in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 30) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இதுவரை:

கர்ப்ப காலத்தில் வரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறாள் கவியினியாள். இன்சுலின் ஊசி போட மறுக்கும் கவியினியாளை அடிக்க கை ஓங்குகிறான் ஆதி. இனி என்ன நடக்கப் போகிறது என்பதை காண்போம்.

இனி:

கோபம் வந்தால் ஆண்கள் ஏன் உணவில் காண்பிக்கிறார்கள். பெண்களுக்கும் கோபம் வரும் தான் ஆனால் இந்த அளவுக்கு கடுமையாக இருக்காதே.

ஆதி அவ்வளவு கோபத்தில் கத்திக் கொண்டே சாப்பாட்டு தட்டைத் தூக்கி தூர வீசி விட்டு கை ஓங்கினார். பின் எதுவும் பேசாமல் கைகளை இறக்கிக் கொண்டு அறைக்குள் சென்று விட்டார்.

முழுதாக ஒரு பணியாரம் கூட சாப்பிடவில்லை. நானும் சாப்பிடவில்லை. அதற்கு மேல் எனக்கும் சாப்பிட பிடிக்கவில்லை. ஆசை ஆசையாய் சாப்பிட அமர்ந்தேன். அழுகையோடு எல்லாவற்றையும் எடுத்து சமையல் அறையில் வைத்துவிட்டு ஹாலில் படுத்தேன்.

ஆதி இவ்வளவு கோவப்பட்டு இன்றுதான் பார்த்தேன். அடிக்கடி சின்னச் சின்ன சண்டை வரும். சாப்பிடாமல் எழுந்தது இன்றுதான் முதல்முறை.

என்ன சமைத்தாலும் உணவை குறை சொல்லவே மாட்டார். எப்படி சமைத்தாலும் சாப்பிடுவார்.

இன்று இவ்வளவு கோவப்பட்டு விட்டார். அப்படி என்ன நான் தவறாக பேசினேன். கர்ப்பமாக இருக்கும் என்னிடம் கோவப்பட அவருக்கு எப்படித்தான் மனசு வந்ததோ. ஒருவேளை கர்ப்பமாக இல்லையென்றால் அடித்தே இருப்பாரோ!

இல்லை ஆதி அப்படிச் செய்ய மாட்டார். இன்று நானும் அவரை அவ்வளவு கோவப்படுத்தி விட்டேனோ. அல்லது குழந்தை மேல் உள்ள பாசத்தால் இந்த கோவமா!

என்னதான் என் மனம் ஆறுதல் கூறினாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

தலையணை எடுக்கக் கூட அறைக்குச் செல்லவில்லை. வெறும் தரையில் படுத்தேன். கீழே படுத்து உறங்குவது எனக்கு இஷ்டம்தான், ஆனால் தலையணை இல்லாமல் படுக்கத்தான் சிரமமாக இருந்தது.

ஆதி என்னை வந்து பார்த்து என்னிடம் பேசி சமாதானம் செய்வார் என்று எதிர்பார்த்தேன். வெகுநேரம் ஆகியும் அவர் வரவேயில்லை. தலையணை கூடத் தரவில்லை.

எப்படித் தூக்கம் வரும். மனதும் சரியில்லை. சாப்பிடவும் இல்லை. திறன்பேசியை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதெப்படி உள்ளே ஆதி நிம்மதியாக இருக்கிறார். நான் சாப்பிடவில்லையே என்கிற உணர்வு அவருக்கு இல்லையா. இப்பொழுது பாசமெல்லாம் எங்கே போயிற்று.

எல்லா நேரமும் என்னைத் தாங்கிக் கொண்டேவா இருப்பார். அவருக்கும் கோபம் வரும் தானே. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதற்காக அவருடைய எல்லா உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமா வந்த கோபத்தை காட்டத் தானே தீர வேண்டும்.

என் மாமியார் மாமனாரோ அம்மா அப்பாவோ இருந்திருந்தால் இப்படி என்னை வெறும் தரையில் படுக்க வீட்டிருப்பார்களா. அவர் தான் கத்தியிருப்பாரா. இப்பொழுது கேட்க ஆள் இல்லையென்று சண்டை போடுகிறாரா.

இத்தனை யோசனைகளுக்கு நடுவே ஆதி என்ன செய்கிறார் என்று எட்டிப் பார்த்தேன். உறங்கிக் கொண்டிருந்தார். எப்படித்தான் நிம்மதியாக உறங்குகிறாரோ.

உள்ளே சென்று தலையணை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து படுத்தேன். தூக்கம் சுத்தமாக இல்லை. மதியம் வேறு தூங்கிவிட்டேன்.

இரவில் திரைப்படம் பார்க்க பெரும்பாலும் விரும்ப மாட்டேன். வெகுநேரம் தொலைபேசியைப் பார்த்து விட்டு தூங்கினால் அடுத்த நாள் கண்கள் எரிச்சலாக இருக்கும். இன்று வேறு வழியில்லை. புத்தகம் படிக்கும் அளவிற்கு மனம் அமைதியாக இல்லை. அதனால் திரைப்படம் பார்க்க முடிவெடுத்தேன்.

விசு அவர்களின் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி பரிந்துரை வீடியோவாக வந்தது. விசு அவர்களின் திரைப்படங்கள் எனக்குப் பிடிக்கும். 80களில் இருந்த நடுத்தர குடும்பங்களின் நிலையை எடுத்துரைக்கும் படங்களாக இருக்கும்.

2020களில் இருந்து கொண்டு 1980களில் நிகழ்ந்த வாழ்க்கை அனுபவங்களை தெரிந்து கொள்ளலாம்.

‘டௌரி கல்யாணம்’ திரைப்படம் பார்த்தேன். சில காட்சிகளில் கஷ்டத்தை கூட காமெடியாக கூறியிருந்தார். என் பார்வையில் நல்ல திரைப்படம். அதை பார்த்துக் கொண்டிருந்ததில் எங்களுக்கு நடந்த சண்டை மறந்து உறங்கினேன்.

அடுத்த நாள் எழுந்து பார்க்கும் பொழுது மணி ஒன்பது. நடுவில் ஒருமுறை எழுந்து கழிவறைக்குச் சென்று வந்தேன். அப்பொழுது நேரம் பார்க்கவில்லை.

லேசாக தலைபாரம் இருந்தது. வெகு நேரம் விழித்து இருந்து திரைப்படம் பார்த்தால் ஏற்பட்டு இருக்கலாம்.

ஞாயிற்றுகிழமை தானே ஓய்வெடுத்தால் சரியாகிவிடும்.

ஆதி என்ன செய்கிறார் என்று அறைக்குள் எட்டிப் பார்த்தேன். துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். அவரும் நான் எழுவதற்கு சிறிது நேரம் முன்பு எழுந்தது போல் தான் இருந்தார்.

நான் எழுந்து சென்று தயாரானேன். முகம் கழுவிக் கொண்டு வந்தேன்.

குடிக்க என்ன செய்வது. தேநீரோ வேறெதாவது கஞ்சோ செய்ய வேண்டுமா என்ன நேரம் பத்தை நெருங்குகிறது. காலை உணவே செய்து விட முடிவெடுத்தேன்.

நேற்று நடந்த சண்டையில் பாதாம் கூட ஊற வைக்கவில்லை. கர்ப்ப காலத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தேன்.

சமைக்க என்ன இருக்கிறது என்று பார்த்தேன். இரண்டு பெரிய வெங்காயம் இருந்தது. தேங்காய் இருக்கிறதா பார்த்தேன். ஒன்று இருந்தது.

உப்புமாவும் தேங்காய் சட்னியும் செய்ய திட்டமிட்டேன். எனக்கு உப்புமா பிடிக்கும். என் அம்மா செய்யும் குழைந்த உப்புமாவை தேங்காய் சட்னியுடன் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.

ஆதி ஆரம்பத்தில் பிடிக்காது என்றார். பின் நான் அவசர நேரத்தில் செய்தால் சாப்பிடுவார். என் உப்புமா எப்படி இருக்கிறது என்று அவரிடம் நான் கேட்டதே இல்லை. கேட்க வேண்டும் இன்னொரு நாள்.

பாத்திரங்கள் விளக்காமல் இருந்தது. வெறும் வயிற்றில் விளக்கச் சென்றால் அவ்வளவு தான். இருந்த பாத்திரத்தை வைத்து சமைத்தேன். அரைமணி நேரத்தில் சமைத்து முடித்தேன்.

சுடச்சுட உப்புமாவை எடுத்து வந்து ஹாலில் வைத்தேன். கீழே அமர்ந்து தான் சாப்பிடுவோம். 

இரண்டு பேர் தட்டையும் கழுவிக் கொண்டு வந்தேன். ஆதி என்ன செய்கிறார் என்று பார்த்தேன். இன்னும் அறையிலேதான் இருந்தார். நான் என்ன செய்கிறேன் என்று கூட பார்க்கவில்லை.

மீண்டும் மனதிற்குள் துக்கம் பரவியது. நானாக போய் பேசவும் பிடிக்கவில்லை. எதற்காக சண்டை போட்டோம் என்பது நீர்த்து போய் ஏன் இன்னும் அவர் என்னிடம் வந்து பேசவில்லை என்பதில் கோபம் அதிகரித்தது.

அவர் தானே கை ஓங்கினார். அவர் தானே வந்து பேச வேண்டும். அப்படி என்ன நான் செய்தேன்.

கையில் இருந்த தட்டை இப்பொழுது கோவமாக கீழே போட்டுவிட்டு கத்தி அழுதேன். சத்தம் கேட்டு வெளியே வந்தார் ஆதி.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பிரச்சினை(கற்)கள் (சிறுகதை) – செந்தில் செழியன்

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 31) – ரேவதி பாலாஜி