நவம்பர் 2022 சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள்
வணக்கம்,
எழுத்து என்பதே ஒரு தேடல் தான், அந்த தேடலுக்கு முடிவே இல்லை என்பது தான் நிதர்சனம். எழுத்தை ஓயாத அலை என்றும் கூறுவதுண்டு, ஏனெனில் ஆடின காலும் பாடிய வாயும் போல எழுதின கையும் நிற்பதில்லை. எழுத்தாளனுக்கு ஓய்வும் இல்லை.
அதேப் போல் எழுத வயது வரம்பு இல்லை. அதற்கு நம் சஹானா இதழில் எழுதி வரும் எழுத்தாளர்களே ஒரு சான்று. பணி ஓய்வு பெற்ற எத்தனையோ வயது முதிர்ந்த எழுத்தாளர்கள், நிறைய கதைகளை நம் வாசகர்கள் விரும்பும் வண்ணம் சஹானா இதழில் எழுதி வருவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயம்.
அக்டோபர் 2022 மாத வெற்றியாளருக்கு வழங்கப்பட்ட பரிசு👇
நவம்பர் 2022 மாத சிறந்த படைப்பு போட்டியில் பங்கு பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள். வெற்றியாளர் விவரத்தை இந்த பதிவின் மூலம் பகிர்வதில் மகிழ்ச்சி.
போட்டியில் பங்கேற்ற படைப்புகளை வாசிக்க இணைப்பு – https://sahanamag.com/2022/11/
பரிசு என்ன என்பதை இந்த அறிவிப்புலேயே பகிர்வதை விட, வெற்றியாளருக்கு surprise ஆக பரிசை அனுப்புவது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறோம். ஆகையால், வாசகர்களுக்கு பரிசு விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். நன்றி
வெற்றி பெற்றவர் பற்றிய விவரங்கள் இதோ
எழுத்தாளர் உரை:
வைஷ்ணவி என்னும் வாசகியாக இருந்த நான் வெண்பா என்னும் எழுத்தாளராக மாறுவதற்கான காரணம் புத்தகங்கள் தான். நான் ஒரு மரபணு பொறியியலாளர். தமிழ் மீது எனக்கிருந்த ஆர்வமும், காதலும் என்னை ஒரு எழுத்தாளராக செதுக்கிக் கொண்டிருக்கிறது.
கவிதையில் தொடங்கிய என் எழுத்து பயணம் சிறுகதை, மொழிபெயர்ப்பு, content writing, புத்தக விமர்சனம் என்று நீண்டு கொண்டே போகிறது. என் எழுத்துக்கள் அனைத்தும் என் தந்தைக்கே சமர்ப்பணம். கவிதைகளுக்கு மட்டுமே பரிட்சையமான நான் 2020இல் இருந்து சிறுகதைகளும் எழுதத் தொடங்கினேன். என் தோழியின் வற்புறுத்தலின் பேரில் நான் எழுதிய முதல் சிறுகதை தான் அவளொரு பட்டாம்பூச்சி. அதுவரை எனக்கு சிறுகதை எழுத வரும் என்பதே எனக்கு தெரியாது. அவளொரு பட்டாம்பூச்சி எனக்கு இரண்டு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது, ஆச்சரியமாக இருந்தது.
பின்னாளில் அந்த சிறுகதையையே கொஞ்சம் விரிவாக எழுதி குறுநாவலாக வெளியிட்டேன். அது புத்தகமாகவும் வெளிவந்து, சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியிலும் இடம் பெற்றது. அப்போது என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இதுவரை 9 சிறுகதைகள் எழுதி விட்டேன். ஒவ்வொன்றிற்கும் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. இப்படி தான் என் எழுத்து பயணம் தொடர்ந்தது.
2020 ஜூலை 15, என் வாழ்வின் இன்னொரு முக்கியமான நாள். இந்தியாவிற்கான திறமையின் தேடல் (Talent Quest for India) – TQI என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் “ழகரம்” என்னும் குழுவைத் தொடங்கி, வழிநடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது. முழுக்க முழுக்க தமிழ் ஆர்வலர்களுக்காகத் தொடங்கப்பட்டது தான் இது குழு.
இதில் எழுத்தாளர்களின் திறமையை வெளிப்படுத்த “ழகரம்” மாத இதழ் இயங்கி வருகிறது. மேலும் மாணவர்களிடம் திருக்குறளை எளிமையான முறையில் கொண்டு சேர்க்க “கதை வழியில் திருக்குறள்” புத்தகமும் தயாராகி வருகிறது. இன்னும் பல முயற்சிகளை நானும் ழகரம் குழுவினரும் எடுத்து வருகிறோம். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய TQI க்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நல்ல சமுதாயத்திற்கான விதை மாணவர்களிடம் இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். அதனால் பத்து வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு தினமும் தமிழ் வகுப்பு எடுக்கிறேன். பாடப்புத்தகங்களில் இல்லாத பல அடிப்படை விடயங்களை அவர்களுக்கு நான் கற்றுக் கொடுக்கிறேன். புத்தக வாசிப்பை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளேன்.
தினமும் ஒரு நன்னெறி கதைகளை அவர்களுக்கு சொல்லி தருகிறேன். இதில் எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் வேறெதிலும் கிடைத்ததில்லை. இது போக அவ்வப்போது மொழிபெயர்ப்பு, content writing, புத்தக விமர்சனம் போன்றவைகளும் எழுதி வருகிறேன்.
– வெண்பா
போட்டியில் பங்கேற்ற படைப்புகளை வாசிக்க இணைப்பு – https://sahanamag.com/2022/11/
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்