in ,

இடைவெளி ❤ (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

நேற்று முந்தின நாளிலிருந்து அவள் பேசவில்லை. அவனும் பேசவில்லை.

எப்போதும், அவன், ஆபீஸ் போனபிறகு, நான்கு தடவையாவது அவனுடன் போன் பண்ணி பேசிவிடுவாள். அதுவுமில்லை. ஒரு சிறு சண்டைதான். அது பேசாமையில் போய் முடிந்தது.

யார் முதலில் பேசுவது, என்ற கர்வம் கட்டிப் போட்டிருந்தது இருவரையும்.

********

காலையில் எழுந்திருப்பாள். டீ கொண்டு வந்து டீ பாயில் வைத்து விட்டு, எதையாவது டங்கென்று தட்டி, சமிக்ஞை கொடுத்துவிட்டு போய்விடுவாள். அவன் போய் எடுத்துக் கொள்வான்.

அவன் குளித்து முடித்து, உடை உடுத்திக் கொண்டு வரும்போது சரியாக டைனிங் டேபிள் மேல் இட்லி வந்து தயாராக காத்திருக்கும். தானே எடுத்துப்போட்டு சாப்பிட்டுக் கொள்வான். ஆபீஸ் கிளம்பும் சமயம் டிஃபன் பாக்ஸ் பை தயாராக டீபாயில் வந்து உட்காரும்.

மொபெட் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது அவள் பார்க்கிறாளா என்று திரும்பினான். அவள் பார்க்கவில்லை.

ஆபிஸிலிருந்து திரும்பி வரும்போது, அவள் ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பாள். டிஃபன் பாக்ஸை கழுவி வைத்து விடுவான். துணிகளை அயன் செய்து வைப்பான். இடையில் டீ வந்து டேபிளில் சமிக்ஞையுடன் உட்காரும்.   குடித்துக் கொள்வான்.

டீவி பார்க்க, புத்தகம் படிக்க என்று எப்படியோ ராத்திரி வந்துவிடும். தட்டில் தோசை சமிக்ஞையுடன் வந்து உட்காரும். தானே போட்டு சாப்பிட்டு விட்டு தட்டை கழுவி வைத்துவிடுவான்.  

மீண்டும் டீ.வி., லேப்டாப், மெயில்…. இடைப் பட்ட நேரங்களில் ஏதாவது பேசுவாளா என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே கிடைக்கும்.

காலையில் மறுபடியும் எழுந்து டீ, சாப்பாடு, ஆபிஸ், வீடு….இப்படியே இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. அந்த இடைவெளி அப்படியே நிற்கிறது, எனக்கென்னவென்று !

xxxxxxxxxx

காலையில் ஆபீஸ் வந்தவுடன் பியூன் கந்தசாமி மெல்ல பக்கத்தில் வந்தான். கடன் ஏதும் கேட்க வருகிறானோ என்று ஒரு கவலை ராஜுவுக்கு.   

‘ சார், நான் சொன்னேன்ல, எங்க வொய்ஃப் ஸாரீ பிசினஸ் ஆரம்பிக்கறாங்கன்னு, இன்னிக்கு நிறைஞ்ச அம்மாவசைன்னு, காலைல பூஜை போட்டு வீட்டுலேயே ஆரம்பிச்சிட்டோம் சார். லஞ்ச் டைம்ல ஒரு அம்பது சாரீஸ் கொண்டு வர்றேன். எனக்காக ஒரு ஸாரீயோ ரெண்டு ஸாரீயோ வாங்கிக்கங்க ஸார். நம்ம ஸ்டாஃப்களுக்கெல்லாம் பத்து பர்சண்ட் டிஸ்கவுன்ட் தரேன்  சார்… ‘ என்றான் கெஞ்சலாய்.

செலவு வைக்கிறானே என்ற யோசனையில் முதலில் வேண்டாம் என்று மறுத்தாலும் தன் மனைவியை சமாதானப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையட்டுமே என்று சம்மதித்தான்.

லஞ்ச் நேரத்தில் மூன்று பெரிய பைகளில் சாரீஸ் கொண்டுவந்து டேபிளின் மேல் பரப்பி வைத்தான் பியூன். லைட் ரோஸ் அல்லது லைட் பச்சை கலரென்றால் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால் ஒரு ஸாரீயை செலக்ட் செய்து எடுத்துக்கொண்டான்.

இன்றைக்கு அசத்தியே  தீரவேண்டும் என்று ஒரு வெறியே வந்து விட்டது அவனுக்குள்.

xxxxxxxxxx

சாயங்காலம் நான்கு முழம் மல்லிப்பூ வாங்கிக் கொண்டான். வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாய் கட்டிலில் படுத்திருந்தவளிடம் புடவையையும் பூவையும் நீட்டினான். அவள் அதை கண்டுகொள்ளவேயில்லை. புத்தகத்தில் மட்டுமே கவனமாய் இருந்தாள்.

மெல்ல பேச்சை ஆரம்பித்தான். வேறு வழி ?

‘ எங்க ஆபிஸ் பியூன் சைடு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கான், நிறைய ஸாரீஸ் கொண்டுவந்திருந்தான். சரி, உனக்கு லைட் பச்சை கலர் பிடிக்குமேன்னு ஒரு ஸாரீ எடுத்துக்கிட்டு வந்தேன். எடுத்துக் கட்டிக்கிட்டு ரெடியாகு, கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்… ‘ என்றான் ஜாடையாய் அவளை பார்த்தபடியே. உதட்டை ஒரு சுழி சுழித்துவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள் அவள்.  

போய் டிஃபன் பாக்ஸை கழுவி கவிழ்த்து வைத்துவிட்டு முகம் அலம்பிக் கொண்டு திரும்பும்போது மெல்ல எட்டிப் பார்த்தான் அவளை.

எழுந்து உட்கார்ந்து சாரீயை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ஆஹா ஒர்க்கவுட் ஆகிறது’ என்று குஷியில் குதித்தே விட்டான்.  ஆனாலும் அவள் கவனித்துக் கூடாதே என்பதற்காக சப்தம் எழாமல் மெல்ல நகர்ந்து போய்விட்டான்.

‘ சரி… கோபம் கொஞ்சம் தணிந்து விட்டது… ‘ என்று சந்தோஷப் பட்டவன், அவள் தயாராகி வர லேட்டாகும் என்பதால், டீவி போட்டு நகைச்சுவை சீன்கள் பார்த்துக் கொண்டே இருந்தவன் அப்படியே ஷோபாவில் கண் அயர்ந்து விட்டான்.

*******

திடீரென்று மல்லிப்பூ வாசனை மூக்கில் நுழைந்து மூளையை சுர்ரென்று உசுப்பியது. மெல்ல கண் திறந்தான். அவனை ஒட்டி, வலதும் இடதுமாய் அன்னநடை நடந்து கொண்டிருந்தாள் அவள்.  ஆனால் அவளது பார்வை அவனது மேல் இல்லை. அவன் கொண்டு வந்திருந்த புது புடவையைக்  கட்டியிருந்தாள். கூந்தலில் சரமாய் தொங்கியது மல்லிப்பூ. அவனுக்கு புரிந்துவிட்டது, அவள் கோவிலுக்கு தயாராகிவிட்டாள் என்று. ஆனாலும் அவள் கூப்பிடட்டும் என்று கண்மூடிக் காத்திருந்தான். திடீரென்று அவனது காலை நகர்த்தி விட்டு சோபாவில் உட்கார்ந்தாள்.

‘ டீயை வச்சு ஆறிக் கிடக்கு ‘ என்றாள் யாருக்கோ சொல்வது போல. 

‘ இப்போவே மணி ஆறு ஆச்சு எப்போ கோவிலுக்கு போயிட்டு திரும்பி வர்றது, வந்து சமைக்கறது… ‘ என்றாள் மறுபடியும் எங்கோ பார்த்தபடி.  

அவள் பச்சைக் கொடி காட்டியபிறகு நாம் பாராமுகமாய் இருந்தால் ‘நஷ்டம்’ நமக்குத்தானே என்றெண்ணி எழுந்தான். முகம் அலம்பிக் கொண்டு வந்து அயன் செய்து வைத்திருந்த பேண்ட் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். அதற்குள் டீயை சூடேற்றி மறுபடியும் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.  அவன் போட்டிருந்த சட்டையை பார்த்தவள் உதட்டை ஒரு சுழி சுழித்தபடி போய் பிரோவில் இருந்து வேறு ஒரு சட்டையை எடுத்துக் கொண்டு  வந்தாள்.  இது எப்பொழுதும் நடப்பதுதான். அவன் போட்டிருக்கும் சட்டை அவளுக்கு பிடித்திருக்கவேண்டும். இல்லையென்றால் ‘ இதெல்லாம் ஒரு டிரெஸ்ஸா ‘ என்று திட்டியபடி அவளாக போய் ஒரு ஜோடி பேன்ட் சர்ட் எடுத்துக்கொண்டு வந்து கொடுப்பாள். இவன் அதையே போட்டுக்கொள்வான்.

இப்போதும் உதட்டைச் சுழித்தபடி போய் அவளது ஸாரீக்கு மேட்சிங்காக பேன்ட் சர்ட் எடுத்து வந்தாள். அவளை அசத்த வேண்டுமே.  வேறு வழியின்றி போட்டிருந்த சட்டையை கழட்டிவிட்டு அவள் கொண்டு வந்து ஷோபா மேல் போட்ட சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். பர்ஸை எடுத்துக் கொண்டான், மொபெட் சாவியை எடுத்துக் கொண்டான்.

‘ வந்துட்டு சமைக்க வேண்டாம், வழியிலேயே ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம் ‘ என்றான்.  அப்படியும் முகத்தை எங்கோ வைத்துக் கொண்டிருந்தாள். வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு கதவருகே போய் நின்றாள், அவன் வெளியேறும் வரை.

******

போகிற வழியில் வேண்டுமென்றே ஒரு ஸ்பீட் பிரேக்கரில் வண்டியை விட்டு ஏற்றினான். குலுங்கியவள் சட்டென  அவனது தோளைப் பிடித்தாள்.  அவனது மனது துள்ளிக் குதித்தது. ‘ இன்னொரு தடவை ஏற்று ‘ என்று உசுப்பியது மூளை.  வேண்டுமென்றே தேடித் போய் இன்னொரு ஸ்பீட் பிரேக்கில் சட்டென மொபெட்டை விட்டு ஏற்றினான். அவளது கை தானாக இறங்கி வந்து, அவனது இடுப்பைப் பிடித்தது. மறுபடியும் துள்ளிக்குதித்தது அவனது மனது.

கோவிலில் இறங்கி சாமியை கும்பிட்டு விட்டு வந்து ஓரமாய் உட்கார்ந்தார்கள். கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்தவளிடம் நெருங்கி உட்கார்ந்தான். அவள் மறுப்புக் காட்டவில்லை. தனது மொபைலை நோண்டிக் கொண்டே இருந்தாள்.

கொஞ்ச நேரம் அங்குமிங்கும் பராக்கு பார்த்துக் கொண்டும் மொபைலை நோண்டிக் கொண்டும் காத்திருந்து விட்டு ‘ சரி, கிளம்பு போகலாம், ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்புவோம் ‘ என்றான்.  அவளும் எழுந்துகொண்டாள்.

ஹோட்டலுக்கு போனவுடன் சர்வரை கூப்பிட்டான். அவள் பூரி கிழங்கு விரும்பி சாப்பிடுவாள் என்பதால் தனக்கும் சேர்த்து ,  ‘ ரெண்டு செட் பூரி கிழங்குப்பா ‘ என்றான். 

சாபிட்டார்கள்… கிளம்பினார்கள்…

மறுபடியும் ஸ்பீட் பிரேக்கர்.  ஒரு குலுக்கு குலுங்கியதும் ‘ லொள்ளா ‘ என்றாள். புன்னகைத்துக் கொண்டான்.  ‘ இருட்டுல தெரியலைப்பா ‘ என்றான்.

இன்னும் ஒரு குலுக்கல். ‘ போதும் போதும்… ’ என்றாள். இப்போது அவளது கை அவனது இடுப்பை உடும்புப்பிடி போல பிடித்துக் கொண்டது. தனது முகத்தையும் அவனது தோளில் வைத்துக் கொண்டாள்.

சிரித்துக் கொண்டான் அவன்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே, இடையில் விழுந்திருந்த இடைவெளி இல்லாமல் போனது.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முற்றும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

கடைக்குப் போகிறேன் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

பிணக்கு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு