in

வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 2) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை

வாழ்க்கை ❤ (அத்தியாயம் 2)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

திவ்யா தண்ணீர் குடித்து விட்டு சிவாவின் கையிலிருந்து இறங்காமலே ‘’அத்தா இந்தா நீயும் தண்ணி குடி’’ என்றாள்.

“என்னாச்சு புவனா அழுத மாதிரி இருந்தது?” என்றான் அருகில் வந்த சிவா.

“இல்லே கண்ணுலே தூசி விழுந்து விட்டது அதான் துடைச்சேன். நம்ம பெட்டி பை எல்லாம் வந்துடுச்சா?” என்றாள் கண்களையும் கன்னங்களையும் அழுந்தத் துடைத்துக் கொண்ட புவனா.

‘’எல்லாம் ஒழுங்காக அடுக்கி வச்சாச்சு. உன் கைப்பை எங்கே?” என்றாள் சிவா.

திடுக்கிட்டுப் போனாள் புவனா. ரயிலில் ஏறிய அவசரத்தில் கைப்பையை எங்கே வைத்தேன் என்பது அவளுக்கு மறந்து போய் விட்டது. எழுந்து ‘எங்கேயாவது வைத்திருக்கிறேனா?’ என்று தேடிப் பார்த்தாள். காணவில்லை.

‘’என்ன புவனா, ஒண்ணுமே சொல்லாமல் இருந்தா எப்படி? ரயில் டிக்கெட் பணம் எல்லாம் உன் கைப்பையிலே தானே இருந்தது?”

உள்ளுக்குள் அதிர்ந்து போனாள் புவனா. அம்மாவிடம் பேச வேண்டும் என்கிற வேகத்தில் கைப்பையை எங்கோ வைத்து விட்டேன். எங்கே? நினைவுக்கு வர மறுத்தது.

இப்போது கைப்பையை காணவில்லை என்று சொன்னால் என்னாகும்? கடவுளே… எனக்கு ஏன் இப்படி ஒரு மறதியை தந்தாய்?

நிதானமாக யோசித்தாள். ரயிலுக்கு வருமுன் பிளாட்பார பெஞ்சில் அமர்ந்திருக்கும் போது கைப்பை தோளில்தானே இருந்தது. ரயிலுக்கு வரும் போது எடுத்து வந்தேனா? ரயில் வருகிறது என்று எல்லோரும் எழுந்ததும் நான் கைப்பையை அவசரத்தில் விட்டு விட்டு வந்து விட்டேனா? திரும்பப் போய் தேடிப் பார்த்தால் கிடைக்குமா? யாராவது எடுத்துக் கொண்டு போயிருப்பார்களா?

பையைத் தோளில் போட்டுக்கொண்டு ரயிலில் ஏறிய ஞாபகம் தான் இருக்கிறது. எங்கே வைத்தேனென்று நினைவுக்கு வர மறுக்கிறது?

‘’மாப்பிள்ளை கைப்பையை எங்கே என்று கேட்கிறார். மரம் மாதிரி நின்னுகிட்டிருக்கியே… பையை எங்கே வச்சே?” என்று பிளாட்பாரத்தில் நின்று கொண்டே அம்மா அதட்டினாள்.

‘’கொண்டு வந்தேம்மா. ஆனா எங்கே வச்சேன்னுதான் தெரியலே” சிவா வெடிக்கப் போகிறான் என்கிற பயத்திலே முணுமுணுத்தாள் புவனா.

‘’பையைச் சரியாகத் தேடிப்பாரு. மறந்து எங்கேயாவது வைச்சிட்டியான்னு பார்த்துட்டு வா. இல்லேண்ணா பெட்டியிலிருந்து மும்பை போகலாம், வீணாகப் பயப்படாதே” என்று சிவா மெதுவாகச் சொல்லச் சொல்ல அவன் மீதிருந்த மரியாதை அவளுக்குள் ஏறிக் கொண்டே போனது.

 ‘என்ன ஒரு அருமையான மனிதனை தேவகி இழந்து விட்டுப் போயிருக்கிறாள். இந்த நேரத்தில் எந்த சாதாரண மனிதனும் எரிந்து விழுந்திருப்பான். ஒரு கடுஞ்சொல் கூட சொல்லாமல்… ‘சிவா சிவா… உன்னை அடைந்ததற்கு நான் ஏழேழு ஜென்மங்கள் தவம் இருந்திருக்க வேண்டும்’.

அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே மனதின் மூலையில் ஜெயமோகன் எட்டிப் பார்த்தான். மனதை அதட்டிய புவனா, ‘எண்ணங்களே ஒழிந்து போ’ என்று முனங்கினாள்.

“என்னடி புவனா கைப்பையைத் தொலைத்து விட்டு இப்படி குத்துக் கல்லாட்டம் நின்னா எப்படி? செம்மையா தேடிப்பாரு” என்றாள் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அம்மா.

“அத்தை, நீங்கள் ஏன் அவளைப் போட்டு விரட்டுகிறீர்கள். பாவம் நேற்றிரவு முழுவதும் விழித்திருந்து ரயில் பயணத்துக்கான சாப்பாடெல்லாம் பண்ணி இருக்கிறாள். தூக்கக் களைப்பிலே எங்கே வைத்தாளோ?” என்றான் சிவா.

“அத்தா…” என்று தன்னை எடுக்கச் சொல்லி கையை நீட்டினாள் திவ்யா.

“அம்மா கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும், அவளைத் தொந்தரவு செய்யாதே. புவனா. கைப்பை காணாமல் போனால் பரவாயில்லை, வீணாக வருத்தப்படாதே. சீக்கிரம் ரயில் புறப்பட்டு போய்விடும், அம்மாவிடம் பேச வேண்டியதெல்லாம் பேசி முடித்து விடு” என்று திவ்யாவைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமிற்கு கிளம்பினான் சிவா.

எவ்வளவு அருமையான மனிதன். ஒரு அதிர்வு பேச்சுக் கூட இல்லாமல் இவனால் எவ்வளவு எளிமையாக அமைதியாக பேச முடிகிறது. ஒரு சாதாரண மனிதன் இந்த நேரத்தில் எவ்வளவு திட்டித் தீர்த்து விட்டு அலைந்து கொண்டே போயிருப்பான். போனது வராது என்ற எண்ணம் எத்தனை பேருக்குள்ளே இந்த மாதிரி நேரத்திலே எழும்?

அங்குமிங்கும் தேடி என்னையும் திட்டி பரிதவித்துப் போக மாட்டானா? எவ்வளவு திட்டினாலும் அலைந்தாலும் நடக்கக் கூடியது தான் நடக்கும் என எந்த ஒரு அதிர்வும் ஆத்திரமும் இல்லாமல் எப்படி அமைதியாக போக முடிகிறது.

சிவா, கடவுள் என் வாழ்வில் செய்த முதல் நல்ல காரியம் என்னவென்றால், உன்னை எனக்கு துணையாகக் கொடுத்ததுதான். உங்களைத் திருமணம் செய்த அன்றே எனக்குள் என்னைத் தெரிய வைத்து உங்களையும் புரிய வைத்தீர்களே.

என்னை ஒரு வேலைக்காரியாகவோ உயிருள்ள மண் பாண்டமாகவோ பார்க்காமல் ஒரு நல்ல சிநேகிதியாக மதிக்க ஆரம்பித்த என் வாழ்க்கையின் வழித்துணையே… உன்னை எனக்கு வழங்கியதற்கு அந்த ஆண்டவனுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.

“மசமசன்னு நிக்காம கைப்பையைத் தேடிப் பாரேண்டி. மாப்பிள்ளை எவ்வளவு நல்லவரா இருந்ததாலே ஒழிஞ்சே… இதே உங்க அப்பாவா இருந்திருந்தா உண்டு இல்லேனு பண்ணிருப்பார்?” என்றாள் அம்மா.

“பையை உள்ளே எடுத்துட்டு வந்தேன், ஆனால் எங்கே வச்சேண்ணுதான்… ஆங்… திவாகர்கிட்ட கொடுத்த ஞாபகம் தானிருக்கு” என்று எழுந்தவள் தம்பி திவாகரனைத் தேடினாள்.

மேல் படுக்கையில் பெட்டியைத் திறந்து லுங்கி எடுத்த திவாகர் “என்னக்கா? என்ன தேடறீங்க?” என்றான்.

திரும்பி வந்த சிவா, திவ்யாவை புவனாவிடம் கொடுத்து விட்டு “உங்கக்கா கைப்பையை எங்கேயோ மறந்து வச்சிட்டு வந்துட்டாடா.. அதிலேதான் இரயில் டிக்கெட்டும் பணமும் இருக்கிறது” என்றான்.

கீழே நின்றுகொண்டிருந்த அம்மா, “அக்கா கைப்பையை உன்கிட்ட கொடுத்தாளா?” என்றாள்.

“எங்கிட்டே தரவில்லையே” என்றான் திவாகர்.

“சரி போகட்டும் விடு” என்றான் சிவா.

“இதோ இங்கே இருக்கிறது. அக்கா தான் இங்கே பையை வைத்திருக்கா” என்று எதிரிலே மேல் படுக்கையிலிருந்த கைப்பையை எடுத்துக் கொடுத்தான் திவாகர்.

“இப்பதான் உயிர் வந்த மாதிரி இருக்கு. இப்படி அசடு மாதிரி எதையும் கண்ட இடத்தில் வச்சிண்டு நின்று தவிக்காதே” என்று அம்மா இரைந்தாள்.

“வீணாக ஏன் அத்தை அவளைத் திட்டுகிறீர்கள்? பாவம் தூக்கக் கலக்கத்தில் பையை மேல் படுக்கையில் வைத்ததை மறந்து போயிருப்பாள்”

“அத்தா… பலூன்” என்று பிளாட்பாரத்தில் பலூன் விற்றுக் கொண்டிருந்தவனை காட்டினாள் திவ்யா.

“வாங்குவோமா?” என்றாள் புவனா.

“மும்பையிலே வீடெல்லாம் சின்னதா தானிருக்கும், சமாளிச்சுக்கணும். எல்லாம் எப்பவும் சுத்தமா வச்சுக்க பழகிக்கோ. உனக்கு அதிகமாகச் சொல்லித் தர வேண்டியதில்லே. முக்கியமா இந்தச் சின்ன குழந்தையை நீ ஜெயிச்சாகணும். அதுதான் மிக முக்கியம்”

அடுத்த முறை நீ ஊர் வரும்போது உனக்கு குழந்தை பொறக்குதோ இல்லையோ, அதைப்பத்தி எனக்கு கவலையில்லை. திவ்யா உன்னைப் பார்த்து அம்மானு கூப்பிடணும்”

“நான் முயற்சி பண்ணுகிறேனம்மா… சில நேரங்களில் திவ்யா முரண்டு பண்ணினா கூட அவர் என்னைத் திட்டறதில்லே. அதைப் பார்க்கும் போது தான் என்னவோ என்னையே அடித்த மாதிரி ஒரு வலி வருகிறது”

“……….” ஒன்றும் சொல்லாமல் அம்மா முறைத்துப் பார்த்தாள்.

“சின்னக் குழந்தை அடம் பிடிக்கத்தான் செய்யும். தப்பு செய்யத் தான் செய்யும். எனக்குக் கூட கோபம் வரும். நான் கோபப்படக் கூடாது என்பதற்காக அவரே அவளை அதட்டுவதும் மிரட்டுவதும் பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மற்றபடி அவரைப் போல ஒரு நல்ல மனிதன் கிடைப்பது கஷ்டம் அம்மா. திவ்யாவை கண்டிப்பாக ஜெயித்துதான் ஆக வேண்டும். முயற்சி செய்கிறேன் அம்மா”

“வடை போண்டா காபி” வியாபாரம் செய்கிறவன் கூவிக் கொண்டே போக, “திவ்யா கண்ணுக்கு வடை வேணுமா?” என்றாள் புவனா.

“ம்கூம்” என்று அவள் மடியிலிருந்து இறங்கியவள், “அப்பா வடை வாங்கு” என்றாள்.

“பாரும்மா இதைத் தான் என்னாலே தாங்க முடியவில்லை” என்றள் புவனா மறுபடியும்.

“பொறு புவனா. குழந்தை இன்னும் உன்னில் ஒட்டவில்லை. அவளை நீ கொஞ்சம் கொஞ்சமாக உன் பக்கம் இழுக்க வேண்டும். அவள் தன்னுடைய அம்மாவிடம் என்னவெல்லாம் எதிர்பார்த்தாளோ அதையெல்லாம் நீயாக அவளுக்கு தர வேண்டும். அப்போது அந்தக் குழந்தை உன்னிடமே ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும். தகப்பனை தேடாது” என்றாள் அம்மா.

“ஏ வடை… நான்கு வடை கொடப்பா” என்று கூப்பிட்டான் சிவா.

பையிலிருந்து பணம் எடுத்து கொடுத்து விட்டு, “அம்மாவிற்கும் பாட்டிக்கும் வடை கொடு” என்றான் சிவா.

“எங்களுக்கு எதற்கு மாப்பிள்ளை வடை?” என்றாள் புவனாவின் அம்மா.

“பரவாயில்லை அத்தை சாப்பிடுங்கள்… திவ்யா அவர்களிடம் கொண்டு கொடும்மா” என்றான்.

“ம்கூம்… நான் தரமாத்தேன்” அடம்பிடித்தாள் திவ்யா.

“திவ்யா நீ எல்லாம் சாப்பிட மாட்டே, அம்மாவிற்கும் பாட்டிக்கும் வடை கொடு” என்று தலையில் தட்டினான் சிவா.

“வீணாக ஏன் அடிக்கிறீர்கள்” என்று புவனா திவ்யாவை தூக்க முயன்றாள். அவள் வர மறுத்து திரும்பவும் சிவாவின் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

புவனாவிற்கு என்னவோ போலிருந்தது. திரும்பவும் அந்தப் பக்கம் வந்த வடைகாரனிடம், “இன்னும் நாலு வடை கொடு தம்பி” என்று பணம் தந்தான் சிவா.

“நாங்க என்ன சின்ன பிள்ளைகளா, வடை சாப்பிடுவதற்கு?” என்று வாங்க மறுத்தாள் புவனாவின் அம்மா.

“பரவாயில்லை அத்தை சாப்பிடுங்கள்” என்று வடையை அத்தையிடம் கொடுத்து விட்டு திவ்யாவைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டான்.

“அப்பா பயமாயிருக்கு, ஏன் அடிச்சே?” என்றாள் திவ்யா.

“திவ்யா கன்னுகுட்டி, நீ எல்லாத்தையும் திங்கப் போறதில்லை. ஒழுங்கா அம்மாவுக்கும் பாட்டிக்கும் கொடுத்திருக்கலாமில்லே”

“நீ கேட்டா தர்றேன். அத்தாவுக்கும் பாட்டிக்கும் ஏன் தரணும்?” பிடிவாதம் பண்ணியது குழந்தை.

‘திவ்யாவிற்கு எப்படி புரிய வைக்கப் போகிறேன்’ அசதியோடு படுக்கையில் சாய்ந்தான் சிவா.

தொடரும் (புதன் தோறும்)  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நவம்பர் 2022 சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள்

    நவீன கண்ணகி (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.