in

நவீன கண்ணகி (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.  

நவீன கண்ணகி (சிறுகதை)

ஜனவரி  2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

லட்சியமாக பல வழக்குகளை பைசல் செய்த ஊர் பண்ணாடி முத்துச்சாமிக்கு, அன்று பஞ்சாயத்துக்கு வந்த அந்த வழக்கு ,தலையைச் சுற்ற வைத்தது.  எப்போதும் அவர் முடித்து வைத்த வழக்குகளில், வழக்குதாரர்கள் இரண்டு பேரும், சொத்தில் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றே சண்டையிட்டுக் கொள்வார்கள். 

ஆனால், அன்று வழக்கு கொண்டு வந்திருந்த அண்ணன் தம்பிகளான ராமசாமியும், லட்சுமணனும் பண்ணாடி முத்துச்சாமியை மட்டுமல்லாது, பஞ்சாயத்தில் அங்கம் வகிக்கின்ற‌  மற்ற பெருசுகளையும் குழப்பத்திற்கு உள்ளாக்கினர்.

இந்த வழக்கின் விசித்திரம் நன்கு புரிய வேண்டும் என்றால், ராமசாமியும், லட்சுமணனும் பிறப்பதற்கு முன்பிருந்து ஆரம்பிக்க வேண்டும். இவர்களின் தாய், தந்தையர்கள் இருவரும் கண்ணியமான‌, விவசாயக் குடும்பத்திலிருந்து வந்து உழைப்பையே நம்பி வாழ்பவர்கள்.  உள்ள ஆறு ஏக்கரும், நீர் வளம் கொண்ட‌ நல்ல விவசாய பூமி  ஆதலால், மூத்தவன் ராமசாமி பிறக்கும்போது, விவசாயம் செழிப்பான நிலையில் இருந்தது. 

அதனால் அவனும் செழிப்பான‌  சூழ்நிலையில் வளர்க்கப்பட்டான். இரண்டாவது பெண்ணாகப் பிறக்கும் என்று இருந்தபோது வந்து பிறந்தவன்தான் லட்சுமணன். அவன் வளர வளர குடும்பத்தின் செல்வாக்கும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.  சரியான நேரத்தில் வராத மழையும், வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் போனதாலும் விவசாய வருமானம் வாய்க்கும் வயிற்றுக்கும் மட்டுமே கட்டி வந்தது. 

மூத்தவன் ராமசாமி நிலைமையைப் புரிந்து கொண்டு அனுசரித்துப் போனான். ஆனால், லட்சுமணனோ நிலைமை தெரியாமல் பிடிவாதக்காரனாகவும், சண்டைக் கோழியாகவும் வளர்ந்தான். முக்கியமாக அண்ணன் ராமசாமி செய்யும் எல்லா காரியங்களுக்கும் எதிராகவே நின்றான்.  காரணமே இல்லாமல் அண்ணன் மீது வெறுப்பை வளர்த்து வந்தான். 

ஒரு முறை ராமசாமியின் பென்சில் தீர்ந்து விட்டது என்று அப்பன் பக்கத்து ஊர் கடையில் இருந்து புது பென்சில் வாங்கிக் கொடுத்திருந்தார்.  கடுகடுப்புடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமணன், அன்று இரவு எல்லோரும் தூங்கியவுடன் ராமசாமியின் புத்தகப் பையிலிருந்து அந்தப் புதிய பென்சிலை எடுத்து நான்காக முறித்து வெளியில் வீசிய பிறகுதான் நிம்மதியாகத் தூங்கினான்.                                                                      

மற்றொரு நாள், தோட்டத்தில் மிளகாய் பறித்துக் கொண்டிருந்த அம்மா, சற்று தூரத்தில் புகை வருவதைக் கண்டு ஓடிச் சென்று பார்த்த போது லட்சுமணன் ராமசாமியின் சட்டைகளையெல்லாம் சேர்த்து வைத்து ,தோட்டத்தில் நெருப்பில் போட்டு எரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, பதறிப் போய்த் தடுத்தபோது கூலாகச் சொன்னான், ‘இது இருக்கறதுனால தானே எனக்கு புதுசு எடுக்காம இதையே போடச் சொல்றீங்க? எனக்கும் வேண்டாம், அவனுக்கும் வேண்டாம்’.

எந்த அளவிற்கு ராமசாமி தம்பி மேல் பிரியமும், பாசமும் வைத்திருந்தானோ, அந்த அளவிற்கு  ராமசாமி மேல் வெறுப்பும், துவேஷமும் கொண்டிருந்தான் லட்சுமணன்.  பெரியவர்கள் ஆகும்போது எல்லாம் சரியாகி, அவர்களின் உறவு இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்று இருந்த அவர்களின் பெற்றோர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.   

திருமண வயது நெருங்கியவுடன், இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால், வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் நிகழும் என்று எதிர்பார்த்த தாய்க்கும் தந்தைக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. விதிவசத்தால், ராமசாமிக்கு அவனைப் போல அமைதியான மனைவியும், லட்சுமணனுக்கு காசாசையும், பொறாமைக் குணமும் கொண்ட மனைவியும் வாய்த்தது அவர்களின் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கியது.  

அந்தச் சிக்கல் வளர்ந்து வளர்ந்து விருட்ஷமாகி, தாய் தந்தையரின் கெஞ்சுதல்களுக்கும் மசியாமல், பாகத்தைப் பிரிக்க, பண்ணாடி முத்துசாமி தலைமையில் அந்த ஊர்க் கூட்டம் கூடி இருந்தது. ஆறு ஏக்கர் தோட்டத்தையும், ஆடு மாடுகளையும் பிரிக்கும்போது வராத சிக்கல் ஏழு தென்னம்பிள்ளைகளைப் பிரிக்கும் போது வந்தது. 

தாய், தந்தையின் குடும்பச் செலவுக்கு இரு மகன்களும் பணம் கொடுப்பதோடு, நோய் நொடி வந்தால் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்று  பார்த்துக் கொள்ளவும் இருவரும் ஒப்புக் கொண்டனர். ஏழு தென்னைகளில் ஆளுக்கு மூன்று வைத்துக் கொள்ளவும், மீதி இருக்கும் ஒரு தென்னையை யாராவது ஒருவர் வைத்துக் கொண்டு அதற்கான தொகையை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது பஞ்சாயத்து தீர்ப்பு.

ராமசாமி பஞ்சாயத்து என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்வதாகக் கூறிவிட்டான்.  அங்கேதான் தன் அஸ்திரத்தைப் பிரயோகித்தான் லட்சுமணன்.

‘தனியாக நிற்கும்அந்த  ஒத்த‌ மரம் எனக்கும் வேண்டாம், அவனுக்கும் வேண்டாம். வெட்டித் தள்ளிவிடலாம்’.

கூட்டம் ஸ்தம்பித்தது.  சுதாகரித்துக் கொண்டு பேசினார் பண்ணாடி முத்துசாமி.

‘பைத்தியமாடா நீ? நம்மைப் போன்ற விவசாயிகளுக்கு உழவு மாடுகள் எப்படி தெய்வமோ, அப்படித்தான் தென்னையும்.  அதனால்தான் அதை ‘தென்னம்பிள்ளை’  என்று பெயர் வைத்து வீட்டில் ஒரு பிள்ளையாக  வளர்க்கிறோம்.  அதைப் போய் வெட்டச் சொல்றியே?’

பதறிப் போய் பேசினான் ராமசாமி, ‘அந்த மரத்தை நீயே வெச்சுக்கோ.. எனக்கு பணமே வேண்டாம்… ஆனா வெட்ட மட்டும் வேண்டாம்’.

சாட்டையடி போல் பதில் வந்தது லட்சுமணனிடமிருந்து, ‘நீ என்ன எனக்கு பிச்சை போடறியா?  எனக்கு இல்லாதது உனக்கும் கிடைக்காது.  மாமா.. அந்த மரத்தை வெட்ட வேண்டும்..’ என்றான் பண்ணாடி முத்துசாமியைப் பார்த்து. 

தாயும், தந்தையும் மற்ற பெரியவர்களும் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக இருந்த லட்சுமணனைப் பார்த்து முடிவாகச் சொன்னார் பண்ணாடி முத்துச்சாமி, ‘பாரப்பா.. எல்லாப் பங்கீடும் நல்லபடியா முடிஞ்சு, இது ஒண்ணுக்காக பிரிச்சது எல்லாம் நிக்க வேண்டாம்.  பஞ்சாயத்தின் தீர்ப்பை பத்திரத்தில் பதிவு செய்து கொள்ளுங்க.  ஆனால் தென்னம்பிள்ளையை வெட்டுவதை இந்தப் பஞ்சாயத்து செய்யாது.  அதைச் செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தும் லட்சுமணனே தன் செலவில்‌ செய்து கொள்ளவேண்டும்.  என்னப்பா லட்சுமணா சரியா?’.

‘சரிங்க… நானே நாளைக்கு மிசினைக் கொண்டு வந்து வெட்டிடறங்க’ என்றான் உற்சாகத்துடன். 

‘ம்ம்ம்.. இவங்களுக்குப் போய் ராமசாமி, லட்சுமணன்னு பேரு வச்சாங்க பாரு’ என்று முணுமுணுத்துக் கொண்டேகூட்டமும் கலைந்தது.  கனத்த மனதுடன், இறுகிய முகத்துடன் கூட்டத்திலிருந்து வெளியேறினர் அவனின் தாய் தந்தையர்.  

அடுத்த நாள் தென்னம்பிள்ளை வெட்டப்பட்ட செய்தியைக் கேட்டு இரண்டு நாள் உணவு கொள்ளாமல் படுத்துக் கிடந்த அவன் தாய் மனசு தேறி எழுந்து, விவசாய வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.  ஆனால், மனசுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்த அவன் தந்தை, திடீரென்று படுக்கையில் விழுந்தார். 

இரண்டு மாதம் மனநோயாலும், உடல் உபாதையிலும் நொந்து கிடந்த அவர், மரணத்தைத் தழுவும் வரை லட்சுமணனிடம் முகம் கொடுத்துப் பேசவே இல்லை.

தந்தையின் இறுதிக் காரியத்தில் ஒன்றும் நடவாதது போல் கலந்து கொண்டான் லட்சுமணன். தந்தைக்கு ஈமக்கிரிமைகள் செய்து மொட்டையும் போட்டுக் கொண்டான்.  எல்லாக் காரியங்களும் முடிந்த பிறகு ஊர்ப் பெரியவர்கள் செலவு கணக்குகள் முடித்து ஊர் வழக்கப்படி அவர்களின் தாயாரிடம் விடை பெற்றுச் செல்லக் காத்திருந்தனர்.

வெள்ளைச் சேலையில், தலைவிரி கோலமாக வீட்டின் உள்ளேயிருந்து வெளியே வந்த தாயாரின் கண்ணில் ,முன்னால் நின்றிருந்த மகன் லட்சுமணன் பட்டவுடன் கொதித்துப் போய் வீறிட்டாள்.

‘வாடா … நானும் அந்தத் தென்னம்பிள்ளையைப் போல இப்ப ஒத்தையாத்தான் நிக்கறேன்.  வந்து என்னையும் வெட்டு… இந்தா அரிவாள்’ என்று பக்கத்தில் கிடந்த அரிவாளை எடுத்து அவனை நோக்கி நீட்டினாள். 

கையில் அரிவாளுடன் நின்ற அவளின் கோபத் தோற்றம், பாண்டியன் நெடுஞ்செழியன் முன் ஒற்றைச் சிலம்பேந்தி நீதி கேட்டு நின்ற கண்ணகியைப் போலவே இருந்தது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 2) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை

திசையறியா பயணம் (நாவல் – அத்தியாயம் 1) – ✍ ராஜதிலகம் பாலாஜி, ஹங்கேரி