்றார்.

அம்மாவைக் கட்டி அணைத்து தன்னுடைய முந்தானையால் கண்ணீரைத் துடைத்துவிட்டு அங்கிருந்து புதிய தொடக்கத்திற்கான பயணத்திற்கு அஸ்திவாரமிட கிளம்பிச் சென்றாள் பூஜா.

கையில் பைஃலை எடுத்துக் கொண்டு ஆபிஸின் நுழைவாயிற்குள் நுழைந்த பூஜா, மேனஜரின் அறையை நோக்கி வேகமாக சென்றாள். வாசலில் நின்று கொண்டிருந்த ப்யூன் பூஜாவை மேலும் கீழுமாக பார்த்தார்.

“அண்ணா! சார் இன்னைக்கு அக்ரீமென்ட் பேப்பர்ல கையெழுத்து போட வரச் சொல்லிருந்தாங்க….”

“சரிம்மா… கொஞ்சம் பொறு! உள்ள வேறொரு ஆளு போயிருக்காங்க…”

“வீட்டுல எல்லாருக்கிட்டேயும் சம்மதம் வாங்கிட்டியாம்மா? ஒரு தடவைக்கு பத்து தடவை நல்லா யோசிச்சுக்கோம்மா. கையெழுத்து போட்ட பிறகு எதுவுமே செய்ய முடியாது” என்றார்.

“அதுலா பிரச்சனை இல்ல அண்ணா, வீட்டுல எல்லாருக்கும் சம்மதம் தான்”

“சரிம்மா இங்க வெயிட் பண்ணு…”

மேனேஜர் அறைக்கு வெளியே உள்ள வெயிட்டிங் ஹாலில் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்தாள்.

மேனேஜர் அறையிலிருந்து ஒரு பெண் கண்களில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வேகமாக நடந்து சென்றாள். எதிர்காலத்தை நினைத்து கனவில் பல கணக்குகளைச் சிந்தித்து கொண்டிருந்த பூஜாவின் முழு கவனமும் அந்தப் பெண்ணை நோக்கி சென்றது.

“பூஜா பூஜா” என்று இரண்டு மூன்று முறை அழைத்தப் பிறகே சுயநினைவிற்கு வந்து வேகமாக எழுந்து மேனேஜர் அறைக்குள் சென்றாள்.

மேனேஜர் அறைக்குள் நுழைந்த பூஜாவிற்கு அங்கிருந்த மற்றொரு மனிதரைப் பார்த்ததும், இதயத் துடிப்பெல்லாம் எப்பொழுதும் துடிப்பதைவிட வேகமாக துடிக்கத் தொடங்கியது. என்னவென்று தெரியவில்லை அவ்வளவு நேரம் நம்பிக்கையோடு காத்திருந்த பூஜாவின் மனநிலையில் இப்போது தடுமாற்றமும் பயமும் ஆட்கொள்ள தொடங்கியது.

அங்கிருந்து வெளியே சென்ற பெண்ணின் கண்ணீரும், இங்கு ஆறரை அடி உயரத்தில் கருப்பு கோட் சூட் அணிந்து பார்ப்பதற்கே ஆக்ரோஷமான தோற்றத்துடன் இருக்கும் அந்த மனிதரைப் பார்த்ததும் தான் பூஜாவிற்கு நம்பிக்கை சற்று குறைந்து முடிவெடுப்பதில் குழப்பம் சூழ ஆரம்பித்ததிற்கு காரணம்.

“ஹாய் பூஜா…”

“என்ன அவரை அப்படி பாக்குறீங்க? இனிமே அவர் தான் உங்களுக்கு பாஸ். உங்கள இங்கிருந்து வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போகப் போறதும் அவரு தான். உங்களைப் பணம் கொடுத்து வாங்க போறதும் அவரது தான்”

“என்ன சார் சொல்லுறீங்க?” என்று சற்று பயத்துடனும் கோபத்துடனும் கேட்டாள்.

“ஸாரி… உங்களுக்கு சம்பள பணம் கொடுத்து நாலு வருஷத்துக்கு பாத்துக்க போற முதலாளினு சொல்லுறதுக்கு பதிலா, டங்க் ஸிலிப்பாகி அப்படி சொல்லிட்டேன் பூஜா…” என்றார் மேனேஜர்.

“வாவ்! மிஸ்டர் சங்கர்… நீங்க சொல்லும்போது கூட நான் நம்மபவே இல்ல. உண்மையிலேயே உங்க செலக்ஷன் பெஃன்டாஸ்டிக்…” என்று அசட்டு சிரிப்புடன் பூஜாவைப் பார்த்து வழிந்து கொண்டே கூறினான்.

“தாங்க் யூ மிஸ்டர் ப்ரவீன்…”

இவர்களது பேச்சை கேட்க விருப்பமில்லாதவளாய் பற்களைக் கடித்துக் கொண்டும் கையை பிசைந்து கொண்டும் செய்வதொன்று அறியாமல் திகைத்து போய் நின்றாள்.

“என்னாச்சு பூஜா? ஏதோ தீவிரமா யோசிக்கிறீங்க போல… வெளிநாடு போக விருப்பம் தானே… வீட்டுல எல்லாரும் சம்மதிச்சுட்டாங்களா?” என்று கேட்டான்.

“ம்ம்…” என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

“ஓகே! ப்ளீஸ் உக்காருங்க…”

“நான் சொல்லுற இடத்துல கையெழுத்து போடுங்க…”

கையெழுத்து போடும் நேரம் பார்த்து, எப்போதுமில்லாத நடுக்கம் பூஜாவிற்கு ஏற்பட்டது. முதல் பேப்பரில் கையெழுத்து போடும் சமயம் பார்த்து பயங்கரமான சத்தம் கேட்டது.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சங்கமம் ❤ (சிறுகதை) – ✍ டாக்டர். பாலசுப்ரமணியன், சென்னை

    கடவுள் அமைத்த மேடை (சிறுகதை) – ✍ பீஷ்மா