in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

நீ எனதின்னுயிர் ❤ (பகுதி 1)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ன் எதிரே கொண்டு வந்து வைத்த இன்ஸ்பெக்‌ஷன் ரிப்போர்ட்டையும், பைல்களையும், ரெஜிஸ்டர்களையும் பார்த்து எதிரே நின்றவளையும் பார்த்தான் சபரீஷ். அமைதியாக நின்றிருந்தாள் கிருத்திகா.   

“இதெல்லாம் என்ன?” என்றான் சபரீஷ் என்னும் சபரீஷ்வரன் அதிகாரமாய்.

“ஒரு பக்கம் மிஸ்டர் இளங்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு கிளை அலுவலகங்களின் கணக்குகளும் என்னுடைய இன்ஸ்பெக்‌ஷன் ரிப்போர்ட்டும், எதிர்புறத்தில் இருப்பது  கருத்திருமன் சாரின் கண்காணிப்பில் உள்ள நான்கு கிளை  அலுவலகங்களின் கணக்குகளும் என் இன்ஸ்பெக்‌ஷன்  ரிப்போர்ட்டுகளும்” என்றாள் கிருத்திகா.

“சரி, நீங்கள் போகலாம்” என்றான் சபரீஷ். 

அவள் போகும் போது அவன் கண்கள் தன்னை அறியாமலே அவளைத் தொடர்ந்தன. பளிங்கு போல் வெள்ளை வெளேரென்று  பின்னால் தெரிந்த கழுத்து, அடர்ந்து நீண்டு சுருண்ட கருங்கூந்தல். அதை இரட்டைப் பின்னலாகப் பின்னியிருந்தாள்.

சாதாரணச் சுடிதரிலும், பிளாட்பார்மில் விற்கும் இரட்டைச்சர முத்துமாலையிலும்  தேவதை போல் இருந்தாள். நல்ல உயரம், அதே நேரத்தில் கொடி போல் துவளும் உடல்.

அவனிடம் சுமார் நாற்பது பெண்கள் வேலை செய்கிறார்கள், ஆனால் இவளிடம் மட்டும் தன் மனம் தேவையில்லாமல் நிலைப்பது ஏன் என்பது அவனுக்கே புரியாத விஷயம். ஆறு மாதங்களுக்கு முன்பு முதன் முதலில் அவள் இன்டர்வியூவிற்கு வந்ததை நினைத்துக் கொண்டான்

ஆடிட்  செக்‌ஷன் மேனேஜருக்கான நேர்முகத் தேர்வு. ஒரே ஒரு வேலைக்கு சுமார் ஐநூறு பேர் விண்ணப்பத்திருந்தனர். அப்ளிகேஷன் நிலையிலேயே முன்னூறு பேரை நிராகரித்து விட்டனர் சபரீஷும், கருத்திருமனும்.

கருத்திருமன் அறுபது வயதான பெரியவர். அவன் தந்தையின் காலத்திலிருந்தே அவர்கள் கம்பெனியில்  உழைப்பவர். ஒரு தலைமை அலுவலகமும், ஒரே ஒரு கிளை அலுவலகமாக இருந்த அவர்கள் கம்பெனி, இன்று எட்டு கிளை அலுவலகமாக உயர்ந்திருப்பதற்கு அவரும் ஒரு காரணம்.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பு பிறந்திருக்க வேண்டியவர் அவர் என்று நினைத்துக் கொள்வான் சபரீஷ். தன் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைத் தவிர வேறெதையும்  எதிர்ப்பார்க்காதவர். 

அவனுடைய சிறு வயதில், பள்ளிக்குப் போகும்போது  அவர்தான் அவனைப் பள்ளிக்கு  அழைத்துச் செல்ல வேண்டும் என்று அடம் பிடிப்பான். அவர் தோளில் சவாரி செய்யப் பிடிக்கும். 

அவனுக்குப்  பத்து வயது நிறைந்திருக்கும் போது தன் தாயை இழந்தான். அப்போது வீட்டில் அப்பா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி எல்லோரும் இருந்தாலும், அவன் கருத்திருமன் மார்பில் தான் தன் முகம் புதைத்து அழுதான். அவர் தோளில் தான் அவன் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டான்.

சபரீஷ் அவரில் மட்டுமே தன் தந்தைக்கு அடுத்தபடியாக நம்பிக்கை வைத்திருந்தான். சபரீஷன் அம்மா மாலதி இருக்கும் வரை  அவன் சித்தப்பா, அவர் குடும்பம், பெரியப்பா, அவர் குடும்பம் என யாரும் அவ்வளவாக அவர்கள் வீட்டிற்கு வருவதில்லை.

அவன் தந்தைக்கும் அவர்களைப் பற்றி ஒன்றும் நல்ல அபிப்பிராயம் இல்லை. அவன் தந்தை இறந்த பிறகு இவர்கள் எல்லோரும் இங்கேயே ‘டேரா’ அடித்து விட்டனர். சபரீஷ்வரனும், அவர்களுக்கு ஒன்றும் மறுப்ப தெரிவிக்கவில்லை.  ஆனாலும்  அவனுக்கு எல்லாவற்றிற்கும் கருத்திருமன் தான் ‘காட்பாதர்’

அதே போல் தான் இன்டர்வியூவிற்கும் அவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தான். அப்படி இருவருமாகத் தேர்ந்தெடுத்த இருநூறு மனுக்களில் கிருத்திகாவின் மனுவும் ஒன்று.

அவள் மனுவைப் படித்த கருத்திருமன், வியப்புடன் தன் புருவங்களை உயர்த்தினார். அந்த மனுவை சபரீஷிடம் கொடுத்தார்.

மனுவில் விண்ணப்பதாரர் பெயர் ‘ஓ.கிருத்திகா’ என்று எழுதப்பட்டிருந்தது. மற்ற இடமெல்லாம் பூர்த்தி செய்யப்படாமல் காலியாக இருந்தது. அப்பாவின் பெயர், தொழில், ஜாதி, மதம் எல்லாம் ஒரு சிறிய கோட்டினால் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.

“நிறைய கட்டங்கள் ஏன்  நிரப்பப்படவில்லை?” என்று கேட்டான் சபரீஷ் அவளிடம் எரிச்சலுடன்

“தெரிந்தவரையில் எல்லாக் கட்டங்களும் பூர்த்தி செய்திருக்கிறேன்” என்றாள் கிருத்திகா.

“பிறந்த ஊர், அப்பாவின் பெயர், தொழில், ஜாதி, மதம் எதுவுமே  தெரியாதா?”

“தெரியாது, அம்மாவே தெரியாது. அம்மாவைத் தெரிந்தால் தானே மற்ற விவரங்கள் தெரியும்”

“அப்படியானால் ‘ஓ.கிருத்திகா’ என்று இனிஷயலோடு பெயர் எழுதியிருக்கிறீர்களே” என்றான் சபரீஷ்வர் ஆச்சர்யத்துடன்.

கிருத்திகா லேசாகச் சிரித்தாள்.

“ஓ ஸ்டேண்ட்ஸ் பார் ஆர்பன்… அனாதை. இனிஷியல் இல்லாமல் பெயர் இருக்கக் கூடாதல்லவா?”

சபரீஷ் டக்கென்று தன் கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தான்.

“எப்படி வளர்ந்தீர்கள்?”  என்றான் ஆச்சர்யத்துடன்.

“அனாதைகள் எல்லாம் முட்கள் நிறைந்த கள்ளிச்செடி மாதிரி. யாரும் அவர்களைப் போற்றி வளர்க்க வேண்டாம், நாங்களே வளர்ந்து விடுவோம். யாரோ சிலர் கோயில் வாசலில் கண்டெடுத்து அருகில் உள்ள  அனாதை ஆஸ்ரமத்தில் சேர்த்திருக்கிறார்கள். முருகன் கோயிலில் கண்டெடுத்ததால், பாதர் கிருத்திகா என்று பெயர் வைத்திருக்கிறார். சார், ஒரு சந்தேகம்” என்றாள்.

“என்ன?”

“அனாதை என்றால் வேலை தர மாட்டீர்களா? என் கல்வித் தகுதியைப்  பார்த்துத் தானே வேலை?”  என்றாள் கிருத்திகா சந்தேகத்துடன்.

“கட்டாயம். உங்கள் கல்வித் தகுதிக்கும், திறமைக்கும், மற்றும் உங்களுடைய மற்றத் தகுதிகளுக்காக மட்டும்  தான் வேலை தரப்படும். உங்களுக்கு ஆசிரமத்தில் வளர்ந்ததற்காக ஏதாவது மனக் கஷ்டமா?” என்றான் சபரீஷ் கரகரத்த குரலில்.

அவன் குரலில் தெரிந்த மாற்றத்தால் அவனை ஏறிட்டுப் பார்த்தாள் கிருத்திகா.

“இந்த தண்டனை மகாபாரதம் காலத்தில்  கர்ணன் முதல் நடைபெற்று வருகிறது. தவறு செய்பவர்கள் தண்டனையை ஏற்பதில்லை. மாதாபிதா செய்த பாவம் மக்களுக்கு. அதற்கு நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்? பெற்றோர்கள் வளர்ப்பதை விட எங்கள் பாதர் எங்களை நல்லமுறையில் வளர்த்திருக்கிறார்”

கலந்து ஆலோசித்து கிருத்திகாவிற்கு வேலைக்கான நியமனஆணை அனுப்பினான் சபரீஷ். ஆனால் சபரீஷின் உறவினனான இளங்கோவிற்கு மட்டும் ஏனோ கிருத்திகாவைப் பிடிக்கவில்லை.

“கர்வி, திமிர் பிடித்தவள்” என்று எரிச்சலோடு கூறுவான். “அனாதை, அம்மா, அப்பாவிடம் வளர்ந்திருந்தால் யாரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பது தெரிந்திருக்கும்” என்று கோபத்தில் கத்துவான். ஆனால் அவனுக்கு கருத்திருமனையும் பிடிப்பதில்லை.

இளங்கோ சபரீஷின் பெரியம்மாவின் ‌ஒன்று விட்ட சகோதரன் மகன். அவன் பெரியப்பாவிற்கு தன் ஒரே செல்ல மகள் ஷீலாவை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசை. ஷீலாவிற்கும் அவனை மிகவும் பிடிக்கும்.

பார்க்க ஆளும் நன்றாக இருப்பான். நல்ல சிவந்த நிறம் .ஆறடிக்கு மேல் உயரம். கண்களும், வாயும், மூக்கும் எழுதி வைத்தாற் போல் இருக்கும். எம்.பி.ஏ. பட்டதாரி. வாய்ப் பேச்சில் வல்லவன். பேசியே மற்றவர்களைக் கவிழ்த்து விடுவான், முட்டாளாக்கி விடுவான். உழைக்காமலே உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.

கருத்திருமனுக்கும் அவனைக் கண்டால் அவ்வளவு பிடிக்காது. வெளியில் ஏதும் சொல்ல மாட்டார். சபரீஷ், தன் பெரியப்பாவின் வேண்டுதலுக்காக அவனை ஒரு மேனேஜராக்கி அவன் நிர்வாகத்தில் நான்கு கம்பெனிகள் இருக்குமாறு செய்தான்.

சபரீஷினால் எல்லாக் கம்பெனிகளையும் நேரடியாகக் கவனிக்க முடியாததால்  கருத்திருமனை அனுப்பி முதலில் கணக்குகளை சரி பார்க்க சொன்னான். ஆனால் அது சரிப்படவில்லை.

இளங்கோவிற்கும், கருத்திருமனுக்கும்  எட்டாம் பொருத்தம் என்பதைப் புரிந்து கொண்டு தான்  ‘ஆடிட்விங்’கிலிருந்து கிருத்திகாவையும், அவளுடன் இரண்டு உதவி ஆடிட்டர்களையும் அனுப்பினான். இளங்கோவின் கம்பெனிகள் மட்டும் அல்லாது, கருத்திருமன் கீழ் இருந்த நான்கு கம்பெனிகளின் ஆடிட் ரிப்போர்ட்டும் கொண்டு வரச் சொன்னான்.

கிருத்திகா, இப்போது எல்லாக் கணக்குகளையும் அவன் மேஜைமேல் வைத்து விட்டு, அவளுடைய கன்க்ளூஷன் ரிப்போர்ட்டும் அத்துடன் வைத்து விட்டு போயிருக்கிறாள்.

முதலில் கருத்திருமன் கண்காணிப்பிலிருந்த நான்கு கம்பெனிகளின் வரவு செலவு ரிப்போர்ட்டையும், அதற்கு ஆதாரமாக ரெஜிஸ்டரில் flag A, B, என்று குறிப்பிட்டு  வைக்கப்பட்டுள்ள பக்கங்களையும் பார்த்து திருப்தியடைந்தான்.

எப்போதுமே கருத்திருமனின் கணக்கு வழக்குகள் சரியாகவே இருக்கும். நான்கு கம்பெனிகளிலும் வரும் வரவு, செலவு சரியாகக் காட்டப்பட்டிருந்தது. வருமான வரித்துறைக்கும்  சரியான விவரங்கள் அனுப்பப்பட்டு வருமான வரியும் செலுத்தப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் பார்த்த சபரீஷ் திருப்தி அடைந்தான்.

ஆனால் இளங்கோவின் கணக்குகளைப் பார்த்த சபரீஷிற்குத் தலை சுற்றியது. எல்லாவற்றிற்கும் இரண்டு கணக்குகள் வைத்திருந்தான். அவனுடைய ஒரு கணக்குப்படி லாபம் வந்திருந்தது. ஒரு கணக்குப்படி நஷ்டம் காட்டப்பட்டிருந்தது. எது சரி, எது தவறு என்று  சபரீஷற்குப் புரியவில்லை. அவனுக்குத் தெரிந்தவரை எல்லாக் கம்பெனிகளுமே நல்ல லாபத்தில் தான் இயங்கிக் கொண்டிருந்தது. 

அப்படியிருக்க இளங்கோ வருமான வரித்துறைக்கு ஏன் நஷ்டக் கணக்குக் காட்டியிருக்கிறான் என்று சபரீஷற்குப் புரியவில்லை. கிருத்திகாவின் ‘பைனல் ரிப்போர்ட்’ படித்தால் புரியும் என்று நினைத்தான். இன்னும் தலை சுற்றியது.

வரும் லாபம் கையாடப்பட்டு, நஷ்டக்கணக்குக் காட்டி வருமானத்துறையையும், கம்பெனியையும் ஏமாற்றியிருக்கிறார் என்று விவரித்திருந்தாள்.

இன்டர்காம் மூலம் கிருத்திகாவை தன் அறைக்கு வரவழைத்தான். அவளுடய இன்ஸ்பெக்‌ஷன் ரிப்போர்ட்டிற்கு விளக்கம் கேட்டான்.

“இளங்கோ, வருமானவரித்துறையையும் கம்பெனியையும் ஏமாற்றவே இரண்டு கணக்குகள் வைத்திருக்கிறார் என்றும், வருமானத் துறைக்கும் நஷ்டக்கணக்கே காட்டி இருக்கிறார்” என்றும் கிருத்திகா  உறுதியாகத் தெரிவித்தாள்.

இளங்கோ தன் சௌகர்யபடி கணக்கெழுத தனி ஆடிட்டர்களை   வைத்திருக்கிறார். அவர்களுக்குக் கொடுத்த பணத்திற்கான ‘கேஷ் ரசீதும்’ காட்டினாள். ரூபாய் இருபதாயிரம் இரண்டு முறை கட்டணமாக்க் கொடுக்கப்பட்டிருந்தது

“நம் கம்பெனி ஆடிட்டர் இருக்கும் போது இந்தத் தன் ஆடிட்டர் எதற்கு? இரண்டு தனி அக்கௌன்ட்ஸ் எதற்கு? ஏன் வருமானவரித் துறையிடம் மறைக்க வேண்டும்?” என்று கிருத்திகா கேள்வி எழுப்பி தன் ரிப்போர்ட்டை முடித்திருந்தாள்.

“நாளைக் காலைப் பதினோரு மணிக்கு இதைப் பற்றி உங்களுடன் எனக்கு மீட்டிங் ஓ.கே?” என்றான்.

“ஓ.கே சார்”  என்றாள் கிருத்திகா.

“இந்த அறிக்கையின் நகல் உங்களிடம் இருக்கிறதா? நீங்கள்  ஆய்வு செய்த எல்லா ரெகார்டுகளையும் என் பீரோவில் வைத்து பூட்டி சாவியை என்னிடம் கொடுங்கள்”

“என் பைனல் ரிப்போர்ட்டின் நகல் என்னிடம் பத்திரமாக இருக்கிறது” என்று கூறி விட்டு எல்லா ரெகார்டுகளையும், அவன் பீரோவில் வைத்துப் பூட்டி விட்டு, சாவியையும் அவனிடம் கொடுத்து விட்டுத் தன் இடத்திற்குத் திரும்பினாள்.

மாலை ஐந்து மணிக்கு அலுவலக நேரம் முடிந்து விட்டாலும், மிச்சம் மீதி வேலைகளை முடித்து விட்டு ஐந்தரை மணிக்குத்  தான் கிருத்திகா தன் அலுவலகத்தை விட்டு  வழக்கமாக கிளம்புவாள். அதே போல் கிளம்பி பஸ் நிலையத்தில் நின்றிருந்தாள்.

வழக்கமாக ஆறு மணிக்கு மேல் தான் சபரீஷ் கம்பெனியிலிருந்து தன் வீட்டிற்குத் திரும்புவான். ஆனால் அன்று அவனும் அரை மணி நேரம் முன்னதாகவே காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். பஸ் ஸ்டேண்டில் நின்றிருந்த கிருத்திகாவைப் பார்த்த சபரீஷ் அவள் அருகில் காரை நிறுத்தினான்.

தன் பார்வையாலேயே எல்லோரையும் நான்கடி தள்ளி நிற்க வைக்கும் சபரீஷ்வர், எதற்காகத் தன்னருகில் கொண்டு வந்து காரை நிறுத்துகிறான் என்று புரியாமல் காரின் அருகில் வந்து நின்றாள்.

“எனக்காகவா சார் காரை நிறுத்தினீர்கள்? திரும்ப ஆபீஸ் வர வேண்டுமா?” என்றாள் கிருத்திகா.

“நோ நோ, வண்டியில் ஏறுங்கள்” என்று முன் ஸீட்டின் கதவைத் திறந்து விட்டான்.

(தொடரும் – திங்கள் தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (பகுதி 1) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    நவம்பர் 2022 சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள்