in ,

பழைய சோறும் பாஸ்ட் புட்டும் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கண்ணாடி எதிரில் நின்று தன்னையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சல்மா. யாரிந்த சல்மா என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்?

இப்போது எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில், வெள்ளித்திறையின் தலைசிறந்த கதாநாயகிகளில் ஒருத்தி. ஐந்தடி ஆறு அங்குலம் உயரம். மெல்லிய பூங்கொடி போன்ற உருவம். சாண்டில்யனின் மஞ்சளழகி போன்ற அழகு. சந்தனமும், பாலும் கலந்தாற் போல் இயற்கையிலேயே அமைந்த ஒரு நிறம்.

லிப்ஸ்டிக் போடாமலே சிவந்த உதடுகள். மழை மேகம் போல் அங்கங்கே சுருண்டு நீண்ட அடர்ந்த  கருங்கூந்தல். இவ்வளவு அழகும் எப்படி வந்தது? சின்னஞ்சிறு வயதில் அம்மா கொடுத்த பழைய சாதத்தாலா?  அல்லது இப்போது சாப்பிடும் நளினமான பாஸ்ட் புட்டாலா?

பழைய சாதம் என்றவுடன் அவள் நினைவிற்கு வந்தது அவளுடைய சொந்த கிராமம்தான். அப்போது அவள் பெயர் கோகிலா. சினிமாவிற்கு வந்த பிறகுதான் அவளுடைய பழைய பெயர் பட்டிக்காட்டுத் தனமாக இருக்கிறது என்று படமுதலாளிகள் அழகான அவள் பெயரை அர்த்தமே தெரியாத சல்மா என்று மாற்றி விட்டார்கள்.

எவ்வளவு அழகான ஊர் அந்த பூஞ்சோலை கிராமம். சொர்க்கம் என்றால் சொந்த ஊர்தான். இவள் வீடு மண் குடிசைதான். காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து ஓடும் ஒரு சிற்றாறு. அதன் கரையில்தான் வரிசையாக பல குடிசைகள். எல்லோரும் உறவினர்கள் போலவே ‘அத்தை, மாமா’ என்று ஏதாவது ஒரு உறவுமுறை சொல்லி சொந்தம் கொண்டாடிக் கொள்வார்கள்.

பகல் நேரத்தில் அந்த ஊரில் உள்ள நான்கு பரம்பரை பணக்காரப் பண்ணையார்கள் வீட்டில் வேலை செய்வார்கள். அந்தப் பண்ணையார் வீடுகள், அந்த ஆற்றின் அக்கரையில் அமைந்துள்ளன. அவை வீடுகள் இல்லை, எல்லாம் மாளிகைகள். யாரும் நெருங்க முடியாத பலத்த காவலுடன் கூடிய பங்களாக்கள்.

அந்த வீட்டின் அருகில் கூட தேவையில்லாமல் யாரும் நடமாடக் கூடாது.  வெளியில் இருந்து பார்த்தால் பல வண்ணங்களில் தெரியும் ரோஜா மலர்கள். பலவித அழகிய குரோட்டன்ஸ்கள். வெளியே தலையை நீட்டி வந்தாரை வரவேற்கும் போகன் வில்லா மரங்கள்.

கோகிலாவிற்கு அவள் வீடும் எதிரில் ஓடும் சிற்றாறும் மட்டும் போதும். காலையில் எழுந்தவுடன் செங்கல் பொடியில் பல் தேய்ப்பதிலிருந்து, குளிப்பது வரை எல்லாம் அந்த சிற்றாறில் தான்.

குடிசையின் அருகில் முளைத்திருக்கும் குப்பைக் கீரையைப் பறித்து குழம்பு வைத்து விடுவாள். அவளுடைய அம்மா பண்ணையார் வீட்டில் வேலை முடித்து வரும் போது கொண்டு வரும் பழைய சாதம்தான் தினமும்.

ஆனால் அந்த பழைய சாதம் அவ்வளவு மணமாக இருக்கும். ருசியாக இருக்கும். வெறும் பச்சைத் தண்ணீர் ஊற்றி, இரண்டு கல் உப்பு போட்டு, ரெண்டு சின்ன வெங்காயமும் போட்டு அத்துடன் கோகிலா செய்த கீரைக் குழம்பும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்.

அவளுடைய முறைமாமன் முனிசாமி சாப்பாட்டு நேரத்தில் வீட்டிற்கு வந்தால் பழைய சோறு, கீரைக் குழம்பு எல்லாம் காலியாகி விடும். அந்தப் பழைய சோற்றின் ருசி இப்போது, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து ஆர்டர் செய்து வாங்கித் தரும் பாஸ்ட்புட்-ல் இல்லையே.

அந்தப் பழைய சோற்றையும், கீரைக் குழம்பும் சாப்பிட்டு ஆற்றின் மணல் மேல் படுத்தாலே கண்கள் தன்னால் மூடி தூக்கம் எங்கோ தூக்கிக் கொண்டு போய் விடும்.

ஆனால் இந்தப் பாஸ்ட்-புட்டை சாப்பிட்டால் இரவு முழுவதும் ஜீரணமாகாமல், விதவிதமாக வயிறு சவுண்ட் எழுப்ப, சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல், சோடாவைத் தேடவேண்டும்.

முனிசாமியை நினைத்தால் இப்போது கூட மனம் ஏங்குகின்றது. அவ்வளவு நல்லவன். பொய் பேசவோ, மாற்றிப் பேசவோ தெரியாதவன். இப்போது அவளுடன் நடிக்கும் உச்சத்தில் இருக்கும் தலைசிறந்த கதாநாயகர்கள், சிறந்த நடிகர்களே… நடிகர்கள் தான். மனிதர்களா என்றால் சந்தேகமே!

எப்போதும் நூடுல்ஸ், பாஸ்தா, பீசா என்று சைனீஸ் மற்றும் பாஸ்ட்புட்டே கதி என்று இருப்பவர்கள். எல்லாமே பாஸ்ட்தான் அவர்களுக்கு. சாப்பாடும் பாஸ்ட் தான். அவர்கள் திருமண வாழ்க்கையும் பாஸ்ட்தான். காதலும் கல்யாணமும் மட்டும் பாஸ்ட் இல்லை. டைவர்ஸும் அதே ஸ்பீட்தான்.

இவர்களோடு பழகிய பிறகுதான் முனிசாமியைப் புரிந்து கொள்ள முடிகிறது. வெயிலுக்குப் போனால் தானே நிழலின் அருமை புரிகின்றது.

ஒரு நாள் இவளுக்கு ரொம்ப போர் அடித்தது. எப்போது பார்த்தாலும் பழைய சோறும், கீரைக்குழம்பும் தானா என்று ஏனோ அன்று மனம் வெறுத்துப் போனது. நாக்கு நல்ல ருசியான சாப்பாட்டிற்கு ஏங்கியது.

ஆனால் யாரிடம் சொல்வது? அம்மா அப்பாவிடம் சொன்னால் அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள்? இவளுக்காகப் பரிதாபப் படுவார்கள்! வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் அவர்களால் பரிதாபப் படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

முனிசாமியிடம், கோகிலா தன் உள்ளத்து ஆசைகளைத் தெரியப்படுத்தினாள். உடனே அவன் எதிரில் ஓடும் சிற்றாறில், கையில் ஒரு பெரிய சுருக்கு பையுடன் குதித்தான், அவன் பையைத் திறந்து வைத்துக் கொண்டு நீந்தி கொஞ்சம் தூரம்தான் சென்றான். பிளாஸ்டிக் பைகள் ஆனதால் உள்ளேயிருப்பது வெளியே நன்றாகத் தெரியும்.

இத்தனை நாள் கோகிலாவிற்கு அந்த சிற்றாறில் சாப்பிடத் தகுந்த நல்ல மீன்கள் இருப்பது தெரியாது. தண்ணீர் பாம்புகள்தான் பார்த்திருக்கிறாள். திரும்ப நீந்தி கொண்டு வந்து அவன் தரையில் ஏறும் போது ஒரு சாண் நீளத்தில் நல்ல கெளுத்தி மீன்கள் பை நிறைய இருந்தன.

“ஏ புள்ளே கோகிலா, இந்த மீன்கள் வைத்து நல்ல காரசாரமாக ஒரு குழம்பு வை. உன் அம்மா கொண்டு வரும் பழைய நைந்து போன சோறு இன்று வேண்டாம். நான் போய் வீட்டில் இருந்து ரேஷன் அரிசி எடுத்து வருகிறேன். அதில் சுடச்சுட சோறு பொங்கி வை” என்று கூறி விட்டு அவன் வீட்டில் போய் அரிசி கொண்டு வந்தான்.

இரண்டு வீட்டிற்கும் சேர்ந்துதான் அன்று சமையல் செய்தாள்.

‘அந்த சோறும், மீன்குழம்பும் இப்போது நினைத்தாலும் வாயில் எச்சில் ஊறுகிறது. ஆனால் இந்த பாஸ்ட்-புட் நினைத்தால் ஒரு நாளும் வாயில் எச்சில் ஊறுவதில்லையே! அது ஏன்?’ என்று சல்மா யோசனை செய்தாள். 

இப்போது யோசிப்பது போல் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஓடி வரும் போது யோசித்து இருந்தால் இந்த தனிமையும், வேதனையும் இருக்காது.

அப்போதுதான் அந்த ஊரின் இயற்கை அழகில் மயங்கி சினிமா படம் எடுக்கக் கூட்டமாக ஆட்கள் ஒரு வேனில் வந்து இறங்கினர். அதில் இருந்த சில வாலிபர்கள் மிக அழகாக இருந்தனர்.

அவர்கள் அணிந்திருந்த ஜீன்ஸும் டீ ஷர்ட்டும் அவர்கள் அழகுக்கு அழகு சேர்த்தது. அவர்கள் போட்டுக் கொண்டிருந்த பெர்புயூம் வாசனை எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டது.

மனம் அவளையும் அறியாமல் முனிசாமியை அவர்களோடு ஒப்பிட்டது. நைந்து போன பழைய சோறாக முனிசாமி தெரிந்தான். பார்க்கவே கவர்ச்சியான பாஸ்ட்புட்-ஆக சினிமாக்கார வாலிபர்கள் தெரிந்தனர்.

அந்தப் படத்தில் கதாநாயகி ஒரு பாடலுக்கு பலமுறை நடனமாடியும், அந்த தொப்பிக்கார இயக்குனருக்கு திருப்தி ஆகவில்லை.

அந்த பாடலின் ராகத்தில் கோகிலா மயங்கி தன்னையறியாமல் எழுந்து ஆடினாள். இவள் ஆடும் போதே காமிராக்கள் படம் பிடித்தன. இயக்குனருக்கு இவள் நடனம் மிகவும் பிடித்துப் போய் ஷூட்டிங்கிற்கு ஏற்றார் போல் பளபளப்பான உடைகள் தந்து, இவள் நடனத்தையும் படத்தில் சேர்த்து கொண்டனர், அதற்கு பணமும் அந்த இடத்திலேயே கொடுத்து விட்டனர்.

அந்தப் பணத்தைப் வாங்கிய அவள் பெற்றோர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் முனிசாமி மட்டும் ‘மொணமொண’வென்று திட்டிக் கொண்டு இருந்தான். கோகிலாவிற்கு அப்போது அவன் மேல் கோபம்தான் வந்தது.

சினிமாக்காரர்கள் கற்பனையை கண்ணெதிரே விரித்தார்கள். சினி உலகமே தனி என்றார்கள். இவளும் அவர்களோடு சென்னை வந்தால், சினிமாவில் சேர்ந்து கோடி கோடியாம் பணம், விலையுயர்ந்த கார், அவர்கள் ஊர் பண்ணையாரின் பங்களாக்கள் எல்லாம் வாங்க முடியும் என்று வாக்களித்தனர்.

அவர்கள் பேச்சில் மயங்கி யாரிடமும் சொல்லாமல் அவர்களோடு வண்டியேறிவிட்டாள். சென்னைக்குப் போய் பணம் சேர்த்தவுடன் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தாள். ஆனால் அது தள்ளிப் போய் விட்டது.

அந்த சினிமா கதாநாயகர்கள் சிலர் அவளிடம் அதிக அன்பு காட்டியவர்கள். ஆனால் அவர்கள் அன்பு இவளுடைய வீடு, பேங்க் பேலன்ஸ் இவற்றின் மேல்தான் என்று புரிந்து கொள்ள சில மாதங்கள் ஆகியது.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு முனிசாமியைக் கல்யாணம் செய்து கொண்டு தன் சொந்த ஊரில் வாழ இப்போதெல்லாம் அவள் மனம் விரும்புகிறதே.

ஆனால் புலி வாலைப் பிடித்தாற்போல் தான் கோகிலா நிலைமை. அட்வான்ஸ் தொகை வாங்கிய படங்களை வேகமாக முடித்தாள். பிரஸ் மீட்டிங் வைத்து தன் முடிவை ஊருக்கே தெரியப்படுத்தினாள்.

ஆனால் யாரும் அவளைப் பற்றிக் கவலைப்படவில்லை. காதலி போனாலே ‘தாவணி போனால் சல்வார், ஒரு பஸ் போனால் இன்னொன்று’ என்று சுலபமாக மாறிவிடும் சினிமா வாழ்க்கை.

கோகிலா, தன் கிராமத்திற்கு வந்து பெற்றோரிடம் கையில் இருந்த பணத்தை கொடுத்தாள். அவர்களும் கொஞ்சம் திட்டி விட்டு இவளை ஏற்றுக் கொண்டார்கள்.

“மாமா நீ என்னை திருமணம் செய்து கொள். ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு குடிசை போட்டுக்கொண்டு அமைதியாக வாழ ஆசை மாமா” என்றாள் முனிசாமியிடம் கெஞ்சுதலாக.

“நீ எங்கள் கோகிலாவா இல்லை சல்மாவா? கோகிலாவாக இருந்தால் நாளையே டும்டும்தான்” முனிசாமி.

“நான் எப்போதுமே உங்கள் கோகிலா தான். எனக்கு பழைய சாதமே போதும். பாஸ்ட்-புட் வேண்டாம் மாமா” என்றாள் மனநிறைவோடு.

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 6) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை