in

திசையறியா பயணம் (நாவல் – அத்தியாயம் 1) – ✍ ராஜதிலகம் பாலாஜி, ஹங்கேரி

திசையறியா பயணம் (அத்தியாயம் 1)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

கையை பிசைந்து கொண்டு பதற்றத்துடன் ஏசி போட்டும் வேர்த்து விறுவிறுத்து போய் கேன் பேக் அணிந்து கொண்டு கையில் ஒரு பைஃலுடன் அமர்ந்து கொண்டிருந்தாள் பூஜா. பார்ப்பதற்கு ப்ரஸான ஆப்பிள் போல இருந்தாள், ஆறடி உயரம் கொண்டவள்.

உயரத்திற்கேற்ற கட்டுக்கோப்பான உடம்புடன் பார்ப்பவர்கள் அனைவரையும் கவரும் வண்ணம் செதுக்கி வைத்த சிலையாட்டம் அவ்வளவு அழகாக இருந்தாள் பூஜா.

முகத்தில் கொஞ்சம் கூட புன்னகையில்லாமல் மனதில் குழப்பத்துடனும் பயத்துடனும் அமர்ந்து கொண்டிருந்தாள்.

‘வந்திருப்பவர்கள் அனைவரும் தன்னைவிட வேலை எக்ஸ்பீரியன்ஸ் அதிகமாக உள்ளவர்கள் போல தெரிகிறார்களே! நமக்கு இந்த வேலை கிடைக்குமானு தெரியலையே’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, “பூஜா பூஜா… நீங்க உள்ள போங்க…” என்று அங்கு வேலைப்பார்க்கும் ப்யூன் ஒருவர் அழைத்தார்.

கையில் உள்ள பைஃலை எடுத்துக் கொண்டு கொஞ்சம் படபடப்புடன் அறையின் உள்ளே சென்றாள்

“சார்…” என்றதும் அங்கே இருந்த மேனேஜரின் பார்வை பூஜாவின் மேல் பட்டதும் ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து போய் விட்டார்.

“எஸ் கமின் பூஜா…” வணக்கம் தெரிவித்துவிட்டு, பூஜா கையில் உள்ள பைஃலை வேகமாக நீட்டினாள்.

“அதெல்லாம் இருக்கட்டும், நீங்க பர்ஸ்ட் உக்காருங்க”

“பைஃலை திருப்பிப் பார்க்காமலே யூ ஆர் செலக்டெடு” என்றார் மேனேஜர்.

“சார்… நான் பத்தாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன்”

“ஐ நோ பூஜா… எவ்வளவு படிச்சிருக்கனு முக்கியமில்ல பூஜா. ஒருத்தவுங்கள பார்த்தவுடனே இவுங்க இந்த வேலைக்கு செட் ஆவாங்களானு ஒரு யோசனை வரும், அந்த எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு பூஜா.”

“ரொம்ப நன்றி சார்”

“உங்க மாச சம்பளம் இருபதாயிரம் ரூபாய் பூஜா”

“என் குடும்பத்துல விளக்கேத்தி வைக்க வந்த சாமி சார் நீங்க. கண்டிப்பா நான் வேலைய நல்லபடியா கத்துக்கிட்டு நீங்க என் மேல வச்சிருக்கும் நம்பிக்கைய காப்பாத்துவேன் சார்”

“சரி உங்க குடும்பத்துல பேசி சம்மதம் வாங்கிட்டீங்களா?”

“நானும் என் இரண்டு குழந்தைங்க தான் சார்”

“என்ன சொல்லுறீங்க பூஜா? உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா?”

“ஆமாம் சார்… பையன் அஞ்சாங் க்ளாஸ் படிக்கிறான், பொண்ணு இரண்டாங் கிளாஸ் படிக்கிறாள். ஒரு வருஷத்துக்கு முன்னாடி என்னுடைய கணவர் ஒரு விபத்துல இறந்துட்டாரு சார். குடும்பத்த நடத்த வழியில்லாம ஒவ்வொரு வீடா போய் பாத்திரம் தேச்சுதான் குடும்பத்த கவனிச்சேன். அந்த சம்பளம் சாப்பாட்டுக்கும் வீட்டு வாடகைக்குமே சரியா போயிரும், பிள்ளைங்கள படிக்க வைக்க முடியல.

என் தலையெழுத்து தான் இப்படி போச்சு. என் பிள்ளைங்க எதிர்காலமாவது நல்லா இருக்கனும் சொல்லி வேற எதாவது வேலைப் பார்க்கனும் யோசிச்சு புலம்பும் போது தான் உங்க கம்பெனில வேலைப் பாக்குற சிந்து மேடம் வழி சொன்னாங்க. ஆரம்பத்துல இருந்து அவுங்க வீட்டுலையும் வேலைப் பாக்குறேன் சார்” என்று தன்னுடைய கதையை கூறி முடித்தாள்.

“ஓகேம்மா… இந்த வேலைக்கான ப்ராஸஸ் அடுத்த மாசம் ஸ்டார்ட் பண்ணிருவோம். நல்லா வீட்டுக்கு போய் முடிவு எடுத்துட்டு சொல்லுங்க.”

“நாளைக்கு மார்னிங் எட்டு மணிக்கு ஆபிஸ் வந்திருங்க… சில பார்மாலிட்டீஸ் இருக்கு” என்றார் மேனேஜர்.

“ஓகே சார்… ரொம்ப நன்றி சார்…” என்று கூறிவிட்டு அங்கிருந்து வேலைக் கிடைத்த பூரிப்புடன் கிளம்பிச் சென்றாள் பூஜா.

வேலைக் கிடைத்த சந்தோஷத்தில் வீட்டிற்கு வேகமாக வந்த பூஜா, “அம்மா… நம்ம கஷ்ட காலத்துக்கு எல்லாம் சேர்த்து ஒரு விடிவு காலம் கிடைச்சிருச்சும்மா” என்று தன் தாய் முத்தம்மாளைக் கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தாள்.

“என்னடி சொல்லுற பூஜா! ஏற்கனவே அஞ்சு வீட்டுல பண்டபாத்திரம் தேச்சு கையிலாம் புண்ணாகி தேஞ்சு போயிருக்கு. போதாத குறைக்கு இப்போ எந்த வீட்டுல புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கடி? அப்படிலாம் நீ வேறெந்த வீட்டுக்கும் புதுசா வேலைக்கு போக வேண்டாம்டி.

நம்ம பக்கத்து வீட்டு கோமதியோட பொண்ணுக்கு நகராட்சி மருத்துவமனையில புதுசா வேலைக் கிடைச்சிருக்காம். அங்க ஏதாவது பெருக்குற வேலைக்கு மேற்கொண்டு ஆள் தேவையா இருந்தா என்னை டெம்பரரியா கூப்பிடச் சொல்லிருக்கேன். போதும்மா! இதுக்கு மேல நீ ஒவ்வொரு வீட்டுக்கும் ஓடிப் போய் நாயா உழைச்சது போதும்” என்று தன் மகள் படும் வேதனையை தாங்க முடியாமல் அழுது கொண்டே கூறினார்.

“அம்மா! கொஞ்சம் பொறுமையா நான் என்ன சொல்ல வந்தேனு முழுசா கேட்டுட்டு பிறகு பேசும்மா… நான் இனி எந்த வீட்டுக்கும் வேலைக்கு போக போறதா இல்ல”

“என்னடி சொல்லுற? வேலைக் கிடச்சிருக்குனு சொன்ன அப்போ”

“ஆமாம்மா… வேலை தான் கிடைச்சிருக்கு. ஆனால் பாத்திரம் தேக்கிற வேலையில்ல, ஒரு கார்மெண்ட் கம்பெனில வேலை”

“உனக்கு தான் தைக்கவே தெரியாதே. பெருசா எதுவும் நீ படிக்கவும் இல்ல, பிறகு எப்படி அங்க உனக்கு வேலை கிடைச்சதுடி?”

“நம்ம சிந்து மேடம் ரெக்கமெண்டேஷன்ல கிடைச்சதும்மா. மேனேஜர் நான் என்ன படிச்சிருக்கனு கூட பார்க்காமலே நீங்க வேலைக்கு செலக்ட்டடுனு சொல்லிட்டாரு. துணியை பேக்கிங் பண்ணுற செக்ஷனுல வேலைம்மா. ஒரு மாசம் மட்டும்தான் இங்க வேலை. அதுக்கு பிறகு வெளிநாட்டுல வேலைம்மா”

“என்னது வெளிநாட்டுல வேலையா?”

“ஆமாம்மா… மாசம் இருபாதாயிரம் சம்பளம் தர்றேனு சொல்லலிருக்காங்க”

“நீ சொல்லுறத நம்பவே முடியலடி. துணி பேக்கிங் வேலைக்கு இவ்வளவு சம்பளத்தோட வேலை கொடுக்குறாங்கனா ரொம்ப ஆச்சரியமா இருக்குடி. உன்னால உன் பிள்ளைங்கள விட்டுட்டு அங்க போய் நிம்மதிய வேலை செய்ய முடியுமாடி பூஜா. இதெல்லாம் நமக்கு சரிபட்டு வர்றாதுடி. ஊரு பேரு தெரியாத ஊருல போய் நீ ஒன்னும் அப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்து எங்க வயித்தை நிரப்ப வேண்டாம். நாளைக்கு போய் பேசாம வேலைக்கு வரலைனு சொல்லிருடி”

“அம்மா! நீ என்னம்மா பேசுற. போன வாரம் அந்த ரோஜா மேடம் வீட்டுல என்ன நடந்ததுனு தெரியுமாம்மா”

“அந்த சம்பவம் நடந்ததுக்கு பிறகு தான் இனி வீட்டு வேலைக்கே போக கூடாதுனு முடிவெடுத்தேன். வேற ஏதாவது வேலை தேடுவோம்னு போன ஒரு மாசம் முழுசும் நாயா பேயாத் தேடி அலைஞ்சதுக்கு கடவுளா பாத்து அந்த சிந்து மேடம் மூலமா இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்காரும்மா”

“அஞ்சு வருஷமா இந்த வேலையத் தான பாக்குற. திடீருனு இந்த முடிவு எடுக்குற அளவுக்கு அப்படி ரோஜா மேடம் வீட்டுல என்னடி நடந்தது? அவுங்க தங்கமானவுங்கனு சொல்லுவ. அவுங்க வீட்டுல வேற யாரும் எதுவும் உன்னை திட்டீட்டாங்களா? இல்ல மேடமே எதுவும் சொல்லிட்டாங்களா?”

“ஐயையோ! அந்த மேடத்தலாம் குறைச் சொன்னா எனக்கெல்லாம் கடைசி காலத்துல இப்போ கிடைக்கிற கஞ்சி கூட கிடைக்காதும்மா. நான் வேலை பாக்குற எல்லா வீட்டுலையும் எல்லாரும் சாப்பிட்டு மீந்து போன சோறத்தான் தருவாங்க. அதுலையும் அந்த ப்ரியா மேடம்லாம் அவுங்க வீட்டுல இருக்க மீந்த சாப்பட்டைக் கூட அன்னைக்கே தர்றாம ப்ரிட்ஜ்ல வச்சு மறுநாள் தான் தருவாங்க, ஆனால் ரோஜா மேடம் மட்டும் தான் சமைக்கும் போதே எனக்குனு தனியா சாப்பாட்டை ஒரு பாத்திரத்துல எடுத்து வச்சு தருவாங்க. ஒரு நாள் கூட பழைய சாதத்தையோ, ப்ரிட்ஜ்ல வச்ச பழைய குழம்பையோ கொடுத்ததே இல்லம்மா.

நம்ம பிள்ளைங்களுக்கு ஒவ்வொரு வாரமும் மறக்காம ஸ்நாக்ஸ்லாம் வாங்கி கொடுத்து விடுறதே அவுங்க ஒருத்தவுங்க தான்ம்மா. வேலைப் பாக்குறவுங்களுக்கும் நம்மள மாதிரி ஒரு மனுசங்கதானு நினைச்சு சகஜமா ஏங்கிட்ட பழகுறதே ரோஜா மேடம் மட்டும் தான்ம்மா. சிந்து மேடம் வேலைக்கு ரெக்கமென்ட் செஞ்சு உதவுனாலும் ஒருநாள் ரொம்ப வேலைப் பாக்கும் போது படபடனு வருதுனு அவுங்க வீட்டு கப்பை வேகமா எடுத்து மறந்து போய் தண்ணீர் குடிச்சுட்டேன். உடனே என்னை திட்டிட்டு அந்த டீ கப்பையே குப்பைல தூக்கிப் போட்டுடாங்க. நம்ம ரோஜா மேடம் அப்படிலாம் ஒரு நாள் கூட எதுவும் சொன்னதில்ல”

“சரிடி… பிறகு அவுங்க வீட்டுல உனக்கு என்னதான் பிரச்சனை?”

“அது வந்தும்மா…” என்று சொல்லும் போதே பூஜாவின் குரல் விம்மியது.

“மென்னு முழுங்காம வாயைத் திறந்து சொல்லுடி”

“ரோஜா மேடம் மாமனார் இருக்காருலம்மா….”

“ஆமாம்…”

“தினமும் ரோஜா மேடமும், சாரும் ஆபிஸ் கிளம்பி போனதும் வீட்டு வேலையெல்லாம் பார்த்துட்டு ரோஜா மேடம் மாமனாருக்கு தேவையான உதவியெல்லாம் செஞ்சிட்டு தான் கிளம்புவேன். சொல்ல போனா அவருக்கு நான் எந்த வேலையும் பார்க்கனும் அவசியமில்ல. ரோஜா மேடமே அவருக்கு தேவையானதெல்லாம் பார்த்து ரூம்ல உள்ள டேபிள்ல எடுத்து வச்சிட்டு போயிருவாங்க.

ஒரு நாள் ரோஜா மேடம் ஏங்கிட்ட வந்து அவருக்கு நேத்துல இருந்து கொஞ்சம் காய்ச்சலா இருக்கு பூஜா. எனக்கு ஆபிஸ்ல இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, அதனால லீவ் போட்டு மாமாவ பார்த்துக்க முடியல. மீட்டிங் முடிஞ்சதும் பெர்மிஸன் கேட்டுட்டு வந்திருவேன். அப்படி நான் வர்றதுக்கு லேட் ஆயிருச்சுனா நீ கிளம்பும்போது மாமாவுக்கு ஒரு டீ மட்டும் போட்டுக் கொடுத்திரு பூஜானு சொன்னாங்க.

சரினு சொல்லிட்டு வீட்டு வேலை முடிஞ்சு கிளம்பும்போது டீ போட்டுக் கொண்டு போய் அவருக்கிட்ட கொடுத்தேன். செத்த பாத்ரூம் வரைக்கு கொண்டு போய் விடுவேன் பூஜா. காய்ச்ச வந்ததால உடம்புல கொஞ்சம் தெம்பில்லாத மாதிரி இருக்கு, நடக்கும்போது கால் ஸ்லிப் பாகிருமோனு பயமாயிருக்குனு சொன்னாரு. சரிங்க ஐயா, வாங்கனு சொல்லி கைக் கொடுத்து தூக்கி கையப் பிடிச்சு கொண்டு போய் பாத்ரூம்ல விட்டேன். திரும்பி வரும்போது டக்கனு என்னுடைய இடுப்ப பிடிச்சிட்டாரும்மா”

“இவ்வளவு தானா பிரச்சனை? இதுக்கு போயா வேலைய விடனுங்குறடி. அவருக்கு டக்குனு கைப் பிடிக்க எசவில்லாம பிடிச்சிருப்பாரு”

“அம்மா! ஒரு ஆம்பள நம்மள தொடுற விதத்தை வச்சு எந்த மாதிரி நினைப்புல தொடுறாங்கனு கண்டுப்பிடிச்சிடலாம்மா… தொட்டவரு தெரியாம தொட்டா அடுத்த நொடில விடனும்ல. ஆனா அவரு விடலம்மா… வேற வழியில்லாம அவருடைய பெட்ல விட்டுட்டு கிளம்பிட்டேன். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விதத்துல என்னை சீண்டிக்கிட்டே இருக்காரு. ஒருநாள் நான் அவுங்கு வீட்ட துடைக்கும்போது அவரு ஷோபாவுல உக்காந்து ஏதோ புத்தகம் படிச்சிக்கிட்டு இருந்தாரு. ரொம்ப நேரமாக என்னையே பார்த்தக்கிட்டு இருந்தாரு. நான் கண்டு காணாத மாதிரி துடைச்சுக்கிட்டு இருந்தேன்.

என்ன ரொம்ப நேரமா வச்ச கண்ண எடுக்காம நம்மளையே பாக்குறாருனு பார்த்தா என் புடவை கொஞ்சம் விலகியிருந்துச்சும்மா. டக்குனு புடவை சரிபண்ணிட்டு பாதி துடைச்சும் துடைக்காம கிச்சனுக்கு போயிட்டேன்ம்மா. மறுநாள் ஒரு புத்தகத்தை என் கையில கொடுத்து, ஒரு பக்கத்தைச் சொல்லி அதுல என்ன போட்டிருக்குனு சரியா எனக்கு தெரியல கொஞ்சம் பார்த்து சொல்லேன் பூஜானாரு.

இராமாயணம் புத்தகத்துல என்ன புரியாம நம்மள கேக்காருனு தெரியலயே! சரி, சாமி புத்தகம் தானே படிச்சு சொல்லுவோம்னு பார்த்தா, பொம்பளைங்க அசிங்கமா ட்ரஸ் போட்ட ஒரு குட்டி புத்தகத்தை அதுக்குள்ள வச்சுருக்காரும்மா. வெளில பாக்குற எல்லாரு முன்னாடியும் பக்தில முத்தி இராமாயணம் படிக்கிற மாதிரி யோக்கியமான வேஷம் போட்டுக்கிட்டு அயோக்கியமான வேலைப் பாக்குறாரும்மா. சரி வயசுல பெரியவரா இருக்காரு. நம்ம அப்பா மாதிரி நினைச்சு தான் அந்த பெரிய மனுஷனுக்கு உதவி செய்ய போனேன். ஆனால் ஒவ்வொரு நாளும் வயசுக்கு ஏத்த மாதிரி நடக்காமல் எல்லை மீறி நடந்துக்காரு. நீயே சொல்லும்மா… இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொறுத்து போய் மனங்கெட்ட புழைப்பு பிழைக்க முடியும்.”

“ச்சீ… கேக்கவே அருவெறுப்பா இருக்குடி. அந்த கிழவன் இவ்வளவு செஞ்சிருக்கான், உடனே நீ ரோஜா மேடம்கிட்ட சொல்ல வேண்டியது தானடி”

“அது எப்படி சொல்ல முடியும்? அவுங்க மாமனாருக்குனு யாருமே இல்ல. மேடம் அப்பா மாதிரி ரொம்ப அன்பா அவரை பார்த்துக்கிட்டு வர்றாங்க. அதோட மட்டுமில்லாம நமக்கு நல்ல சோறும் பிள்ளைங்களுக்கு அப்போ அப்போ தேவையானதுலாம் ரோஜா மேடம் தான் கொடுத்து உதவுறாங்க. இந்த உண்மைய சொன்னா அந்த ஒரு வேலை கொடுக்குற நல்ல சாப்பாடும் பிள்ளைங்களுக்கு கிடைக்காம போயிருமோனு பயமா இருக்கும்மா.

அதோட அவுங்க மாமனாரு செஞ்சதெல்லாம் சொன்னால் அவுங்க ரொம்ப சங்கடப்படுவாங்கம்மா… இந்த விஷயத்தல நேராவும் கேட்டிட்டு அந்த வீட்டுல அவரோட சேர்ந்து நிம்மதியா ரோஜா மேடம் எப்படி வாழ முடியும். என்னால அவுங்க ரொம்ப தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக வேண்டியது வரும்மா.

அந்த ஐயாவுக்கும் இவுங்கள விட்டா வேற ஆதரவு இல்லம்மா. வயசான காலத்துல புத்தி மலுங்கி போய் ஏதோ பண்ணுறாரும்மா. நான் இவருக்காக மட்டும் வேலைய விடலம்மா. பிரியா மேடம் வீட்டுக்காரருனால தான் இந்த முடிவுக்கு வந்தேன்”

“என்னடி! அடுத்தடுத்து தலையில பெரிய குண்ட தூக்கிப் போடுற மாதிரி போட்டுக்கிட்டே இருக்க…”

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நவீன கண்ணகி (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.  

    டீ தட்டை (சிறுகதை) – ✍ சுதா திருநாராயணன்