in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 18) – ரேவதி பாலாஜி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8

பகுதி 9   பகுதி 10   பகுதி 11  பகுதி 12   பகுதி 13  பகுதி 14   பகுதி 15  பகுதி 16

பகுதி 17

இதுவரை:

மூன்றாவது மாத ஸ்கேன் பரிசோதனை செய்துவிட்டு தன் தாயிடம் சொல்ல அலைபேசியில் அழைக்கிறாள் கவியினியாள். அப்பொழுது தான் அவளுக்கு அவளின் தாயாரும் ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்ள மருத்துவமனை சென்றுள்ளார் என்று தெரியவருகிறது. என்ன ஆயிற்று கவியினியாளின் அம்மாவிற்கு? காண்போம்.

இனி:

“ஒன்னும் இல்லை..”

“அமுதினி சொல்லு.. அம்மாக்கு என்னாச்சு.. அம்மாட்ட போன் குடு”

“அம்மா உன்கிட்ட எதும் சொல்ல வேணாம் சொன்னாங்க.. தெரியாம சொல்லிட்டேன்.. நீ டென்ஷன் ஆகாத.. வயித்துல பாப்பா இருக்கு”

“அம்மா எங்க” அமுதினியிடம் நான் உரக்கக் கேட்க எதிர்முனையில் அம்மாவின் குரல் கேட்டது.

“ஒன்னும் இல்லைடி நான் நல்லாத்தான் இருக்கேன்.. வயிறு வலி லேசா இருக்கு.. தீட்டு படுது.. தூரம் நிக்கப் போகுது.. அதுக்குப் போய் ஸ்கேன் கேக்கறாங்க.. நீ டென்ஷன் ஆவாத”

“எத்தனை நாளா வயிறு வலிமா.. இப்போ எப்படி இருக்க”

“லேசா தான் இருக்கு.. ஒன்னும் பயப்படறதுக்கு இல்லை”

“ஸ்கேன் ரிப்போர்ட் என்னாச்சு”

“இனிமே தான் வரும்.. டாக்டர் பாத்துட்டு சொல்றேன்.. நீ போன் வை.. அப்புறம் பேசலாம்”

“ம்ம்மாஆ….” நான் கூப்பிடக் கூப்பிட அலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

ஆதியிடம் கூறினேன். அவர் என்னைப் பதட்டப்படாமல் இருக்கவே வலியுறுத்தினார்.

இரண்டு நாட்களாக அம்மாவிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. நானும் அவர்களை அலைபேசியில் அழைத்துக் கொண்டே இருந்தேன்.

பின் மூன்றாவது நாள் அவரே அழைத்தார்.

“கவி நீ நிதானமா பதட்டப்படாம இருந்தா உன்கிட்ட ஒன்னு சொல்றேன்”

“நானும் நாலு நாளா கால் பண்ணிட்டே இருக்கேன். இப்போதான் உனக்கு பேசணும்னு தோணுதா..”

“ஸ்கேன் எடுத்தோம்ல டாக்டர் பாத்துட்டு வந்தேன்..”

“என்னாச்சுமா.. எல்லாம் சரியா தான இருக்கு”

“கர்ப்பப்பைல ஏதோ சின்னதா கட்டி இருக்காம். இப்பவே எடுத்துட்டா பிரச்சனை இல்லை.. அப்படியே விட்டுட்டா பின்னாடி பெரிய பிரச்சனை ஆயிடும்னு சொல்றாங்க கவி”

“என்னம்மா சொல்ற.. ஆப்ரேஷன் பண்ணனுமா” பேசப் பேச என் கண்களில் நீர் கொட்டியது.

“ஒன்னும் பயப்பட தேவையில்லை கவி.. எல்லாரும் பண்ணிக்கிறது தான் இது.. என் அக்காலாம் பண்ணிருக்கா.. பெரிம்மா பன்னிருக்காங்க.. எல்லாம் இப்போ நல்லாத்தான் இருக்காங்க”

“ம்மா.. எல்லாரும் நம்ம முன்னாடி நல்லாதான் தெரிவாங்க.. அவங்களுக்கு எங்கெங்க வலிக்குதுன்னு அவங்களுக்கு தான் தெரியும்”

“அப்படியே விட்டாலும் பிரச்சனைனு சொல்றாங்கடி”

“பொறுமையா என்னன்னு பாத்துட்டு பண்லாம்மா”

“அதுக்குலாம் நேரம் இல்லை.. இப்போவே பண்ணாத்தான் ஆறு மாசத்துல நான் தயாராக முடியும்.. அப்போதான் நீ பிரசவம் முடிஞ்சி வரும்போது உன்னைப் பாத்துக்க முடியும்”

“ம்மா.. நீ என்னை பாத்துக்கணும் அதுக்காக பண்றேன்னு பண்ணாத.. நான் வரல வீட்டுக்கு.. இங்கயே இருந்துக்கிறேன்”

“என்னடி பேசுற.. தல பிரசவம் ஒன்பதாவது மாசமே இங்க கூட்டிட்டு வந்துட்டு குழந்தை பொறந்து மூணு இல்லை அஞ்சாவது மாசம் தான் விடுவேன்”

“ஆபரேஷன் வேணாம்ம்மா..”

“நீ சாப்டியா.. என்ன பண்ற.. வாந்திலாம் பரவாலயா”

“வயிறு வலில்லாம் இருந்துருக்கு.. ஏன் நீ சொல்லல”

“பெருசா ஒன்னும் இல்லை.. நான் நல்லா இருக்கேன்”

“நீ பொய் சொல்ற மா.. நான் ஊருக்கு வரேன்”

“எதுக்கு இப்போ வர.. பொங்கலுக்கு வந்துக்கலாம்.. என்னை நான் பாத்துக்கிறேன்.. நீ உன் உடம்பு பாத்துக்கோ”

“நான் வரேன் மா”

“அதெல்லாம் வேணாம்.. போய் சாப்ட்டு தூங்கு”

அழைப்பை அணைத்தப் பிறகு சில நிமிடங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

நான் ஒரு குழந்தையை சுமந்து நிற்கும் இந்த சமயத்தில் என்னை சுமந்த என் தாய்க்கு கர்ப்பபையில் பிரச்சனையா என்ன சோதனை இறைவா. அம்மாவை ஆரோக்கியமாக வைத்திரு கடவுளே மனதிற்குள் இறைஞ்சினேன்.

ஆதி அறைக்குள் வந்தார்.

“இந்த சமயத்துல நீ அழுதா நம்ம குழந்தைக்கு நல்லது இல்லை கவி”

“எனக்கு அம்மாவ பாக்கணும் போல இருக்கு.. ஊருக்குப் போலாமா”

“இப்போ போயிட்டு மறுபடியும் நாலு நாள்ல பொங்கல்க்கு ஊருக்கு போணுமே”

“பரவால்ல”

“நம்ம குழந்தைய நினைச்சி பாரு கவி”

“நான் அந்த நாலு நாள் லீவு போட்டுக்கிறேன்.. இப்போ போய்ட்டு அம்மா கூட இருந்துட்டு பொங்கல் முடிஞ்சே வந்துக்கலாம்”

“உன் இஷ்டம் கவி.. நாளைக்கு ஆபீஸ் முடிஞ்சி கிளம்பலாம்”

“சீக்கிரம் வந்தட்றேன் போலாம்.. அம்மா பாவங்க”

“சுறுசுறுப்பா தான இருந்தாங்க.. பாத்துக்கலாம்.. நான் வேணா கூட ஒரு டைம் செக் அப் போறேன் கவி”

“நம்ம கூட்டிட்டு போலாம் ஆதி”

“சரி கவி”

திட்டமிட்டப்படி அலுவலகம் முடிந்து ஊருக்குக் கிளம்பினோம். அத்தையிடம் கூறிவிட்டு இரவோடு இரவாக அம்மா வீட்டிற்குச் சென்றேன்.

வெள்ளிக்கிழமை என்றெல்லாம் பார்ப்பதில்லை. அத்தையும் அதையெல்லாம் பெரிது பண்ணமாட்டார். வேலைக்காக அலைவதே சிரமமாக இருக்கிறது இதில் நாள் கிழமை வேறா.

அம்மாவை பார்க்கச் சென்றேன். சற்று இளைத்தது போல் தான் தெரிந்தார்கள். என்ன விசாரித்தும் ஒன்றும் இல்லை என்று தான் கூறினார்கள்.

அம்மாவின் ரிப்போர்ட் அனைத்தையும் எடுத்துப் பார்த்தேன். தெரியாததை இணையத்தில் தேடினேன்.

கர்ப்பப்பையில் சிறு சிறு கட்டிகள் இருக்கின்றன. சதை கட்டிப் போன்று என்பது புரிந்தது. சிலர் கர்ப்பப்பை எடுக்கும் அளவிற்கு குறிப்பிட்ட அளவு இல்லை. மருந்திலே குணப்படுத்தலாம் என்றும் போட்டிருந்தார்கள்.

அம்மா அப்பாவிடம் கலந்து பேசினேன். இன்னும் கூட இரண்டு மருத்துவர்களிடம் என்ன சொல்கிறார்கள் என்பதை விசாரிக்க முடிவு எடுத்தோம்.

அடுத்த நாளே இரண்டு மருத்துவர்களை சந்தித்தோம். அதில் ஒருவர் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடுவது நல்லது என்றார். இன்னொருவர் இது அவ்வளவு பெரிய கட்டி இல்லை. மருந்திலே சரி செய்யலாம் என்றார்.

இன்னும் தெளிவடையாமல் மேலும் ஒரு மருத்துவரைப் பார்த்தோம்.

“கொஞ்ச நாள் மாத்திரை சாப்டட்டும்.. சாப்பாடு டயட் லாம் கொஞ்சம் இருக்கட்டும்.. ஒன் ஆர் டூ மன்ந்த்ஸ் வெயிட் பண்ணி பாத்துட்டு முடிவு பணிக்கலாம்” என்றார்.

அவர் கூறியது எனக்கும் ஆதிக்கும் சரியாகத் தோன்றியது. இருவரும் என் அம்மாவிடம் இதை எடுத்துரைத்தோம்.

“என்னால மாத்திரைலாம் சாப்பிட முடியாது.. நான் பாத்த டாக்டரம்மா பண்றது பரவாலன்னு சொன்னாங்க.. நான் ஆபரேஷன் பண்ணிக்கிறேன்.. போன மாசம் கூட பக்கத்து வீட்ல இருந்தவ பண்ணிட்டு வந்தா.. இப்போ நல்லாத்தான் எல்லா வேலையும் பண்றா.. நான் ஆபரேஷன்யே செஞ்சிகிறேன்”

நாங்கள் என்ன கூறினாலும் அம்மா சமாதானம் ஆவதாய் தெரியவில்லை. உடலில் இருந்து ஒரு உறுப்பை எடுப்பது நம்மை எவ்வளவு பலவீனப்படுத்தும் என்கிற உண்மை புரியாமல் பேசும் அம்மாவிற்கு எப்படித்தான் புரிய வைப்பேனோ!

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஏனிந்த கொலை வெறி (பகுதி 4) – சுஶ்ரீ

    அறிவுக் கண்(நீர்)… (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு